சுடச்சுட

  
  sk7

  திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில், அரியலூர் வழியாகக் கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் சாலையில் உடையார்பாளையம் அமைந்துள்ளது.
   தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களில் உடையார்பாளையமும் ஒன்று. இவர்கள் "கச்சி' என்னும் அடைமொழியை உடைய பெயரும், காலாட்கள் தோழ உடையார் என்னும் பட்டப்பெயரையும் உடையவர்கள்.
   தமிழ்த்தாத்தா உ.வே.சா:
   உடையார்பாளையத்தை ஆண்ட பாளையக்காரர் அல்லது அரசு காவலர்களில் பலர் தமிழ் மற்றும் வடமொழியில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். தமிழ்ப்புலவர்களையும் இசைக் கலைஞர்களையும் போற்றினர். உ.வே.சா தனது "என் சரித்திரம்', "நல்லுரைக்கோவை' நூல்களில் உடையார்பாளையம், அரியலூர் பாளையக்காரர்களைப் பற்றி எழுதியுள்ளார்.
   உடையார்பாளையம் பாளையக்காரர்கள் சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம், குருகை காவலப்பர் கோயில், ஸ்ரீமுஷ்ணம், திருப்பனந்தாள் போன்ற கோயில்களில் திருப்பணிகளையும் பல சிறப்பான வழிப்பாட்டிற்கும், விழாக்களுக்கும் தானமளித்திருக்கின்றனர். உடையார்பாளையம், மதனத்தூர், ஆனந்தவாடி என்னும் இடங்களில் அன்னசத்திரம் கட்டியுள்ளனர்.
   கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சிங்கமுகக் கேணி இவர்களால் கட்டப்பட்டது என்பதை அங்குள்ள கல்வெட்டால் அறிகிறோம். அக்கோயிலின் விமானத்தின் மீதுள்ள பொன்முலாம் பூசப்பட்ட தூபியும் உடையார்பாளையம் ஜமீன்தாரால் அளிக்கப்பட்டது.
   உடையார்பாளையம் புதுப்பணம்:
   இப்பாளையக்காரர்கள் தங்களுக்கு என்று நாணயம் அடிக்கும் சாலையை வைத்திருந்தனர். காசுகளை அடிக்கும் இடம் "செட்டியார் கூடம்' என வழங்கப்பட்டது. இங்கிருந்து வெளியான காசு "உடையார்பாளையம் புதுப்பணம்' என அழைக்கப்பட்டுள்ளது. இக்காசு பற்றிய குறிப்புகள் சரஸ்வதி மஹால் சுவடி ஆவணங்களிலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் வாலஸ் துரை 1808-இல் அனுப்பிய குறிப்புகளிலும் காணப்படுகிறது.
   பயறணிநாதர் கோயில்:
   உடையார் பாளையத்திற்கு பத்ராண்யம், முற்கபுரி என்ற பெயர்கள் உண்டு. இறைவனுக்கு பயறணிநாதர் என்ற பெயரும், இறைவிக்கு நறுமலர்பூங்குழல் நாயகி என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
   வணிகன் ஒருவன் மிளகு மூட்டைகளை எடுத்துக் கொண்டு இவ்வூர் வழியே சென்றான். சுங்கச்சாவடியில் அவற்றை பயறு மூட்டைகள் எனக்கூறி குறைந்த வரியை செலுத்திவிட்டு தன்னுடைய ஊர் சென்று பார்த்தபொழுது மிளகு மூட்டைகள் அனைத்தும் பயறு மூட்டைகளாக காட்சி அளித்தது. இவ்வூர் இறைவனை வேண்ட மீண்டும் அவை மிளகு மூட்டைகளாக மாறியதாகவும் இதன் காரணமாக இறைவனுக்கு பயறணிநாதர் என்று பெயர் வழங்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. இத்தலத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் இயற்றிய மாயூர புராணத்தில் போற்றுகின்றார்.
   கோயிலுக்கு முன்னர் பிள்ளையார் சந்நிதி உள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் விநாயகர் "வில் வளைத்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார். பிள்ளையார் வடிவம் சிறிய வடிவம்தான். தனது நான்கு கைகளில் மேற்கைகளில் அங்குசம் பாசம் ஏந்தியும், தனது கீழ் இரு கைளில் வில்லை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார். எங்குமே காண இயலாத அரிய வடிவம். அர்ச்சுனனுக்கு காண்டீபம் என்ற வில்லை வளைத்து தந்தமையால் வில்வளைத்த விநாயகர் என வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
   கோயில் இரண்டு திருச்சுற்றுகளுடன் விளங்குகிறது. முதல் திருச்சுற்றில் பிள்ளையார், முருகன் சந்நிதிகள், யாகசாலை, காமாட்சி மண்டபம், வாகன மண்டபம் ஆகியவை உள்ளன.
   பங்காரு காமாட்சி:
   காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலைச் சேர்ந்த "பங்காரு காமாட்சி' என்ற திருமேனியை பாதுகாக்கும் பொருட்டு இவ்வூர் கோயிலில் வைக்கப்பட்டிருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அத்திருமேனி வைக்கப்பட்டிருந்த மண்டபம் "காமாட்சி மண்டபம்' என அழைக்கப்படுகிறது. இம்மண்டபத்திலுள்ள படிக்கட்டில் "வெங்டத்தார் உபயம் சதாசேர்வை' என்ற கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
   தற்பொழுது இத்திருமேனி தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயிலில் வழிபடப்பெறுகிறது. உடையார்பாளையம் ஜமீன் பரம்பரையில் முத்து விஜயரங்கப்பக்காளக்க தோழஉடையார் என்பவர் ஸ்ரீ பங்காரு காமாட்சி கோயிலில் அர்த்தசாமக்கட்டளை ஏற்படுத்தினார். இவர் கி.பி. 1784-இல் ஜமீன் ஆட்சிக்கு உட்பட்ட காருகுறிச்சி கிராமத்தில் நிலம் தானமாக அளிக்கப்பட்டது.
   காஞ்சி அத்திவரதர்:
   அந்நிய படையெடுப்புகளின் காரணத்தால் பேரருளாளன் சந்நிதிக்கு தீங்கு நேருமே என்று எண்ணி பெரிய பெருமாளை திரு அனந்த சரஸ் என்னும் திருக்குளத்தில் வைத்துவிட்டனர். பின் உற்சவத் திருமேனிகளைப் பாதுகாப்பின் பொருட்டு உடையார்பாளையத்தில் வைத்து 40 ஆண்டுகளுக்கு மேல் வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். பின்னர் உற்சவர் மூர்த்தியினைக் காஞ்சிபுரத்திற்குக் கொண்டு வந்தனர். வரதாஜப் பெருமாள் கோயிலில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் காணும் தெலுங்குக் கல்வெட்டால் உற்சவர் விரோதி வருடம், பால்குண மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம், சனிவாரம், அமாவாஸ்யை திதி, விருஷப லக்னம் அன்று காஞ்சிக்கு எழுந்தருளினார் என்பதை அறியமுடிகிறது.
   காஞ்சிபுரத்தின் வரலாற்றில் உடையார்பாளையத்துடன் கொண்டிருந்த தொடர்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.
   இறைவன், இறைவி சந்நிதியும் அடுத்தடுத்துக் கிழக்கு நோக்கிக் காணப்படுகிறது. இறைவன் சந்நிதியின் நுழைவு வாயிலில் சங்க நிதி, பத்மநிதியின் வடிவங்கள் காணப்படுகின்றன.
   சிவன் கோயிலுக்கு அருகில் பெருமாள் கோயிலும் உள்ளது. இக்கோயிலின் திருச்சுற்றில் மண்டபத்தின் விதானத்தில் ராமாயண வரலாறு முழுவதும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.
   உடையார்பாளையத்தை ஆண்ட அரசர்கள் யுவரங்க பூபதி உடையார் என்பவர் சிறப்பாகப் போற்றப்படுகின்றார். தமிழிலும், வடமொழியிலும் சங்கீதத்திலும் புலமை பெற்றவர். இறைவி மீது "நறுமலர் பூங்குழல் நாயகி மாலை' என்ற இலக்கியத்தை இயற்றியுள்ளார்.
   உடையார்பாளையம் அரசர்களில் பலர் தமிழ், வடமொழியில் தேர்ச்சி பெற்று விளங்கினர். திருக்கோயில்களுக்கும் தொண்டுகள் செய்தனர். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சிபுரத்தில் பாளையக்காரர்களாக இருந்ததால் "கச்சி' என்னும் அடைமொழி இவர்களுடைய பெயர்க்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது. விஜயநகர அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணைபுரிந்து வந்ததால் காலாட்கள் தோழ உடையார் என்ற பட்டப்பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது.
   தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் வரலாற்றில் உடையார்பாளையம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. ஆன்மீகத்திலும், திருக்கோயில்களைப் போற்றுவதிலும், இசைக்கலைஞர்களைப் போற்றுவதிலும் தமிழ்மொழி மற்றும் இதர மொழிப் புலவர்களையும் போற்றுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார்கள்.
   காலமாற்றத்தால் தற்பொழுது அரண்மனையின் பல பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனை ஒரு வரலாற்றுச் சின்னமாக அறிவித்துப் போற்றிப் பராமரிக்க வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர்.


   கட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai