ராஜஸ்தான் நாடோடிக்கதை: எமதர்மனின் தீர்ப்பு

புகழ்பெற்ற வழக்குரைஞர் ஒருவர் இருந்தார். அவரது மரண காலம் நெருங்கிவிட்டதால் எமதர்மனின் ஆணையை ஏற்று எமதூதன் ஒருவன் அவரது உயிரைப் பறிக்க வந்தான்.
ராஜஸ்தான் நாடோடிக்கதை: எமதர்மனின் தீர்ப்பு


புகழ்பெற்ற வழக்குரைஞர் ஒருவர் இருந்தார். அவரது மரண காலம் நெருங்கிவிட்டதால் எமதர்மனின் ஆணையை ஏற்று எமதூதன் ஒருவன் அவரது உயிரைப் பறிக்க வந்தான். அவன் வழக்குரைஞரைப் பார்த்து, ""வழக்குரைஞரே கிளம்புங்கள், உங்களை அழைத்துப்போக வந்திருக்கிறேன்'' என்றான்.

இதைக் கேட்ட வழக்குரைஞர் திடுக்கிட்டார்,  மிகவும் பயந்துபோனார்.  அந்த எமதூதனைப் பார்த்து, ""நீ சட்டத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவனாக இருக்கிறாயே... சட்ட அறிவு உன்னிடம் கொஞ்சம்கூட இல்லை. நீ இங்கிருந்து என்னை அழைத்துப் போவதற்கு முதலில் எனக்கு நோட்டீஸ் (அறிவிப்பு) தரவேண்டும், தெரியுமா? '' என்றார். 

மேலும் அவர்,  ""வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்கிறார்கள் இல்லையா? அதுபோல நீ முன்பே எனக்கு நோட்டீஸ் தந்திருக்க வேண்டும். உலகில் இதுபோன்ற விஷயங்களுக்கே நோட்டீஸ் தருவது அவசியம் என்று இருக்கும்போது, உயிரைப் பறிக்க வந்த நீ எப்படி நோட்டீஸ் தராமல் என்னை அழைத்துச் செல்ல முடியும்? பிளேக் நோய் வருவதற்கு முன்பே எலிகளைக் கொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். மழை பெய்யப் போகிறது என்றால், சூரியனின் நான்கு புறமும்  மூட்டம் ஏற்படுகிறது. இது மழை பொழிவதற்கான முன்னெச்சரிக்கை. நான் சட்ட ஆலோசகராக இருக்கிறேன். ஆனால், என்னிடமே நீ சட்ட விரோதமாக நடந்து கொள்கிறாயே? எனக்கு முன்பே நோட்டீஸ் தராமல் என்னை நீ அழைத்துச் செல்ல முடியாது'' என்று  வாக்குவாதம் செய்தார்.

வழக்குரைஞர் பேசியதைக் கேட்ட எமதூதன், ""சட்டங்களைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், எமதர்மனின் நீதிமன்றத்தில் வந்து சொல்லுங்கள். அவர்தான் உங்கள் வழக்குக்குச் சரியான தீர்ப்பு  வழங்குவார். உங்களை இங்கிருந்து அழைத்துச் செல்வதற்கான வேலையைத்தான் என்னிடம் ஒப்படைத்துள்ளார். நீங்கள் என்னுடன் அவசியம் வந்தே ஆகவேண்டும்'' என்று கூறி, வழக்குரைஞரை அழைத்துச் சென்று எமதர்மனின் முன்பு கொண்டுபோய் நிறுத்தினான்.

""எமதர்ம ராஜனே! இந்த வழக்குரைஞரின் வழக்கு மிகவும் குழப்பத்தைத் தருகிறது. நீங்களே சரியான தீர்ப்பு கூறுங்கள்'' என்றான் எமதூதன்.

உடனே வழக்குரைஞர் எமதர்மனைப் பார்த்து, ""உங்களுடைய சட்ட திட்டத்தில் நிறைய தவறுகள் உள்ளன. எனக்கு நோட்டீஸ் கொடுக்காமலேயே உங்களது எமதூதன் என்னை இங்கு அழைத்து வந்துவிட்டான். எனக்கு எத்தனை வேலைகள், கடமைகள்,  வழக்குகள் பாக்கியுள்ளன தெரியுமா? மேலும்,  என்னுடைய மகன், மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது, நீங்கள் ஏன் எனக்கு முன்பே நோட்டீஸ் தரவில்லை?'' என்று பட
படப்பாக வாதாடினார்.''

எமதர்மன் பலமாக சிரித்தபடி, ""வழக்குரைஞரே! தாங்கள் வாதாடுவதில் மிகவும் கைதேர்ந்தவர், சட்ட நுணுக்கங்கள் பலவும் அறிந்தவர் என்பதெல்லாம் எனக்கும் தெரியும். வீட்டுச் சொந்தக்காரர் வீட்டை காலி செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பியும், அந்த வாடகைதாரர், நோட்டீசில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்தால், இழப்பு யாருக்கு? இதற்கு பதில் கூறுங்கள்?'' என்றான்.

""எமதர்மனே, இழப்பு வாடகை தாரருடையதாகவே இருந்தாலும், நீங்கள் எப்போது எனக்கு அறிவிப்பு கொடுத்து; அதை நான் அலட்சியம் செய்தேன் என்று கூறுங்கள்?'' என்றார் வழக்குரைஞர்.

""உங்களுக்கு ஒரு தடவை அல்ல பல தடவை அறிவிப்பு தந்துள்ளோம். உங்களுக்கு நான் இரண்டு மூன்று நோட்டீஸ் கொடுத்து விட்டேன். எப்போது தலையில் உள்ள முடி நரைக்கத் தொடங்குகின்றதோ, அப்போதே காலன் வந்துவிடுவான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எப்போது கண்ணொளி மங்கத் தொடங்குகிறதோ அப்போது காலனின் பயங்கர தாக்கம் ஏற்படத் தொடங்குகிறது என்பதையும்; பல் ஆடத் தொடங்கினாலும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் இயற்கை இவற்றை மனிதனுக்கு அடையாளம் காட்டிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், கலியுக மக்கள், தங்கள் தலை நரைத்துவிட்டால், உடனே அதை மறைக்க, கருப்பு சாயம் பூசி மறைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுடைய கடமையும் மறந்து போய்விடுகிறது. ஆனால், நாங்கள் இதுபோன்று முன்பே கொடுக்கும் அறிவிப்புகளை எல்லாம் அலட்சியம் செய்தால் யாருக்கு நஷ்டம்? தகுந்த நேரத்தில் எங்கள் வேலைகளை நாங்கள் செய்ய வேண்டும். உங்களைப் போல அலட்சியமாக இருக்க முடியாது. இப்போது கூறுங்கள் -  தலைமுடி, கண், பல் நோய் இவற்றிற்கான அறிவிப்புகள் தங்களுக்குக் கிடைத்ததா இல்லையா?'' என்றான் எமதர்மன்.

வழக்குரைஞர் அப்போதும் சிரித்துக்கொண்டே, ""இதையெல்லாம் நாங்கள் நோட்டீசாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவை தவிர வேறு ஏதாவது இருந்தால் கூறுங்கள்?'' என்று தொடர்ந்து வாதாடினார்.

உடனே எமதர்மன், ""உங்கள் மனைவி இறந்து எவ்வளவு வருடமாகிறது?''

""ஏழு வருடம்''

""இது என்ன சிறிய அறிவிப்பா? எப்போது உங்களுடைய மனைவி இறந்தாரோ, அப்போதே நாமும் விரைவில் இறந்துபோக வேண்டியவன் என்பதும், நேரம் நெருங்கிவிட்டது என்பதும் கூடவா உங்களுக்குத் தெரியவில்லை? உங்கள் மகன்களில் யார் இறந்தார்கள்?'' என்று மேலும் ஒரு கேள்வியைக் கேட்டான் எமதர்மன்.

""என் இளைய மகன் இறந்தான்''

""இதுதான் உங்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு. உங்கள் கண்முன்பாகவே உங்கள் மகன் இறந்துவிட்டான். இதைவிடப் பெரிய அறிவிப்பு உங்களுக்கு என்னவாக இருக்க முடியும்?''

""போதும் எமதர்மனே! இதோடு உங்களது வாதத்தை நிறுத்துக் கொள்ளுங்கள்.

உங்களது நேரம் முடிந்துவிட்டது'' என்றார் வழக்குரைஞர்.

""ஆமாம், உங்களது நேரமும் முடிந்து

விட்டது'' என்று கூறிய எமதர்மனால் வழக்குரைஞரின் உயிர் பறிக்கப்பட்டது. வழக்குரைஞரின் தர்க்கமும் அத்தோடு நின்றுபோனது. முடிவு மரணத்தின் வசம் சென்றது. எமனிடம் வாதாடிய வழக்குரைஞர், "வாழ்க்கை' என்கிற வழக்கில் தோற்று இறந்துப் போனார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com