என்றும் இருப்பவர்கள்! - 30

1986-ஆம் ஆண்டு. புதுதில்லியில் உள்ள ரவீந்திரபவன் வளாகத்தில் உள்ள லலித் கலா அகாதெமி கலைக்கூடத்தில் 6-வது சர்வதேச கலைக் கண்காட்சி நடைபெற்றது.
என்றும் இருப்பவர்கள்! - 30


1986-ஆம் ஆண்டு. புதுதில்லியில் உள்ள ரவீந்திரபவன் வளாகத்தில் உள்ள லலித் கலா அகாதெமி கலைக்கூடத்தில் 6-வது சர்வதேச கலைக் கண்காட்சி நடைபெற்றது. ஓவியங்களையும், சிற்பங்களையும் காண மாடிப்படி ஏறி மேலே சென்று கொண்டிருந்தேன்.

"ஆதி' என்று மேலே இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த  ஓவியர் ஒருவர் என் கரத்தைப் பிடித்தார். மகிழ்ச்சியுடன் குலுக்கினார்.

""ஆதியின் நண்பர். எழுத்தாளர்'' என்றேன்.

""இரண்டு பேரும் அநேகமாக ஒன்று போலவே இருக்கிறீர்கள்'' என்று சொல்லிக் கொண்டே ஓவியர் என்னோடு மேலே வந்தார்.

ஆதி என்று சக ஒவியர்களாலும், சிற்பிகளாலும் எழுத்தாளர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவருக்கு நாற்பத்தெட்டு வயதாகி இருந்தது. 

1979-ஆம் ஆண்டில் தனது நாற்பத்தொன்றாவது வயதில் லலித்கலா அகாதெமியின் தேசிய விருதினைப் பெற்றிருந்தார். அவர் இந்திய அளவில் தன் சித்திரங்களை, கோட்டோவியங்கள் வழியாகவும் அரூபமான வண்ண ஓவியங்கள் மூலமாகவும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.

ஓவியம், சிற்பம், எழுத்து, இலக்கியம் என்பது நெடுங்காலமாக மனிதர்கள் படைத்து மகிழ்ந்துவரும் கலைதான். ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும் அது புதுமை கொள்கிறது. கவிதை புதுக்கவிதையாகிறது ஓவியம் நவீன ஓவியம் சிற்பமாகிறது. 

ஆதி என்றழைக்கப்படும் கே.எம். ஆதிமூலம் நவீன ஒவியர். நெடுங்கால மரபை இழையறாமல் முன்னெடுத்துச் சென்ற கலைஞர். பள்ளிப்படிப்பு முடிந்ததும் சென்னை எழும்பூரில்  உள்ள கவின் கலைப்பள்ளியில் சேர்ந்தார். கே.சி.எஸ் பணிக்கர் முதல்வராக இருந்த காலம். அவர் பள்ளியின் எல்லா கதவுகளையும் திறந்துவிட்டார். 

சுதந்திர இந்தியாவில் கலை, இலக்கியம், ஓவியம், சிற்பம், சினிமா-நாடகம் என்று பல துறைகளிலும் ஏற்பட்டிருந்த மறுமலர்ச்சி கலைஞர்களுக்கு உத்வேகம் அளித்தது. ஐரோப்பிய நாடுகளில் யுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்டிருந்த எல்லா மாறுதல்களும் கலைகள் மீதும் பிரதிபலித்தது. பிக்காசோ-நவீனம் என்பதில் உச்சமாக இருந்தார். ஒவ்வொரு கலைஞரும் தன்னளவில் கலைப்படைப்புகளை நவீனத்துவம் கொண்டதாகப் படைத்தார்கள். அதனை ஏற்கவும், பார்க்கவும், ரசிக்கவும் பலர் இருந்தார்கள்.

ஆதிமூலம் தன் கலைப்படைப்புப் படிப்பை முடித்துவிட்டு தனபால் வழிகாட்டுதலில் சித்திரங்கள் வரைந்து கொண்டிருந்தார். அவருடன் கூட ராமானுஜன் என்ற  கலைஞனும் சேர்ந்து கொண்டார். நடிகரான சிவகுமார், பழனிசாமியாக ஓவியப்பள்ளியில் படித்த போது ஆதிமூலத்தை வண்ண ஓவியத்தில் வரைந்துள்ளார். 

இரண்டு பேர்களும் அதிகாலை ஆறுமணிக்கு எல்லாம் புறப்பட்டு பகல் பொழுதுவரையில் மனிதர்கள், கடைகள், விலங்குகள், மரஞ்செடி கொடிகள், சாலையில் ஓடும் கார், பஸ்,லாரி அடையாறு ஆலமரம், ஆறு என்று பலவற்றையும் பார்த்து வரைந்ததாக ஒரு முறை குறிப்பிட்டார். பார்த்து வரைவதென்றால் கண்ணில் படுவதை அப்படியே திருப்பி வரைவதில்லை. மனம் அதில் பொறிக்கும் பார்வையையொட்டி வரைவது என்றார். அது தான் படைப்பாளனின் தனித்தன்மை. அவர் படித்தப்பள்ளியை கலைநயத்துடன் சித்திரமாகத் தீட்டி உள்ளார்.

1969-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழா வந்தது. சிற்பி, முற்போக்கு ஓவியர்கள் சிற்பிகள் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர் சங்க உறுப்பினர்களாக இருந்த கலைஞர்களிடம், "காந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஓவியங்கள், சிற்பங்கள் வரைவோம் அதனை ஒரு கண்காட்சியாக வைத்து மக்களிடம் காந்தியைக் கொண்டு போவோம்' என்றார்.

அது இளம் ஓவியர்கள், சிற்பிகளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒவ்வொருவரும் தன்னளவில் செயல்பட ஆரம்பித்தார்கள். மகாத்மா காந்தி உயிரோடு இல்லை. அவர் கொல்லப்பட்டு இருபத்தியோரு ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவர் புகைப்படங்கள் தான் ஒவியம், சித்திரம், சிற்பத்திற்கு ஆதாரம். அதோடு காந்தியின் கொள்கைகளில் இருந்து- அகிம்சையில் இருந்து அவரின் ஆத்மாவை தங்களின் படைப்பிற்குள் கொண்டு வர சிலர் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். 

1930-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி "உப்பு சத்தியாகிரகம்' மேற்கொண்டு தண்டியாத்திரையில் தடியூன்றி குஜராத் பாணியில் வேட்டியைச் சுருட்டிக்கட்டிக்கொண்டு போவதைச் சித்திரமாக வரைந்து இருக்கிறார். அது தான் காந்தி சித்திரங்களில் அடிக்கடி காணக் கிடைப்பது. 

ஆதியின் மகாத்மா காந்தி சித்திரங்கள் கோடுகளால் உயிர்த்தெழுகின்றவை. அவர் நடக்கும் காந்தி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிரிக்கும் காந்தி, ராட்டையில் நூல் நூற்கும் காந்தி என்று பல நிலைகளில் வரைந்து இருக்கிறார். காந்தி தேசியத் தலைவர் என்ற முறையிலும், ஒரு கலைஞனின் படைப்பு என்ற முறையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

1968-ஆம் ஆண்டில் இலக்கியச் சங்கத்தின் இலக்கியக் கருத்தரங்குகளில் நவீன ஒவியங்கள் சிற்பிகளான ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன், சி.தட்சிணாமூர்த்தி, ஆர்.வரதராஜன் என்று சிலர் சேர்ந்து செயல்பட்டார்கள். அவர்களில் ஆதி ஒன்றாக இணைந்து விட்டார். க்ரியா வெளியிட்ட ந.முத்துசாமி "நாற்காலிகாரர்' சி.மணி "வரும் போகும்', சா.கந்தசாமியின் "தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற புத்தகங்களுக்கு முகப்போவியம் வரைந்தார். அவை தமிழ்ப்புத்தகங்களை நவீனத்துவம் பெற வைத்தன. படைப்புகள் போலவே முகப்போவியங்களும் நின்று நிதானித்து பார்க்க வைத்தன.

"கசடதபற'வைத் தொடங்கிய போது 1970-ஆம் ஆண்டில் அதன் எழுத்துகளை வடிவமைத்துக் கொடுத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கோயில்களில் காணப்படும் வட்டெழுத்துகளை நவீனப்படுத்தினார். அது பழமையில் இருந்து புதுமை கொள்வது. அது தமிழில் தான் அறுபதாண்டுகளுக்கு முன்னால் ஓர் இயக்கமாகத் தொடங்கியது. அதனைத் தொடங்கி வைத்தவரும், முன்னெடுத்து சென்றவரும் ஆதிமூலம்.

அடிப்படையில் அவர் ஒரு கலைஞர். அவர் மத்திய அரசின் "நெசவாளர் சேவை மையத்தில்' வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தார். அவர் சில கலைஞர்களோடு பணியில் இருந்தார். வண்ணங்களோடுதான் வேலை.

நான் பிற்பகல் மூன்று மணி வாக்கில் அவரது அலுவலகம் செல்வேன். அந்த நிறுவனத்தின் உதவி இயக்குநர் ரெட்டப்ப நாயுடு. நவீன ஒவியர், ராமாயணத்தை வெகு நேர்த்தியாக நவீன ஓவியங்களாக வரைவதில் தேர்ச்சி பெற்றவர். ஐந்து மணி வரையில் ஓவியம், சிற்பம், இலக்கியங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்போம். "நெசவாளர் சேவை மையம்' ஓர் அரசு நிறுவனம் போல செயல்பட்டதே இல்லை. அது கலைஞர்கள் கூடி பேசி மகிழும் இடமாகவே இருந்தது.

அலுவலகம் முடிந்ததும் பஸ் நிலையம் வருவோம். ஆதிமூலம் பெசன்ட் நகரில் அரசு குடியிருப்பில் வசித்தார். நாங்கள் பல நாட்கள் அடையார் கேட் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இரண்டு மணி நேரம் போல பேசுவோம். சம்பள நாளில் ஓவியர்களுக்கென்று வர்ணம், கேன்வாஸ் விற்கும் கடைக்குச் சொல்வார். நூற்றுக்கணக்கான ரூபாய்க்கு வர்ணங்கள் வாங்குவார். பழைய கடனைக் கொடுத்துவிட்டு புதுக்கடன் வாங்குவார். 

எனக்கு இரண்டு மூன்று உயர்தர பேனா வாங்கிக் கொடுத்தார். எனது பத்துப் புத்தகங்களுக்கு அவர் தான் முகப்போவியம் வரைந்து கொடுத்தார். அவர் தனக்குச் சரியென்று கொடுப்பதை நான் அப்படியே ஏற்றுக் கொண்டுவிடுவேன். ஏனெனில் அவர் ஒரு முகப்போவியம் வரைந்து கொடுத்துவிடமாட்டார். நான்கைந்து வரைந்து அவற்றில் திருப்தியானதையே கொடுப்பார். எனது நாவல்களான தொலைந்து போனவர்கள், "அவன் ஆனது', "சூரியவம்சம்', "கந்தசாமி கதைகள்'-விசாரணைகமிஷன்-எல்லாம் அவர் முகப்போவியத்தால் சிறப்படைந்தன. தமிழ் புத்தகங்களின் முகப்பு அவரின் சித்திரங்களால் தான் மாறியது.

"ஆனந்த விகடன்' ஆசிரியர்களாக இருந்த மதன், ராவ் இரண்டு பேர்களும் ஆதி ஆனந்த விகடன், ஜீனியர் விகடனில் சித்திரங்கள் வரைய வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் பெரிய ஓவியர், புகழ் பெற்றவர் ஏற்றுக்கொள்வாரா என்ற தயக்கம் இருந்தது. ராவ் என்னிடம் பேசினார்; விகடன் சார்பாக ஆதியிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார்.

ஆதியிடம் பேசினேன்.""  நல்ல கதைகளை வெளியிடாத பத்திரிகைக்கு சித்திரம் எல்லாம் எதற்கு? அவர்கள் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்கிறார்களோ அதையே செய்து கொள்ளட்டும். அதோடு பத்திரிகைக்குப் படம் போடுவது சிரமமான வேலை. ஓவியம் வரைய முடியாமல் முடங்கிப் போய்விடும். வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். இப்போது நிறைய எழுத்தாளர்கள் தங்களின் நாவல், சிறுகதைகளுக்குப் படம் கேட்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். மறுக்க முடியவில்லை. ஆனால் குறைத்துக் கொள்ளப்போகிறேன்'' என்றார்.

