சுடச்சுட

  
  adutha_sattai2

  "ஒரு சமூகத்தின் நீதி கல்வி கூடங்களில்தான் பிறக்கிறது. ஆசிரியர்களிடம் இருந்துதான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளி வாங்கிக் கொள்ள முடியும்.''
   இரண்டே வார்த்தைகளில் கதையின் ஆழம் தொட்டுப் பேசுகிறார் இயக்குநர் அன்பழகன். "சாட்டை' படத்தின் மூலம் கல்வி அவலம் பேசியவர். இப்போது "அடுத்த சாட்டை' படத்தின் மூலமும் அதே கருவை சுமந்து வருகிறார்.
   ஒரு ஹிட் படத்தின் தொடர்ச்சியாக அடுத்தப் பாகம் வரும் போது, எதிர்பார்ப்பு அதிகமாகுமே....
   இது "சாட்டை' படத்தின் தொடர்ச்சி கிடையாது. இரண்டுக்குமான இணைப்பு புள்ளி என்பது கல்விதான். மற்றபடி நடிகர்கள், களம் என எல்லாவற்றிலுமே மாற்றம் இருக்கும். ஒரு ஆசிரியர், ஒரு தனியார் கல்லூரி, மாணவர்கள், சக ஆசிரியர்கள் இதுதான் களம். ஆசிரியர்கள் நமக்குச் சொல்லித் தந்த பூக்கள், எப்போதும் உதிராத பூக்கள். நிறம் இழக்காமல் , வெயில் மழை குடிக்கும் பூக்கள். எங்கே சென்றாலும், என்ன ஆனாலும் ஆசிரியர்களுக்கு நாம் சிறு பிள்ளைகள்தான். அவர்கள் கடவுளின் நிழல் போல் எங்கோ இருக்கிறார்கள்.
   வயதாகி உடல் உடைந்து சிரமங்கள் கடந்து எப்படி எப்படி எல்லாமோ ஆகி விடுகிறார்கள். ஆனால், நம் நினைவில் நிற்பது கம்பீரமான ஆசிரியர்கள்தான். பறவையின் சிறகைப் போன்ற அப்பழுக்கு எதுவும் இல்லாத நமது பால்யத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் போய் விடுகிறார்கள். அதனால்தான் காலத்துக்கும் அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆசிரியர்கள் எப்போதும் பரிசுத்தம். அது மாதிரி ஓர் இடத்தில் தமிழ்ப் பேராசிரியராக சமுத்திரக்கனி வருகிறார்.
   கல்வி கொள்கைகளுக்கு எதிரான சாட்டையடி என்பதாக அர்த்தம் கொள்ளலாமா...?
   ஒரு கல்லூரி என்பது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையைச் செதுக்கும் பட்டறை களம். ரசவாதக் கூடம். மாறுபவனும்
   இருக்கிறான். மாற்றப்படுகிறவனும் இருக்கிறான். எல்லாக் கல்லூரிகளிலும் யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்குக் காதல் பூக்கிறது. ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுதுகிறான்.
   அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறையப் பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறான் வெகு நாள்களுக்கு பிறகு... கல்லூரி என்பது ஒரு வனத்தைக் கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும். இதுதான் கதையின் அடிப்படை. இன்றைய கல்வி சூழல், அரசியல், ஜாதியம் எல்லாவற்றையும் கொண்டு வருவதில் சவால். ஓர் அளவுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இன்றைய கல்லூரி சூழல் சீர் கெட்டுக் கிடக்கிறது. தனியார் கல்லூரிகள் வட இந்திய இளைஞர்களை அதிகமாகச் சேர்த்து விடுகிறது. அவர்கள் கொடுக்கும் பணத்துக்காக அவர்களை நிர்வாகம் கண்டிக்கத் தவறி விடுகிறது. அவர்களின் வாழ்க்கை சூழல் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர்களோடு நம் மாணவர்களால் பொருந்தி போக முடியவில்லை. இது மாதிரி ஒவ்வொரு இடமும் கவனிக்கத் தோன்றும்.
   
   இது மாதிரியான களங்களில் விமர்சனங்கள்தான் அதிகமாக வெளிப்படும்....
   எல்லாம் உண்டு. விமர்சனங்களும்தான். குறிப்பாகத் தனி மனித வாழ்வு தொடங்கி அரசியல் வரைக்குமான ஏக விமர்சனங்கள் இருக்கும். இங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... கல்வி, வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவிக் கிடக்கிறது.
   அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் கல்வி என்றாகி விட்டது. அரசியல் செல்வாக்கு இருந்தால் இந்த தேசத்தில் அவர் ஒரு கல்லூரி தொடங்கி, கல்விமான் ஆகி விடலாம் கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளைச் சரி செய்யத் தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அந்த நாள்களை இந்தச் சமூகமும், அரசியலும் மாற்றி எழுதி விடுகின்றன. உன்னைச் சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்தக் கதையின் நீதி. அதைக் கல்வி கொள்கை கொண்டு உரசியிருக்கிறேன்.
   
   சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவருக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டா?
   அவர்கள் இல்லாமல் இந்தப்படம் சாத்தியமே இல்லை. இன்னும் நிறையத் திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையைப் புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவருமே பெரும் பலம்.
   அதுல்யா ரவி, ஜார்ஜ் மாதிரியானவர்கள் இன்னும் கதையின் விரிவாக்கத்துக்குத் துணை நின்றார்கள். அது போல் பல ஆண்டுகளாக சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறேன்.
   எல்லோருக்கும் இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு..இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. அதுதான் இந்த சினிமா.
   - ஜி.அசோக்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai