ஹோலி திருவிழா- சாந்தகுமாரி சிவகடாட்சம்

இந்துக்கள் கொண்டாடும் மிகப்பழமையான ஹோலி திருவிழா. இன்றைய காலகட்டத்தில் இந்துக்கள் அல்லாதவர்களும் கொண்டாடும் பெருவிழாவாகத் திகழ்கின்றது. குளிர்காலம் நீங்கி, வெளிவரும் வசந்த காலத்தை வரவேற்கவும்
ஹோலி திருவிழா- சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 64
"அன்பை வண்ணங்களால் வெளிப்படுத்தும் நாளாக ஹோலி இருக்கிறது. பாசத்தை வெளிப்படுத்தும் நேரம் இது. உங்கள் மேல் இருக்கும் வண்ணங்கள் எல்லாமே அன்பின் வெளிப்பாடுதான்.''
- ஹோலியின் மொழி
இந்துக்கள் கொண்டாடும் மிகப்பழமையான ஹோலி திருவிழா. இன்றைய காலகட்டத்தில் இந்துக்கள் அல்லாதவர்களும் கொண்டாடும் பெருவிழாவாகத் திகழ்கின்றது. குளிர்காலம் நீங்கி, வெளிவரும் வசந்த காலத்தை வரவேற்கவும், தீமை ஒழிந்து, வெற்றியும் நன்மையும் நிலைக்கவும் அன்பையும், சந்தோஷத்தை பரப்பவும் கொண்டாடப்படுகின்ற ஹோலி திருவிழாவை அதனுடைய பிறப்பிடமான பிராஜ் (Braj) சென்று காண நானும் என் கணவரும் புறப்பட்டோம்.
பிராஜ் என்றால், எந்த இடம் என்று கேட்கத் தோன்றுகிறதுதானே! குட்டி கிருஷ்ணன் வாழ்ந்த இடங்கள், அவனது சொந்த பூமிதான் பிராஜ். இந்த இடத்தைப் பற்றி கிருஷ்ணன் தன்னுடைய நண்பனான உத்தவ்விடம் இப்படி சொல்கிறார், "உத்தவ் என்னால் பிராஜ்ஜை மறக்கமுடியாது'.
பிராஜ்ஜில் கிருஷ்ணன் மகாபாரதத்தில் வரும் தேரோட்டியாக வாழவில்லை. கீதாச்சாரியனாக கீதையை உபதேசிக்கவில்லை, துவாரகா, மதுராவின் அரசனாக ஆகவில்லை.
பின், பிராஜில் என்னதான் செய்தான். இங்கே தவழ்ந்தான், வெண்ணெய் திருடினான், கோபிகளைக் கிண்டல் செய்தான், புல்லாங்குழல் இசைத்தான், நிலவொளி நிறைந்த இரவுகளில் ராதையோடு நடனமாடினான்; எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தினான்.
எதனால் நான் ஹோலியைப் பார்க்க பிராஜ் நோக்கி பயணித்தேன் என்றால், புராணங்களின் கூற்றுப்படி கிருஷ்ணனுக்கு நீலநிற மேனி அமைந்திருந்தது. புடானா (Putana) என்கின்ற ராட்சசி கம்சனின் கட்டளையை நிறைவேற்ற, குழந்தை கிருஷ்ணனுக்கு விஷப்பாலைப் புகட்ட, அதனால் பரவிய விஷத்தால் குழந்தை கிருஷ்ணனுடைய உடல் முழுவதும் நீலநிறமாக ஆகிப்போனதாம்.
தன்னுடைய தோழியான ராதையும், மற்ற கோபியர்களும், ராதையின் தோழிகளும் நல்ல சிகப்பு நிறமாக இருப்பதினால் தன்னை வெறுப்பார்களா என்று ஸ்ரீ கிருஷ்ணன் தன் தாயான யசோதையிடம் வினவ, அவள், கிருஷ்ணா உனக்கு விருப்பமான வண்ணத்தை எடுத்துச் சென்று ராதையின் முகத்திலும், அவளுடைய தோழிகளின் முகத்திலும் பூசிவிடு என்று கூற, இப்படி விளையாட்டாக ஆரம்பித்த வண்ணங்களை குழைத்துப் பூசும் பழக்கம் பிறகு பிராஜ் பகுதிகளில் இன்று வெகு விமரிசையாக ஹோலி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
பிராஜ் பகுதிகளில் ஹோலி என்றாலே ஸ்ரீ கிருஷ்ணன் தான் பிரதான தலைவனாக இருக்கிறான். மதுரா, கிருஷ்ணன் பிறந்த இடம், கோகுலம், யமுனா ஆற்றைக் கடந்து சென்று வசுதேவர் தன் மகன் கிருஷ்ணனை நந்தகோபன், யசோதையிடம் சேர்ப்பித்த பகுதி. பிருந்தாவன், குழலிசைத்து கோபிகளையும், ராதையையும் மயக்கி அவர்களோடு கைகோர்த்து ஆடியது, கோவர்த்தன், இந்திரனின் கோபத்தினால் பெய்த மழை, பேரழிவை ஏற்படுத்த, பிராஜ் பகுதி மக்களைக் காக்க சுண்டுவிரலால் கோவர்த்தன மலையை ஏழுநாட்கள் தூக்கி அவர்களை ரட்சித்தது, பர்சானா, ராதை பிறந்த இடம், நந்த கிராமம், நந்தகோபனின் கிராமம். ஸ்ரீ கிருஷ்ணன் பாதம் பட்ட இந்த இடங்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் பிராஜ். இங்கே கொண்டாடப்படும் ஹோலியை கண்ட நான், கிருஷ்ண யுகத்திற்கே சென்றுவிட்டேன் என்று சொன்னால் மிகையாகாது. இன்றளவும் இங்கே வாழும் மக்கள் கிருஷ்ணனிடமும் ராதையிடமும் கொண்டுள்ள பக்தியைக் கண்டு நெக்குருகிப் போனேன். பெண்களை யாரும் பேர் சொல்லி கூப்பிடுவதில்லை. ராதே, ராதே என்றே அழைக்கின்றனர். ஆண்களை, கிருஷ்ணா என்றில்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்.
பல நூற்றாண்டுகளாக, பிராஜ் என்பது பாகவத புராணம், ஜெயதேவருடைய கீத கோவிந்தம் பாடல் வரிகளில் மட்டுமே இருந்தது. பிறகு எப்படி பிராஜ் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு 15-16 நூற்றாண்டுகளைச் சேர்ந்த பக்தி மார்க்கத்தைச் சார்ந்த துறவிகளே முழுகாரணமாக இருக்கின்றனர். இதில் 1486-இல் பிறந்த சைத்தன்ய மகாபிரபுவே முன் நிற்கின்றார். இவர் கிருஷ்ண பக்தராக பிராஜ் பகுதிகளுக்கு பாதயாத்திரையாக வந்து தன்னுடைய மனதுக்கினிய ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்ந்த இடங்களை 1515-இல் அடையாளம் கண்டிருக்கிறார்.
முதல் முதலில் அவருக்கு, மதுராவை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. பிறகு தெய்வீக அருளால் கிட்டிய ஞானப்பார்வையால் பிருந்தாவனத்தையும், மற்ற இடங்களையும் கண்டுபிடித்தார். பின்வந்த நாட்களில் சுவாமி ஹரிதாஸ், வல்லபாச்சாரியார், ஹரிவம்சா போன்ற மகான்கள், பிராஜில் 16-ஆம் நூற்றாண்டில் குடியேறினர். யமுனா நதிக்கரையில் படித்துறைகள் கட்டப்பட்டன, அதிசய நிகழ்வுகளாக பல சிலைகள் கிடைத்தன, பிருந்தாவனம் பகுதியில் கட்டப்பட்ட பல பழமையான கோயில்களும், இலக்கிய சான்றுகள் அடங்கிய ஆவணங்களும் கிடைக்கப் பெற்றன.
சைத்தன்யா போன்ற துறவிகள் கிருஷ்ண பக்திக்கு, அவர்களே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினர். மக்களை அந்த பக்தி நெறியில் வழிநடத்தினர். இன்றளவும் சைத்தன்யா மகாபிரபுவை கிருஷ்ணா, ராதையின் மறு அவதாரமாகவே வழிபடுகின்றனர். இவர்களுடைய பக்தி நெறிக்கு கெளடியா (Gaudiya) என்றும், வல்லபாச்சாரியார் பக்தி நெறியை புஷ்டி மார்க்கம் (Pushti marg) என்றும் இன்றளவும் கொண்டாடி பிராஜ் மக்கள் அவற்றை பின்பற்றுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணா, ராதை மேல் இவர்களுக்கு உள்ள பற்று காலத்தால் அழியாமல் இன்றளவும் உயிர்ப்பித்து இருப்பதுடன் அல்லாமல் பல வெளிநாட்டவரையும் இந்த பக்தி மார்க்கத்தில் சேர வைத்திருக்கிறது.
புது தில்லியில் இருந்து இனோவா காரில், முதல்முதலில் நானும் என் கணவரும், எங்கள் நண்பர்கள் சிலரோடு பிருந்தாவனத்தை நோக்கிப் புறப்பட்டோம். பிராஜில், ஹோலி பண்டிகை வருவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னதாகவே, அந்த திருவிழாவுக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிடுகிறது. ஹோலி பண்டிகையில் கலந்து கொள்வதற்கு முன்பாக, பல பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. அவை என்ன?....
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com