வாரிசால் மாறிய வாழ்க்கை!

""இந்த வாழ்க்கையை நாங்கள் கடவுள் தந்த வரமாகப் பார்க்கிறோம்'' என்று ஆத்ம திருப்தியுடன் பேச ஆரம்பிப்பவர்கள் சென்னை கே.கே நகரைச் சேர்ந்த ஆத்மராஜ்- சுதா தம்பதிகள். 
வாரிசால் மாறிய வாழ்க்கை!

""இந்த வாழ்க்கையை நாங்கள் கடவுள் தந்த வரமாகப் பார்க்கிறோம்'' என்று ஆத்ம திருப்தியுடன் பேச ஆரம்பிப்பவர்கள் சென்னை கே.கே நகரைச் சேர்ந்த ஆத்மராஜ்- சுதா தம்பதிகள். 

இவர்களின் ஒரே மகன் அரவிந்த்ராஜ் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கபட்டவர். மகனை எப்படியும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் மருத்துவமனை சென்ற போது அங்கு அவர்கள் கண்ட காட்சி இவர்கள் இருவரின் வாழ்க்கையே மாற்றிப் போட்டு விட்டது,  மகனைப் போன்று பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் பெற்றோர்கள் பண வசதி  இன்றி கஷ்டப்படுவதைக் காண முடிந்தது. அவர்களுக்கு முடிந்த அளவில் உதவ வேண்டும் என்ற எண்ணம் அங்குதான் உருவானது. இதன் வெளிப்பாடாகப் பல்வேறு சிரமங்களுக்குப் பிறகு சிறப்பு மையங்களை உருவாக்கினார்கள். தற்போது தங்களது மகனைப் போன்று பாதிக்கப்பட்ட 140 குழந்தைகளுக்கு இலவசமாக உதவி வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை மாற்றிய தருணங்கள் பற்றி ஆத்மராஜ்-சுதா தம்பதிகளிடம் பேசினோம்:

""எங்கள் மகன் அரவிந்த்ராஜ் குறைப் பிரசவக் குழந்தையாக ஏழரை மாதத்தில் எடை குறைவாகப் பிறந்தான். அவனுக்கு ஒரு வயது ஆன போது, மூளை முடக்குவாத பிரச்னை கொண்ட "ஸ்பெஷல் சைல்ட்' என்று எங்களுக்குத் தெரியவந்தது. சிறப்புக் குழந்தைகளுடைய இயல்பு மாற்றங்கள் என்னென்ன, அதை எப்படியெல்லாம் சரி செய்வது, இதற்குச் சிகிச்சை இருக்கிறதா?அது எப்படியான சிகிச்சை ? என்று மனதில் பதில் தெரியாத  பல கேள்விகள் உருவானது. நாம் வாழ்க்கையில் எந்தத் தப்பும் செய்யாத போது கடவுள் ஏன் இப்படிச் சோதிக்கிறார். இனி நாம் வாழும் வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன? என எண்ணிய போது உருவானது தான் இந்தத் திட்டம்'' என்கிறார் ஆத்மராஜ். 

""2004-ஆம் ஆண்டு முதல் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு முழுமையாக உதவ வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.  "அரவிந்த் ஃபவுண்டேஷன்'அதற்காகத் தொடங்கப்பட்டது தான். கையில பணம் எதுவும் கிடையாது. உதவ வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தது. சென்னை, அயப்பன்தாங்கலை சேர்ந்த ஒருவர் மையம் ஆரம்பிக்க இடவசதியை இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தார். 10 சிறப்புக் குழந்தைகளோடு எங்கள் பயணம் ஆரம்பமானது. அன்று நாங்கள் போட்ட விதை தற்போது 140 பேர்களுடன் சிறு மரமாகக் கிளைகளுடன் வளர்ந்து நிற்கிறது. எங்கள் மையத்தில் ஒன்றரை  வயது முதல் 40 வயது வரையுள்ள பாதிக்கப்பட்டோர்  பயிற்சி பெற்று வருகிறார்கள். குறிப்பாக ஆட்டிஸம், உடல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியவர்கள் என்று எல்லாவிதமான சிறப்புக் குழந்தைகளும் இதில் அடக்கம். 

பொதுவாக, மூளை பாதிப்படைந்த குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடப்பார்கள். அவர்கள் எங்கள் மையத்திற்குத் தினமும் வந்து விளையாடி, அவங்க மொழியில சிரித்துப்பேசிப் படிக்கும்போது, அவங்க முகத்துல அதுவரை பார்த்திடாத சந்தோஷத்தை அவங்களோட பெற்றோர்கள் பார்க்கிறார்கள்.  குறிப்பாக எங்கள் எண்ணம், நோக்கம், வேண்டுதல் எல்லாம் ஒன்றே ஒன்று தான்.  இது போன்ற பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் அம்மா- அப்பா உதவியை நாடாமல் ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள்ளவைத்து அவர்கள் சுயமாக வாழ்க்கையில் வாழ வேண்டும்.

அதற்கான முயற்சிகள், பயிற்சிகள் கொடுத்து ஊக்கம் அளித்து அவர்களைத் தனி மனிதராக உருவாக்கியுள்ளோம். 

இதுவரை இரண்டு டெய்லர்கள் உருவாகியுள்ளார்கள். பல சுய தொழில் கலைஞர்கள் உருவாகி கொண்டு இருக்கிறார்கள்''  என்றும் சொல்லும் சுதா, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளை எப்படி பராமரிப்பது அவர்களுக்கு மொழிகளை எப்படி புரிய வைப்பது என்பது தொடர்பான மூன்று ஆண்டு படிப்பை முடித்துள்ளார். 

மையத்தை நடத்துவதற்கான நிதியை யார் தருகிறார்கள்?

""இந்த மையத்தை யாரையும் நம்பியும் தொடங்கவில்லை. நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வைஸ் பிரெசிடன்ட்டாக இருக்கிறேன்.  எந்த வித பொருளாதாரப் பின்புலம் இல்லாமல் தான் இந்த மையம் உருவானது. ஒருகட்டத்துல மையத்தை நடத்த முடியாத அளவுக்குப் பொருளாதார ரீதியாகக் கஷ்டம் ஏற்பட்டது. அப்போது நாங்கள் இருவரும் பலரையும் சந்திச்சுப் பேசி, "எங்கள் மையத்தை  ஒரு முறை வந்து பாருங்கள்.  முடிந்தால் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள்' என்று கேட்டோம். அப்படி பார்க்க வந்த பல நல்ல உள்ளங்களால் எங்களை நம்பி வந்த குழந்தைகள் நல்வாழ்வு பெற்று இருக்கிறார்கள். சிலர் பணமாக உதவி செய்வார்கள். சிலர் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்வார்கள். ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளில் இருந்து குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவார்கள்'' என்றார் ஆதம்ராஜ். 

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் என்ன?

""பொருளாதார வசதி இல்லாத குழந்தைகளின் வீட்டுக்கே வண்டி அனுப்பிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதில் தொடங்கி, ஊட்டச்சத்து உணவு, மருத்துவச் சிகிச்சை அளிப்பதோடு அவர்கள்  பேச, நடக்க, படிக்க, விளையாட, உணர்வுகளை வெளிப்படுத்தன்னு... அவங்களுக்குத் தேவையான எல்லாவித பயிற்சிகளையும் கொடுக்கிறோம். அவர்களால புரிஞ்சுக்க முடியுற தொழிற்கல்வி முறைகளைக் கற்றுக்கொடுத்து, ஸ்டேஷனரிப் பொருள்கள், அலங்கார மற்றும் பயன்பாட்டுப் பொருள்களை அவர்களால் முடிந்த அளவுக்குச் செய்ய வைத்து, அதையெல்லாம் கண்காட்சி ஸ்டாலில் விற்பனை செய்து, அந்தப் பணத்தை அவர்களிடமே கொடுத்து ஊக்கப்படுத்துகிறோம். 

எல்லோரையும் போல செயல்பட முடியும் என்கிற உணர்வை அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவோம். குறிப்பாக, சிறப்புக் குழந்தைகளைக்கொண்ட அம்மாக்களுக்கு ஓய்வுங்கிறதே பெரும்பாலும் இருக்காது. அந்த அம்மாக்களில் ஒருத்தியான எனக்கு அந்தச் சிரமம் பத்தி நல்லாவே தெரியும். அதனால் "நிர்மான்' என்ற பெயர்ல விடுமுறை நாள்களில் அந்த குழந்தைகளைக் கவனிக்க பராமரிப்பாளரை நியமித்திருக்கிறோம். அந்த நாட்களில் குழந்தையின் பெற்றோர்கள் மனநிறைவோடு ஓய்வெடுப்பார்கள்'' என்றார் சுதா.

""இந்தக் குழந்தைகள் தொடர்ந்து கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்படுவது, தொடர்ந்து வாயில் எச்சிலை வழியவிடுவது என ஒவ்வொருத்தரும் தங்களுடைய அறியாமையை எப்படி வேணுமானாலும் வெளிப்படுத்துவார்கள். அதைப் புரிந்து கொண்டு, அன்பும், கனிவும், பாசத்தோடும் இருந்தால் மட்டுமே இந்தச் சேவையைச் செய்ய முடியும். அந்த வகையில் எங்களுக்குப் பிறந்ததது அரவிந்த்ராஜ் மட்டுமல்ல 140 குழந்தைகளும் அவனுடன் பிறந்தவர்கள்'' என்கிறார் ஆத்மராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com