மூன்று மாதங்கள் கழித்து மதன், ராவ் நான் உட்பட மூவரும் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் அவர் வீட்டிற்குச் சென்றோம். வெகுநேரம் பேசி கொண்டிருந்தோம். புறப்படும் போது,  ராவ் கி. ராஜநாராயணன் "கரிசல் காட்டு கடுதாசி' என்ற தொடர் எழுதப் போகிறார். நீங்கள் படம் போட்டால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவரும் ஆசைப்படுகிறார்'' என்றார்.

"கரிசல்காட்டு கடுதாசி'-ஆதியின் கோட்டுச் சித்திரங்களோடு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

ஆதியின் கோடுகள் உயிர்த்துடிப்புடன் பேசும் கோடுகள். நெளிவிலும், வளைவிலும் அர்த்தம் கொண்டவை. 1992-ஆம் ஆண்டில் அவர்களது ஆசான் சிற்பி தனபாலை தமிழக அரசுக்காக ஆவணப்படம் எடுத்தேன். அதில் ஆதி தனபாலை சித்திரமாக வரைகிறார். அது சிறப்பாக அமைந்தது. எனவே தமிழ் எழுத்தாளர்கள் சிலரை வரையுங்கள். அது அரிய ஆவணமாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டேன். 

அவர் அடிப்படையில் ஓர் கலைஞர். ஓவியர் அதனால் படிப்பதில்லை என்று சொல்லக்கூடியவர் இல்லை. நவீன தமிழ்ப் படைப்பாளிகளில் ஒரு புத்தகமாவது படித்துவிடுவார். அதன் வழியாகத் தனக்கென ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொண்டு அதன் அடிப்படையிலேயே சித்திரங்கள் வரைந்து வந்தார். அவர் படைப்புகள் சுதந்திரமானவை என்றாலும் கதைகளோடு ஏதோ ஒரு விதத்தில் இணைந்து போகக்கூடியதாகவே இருக்கும்.

அவரின் வண்ண அரூப ஒவியங்கள் மன எழுச்சியின் அடிப்படையில் மனதில் தோன்றிய வடிவத்தின் அடிப்படையில் வரையப்பட்டவை.  ஒருமுறை அவர் கூறினார்.என் அரூப ஓவியங்களை வரையத் தொடங்கும் போது மனதில் திட்டம் எதுவும் இருக்காது. ஆனால் வரைய வரைய வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு பூரணத்துவம் பெற்று விடுகின்றன.

""எனக்கு வரைவதில் சிக்கல்கள் ஏற்பட்டதே இல்லை. தமிழ்நாட்டில் என்னை மிகவும் பாதித்த ஓவிய படைப்பாளர் என்றால் அது சந்தானராஜ்தான். அவர் சுதந்திரமான படைப்பாளி. சிற்பிகளில் தனபால் அபூர்வமான அசலான படைப்பாளர். இன்னொருவர் பி.வி.ஜானகிராமன் இருவரும் நவீன படைப்பாளர்கள்; ஆனால் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். மரபு என்பதின் இறுக்கத்தை உடைத்து நவீனத்துவம் கலையில் கால் கொள்ள வைத்தவர்கள்'' என்றார். 

காலத்தின் மூப்பு என்பது கலைப்படைப்புகள் மீது படிவதில்லை. அவையென்றும் புத்தம் புதியதாக இருக்கிறது. பழங்காலத்தின் தொடர்ச்சியாக நிகழ்காலத்தை முன்னெடுத்துச் செல்ல முன்னே இருக்கிறது.

நானும் ஆதிமூலமும் மும்பை ஜஹாங்கீர் ஆர்ட்ஸ் அகாதெமிக்கு ஒரு முறை சென்றிருந்தோம். அவர் ஒவ்வொரு ஓவியத்தையும் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு மேல் வெவ்வேறு தொலைவிலும் அருகிலும் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆதிமூலத்திற்கு ஓவியங்கள், சித்திரங்கள் படைப்பதில் ஆர்வம் இருந்தது போலவே அவற்றைப் பார்ப்பதிலும் ஆர்வங் கொண்டிருந்தார். அவர் தமிழக ஓவியராக அறியப்பட்டு இந்திய ஓவியரானார். தற்போது அவர் உலக ஓவியராக மதிக்கப்பட்டு வருகிறார்.

(அடுத்த இதழில் எழுத்தாளர் விந்தன்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com