Enable Javscript for better performance
79 வயதில் 800 கல்வெட்டு- Dinamani

சுடச்சுட

  
  sk1

  இப்போது இருக்கும் காலகட்டத்தில் பழங்கால வரலாறுகளை நம்முடைய சமூகம் நினைத்து பார்க்கக்கூட நேரமில்லை. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான மேலப்பனையூர் என்ற ஊரில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வரும் கரு.இராசேந்திரன் என்பவரை மேலத்தாணியத்தில் கல்வெட்டு கண்டுப்பிடிக்கும் நேரத்தில் அவரை நாம் கண்டுப்பிடித்தோம். உச்சி வெயிலை கூட நினைத்துப்பார்க்காமல் கல்வெட்டை கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அவரிடம் பேசினோம்:
   கல்வெட்டு ஆர்வம் எப்படி உண்டானது?
   கல்வெட்டை ஆராய வேண்டும் என்ற எண்ணம் தானாகவே உருவானது. கல்வெட்டு ஆராய்ச்சியில் தணியாத ஈடுபாட்டையும் முதன் முதலில் என்னுள்ளே உருவாக்கித்தந்தது. நான் பிறந்து வளர்ந்த ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி கோயிலிலுள்ள கல்வெட்டுக்களே . சுருங்கச் சொன்னால் இக்கோயிலே கல்வெட்டுப் பயிற்சியில் எனக்கு ஆசிரியராக இருந்து வழிகாட்டி, எனக்குள் உத்வேகத்தையும் தந்து இதில் என்னை ஈடுபட வைத்தது . அதாவது பள்ளியில் படிக்கின்ற போது விளையாடுவதற்கும், கோயில் திருவிழாவிற்குச் செல்லுவதுண்டு. அப்போது மேற்படி கோயில் சுவர்களிலுள்ள கல்வெட்டுக்களைப் பார்பதுண்டு.
   அவ்வாறு பார்க்கின்ற போது அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும், ஆர்வமும் என்னிடத்தில் ஏற்பட்டது. அதன் விளைவாக இளம் வயதிலேயே யாருடைய உதவியுமில்லாமல் கல்வெட்டை படிப்பதற்கு முயற்சித்ததுண்டு. முதலில் எனக்கு கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து செய்த முயற்சியால் சில ஆண்டுகளில் ஓரளவிற்கு கல்வெட்டைப் படிக்கத் தெரிந்து கொள்ள முடிந்தது. கல்வெட்டைப் படிக்கத் தெரிந்து கொண்ட பிறகு கண்ணில் பட்ட கல்வெட்டுகளைப் படிக்க வேண்டுமென்ற ஆசையும் உந்துதலும் ஏற்பட்டது.
   புதுக்கோட்டையில் உள்ள கல்வெட்டுகளை ஏற்கெனவே படித்து தொகுத்து 1929-இல் புதுக்கோட்டை அரசாங்கம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அதை அறிந்து நான் பார்க்கின்ற கல்வெட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? நான் பார்த்த கல்வெட்டுக்கள் பழையனவா? புதியனவா என ஒப்பிட்டு அறிந்து கொண்டேன். நான் பார்த்தவை புதிய கல்வெட்டு எனத் தெரிந்த நிலையில் அது பற்றி தமிழ்நாடு தொல்பொருள் துறைக்கு அவ்வப்போது தகவலைத் தெரிவிப்பேன். அவ்வாறு தெரிவித்த தகவலின் பொருட்டு தமிழக தொல்லியல் துறையிலிருந்து முனைவர் சு.இராசகோபால் எங்கள் பகுதி ஆய்விற்கு வருவார். அவர்களோடு கூடச் சென்ற நேரங்களில் அவர்கள் படிப்பதை நான் கூட இருந்து பார்த்துக் கவனித்துக் கொள்வேன். கல்வெட்டும் கண்டுப்பிடிக்க வேண்டும் ஆய்வுக்கட்டுரையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் இப்படி பல ஆய்வாளர்களை சந்திக்கும் போது உண்டானது.

   நீங்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளைப்பற்றி...?
   புதுக்கோட்டையில் புதிய குழிக் கல்வெட்டுக்கள் ஆய்வு, களப்பிரரர் வரலாறு ஒரு பார்வை, புதுக்கோட்டை வரலாற்றில் புதிய ஒளி, புதுக்கோட்டையில் பாடிகாவல், படைப்பற்று ஒரு ஆய்வு இது போன்ற பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
   ஒலைச்சுவடி சம்பந்தமாக ஆய்வு செய்துள்ளீர்களா?
   1938-ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை மன்னருக்கு தஞ்சாவூர் ஆட்சியாளராக இருந்த பிளாக் பெண் எழுதிய கடிதங்கள் போன்ற பல ஓலைச்சுவடிகள் படித்து அதைப் பார்த்து சில ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன்.
   கல்வெட்டுக்கள் புத்தங்களாக மாற்றப்பட்டுள்ளதா?
   ஆமாம். கண்டுப்பிடித்த கல்வெட்டு பற்றி புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுக்கள் என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. இதில் 300 கல்வெட்டுக்கள் உள்ளன. இது போல மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டுப்பிடித்துள்ள சில கல்வெட்டுக்களை புத்தகங்களாக மாற்ற வேண்டும். 200-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுப்பிடித்தவுடன் முக்கிய செய்திதாள்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் வந்ததால் அதை புத்தகமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகவில்லை. மீண்டும் வெகு சீக்கிரமாக இருக்கிற கல்வெட்டுகளையும், சில கல்வெட்டுகளையும் கண்டுப்பிடித்து 250க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை கொண்ட ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கு காத்திருக்கிறேன்.
   -பொ.ஜெயச்சந்திரன்,
   புதுக்கோட்டை
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai