முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
360 டிகிரி
By DIN | Published On : 04th August 2019 02:16 PM | Last Updated : 04th August 2019 02:16 PM | அ+அ அ- |

ஹிட்லரும் ஜோதிடரும்
சர்வாதிகாரி ஹிட்லர் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர். 2வது உலக யுத்தக் காலத்தில் ஒரு நாள் அவர் ஒரு பிரபல ஜோதிடரை தமது இல்லத்துக்கு வரவழைத்து "நான் எப்பொழுது மரணமடைவேன்?' என்று கேட்டார்.
"யூதர்களின் விடுமுறை நாளன்று' என்றார் ஜோதிடர்.
"யூதர்களின் விடுமுறை நாள் என்றைக்கு என்று கேட்டார்' ஹிட்லர்.
"நீங்கள் மரணமடைந்த நாள்தான் அவர்களுக்கு விடுமுறை' என்றாராம் ஜோதிடர்.
-எஸ்.கார்த்திக் ஆனந்த்
தேன்தமிழ்
ஒரு சமயம் கோவை மாவட்டத்தில் ஆசிரியர் இலக்கிய மன்ற விழாவிலே முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
அப்போது தமிழ் மொழி பற்றி அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது. தமிழ்மொழி தேனைப் போன்ற இனிய நற்சுவை உடையது. பேசினாலும் கேட்டாலும் தமிழிலே தேன் சொட்டும். இப்போது பாருங்களேன். நான் படித்தேன். உட்கார்ந்தேன். பார்த்தேன். எடுத்தேன். சிந்தித்தேன் என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறது இல்லையா?
"பள்ளிக்கூடம் போகாமலே'
பள்ளிக்கு பிறகு கல்லூரியில் சென்று படித்துப் பட்டம் பெற்றவர்களே கல்லூரிப் பேராசிரியராக முடியும். ஆனால், அன்று திண்ணைப் பள்ளிக்கூடம் மட்டுமே சென்று படித்த ஒருவர், உடல் ஊனம் காரணமாக பள்ளிக்கூடம் போகமுடியாமல், வீட்டில் இருந்தபடியே தமிழ் இலக்கிய நூல்களைக் கற்று தேர்ந்து ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். அவர்தான் பண்டிதமணி கதிரேசன் செட்டியார்.
-முக்கிமலை நஞ்சன்
மதுரை
மதுரை என்பது ஆங்கிலத்தில் MADURA என்று எழுதப்பட்டு மெஜீரா என்று நீண்ட காலமாக உச்சரிக்கப்பட்டது. மதுரைக்கு வரும் தபால்கள் வட இந்தியாவில் உள்ள MATHURA நகருக்கு தவறாக அனுப்பப்பட்டன. இப்பிரச்னை அப்பொழுது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கவனத்திற்கு சென்றது. இது குறித்து அப்போது நகரசபைத் தலைவராக இருந்த டி.கே.ரமாவுக்கு நேரு ஒரு கடிதம் எழுதினார். மதுரை என்னும் பெயரை சிறிது மாற்றும்படி கடிதத்தில் கோரியிருந்தார்.
கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை மதுரை நகரசபைத் தலைவர் கூட்டினார். அக்கூட்டத்தில் MADHURAI மற்றும் MADURAI என இரண்டு பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அரசினர் MADURAI என்பதைத் தேர்வு செய்தனர்.
-க.ரவீந்திரன்
பிரேசிலில் ரியோ டி-ஜெனிரோவில் மலை மீது அமைந்துள்ள 105 அடி உயரமும், 700டன் எடையும் கொண்ட இயேசு சிலை 1931-இல் கட்டி முடிக்கப்பட்டது.
-ஆர்.கே.லிங்கேசன்
பலூன் மீன்
பலூன் மீன் மிகவும் ஆபத்தானது. எதிரிகள் இதன் பக்கத்தில் வந்தால், பலூன் போல உப்பிப் பருத்து தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும். ஜப்பானியர்களிள் விருப்பமான உணவில் ஒன்று இது. இந்த மீனை சமைக்க முடியாது. சயனைடு விஷயத்தை விட 200 மடங்கு அதிக விஷமுடையவை. ஆபத்தான விஷத்தன்மை இந்த மீனின் உள் உறுப்புகளிலும், கண்களிலும் இருக்கிறது; இந்த மீனைச் சமைப்பதற்கு பயிற்சி பெற வேண்டிய அவசியம் உள்ளது. இப்பயிற்சியில் தேறியவர்களுக்கு மட்டுமே இம்மீனை சமைப்பதற்கு உரிமம் வழங்கப்படுமாம்.
-சு.இலக்குமணசுவாமி
திருக்குறளில் "ஒள' என்ற உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும் குறட்பா எதுவும் இல்லை.
-ஏ.தென்றல், விருதுநகர்
வங்கிகளிலுள்ள லாக்கர்களைப் பெட்டகம் என்று இப்பொழுது சொல்லுகிறோம். ஆனால் சங்க காலத்திலேயே அதற்கு "வைப்புழி' என்ற சொல் வழங்கப்பட்டு வந்தது. திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களில் "வைப்புழி' என்ற இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
-நெ.இராமன், சென்னை