என்றும் இருப்பவர்கள்! 28 சா. கந்தசாமி

எஸ். பொன்னுத்துரையின் இலக்கிய வாழ்க்கை தமிழ் வாசகரை பொருத்தவரையில் நீண்ட இடைவெளியுடையது. இரு கட்டங்களை கொண்டது. முப்பதாண்டுகளுக்கு
என்றும் இருப்பவர்கள்! 28 சா. கந்தசாமி

எஸ். பொன்னுத்துரையின் இலக்கிய வாழ்க்கை தமிழ் வாசகரை பொருத்தவரையில் நீண்ட இடைவெளியுடையது. இரு கட்டங்களை கொண்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பே அவர் தீவிரத் தமிழ் வாசகர்களிடையே நன்கு பரிச்சயமானவர். இலங்கை எழுத்தாளரான இவருடைய நூல்கள் அன்று வெகுசில பிரதிகளே தமிழகத்துக்கு வந்திருக்கும் என்றாலும், அவை அன்றே நன்கு பயன்படுத்தப்பட்டவை. அவருடைய "தீ' நாவல் பெரிதும் விவாதிக்கப்பட்டது. விமர்சகர்களை அவர் சந்தித்த விதம் ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போய் பாணியில் இருந்தது.
 அசோகமித்திரன்-1995
 இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒளிரும் நட்சத்திரம் எஸ்.பொ. என்றறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை. 1932-ஆம் ஆண்டில் இலங்கையில் நல்லூரில் பிறந்தவர். உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படித்தார். அவர் காலத்தில் மேற்படிப்பிற்காக யாழ்ப்பாணம் தமிழர்கள் இங்கிலாந்து செல்வது வழக்கம். ஆங்கிலப் படிப்பு அறிவை விசாலமாக்கும்; நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என்று கருதினார்.

எஸ்.பொன்னுத்துரையோ மேற்படிப்புக்காகத் தமிழ்நாடு வந்தார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் ஆங்கிலம் இளங்கலைப் படித்தார். படிக்கும் போதே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். சிறுகதைகள், கவிதைகள் எழுதினார்.
 தமிழ்நாட்டின் வெகுஜன பத்திரிகைகளான "ஆனந்தவிகடன்', "கல்கி', புதிய இளம் எழுத்தாளர்களுக்கு எட்டா சுவையாக இருந்தன. நாரண-துரைக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு "பிரசண்ட் விகடன்', "ஆனந்த போதினி' வெளிவந்தன. அவை இளம் படைப்பாளிகளை அரவணைக்கும் பத்திரிகைகளாக இருந்தன. தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி, லட்சுமி- எல்லோருமே முதலில் நாரண-துரைக்கண்ணன் பத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். அப்படியே எஸ்.பொன்னுதுரையும் உருவானார்.
 பொன்னுத்துரை இளம் பருவத்தில் கவிதைகள் எழுதி வந்தார். தன் கவிதைகளுக்கான காலம் முடிந்துவிட்டது தெரிந்தது. உரைநடையில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். தமிழ்நாட்டுப் பத்திரிகைகளான "கலைமகள்"," சரஸ்வதி" எல்லாம் அவர் கதைகளைப் பிரசுரம் செய்தன. 1950-ஆம் ஆண்டுகளிலேயே பொன்னுத்துரை ஓர் இலக்கிய ஆசிரியராக அங்கீகாரம் பெற்றுவிட்டார் என்று அசோகமித்ரன் பின்னர் எழுதினார்.

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு யாழ்ப்பாணம் சென்றார். பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கற்பிப்பதும், கற்பதும் எழுதுவதும் அவர் வேலைகளாக இருந்தன. தமிழ்நாட்டைப் போலவே இலங்கையிலும் இலக்கியம் பற்றி-அதன் செயற்பாடுகள் பற்றி தீவிரமான சர்ச்சைகள் நடைபெற்று வந்தன. முற்போக்கு இலக்கியமே இலக்கியம் என்ற முழக்கம் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது. க.சிவதம்பியும், கைலாசபதியும் இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதும் படைப்பு எழுத்தாளர்கள் இல்லை. பேராசிரியர்கள், விமர்சகர்கள்.
 கைலாசபதி "வீரகேசரி'யில் ஆசிரியராகப் பணியாற்றி நவீன இலக்கியம் பற்றி குறிப்பாக நாவல்கள் பற்றி எழுதி வந்தார். அவருக்கு நல்லாதரவு இருந்தது. அவரும் க.சிவதம்பியும், தமிழகத்தில் மதிக்கப்படும் பேராசிரியர்களாக; தமிழறிஞர்களாக இருந்தனர். அவர்கள் லண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று இருந்தார்கள். தமிழ் பேராசிரியர்கள் திராவிடச் சிந்தனையாளர்களாகவும், தனித்தமிழ் பற்றாளர்களாகவும் இருந்தனர். அதில் இருந்து மாறுபட்டுத் தமிழ் நாவல், சினிமா, நாடகம் பற்றியெல்லாம் எழுதி க.சிவதம்பியும், கைலாசபதியும் கம்யூனிஸ்டுகளாகவும், நவீன விமர்சகர்களாகவும் இருந்தார்கள். அதன் காரணமாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், கல்லூரிகள் எல்லாம் அவர்களை வருகை தரும் பேராசிரியர்களாக அழைத்துப் பேச வைத்தன.
 "இலக்கியம் என்பது ஒற்றை இழை கொண்டது இல்லை. சித்தாந்தத்தால் இலக்கியம் எழுதப்படுவதும் கிடையாது. அது எழுத்தாளன் மனோ தர்மம் சார்ந்தது. அதில் யாரும் தலையிட முடியாது' என்று சில எழுத்தாளர் சொல்லிக் கொண்டும், சொல்லிக் கொள்ளாமலும் எழுதி வந்தார்கள். அவர்களில் ஒருவராக இலங்கையில் எஸ்.பொன்னுத்துரை இருந்தார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் இருந்தன. ஆனால், அவர் எழுத்துகளின் தரம் பற்றி விமர்சனம் ஏதுமில்லை.
 2000-ஆம் ஆண்டில் சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிதா பதிப்பகத்தில் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டு இருந்தேன். "கந்தசாமி' என்று தோளில் ஒருவர் கை வைத்தார். திரும்பிப் பார்த்தேன். எஸ்.பொன்னுத்துரை. அவர் சிறுகதைகள் மற்றும் "தீ', "சடங்கு' நாவல்களைப் படித்திருக்கிறேன். பேச்சின் வசீகரம் கொண்ட அழகிய நடை கொண்ட படைப்பு எழுத்தாளர்.
 "எஸ். பொ''
 தலையசைத்தார். இரண்டு பேர்களும் கையைப் பிடித்துக் கொண்டு புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியில் வந்தோம். ஒரு தேநீர் கடையில் தேநீர் பருகிக் கொண்டே நெடுநேரம் இலக்கியம், இலங்கை அரசியல், கல்விமுறை என்பது பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆதரவாகவே இருந்தார். பல ஆண்டுகள் தான் நைஜீரியா நாட்டில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிதாகக் கூறினார். "நைஜிரியாவை விட இலங்கையின் அரசியல் நிலவரம் மோசமாக உள்ளது' என்றார்.
 அவர் குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அவர் மகன்களில் ஒருவர் கடல் புலியாக இருந்தார். அவர் கடல் போரில் சிங்கள கடற்படையில் கொல்லப்பட்டதையும் சொன்னார். அவருக்கு வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்டிருந்தன. அதில் அவரை அதிகமாகப் பாதித்தது இலங்கையில் தான் இருட்டடிப்புச் செய்யப்பட்டதாகக் கருதினார். அதில் சமூக கலாசாரத்தோடு சாதியும் இருந்தது என்பதை இன்னொருவரைப் பற்றிச் சொல்வது போல சொன்னார்.
 அப்பொழுது கோடம்பாக்கத்தில் மித்ரா பதிப்பகத்தில் தங்கியிருந்தார். ஒரு முறை அவரை வீட்டிற்குப் பகல் விருந்துக்கு அழைத்தேன். வாழையிலை போட்டு புழுங்கல் அரிசி சோறு. கத்திரிக்காய், முருங்கைக்காய், மாங்காய் போட்டக் புளிக்குழம்பை ரசித்துச் சாப்பிட்டார்.
 அவருக்கு நவீன இலக்கியம் பற்றிப் பேசுவதில் அதிகமாக ஆர்வம் இருந்தது. தமிழ்ப் பத்திரிகைகள் இலங்கை எழுத்தாளர்களைக் கண்டு கொள்வது இல்லை. எழுத்தாளர்களும் படிப்பதில்லை. அவைகளை தமிழ் இலக்கியம் முன்னேறி செல்ல வேண்டும்'' என்றார்.
 அவருக்கு இலங்கை எழுத்தாளர்களில் சிலரை மிகவும் பிடித்திருந்தது. அவர்களில் ஒருவர் வ.அ.ராஜரத்தினம். அவரின் "தோணி' என்ற சிறுகதையைப் படித்திருக்கிறேன். நேரான தொனியில் யதார்த்தமாக எழுதக்கூடியவர். 1964-ஆம் ஆண்டில் வெளிவந்த வாசகர் வட்டத்தின் அக்கரை இலக்கியத்தில் தோணி இடம் பெற்று இருந்தது. இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் அவர் மதிப்பு மிக்க எழுத்தாளராக இருந்தார். தோணி பற்றி ஒரு முறை எஸ்.பென்னுத்துரையுடன் பேசினேன். அதை அவர் நினைவில் வைத்துக் கொண்டு "ராஜரத்தினம் வந்திருக்கிறார். வர முடியுமா?' என்று கேட்டார்.
 ""நான் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள "மித்ரா' பதிப்பகத்திற்குச் சென்றேன். எஸ்.பொன்னுத்துரை இளம் பருவத்தில் இருந்தே புத்தகப் பிரியராக இருந்தார். சிறந்தப் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் சக எழுத்தாளர்களிடம் உரையாடினார். நல்லப் புத்தகங்களை வெளியிடவே மித்ரா பதிப்பகத்தைத் தொடங்கி, நண்பர் பொறுப்பில் விட்டுவிட்டு ஆஸ்திரேலியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தார். அவர் குடும்பம் முழுவதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்துவிட்டது. ஆனால், இலக்கியம் மொழி என்பதை விட முடியாதவராக இருந்தார்.''
 இலங்கையிலிருந்து வ.அ. ராஜரத்தினத்தை அவர்தான் வரவழைத்திருந்தார். ராஜரத்தினம் முதுமையுற்று சோர்ந்து போயிருந்தார். அவர் மனைவி காலமாகிவிட்டார். வீடு குண்டு வீச்சில் தகர்ந்து போய்விட்டது. அவர் சேமித்து வைத்திருந்த புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் எல்லாம் தீயில் எரிந்து போய்விட்டது." நானே இல்லாமல் போய்விட்டேன் என்று தான் இருந்தேன். ஆனால், எதுவும் அடியோடு இல்லாமல் போவதில்லை என்பது மாதிரி, என் இனிய நண்பர் எஸ். பொ என் கதைகளைத் தேட ஆரம்பித்து இருக்கிறார். பலரின் உதவியால் சிரமப்பட்டுச் சில கதைக் புத்தகங்களையும், நண்பர்களிடம் படிக்கக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதிகளையும் கண்டுபிடித்து, "வ.அ.ராஜரத்தினம் சிறுகதைகள்' என்ற தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். அதனை வெளியிடவும், நண்பர்களைப் பார்த்து உரையாடவும் அழைத்து வந்திருக்கிறார். அவர் இல்லாவிட்டால் என் கதைகள் அச்சேறியிருக்கவே முடியாது' என்றார்.
 வ.அ.ராஜரத்தினம் தன் சிறுகதைத் தொகுப்பை கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார். "அதோடு நீங்கள் என் சிறுகதைகள் சிலவற்றைப் படித்து இருப்பதையும் எஸ்.பொ சொன்னார். உலகத்தில் எங்கோ படிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்காகவே எழுதப்படுகிறது என்பது சரிதான்.
 சாகித்ய அகாதெமிக்காக நீங்கள் கொடுத்த அயலகத்தமிழ் இலக்கியம் தொகுப்பில் என் தோணி சிறுகதையைச் சேர்த்திருந்தீர்கள். அத்தொகுப்பைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது தீயில் பொசுங்கிப் போய்விட்டது. ஆனாலும் உங்களைப் பார்க்க ஆசைபட்டேன். விரைவில் நான் இல்லாமல் போய்விடுவேன். நல்ல வேளையாக என் சில கதைகளை எஸ்.பொ புத்தகமாகப் போட்டிருக்கிறார், நான் போன பின்னரும் அது இருக்கும்'' என்றார். அவர் கண்களில் நீர் திரண்டது.
 எஸ்.பொ, " தன்வீ', "அவா' "நினைவிடைத்தோய்தல்' புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். இரண்டு பெரும் எழுத்தாளர்களிடமும் விடைபெற்றுக்கொண்டேன்.
 எஸ்.பொன்னுத்துரை இலங்கை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்களை எதிர்கொள்ள வேண்டியவராக இருந்தார். ஆனால் அவர் பிற்போக்கு எழுத்தாளரோ மூட நம்பிக்கைகளை ஆதரிக்கிறவரோ இல்லை. அவர் தன்னளவில் பெரிய நற்போக்கு எழுத்தாளர். சமூகக் காரணங்களால்-தன்னைப் புறந்தள்ளும் எழுத்தாளர்களை எதிர்க்க நற்போக்கு இலக்கியவாதியென்று அறிவித்துக் கொண்டார். ஆனால் நெடுங்காலம் முற்போக்கு இலக்கியம் பற்றி அவர் பேசிக் கொண்டில்லை. 1964-ஆம் ஆண்டு வாக்கில் அதனை விட்டு விட்டதைப் பற்றி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.
 1978-ஆம் ஆண்டில் "தீண்டத்தகாதவன்' முதலான ஈழத்து தலித் சிறுகதைகள்- என்ற ஒரு தொகுப்பு வந்தது. அதில் எஸ்.பொவின் "களம்' என்ற நீண்டதொரு சிறுகதையும் வெளிவந்தது. இலக்கிய உலகம் ஓர் எழுத்தாளன் தன்னைப் பற்றி அவன் என்ன சொல்லிக் கொள்கிறான்; எப்படி அறியப்பட வேண்டுமென விழைகிறான் என்பதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்வதே இல்லை. அவன் படைப்புகள் என்ன சொல்கின்றன என்பதன் அடிப்படையில் தான் வகைப்படுத்தப்படுகிறான்.
 எஸ்.பொ, இந்தியாவில்-தமிழ்நாட்டில் ஈழத்துத்தமிழ் எழுத்தாளராகவே அறியப்பட்டிருந்தார். 2004-ஆம் ஆண்டில் இந்திய சாகித்ய அகாதெமி, அயலகத்தமிழ் இலக்கியம் என்ற தொகுப்பைக் கொண்டு வந்தது. அவர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் என்பதற்காக "அணி' - என்ற சிறுகதையைச் சேர்த்து வெளியிட்டது.
 அவர் அடிப்படையில் கலைஞர். அதனை எழுத்துலகம் அறிந்து கொண்டிருந்தது போல-அவர் குடும்பத்தினரும் தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர் தன் சுயசரித்திரத்தை பெரிய புத்தகமாக எழுதினார். அவரிடம் சொல்ல நிறைய இருக்கிறது என்பது எழுதப்பட்டதன் வழியாகத் தெரிந்தது.
 சென்னை தியாகராயநகரில் பெரிய இலக்கியத் திருவிழா நடத்தி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு எழுத்தாளர்களில் சிலரை அழைத்து சுயசரித்திரத்தை வெளியிட்டார். அவர் இந்திரா பார்த்தசாரதியோடு இணைந்து தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பொன்றை கொண்டு வர திட்டமிட்டார். அதற்காக ஒரு கூட்டம் கூட ஏற்பாடு செய்தார். சில எழுத்தாளர்களை அழைத்து யோசனை கேட்டார். ஆனால், அவர் யார் யோசனையையும் கேட்கக்கூடிய எழுத்தாளர் இல்லை. அவருக்கு எது இலக்கியம் என்பது தெரியும். அதுவே தான் பிரச்னை அவரின் தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு முற்றுப் பெறாமல் போய்விட்டது.
 எஸ்.பொ-தான் முதுமையுற்றுவிட்டதைத் தெரிந்து கொண்டார். நீண்ட பயணம் சாத்தியமில்லை என்றும் பட்டது; பதிப்பகத்தைத் தன் நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு ஆஸ்திரேலியோ சென்றார். 2014-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் காலமானார். அப்பொழுது அவருக்கு எண்பத்திரண்டு வயதாகி இருந்தது. அவர் தன் படைப்புகள் வழியாக என்றும் இருக்கிறார்.
 (அடுத்த இதழில்: அசோகமித்ரன்)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com