360 டிகிரி

விருந்து சாப்பிடும் போது அதில் உள்ள உணவு வகைகள் நமக்கு நல்ல தத்துவங்களை உணர்த்துகின்றன.
360 டிகிரி

விருந்து சாப்பிடுகிறீர்களா?
விருந்து சாப்பிடும் போது அதில் உள்ள உணவு வகைகள் நமக்கு நல்ல தத்துவங்களை உணர்த்துகின்றன. அவற்றை அறிந்து கொண்டால் அமைதியான வாழ்க்கை அமைய வழிகாட்டும். 
கூட்டு: உறவினர்களுடன் கூட்டு வைத்துக்கொள்.
உப்பு: ஊறுகாய்: குறைவாக வைப்பது போல் கோபத்தைக் குறைத்துக் கொள்
சாம்பார்: சாதத்தில் கலந்து ருசி தருவது போல் உலகில் நீயும் கலந்து சேர்ந்து ஒன்றி பயன் பெறுவாயாக
அப்பளம்: இதை நொறுக்குவது போல் தீமைகளை நொறுக்கு
வறுவல்: முதலில் எண்ணெய் போட்டதும் சப்தமிடும். பிறகு பொறிந்ததும் அடங்கிவிடும். அது போல மனிதர்களை ஆர்ப்பாட்டமும் கொள்கிறார்கள். அனுபவம் வந்த பிறகு அடங்கி விடுகிறார்கள்.
பாயசம்: இனிப்பாக வாழ்வை அமைத்துக்கொள்வதே உன் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று கடைசியில் பாயசம் ஊற்றுகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கு அடித்தளமிடுவது இலை தான். இலை போட்டு விருந்து வைக்க வேண்டும். காரணம் யார் வந்து உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லா திருக்க வேண்டும்..
விருந்தினர்களுக்குத் தட்டு வைத்துப் பரிமாறக்கூடாது. தட்டுப்பாடு வந்துவிடும். ஆனால் புதிய தட்டுக்கள் வாங்கி வைத்திருந்து பரிமாறலாம். 
-அருள் அமுதம் (ஆழியாறு அறிவுத்திருக்கோயில் நூலகம்)

95 வயதிலும் ஒயாத உழைப்பு

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் சிலர் அந்தப்பக்கமே தலையைத் திருப்பமாட்டார்கள். சிலர் தான் பெற்ற வேலையின் சிறப்பைப் பற்றியே வாழ்நாள் முழுவதும் அறிந்து கொள்ளத் துடிப்பார்கள்.
இந்த வகையில் ஸ்ரீனிவாச வெங்கட்ராமனுக்குத் தற்போதைய வயது 95. பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், தான் பணிபுரிந்த ரயில்வேயின் அருமை பெருமைகளை விடாமல் பறைசாற்றிக் கொண்டிருப்பவர்.
1942-இல் ஹுப்ளியில், மெட்டிரியல் மேனேஜராகப் பணியைத் துவங்கிய வெங்கட்ராமன் 1985-இல் ஒய்வு பெற்றார். பணியின் கடைசி ஆண்டு
கள் தொடர்ந்து வாரணாசியிலேயே பணிபுரிந்து முடித்தவர். ஒய்வு பெற்ற பிறகும் 20 வருடங்கள் வாரணாசியிலேயே தங்கியிருந்தார்.
2008-ஆம் ஆண்டு சென்னை வந்து நிரந்தரமாய்த் தங்கினார்.
இதனிடையே இந்திய ரயில்வே சார்பாக வெளியிடப்படும் இதழில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வந்தார்.
2013-இல் முதல் தடவையாக Indian Railways The Beginning என்ற நூலை எழுதினார். இதற்கு அமோக ஆதரவு கிடைத்தது.
2014-இல் இரண்டாவது முயற்சியாக Indian Railways at a glance என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
தொடர்ந்து The Madras Railway 2014, The Goan Railway 2015, P.M.Modi The Indian Railways 2016, The Pondicherry Railways 2017 என நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.
ஒவ்வொன்றும் படங்களுடனும் தகவல்களுடனும் சரித்திரம் சொல்கின்றன.
அன்றாடம் 20 பக்கம் டைப் செய்கிறார். இவர் ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் நிலையங்களுக்கு விஜயம் செய்த அனுபவம் உண்டு. இந்தியாவின் மிகச்சிறந்த ரயில் பாதை எது எனக் கேட்டால், கோவா-லோண்டா (கர்நாடகா) ரயில் பாதையைக் குறிப்பிடுகிறார். 
இந்த வழித்தடத்தில் மட்டும் இவர் 1600-க்கும் அதிகமான தடவை பயணித்துள்ளார். 
-அனிதா ராமசந்திரன், பெங்களூரூ

ஓய்வும் ஆரோக்கியமும்
கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது என்பது சத்துணவு சாப்பிடுவதற்கு இணையான ஆரோக்கியத்தைக் கருவில் உள்ள சிசுவுக்கு தருவதாக சொல்கிறது ஓர் ஆராய்ச்சி. அலிகாரைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இதை கண்டுபிடித்தனர். அவர்கள் 214 கர்ப்பிணிகளை ஆய்வு செய்து இந்த முடிவை அறிவித்தனர். 12 மணி நேரம் தினசரி ஒய்வு எடுத்தவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 8 மணி நேரம் ஓய்வு எடுத்த கர்ப்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகளை விட ஏறக்குறைய 1 கிலோ கிராம் எடை கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது. ஓய்வு குழந்தைகளுக்கு எவ்வளவு ஊக்கம் தருகிறது என்பதை இந்த ஆய்வு மெய்ப்பித்தது.

வைர மதிப்பு
தங்கத்தின் மதிப்பு உலக மார்க்கெட்டில் லண்டன் மாநகரத்தில் நிர்ணயிக்கப்படுவது நாம் அறிந்த உண்மை. அது போல வைரத்தின் மதிப்பு ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிர்ணயிக்கப்படுகிறது.
-ஜோ. ஜெயக்குமார், சிவகங்கை
மிகப்பெரிய பேருந்து நிலையம்
இம்னிபன் என்பது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம். இது ஹைதராபாத்தில் உள்ளது. இந்த இம்னிபன் பேருந்து நிலையத்தில் 49 பிளாட்பாரங்கள் உள்ளன. 10 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
-எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி

ஆப்கானி
நாட்டின் பெயராலேயே அந்த நாட்டின் நாணயத்தின் பெயரையும் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான். அந்த நாட்டின் நாணயத்தின் பெயர் "ஆப்கானி' என்று உள்ளது.
-உ.ராமநாதன், நாகர்கோவில்

போனில் ஒரு இளசு
மொபைல் சிணுங்கிற்று. எடுத்துக் காதில் வைத்தான் 28வயது ஆதி.
"வணக்கம் சார்..'' இளம் பெண் குரல் கொஞ்சியது.
"வணக்கம் என்ன விஷயம்?''கேட்டான்
"மும்பையிலிருந்து பேசறேன். குட்.. நியூஸ் எங்க கம்பெனி நடத்திய அதிர்ஷ்ட குலுக்கலில் உங்க பெயருக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரெண்டு சவரன் தங்கச்சங்கிலி பரிசு விழுந்திருக்கு...! அதுக்கு பணம் எதுவும் தர வேண்டாம். ஆனால் டெலிவரி சார்ஜ் ரூபாய் 520 மட்டும் தந்தால் போதும். உங்க அட்ரஸ் சொல்லுங்க. எங்க ரெப் வந்து பரிசுப் பெருளைத் தருவார்'' இடைவிடாது சொன்னாள்.
"மிக்க மகிழ்ச்சி மும்பைன்னுதானே சொன்னீங்க... அங்கே என் பிரதர் வேலை பார்க்கிறார்...அவரிடமே பரிசை ஒப்படைச்சிடுங்க. வீணாக எதுக்கு டெலிவரி சார்ஜ்? உங்க கம்பெனி அட்ரஸ் சொல்லுங்க மேடம்'' என்றான் ஆதி.
வந்து... வந்து... எதிர் முனையில் போன் டொக்!
ஆங்..! நீ மும்பை இளசுன்னா. நான் சென்னை இளைஞனாக்கும். என்கிட்டே ஏமாத்து வேலையா?
மனதுக்குள் கிண்டலடித்துச் சிரித்தான் ஆதி.
}மாலா உத்தண்டராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com