Enable Javscript for better performance
கையில் சிக்காத ஒளியின் சூட்சமம் !- Dinamani

சுடச்சுட

  
  ar_suriya

  ஒரு காட்சியைச் சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதை பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி.
   ஒரு நல்ல திரைக்கதைதான் கேமிராவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், கேமிராமேனுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. ஒளிப்பதிவுக்கான சிறு இலக்கணம் சொல்லி அமர்கிறார்'' ஏ.ஆர். சூர்யா.
   அடுத்த தலைமுறை ஒளிப்பதிவாளர்களில் கவனம் ஈர்ப்பவர். "ஆதலால் காதல் செய்வீர்', "மாவீரன் கிட்டு' என பணி புரிந்த இரு படங்களுமே அத்தனை நேர்த்தியானவை.
   இப்போது "ஜடா' படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்.
   சினிமாவுக்குள் வந்த கதை என்று எல்லோருக்கும் ஒன்று இருக்கும்....
   அது பெரும் அனுபவம். படிப்பில் பெரிய கவன ஈர்ப்பு இல்லை. கம்ப்யூட்டர், இன்ஜினியரிங் இரண்டும் அப்போது பெரிய படிப்பு. இரண்டிலுமே கொஞ்சம் வெறுப்பு. அப்படியே படிப்பை தூக்கிப் போட்டு, ஏதோ ஒரு கணம் சினிமா நோக்கி உள்ளே போனேன். கேமிரா, ஒளிப்பதிவு என ஒரு ஆர்வம் இருந்தது. ஸ்டில் கேமிரா பற்றி முதலில் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், கன்னிமாரா நூலகம் இரண்டும்தான் எனக்கு அதைப் பற்றிய புரிதல்கள் தந்தவை.
   கேமிரா தொழில்நுட்பம் பற்றி என்னவெல்லாம் புத்தகங்கள் இருக்கிறதோ, அது எல்லாவற்றையும் படித்து முடித்தேன். வாசிப்புதான் ஒரு வரலாற்றை உருவாக்குகிறது. அரசியலை நிர்மாணிக்கிறது. கனவுகளைக் கொண்டு வருகிறது. அப்படித்தான் புத்தகங்கள் தந்த பெரும் அனுபவங்களைக் கடந்து வந்தேன். புத்தகங்களே என சிறகுகள். அதுதான் எனக்குப் பறக்க கற்றுத் தந்தது. கேமிரா, தொழில்நுட்பம், உலக சினிமா என எதுவும் தெரியாத என்னைப் புத்தகங்களே கொண்டு போய்க் கரையில் விட்டது. அதன் பின் "விக்ரம் வேதா'," ஆரண்ய காண்டம்'," சூப்பர் டீலக்ஸ்' படங்களின் ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத்தின் மாணவராகச் சேர்ந்து கேமிரா கற்றேன். எப்போதும் ஒளிப்பதிவு, கேமிரா, வெளிச்சம் என்றுதான் மனசுக்குள் அலை அடிக்கும். இப்போதும் அடிக்கிறது.
   
   ஒளிப்பதிவில் உங்களுக்கான சுவாரஸ்ய பகுதிகள் என்பது எதுவாக இருக்கும்... அது எதிலிருந்து தொடங்கும்....
   திரைக்கதைதான் முதல் சுவராஸ்யம். அதைக் காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். இத்தனை ஆண்டு பயணம், இத்தனைப் படங்கள் எனப் பயணித்து வந்த போதிலும், ஒளியின் சூட்சுமமே புரியவில்லை. காற்று, ஒளி, தண்ணீர் எல்லாம் ஒரு சேர சேர்ந்தால் விதை துளிர்க்கும். அது போல்தான் அது. ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது. ஒரு காட்சியை எடுப்பதற்கு, நிறைய வழிகள் இருக்கலாம்.
   ஆனால், அது ஒவ்வொன்றையும் முயற்சித்துக் கொண்டிருக்க முடியாது. சரியானதைத் தேர்ந்தெடுப்பதில் சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் காட்சிக்கு சிறந்த வழி எது என்பதைப் பார்த்தவுடன் கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. கைக்குச் சிக்காது. கிடைத்தால் ஒளியின் சூட்சமம் புரியும்.
   
   உங்களின் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர்கள் யார்.....
   ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் ஓர் இயல்பும், தெளிவும் உண்டு. ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றி போய் கதை செய்வது மட்டும்தான். அதைப் புரிந்துக் கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். பி.சி.ஸ்ரீ ராம் சார் படங்களில் இருக்கும் லைட்டிங் இப்போதும் ஆச்சரியம். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கலர், ஒரு வெளிச்சம். அது அவரிடம் நான் பார்த்து வியக்கும் விஷயம். "அக்னி நட்சத்திரம்' ஒரு லைட்டிங். "தளபதி' படத்துக்கு ஒரு லைட்டிங், "நாயகன்' வேறு மாதிரி, "தேவர் மகன்' களம் வேறு. அதற்குள் ஊடுருவிப் பார்த்தால், முழு சினிமாவையே கற்றுக் கொள்ளலாம்.
   "அலைபாயுதே' பார்த்தால் அப்படி ஒரு கலர். இதுவெல்லாம் அவரிடம் நான் பார்க்கும் ஆச்சரிய விஷயங்கள். பி.எஸ். வினோத் சார் வேலை மிகவும் பிடிக்கும். திரைக்கதையை மீறாத ஒளிப்பதிவை அவரிடம் பார்க்கிறேன். ராம்ஜி, ரவி கே.சந்திரன், திரு, ராஜீவ்மேனன், நீரவ், ரத்னவேல்... இப்படி கவனம் ஈர்த்தவர்கள் நிறையப் பேர். இன்னும் இவர்களின் கைகளில்தான் தமிழ் சினிமா இருக்கிறது. அதை மீறி இன்னொருத்தர் உள்ளே வர வேண்டும் என்றால், நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது ஃபிலிம் இல்லை. டிஜிட்டல் என்று பெருமை பேசுகிறோம். ஆனால், ஃபிலிம் சினிமா கற்றவர்கள்தான் இங்கே பெரிய ஆள். அதற்கு நிறையப் படிக்க வேண்டும்.


  தமிழ் சினிமாவில் இன்னும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள்தான் அதிகமாக இருக்கிறது....
   அது கமர்ஷியல் சினிமாவின் அடிப்படை. கதையில் மிகை, நடிப்பில் மிகை, ஒப்பனையில் மிகை, வண்ணத்தில் மிகை, ஒலியில் மிகை... இதனால்தான் ஒளிப்பதிவும் மிகையாக இருக்கிறது. சில இடங்களில் அது அழகு. சில இடங்களில் அதுவே உறுத்தல்.
   இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். எது திரைக்கதையோ, அதற்குப் பணியாற்ற வேண்டும். இந்தக் கட்டாயம் இருக்கும் வரை சினிமாவில் மிகை என்பது இருந்து கொண்டே இருக்கும்.
   -ஜி.அசோக்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai