Enable Javscript for better performance
இனி ஆயுதங்களைக் கொண்டு போர் நடக்காது!- Dinamani

சுடச்சுட

  
  sk15


  ""ஒரு சினிமா,  பார்ப்பவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த சினிமாவை அடைந்திருக்கிறேன் நான். எனக்கான உலகத்தை நீங்களும் உங்களுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம்.'' நெஞ்சில் கை வைத்து பேசுகிறார் இயக்குநர் ஆதியன் ஆதிரை. பா. ரஞ்சித்தின் உதவியாளர். இப்போது "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் இயக்குநர்.

  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு.... வேகமாக கவர்ந்திழுக்கும் தலைப்பு....

  அது உங்கள் பார்வையைப் பொறுத்ததே. இரை தேடி அலையும் மானுடம், காகம் போல் கரையும் மனம். ஜனத்திரட்சி, நெரிசல் காடு, எப்போதும் பரபரப்பு, தாளாது விம்மும் எண்ணங்கள், தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சி விவாதங்கள்... இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே. இவற்றுக்கு நடுவே நானும் ஒரு சராசரி மனிதன். இந்த உலகம்... ஒரு மாயமான். கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். நான் இந்த சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள்.

  நான் கதைக்காக வேற்று கிரகம் போகவில்லை.  இதோ இப்போது பேசும் போது கூட உங்களிடம் ஒரு விஷயம் தட்டுப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தின் பக்கம் நின்றது இந்தியா. அது இரு படைகள் சந்தித்துக் கொண்ட போர் மட்டுமே அல்ல. அது அன்றோடு நின்று விடுவது மட்டுமே அல்ல. அதன் விளைவுகள் என்பது பல நூற்றாண்டுகளுக்குத் தொடரும். அந்தச் சூழலில் வளருகிற குழந்தைகள், மனிதர்கள், இயற்கை சார்ந்த தாவரங்கள் எல்லாமே மாறும். அதன் பாதிப்பு இயல்பான மனிதர்களை உருவாக்கவில்லை. அதன் பாதிப்பு இங்கே எங்கோ வாழ்கிற சாமானிய இளைஞனை எங்கு கொண்டு சென்றது. இதுதான் இந்தப் படம். 

  இரண்டாம் உலகப் போர் பற்றி இங்கே ஒப்பிடுவது கேள்விகளை உண்டாக்குமே....

  அப்போது இங்கிருந்து ஆயுதங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பபட்டிருக்கிறது. வீரர்கள் நிறைந்த கப்பல்கள் இங்கிருந்து பயணமாகியிருக்கின்றன. இங்கிலாந்துக்கு உதவிய களமாகத்தான் அப்போதைய இந்தியா இருந்தது. அது இந்தக் கதையின் மூலம் இல்லை. ஆனால் போர் என்பது இதன் கரு. இனி வரும் போர் சுழல்களை எங்கோ நடக்கிறது என்று நாம் வேடிக்கைப் பார்க்க முடியாது. 

  போர் என்பது இனி ஆயுதங்களைக் கொண்டு நடக்காது. அப்படி நடந்தால் அவற்றுக்கு எல்லைகள் உண்டு. இனி மனித குலம் சந்திக்கும் போர் சூழல்களுக்கு எல்லைகளே கிடையாது. சொல்லப் போனால் அந்தப் போருக்கு ஆயுதங்களே இருக்காது. எல்லாமே அணு கதிர் வீச்சுதான். அந்தக் கதிர்களுக்கு எல்லை இருக்காது. மனிதம் தெரியாது. எல்லாமே அதற்கு அழிவுதான். அப்படி ஒரு போக்கைத்தான் இந்தப் படம் எடுத்து வைக்கும். உலக மனிதர்களுக்கான பிரச்னைகளை நம் மொழியில் பேசுகிறோம்.  வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. பேரன்பு மிக்க மனிதத்தை உலகம் முழுவதும் உருவாக்க வேண்டும். 

  கதை எதன் பொருட்டாக நகர்ந்து வரும்...

  மனிதம்தான்...போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்.. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது. 

  தினேஷ், ஆனந்தி ஒத்துழைப்பு எப்படி இருந்தது...?

  இந்தக் கதை சென்று சேராத முன்னணி நடிகர்கள் இல்லை. ஆனால், படமாவதற்கு எந்தச் சூழலும் சரியாக அமைந்து வரவில்லை.  அது இப்போதுதான் நகர்ந்து கைகளுக்கு வந்திருக்கிறது. "அட்டக்கத்தி' தினேஷ் புதிதான நடிகர் இல்லை. அவரின் திறமைக்கு இங்கே பல உதாரணங்கள் இருக்கிறது.

  இந்தக் கதைக்குப் பெரும் பொறுப்பு மிகுந்த நடிகர் தேவை என்பது முதல் விதி. நடிப்பை முழுத் தகுதியாக கொண்டவர் ஒருவர் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த போதுதான், தினேஷ் இதன் உள்ளே வந்தார். அவர் வந்ததும் படம் இன்னும் அழகானது. எனக்கான வேலை வாங்கும் சிரமத்தை குறைந்தது. வடிவாக்கத்தை மட்டுமே நான் பார்த்துக் கொண்டேன். மற்றவற்றை அவராகவே பார்த்துக் கொண்டார்.  நடிப்பின் மீதான பற்றும், அவருக்கு இருக்கிற வெறியும் ஆச்சரியமாக இருக்கிறது. அதே போல் ஆனந்தி. அவருக்கும்  ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. 

  தயாரிப்பாளராக பா. ரஞ்சித் எப்படி? 

  இந்தளவுக்கு சுதந்திரம். அறத்துக்காகவும் எளியவர்களின் அரசியலுக்காகவும் முடிந்த வரை செயல்படுவதில் உறுதியாக இருக்கிறார். இலக்கை அடைவதில் புதிய நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் அடைந்திருக்கிறார். அவரின் அந்தக் கண்ணோட்டத்துக்கு நிச்சயம் எந்த இழப்பும் வைக்காமல் படம் வந்திருக்கிறது. எந்தப் படைப்பும் மக்களை நோக்கியே இருக்க வேண்டும் என்பது அவரின் கணிப்பு. அதைச் சரியாகக் கண்டு அடைந்திருக்கிறேன். நன்றி ரஞ்சித் சார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai