Enable Javscript for better performance
புதிய வடிவில் பழைய கலாசாரம்- Dinamani

சுடச்சுட

  
  OLDEST-TATTOOS

  இன்றைய இளைஞர்கள், இளம் பெண்களுக்கு "டாட்டூ' எனும் பச்சை குத்தி கொள்ளும் கலாசாரத்தின் மீது அத்தனை பிரியம். பச்சை குத்தும் பண்பாடு பழையது. ஆதியில் மனிதர்கள் தோலில், கற்கால கலைப்படைப்புகளில் பச்சை இருந்ததைத் தொல்லியல் ஆய்வு காட்டுகிறது. ஊசியால் உடலை துளை செய்தும், தோலில் பச்சை நிறம் உட்செலுத்தியும் இரு முறைகளில் பதிவு செய்கிற இந்தப் பச்சை உடல் அழியும் வரை உயிர் வாழும்.
   "டாட்டூ' எனப்படும் இப்பச்சை குத்தும் பழக்கம் சீனா, கொரியா, ஜப்பான், ஜாவா, சுமத்ரா வரை பரவி இருப்பினும், மங்கோலியர்களால் தான் உலகம் முழுவதும் பரவியது.
   பச்சை குத்திய உடம்பில் நோய் தங்காது என்பதும் நமது முன்னோர்களின் நம்பிக்கை. பச்சை குத்துதல் அக்குபங்சர் போன்ற மருத்துவமே. கால், பாதம் நீர்க்கோவை கண்டால் அதில் நீர் பச்சை குத்துதல் நம்மூரில் இன்றளவும் தொடர்கிறது.
   மீன், பறவை, செடி, இலை, கண்கள், தெய்வ உருவங்கள், மனித, விலங்கு உருவங்கள், அலங்கார வேலைகள், சூரியன், சந்திரன், நட்சத்திரம், தங்களுடைய பெயர் அல்லது உறவினர், நண்பர், காதலன், காதலி பெயர்கள்... என இதற்குப் பல வடிவங்கள் உண்டு. தற்போது எகிப்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் டாட்டூக்கள் இருப்பது தெரியவந்தது.
   இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் உடலில் "டாட்டூ' கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனித உடலில் முழுவதும் டாட்டூகள் இருந்தன. எனவே டாட்டூவின் வயது ஐந்தாயிரத்துக்கும் அதிகம் என்பது தெரிய வந்துள்ளது. இப்போது போன்று அப்போது தொழில் நுட்ப வளர்ச்சி கிடையாது. ஆனால், அக்காலத்தில் எப்படி இதனைச் செய்திருப்பார்கள்? எந்தந்த கருவிகளை உபயோகித்திருப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
   அதற்கான பதில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பல ஆண்டுகளாக மூடப்பட்ட அறையில் காத்திருந்திருக்கிறது. முதன்முதலில் அதன் கதவைத் திறந்தவர்கள், அங்குள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தூசிப்படலத்திற்கு நடுவே சுமார் 2700- ஆண்டு பழைமையான "டாட்டூ' போடும் கருவிகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் இருந்தவை அனைத்தும் மனித எலும்புகள் மற்றும் பறவையின் எலும்புகளால் செய்யப்பட்ட ஊசிகள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்,
   உலகம் முழுவதும் டாட்டூக்கள் வெவ்வேறு முறையில் போடப்பட்டிருக்கின்றன. கடந்த 2016- ஆம் ஆண்டில் சாலமன் தீவுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 3000 ஆண்டு பழைமையான "டாட்டூ' ஊசி ஒன்று கிடைத்துள்ளது. அவை எரிமலைக் குழம்புகளால் ஆன பாறைகளிலிருந்து தயாரிக்கப்பட்டவையாகும். அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்திலும் மனித எழும்புகளால் ஆன "டாட்டூ' ஊசி ஒன்று சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு அமெரிக்க மாகாணத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பழங்கால சிறுமியின் உடலில் டாட்டூக்கள் இருக்கின்றன. இவை சப்பாத்திக்கள்ளி செடியின் முட்களால் வரையப்பட்டவையாகும்.

   இன்றும் ஹவாய் தீவுகளில் "டாட்டூ' போட்டுக்கொள்வது பாரம்பரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது." டாட்டூ' இல்லாமல் யாரும் இருக்க கூடாது. ஆண்கள் டாட்டூ குத்திக்கொள்ளவில்லை எனில் திருமணத்திற்குப் பெண் தரமாட்டர்களாம்.
   மாறாத மச்சம் போன்ற அங்க அடையாளங்களில் ஒன்றாக, முக்கிய ஆவணமாக மனித உடல் மீதான பச்சை அங்கீகாரம் தொட்டுள்ளது. இன்றும் நம்மூரில் பச்சை குத்தும் போக்கு மறைந்து, டாட்டூ எனும் நாகரீக அடையாளம் கண்டாலும், இந்தப் பச்சை நம்மவர்களின் பழைய பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் வரலாறு காட்டும் கண்ணாடியாக முன் நிற்கிறது.
   - ராஜன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai