பல்லவ மன்னர்களின் "வாயலூர்'

சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுப்பட்டினத்தை (கல்பாக்கம்) அடுத்து, பாலாற்றின் கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாயலூரில் பல்லவர் வரலாற்றுக்குச் சான்றாக அமையும் கல்வெட்டு உள்ள
பல்லவ மன்னர்களின் "வாயலூர்'


சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுப்பட்டினத்தை (கல்பாக்கம்) அடுத்து, பாலாற்றின் கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாயலூரில் பல்லவர் வரலாற்றுக்குச் சான்றாக அமையும் கல்வெட்டு உள்ள வியாக்ரபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது.

திருக்கோயிலின் நுழைவு வாயில் மண்டபத்தில் வலது பக்கத்தில் காணப்படும் தூணில் இரண்டாம் நரசிம்மவர்மனாகிய ராஜசிம்ம பல்லவனின் (கி.பி. 695 – 725) கல்வெட்டு காணப்படுகிறது. இதில் பல்லவ மன்னர்களின் முன்னோர்கள் பிரம்மா முதல் பரமேசுவரன் வரை உள்ள 54 மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் ஏழு பெயர்கள் புராண அடிப்படையிலும், அடுத்து 40 பெயர்களும் அடுத்துள்ள 7 பெயர்களும் (விஷ்ணுகோபன், சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன்) பல்லவர் வரலாற்றில் காணப்படுகிறது.

இக்கல்வெட்டின் இறுதியில் இரண்டு வரிகளில் ராஜசிம்மனின் சிறப்பு பெயர்களான யுத்தார்ஜீனா, அத்யந்தகாமன், ஸ்ரீமேக, மகாமல்லன், ரணஜய, ஸ்ரீநிதி, நரேந்திரசிம்மன், ஷத்ரசிம்மன் போன்ற பட்டப் பெயர்கள் காணப்படுவது சிறப்பானது.

திருக்கோயில் நுழைவு வாயிலின் படியில் “கச்சியும், தஞ்சையும் ஆண்ட” ராஷ்டிரகூட அரசன் கன்னரதேவன் (மூன்றாம் கிருஷணன்) கல்வெட்டு காணப்படுகிறது.

ராஜராஜசோழனின் 12-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு இக்கோயிலில் காணப்படுகிறது. இக்கோயில் இறைவனை மகாதேவர் என்று குறிப்பிட்டும், ஆமூர் கோட்டத்தில் இருந்தது பற்றியும், கோயிலில் விளக்கு எரிக்க தானம் அளித்ததைப் பற்றியும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (1251-64) 8-வது ஆட்சி ஆண்டில் இக்கோயில் இறைவன் “திருப்பிலவாயிலுடைய நாயனார்” என அழைக்கப்படுகிறார். வாயலூருக்கு அருகில் கடற்கரை உள்ளது. எனவே இவ்வூர் “பிலவாயில்” என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் அருகில் பாலாறு கடலோடு கலக்கும் இடத்தில் “வசவசமுத்திரம்” என்ற ஊரில் நடைபெற்ற அகழாய்வில் ரோமானிய நாட்டுடன் கி.பி. 1-ஆம் நூற்றாண்டில் வர்த்தகம் கொண்டிருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வாயலூர் ஊர் மக்கள் திருப்பிலவாயிலுடைய நாயனார் கோயில் நிலத்தை வாங்குவதும் இல்லை, குத்தகைக்கு எடுப்பதும் இல்லை என்ற தீர்மானித்ததை சுந்தரபாண்டியனின் கல்வெட்டு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. மக்கள் இக்கோயிலின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டினையும் காட்டுகிறது.

விஜயநகர மன்னர்களும் இக்கோயிலைப் போற்றியுள்ளனர். விருப்பன்ன உடையார், சேதுராயர், திம்மராசன் ஆகியோரின் காலக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இப்பகுதி “பட்டினநாடு” என்றும், வாயலூர் இக்காலத்தில் “ஜனநாதநல்லூர்” என்றும் பெயர் மாற்றம் பெற்றதையும் அறிகிறோம்.

திருக்கோயில் வளாகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. முதலில் காண்பது வைகுண்ட பெருமாள் கோயில். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் சேவை சாதிக்கும் கோலத்தைக் கண்டு வணங்கலாம்.

இதனை அடுத்து கயிலாலயமுடையார் கோயில் அமைந்துள்ளது. தொண்டை நாட்டுக்கே உரிய (கஜபிருஷ்டம்) தூங்கானை வடிவக் கோயிலாகக் காட்சி தருகிறது. கருவறைக்கு மேலே விமான அமைப்பு இல்லை. கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவிலே காட்சி தருகிறார். சிவபெருமானுக்கு பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவச் சிற்பம் அழகாகக் காட்சி அளிக்கிறது. இது விஜயநகர காலத்தில் அமைப்பட்டிருக்க வேண்டும்.

பெரும்பான்மையான பல்லவர்காலக் கோயிலில் கருவறையின் பின்பக்கச் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவத்தை அமைத்திருப்பதைக் காணலாம். கருவறை தேவகோட்டங்களில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை வடிவங்களைக் காணலாம். தேவி அங்கயற்கண்ணியின் வடிவமும் வழிப்படப்படுகிறது. கோயிலின் பின்புறம் ஆறுமுகனுக்கு என்று தனி சந்நிதியும் அமைந்துள்ளது.

கோயில் நுழைவு வாயிலின் அருகே உள்ள மண்டபம் விஜயநகர கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. மண்டபத்தின் அடித்தளப்பகுதியில் பெண்கள் கோலாட்டம் ஆடும் அழகிய சிற்பத் தொடர் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது. மண்டபத்தூண்களில் சிவபெருமான், திருமாலின் பல்வேறு வடிவங்களைக் காணலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையால் போற்றிப் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே இக்கோயில் அமைந்திருப்பதால், இவ்வழியே செல்பவர்கள் பல்லவர் வரலாற்றைக் கூறும் இக்கோயில்களைக் கண்டு மகிழலாம்!

தொல்லியல் துறை (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com