அரிய புத்தகங்களின் கண்காட்சி

சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளையொட்டி ஐந்நூறு அரியப் புத்தகங்களின் கண்காட்சி ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது
அரிய புத்தகங்களின் கண்காட்சி

சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளையொட்டி ஐந்நூறு அரியப் புத்தகங்களின் கண்காட்சி ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. பார்வையாளர்களில் ஒருவராக நாமும் கண்காட்சியைக் காணச் சென்ற போது இளம் பார்வையாளர்கள், மாற்றுத்திறனாளி எனப் பலரை பார்க்க முடிந்தது.
 தமிழ் இலக்கிய நூல்களான சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, வில்லிபாரதம், கம்பராமாயணம், மகாபாரதம், சிற்றிலக்கிய ஆராய்ச்சி, குடும்ப விளக்கு, தமிழ்க்காப்பியங்கள் என 23 நூல்களும், சாகித்ய அகாதெமி விருது பெற்ற வேருக்கு நீர், கோபல்லபுரத்து மக்கள், கையொப்பம், காவல் கோட்டம், சாய்வு நாற்காலி, இலை உதிர்காலம், கொற்கை, வேரில் பழுத்த பலா, பிசிராந்தையார்,வேங்கையின் மைந்தன், குருதிப்புனல், சஞ்சாரம் உள்ளிட்ட 33 நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
 இது தவிர இருநூறுக்கும் மேற்பட்ட அரிய ஆங்கில நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்தியாவின் கட்டடக்கலை, சென்னையின் வரலாறு, கடல் ஆராய்ச்சி, பல்வேறு ஓவியங்கள், மீன்கள், பருவ இதழ்கள், பிற நாட்டு நூல்கள் எனப் பல அரிதான புத்தகங்களையும் அங்குக் காண முடிந்தது.
 கண்காட்சியைப் பார்வையிட வந்த ஜேம்ஸ் என்பவரிடம் பேசினோம்:
 "நான் மேல் படிப்பு படிக்கும் ஆராய்ச்சி மாணவர். என்னுடைய பாடம் தொடர்பான அரிய வகை குறிப்புகள் கிடைக்குமா ? என்பதை பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளேன். போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கண்காட்சி அறிவுகளஞ்சியம் போன்றது. நகரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இவை எளிதாகக் கிடைத்து விடுகிறது. ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது'' என்றார்.
 அரிய நூல்களின் கண்காட்சி ஏற்பாடுகளைச் செய்திருந்த பொறுப்பு நூலகர் ஜெனியிடம் பேசினோம்:
 "ஆண்டுதோறும் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளையொட்டி அரிதான புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது என்றவர், இது தவிர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையான மத நூல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இவை எப்போதும் உண்டு. தொட்டால் பக்கங்கள் உதிர்ந்துவரும் நிலையில் உள்ள அரிய நூல்கள் இவை.
 இந்தக் கண்காட்சி நடைபெறும் ஐந்து நாள்கள் மட்டும் தான் பார்வையாளர்கள் இந்தப் பழைய கட்டடத்திற்குள் அனுமதிப்படுவர். மற்ற நாள்களில் இங்கு யாரும் வர முடியாது. பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்வையிட மட்டுமே அனுமதி உண்டு. அதிலுள்ள குறிப்புகள் தேவை என்றால் எங்களிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். காரணம் அவை கிழியும் நிலையில் உள்ளன.


 கடந்த ஆண்டு இரண்டாயிரம் பேர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். இந்த ஆண்டு நாலாயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். தற்போது மூவாயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். ஆனால், வெயில் மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக பலர் வெளியூர் சென்று விட்டதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
 நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு இது போன்ற ஏராளமான புத்தகங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது'' என பொறுப்புடன் பேசினார்.
 இந்த அரியப் புத்தகங்களின் கண்காட்சி என்பது இன்றைய இளைய தலையினருக்கு வரப்பிரசாதம்.
 -வனராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com