உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே சாட்சி!

தமிழ் சினிமாவிற்குச் சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இது இயக்குநர் தரணி ராசேந்திரனின் முறை.
உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே சாட்சி!

தமிழ் சினிமாவிற்குச் சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இது இயக்குநர் தரணி ராசேந்திரனின் முறை. புதுமுக இயக்குநரான அவர் இயக்கிய "ஞானச்செருக்கு' கொல்கத்தா திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வெனிசுலா உள்ளிட்ட 11 நாட்டு திரைப்பட விழாக்களில் பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
 "நிறைய திரைப்பட விழாக்களில் இந்தப் படம் விருது வாங்கி வந்திருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சவுண்ட் என நிறைய விருதுகள்.... கொல்கத்தா விழாவில் சிறந்தப் படத்துக்கான விருது வாங்கியிருப்பதில் கூடுதல் சந்தோஷம். இந்தப் படத்தை அடுத்து நம் தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டு வர இருக்கிறேன்.'' நம்பிக்கை கரம் கொடுத்து பேசத் தொடங்குகிறார் தரணி ராசேந்திரன். குறும்பட அனுபவங்களைக் கொண்டு வெள்ளித்திரைக்கு வரும் மற்றொரு நம்பிக்கை படைப்பாளி.
 "இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்களின் வாழ்க்கை என எல்லாமே இருக்கிறது. என் வயது இப்போது 29. எனக்கு 60 வயது ஆகும் போது நான் எப்படி இருப்பேன் என்பதின் அனுமானம்தான் இந்தக் கதை. "உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி' என்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாமே பெரிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கும்போது, நாமே அதற்கு சாட்சியாக இருப்போம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படம்.''

சுதந்திரமான சினிமாவா...?
 நிறுவனங்கள் சாராத சுதந்திரமான சினிமா. சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுத்திருக்கிறோம். கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேச தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்மான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் நடனத்தில் மட்டும் இல்லை. இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்ல வருகிற சினிமா. தயாரிப்பாளருக்காகப் பாட்டு வைத்தேன். காமெடி வைத்தேன் என்று இல்லாமல் கதைக்கு நேர்மையாக என்ன வைக்கிறோம்... அதுதான் முக்கியம் என்று நினைத்து ஒரு படத்தை எடுத்தோம். அதுதான் "ஞானச்செருக்கு'. படத்தைப் பார்த்தப் பிறகு நாம் பேச நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். ஓர் எளிமையான சினிமா. இந்த மாதிரி சுதந்திரமான முயற்சியை உலகத்தில் எல்லோரும் செய்து பார்த்து விட்டார்கள்.
 திரைக்கதை வடிவம் எப்படியிருக்கும்....?

சினிமாவில் பெரிய இடத்தை அடைந்து விட்ட இயக்குநர் வீரசந்தானம். உங்கள் கனவு படம் என சொல்கிற அளவுக்கு எல்லாவற்றையும் செய்து முடித்தவர். இருந்தாலும், அவருக்கு இன்னும் மேலே போக ஆசை. அப்போது அவருக்கு நிகழ்கிற சம்பவங்கள்தான் கதை. சாப்பாடு, சம்பளம், சந்தோஷம் என கிடைக்கிற வாழ்வு எல்லோருக்கும் எப்போதும் அமைவது இல்லை.அப்படி கிடைத்தாலும் கனவு, லட்சியம், வேட்கை என துரத்தும் இந்த வாழ்வில் ஒரு கட்டத்தில் எங்கோ போய் விடுகிறோம். கிராமத்தில் இருந்து வந்து நமக்கென இலக்கு வைத்து இந்த பெருநகரத்தில் சுழலும் போது, அந்த இலக்கை அடைய மனம் எப்படியெல்லாம் யோசிக்கிறது. மனம் எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலேயே கடந்துக் கொண்டிருக்கிறது. தகுதியே இல்லாதவர்கள் உச்சம் அடைந்து விடுவதையும், எல்லாத் தகுதியும் இருந்தும் கஷ்டப்படுகிறவர்களையும் பார்க்கும் போது, வாழ்வின் மீது வெறுப்புதான் வருகிறது. பணம் பிரச்னை இல்லை என்கிற போது மனம் பிரச்னையாகி விடுகிறது. பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும் போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.
 படத்தின் பங்கெடுப்பாளர்கள்...?

 படத்தைத் துவங்குவதற்கு முன் சென்னையை பெரு வெள்ளம் சூழ்ந்தது. தயாரிக்கிறேன் என முன் வந்தவர் பின் வாங்கி விட்டார். என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்த போது இதை நாமே எடுப்போம் என்று சொன்ன நண்பர்கள், உறவினர்கள்தான் இதன் தயாரிப்பாளர். குறிப்பாக என் தாய் மாமன் பாணிதான் இதன் முக்கியப் பொறுப்பாளர். வீரசந்தானம் தவிர கவிஞர் ஆடுகளம் ஜெயபாலன் முக்கிய இடத்தில் இருக்கிறார்.மற்ற நடிகர்கள் எல்லோருமே புதியவர்கள். கோபிதுரைசாமி காமிரா. இந்தப்படத்தின் எடிட்டர் மகேந்திரன். இசை சக்ரவர்த்தி, நெய்தல் என்பவர் பாடல்களை எழுதியிருக்கிறார். ஒலி வடிவமைப்பாளர்கள் பாபு, கண்ணன். கலரிஸ்ட் லோகேஷ்வரன். மற்ற எல்லாவற்றையும் நானும் நண்பர்களும் இணைந்து செய்திருக்கிறோம்.
 -ஜி.அசோக்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com