Enable Javscript for better performance
சந்திரனும்..இலவங்க மரமும் - சீன நாடோடிக்கதை- Dinamani

சுடச்சுட

  
  NADODI_STORY

  அதிர்ஷ்ட தேவதை உங்களை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டுமா? அதற்கு மிகச் சுலபமான ஒரே ஒரு வழி சொல்லட்டுமா? நீங்கள் ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி இரவில் ஆகாயத்தில் நீந்திக் கொண்டிருக்கும் அந்தச் சந்திரனையே உற்றுப் பாருங்கள். அதில் தெரியும் அந்த கருப்பு நிழலில் அசைவை உற்று கவனித்தால் போதும். உங்களைத் தேடி மிகப்பெரிய அதிர்ஷ்டம் வந்து சேரும்.
  சாங்க்.. என்ற சிறுவன் காடுகளில் மரம் வெட்டி பிழைப்பவன். தந்தையை இழந்த அவன் தன் அம்மாவுடன் ஒரு சிறிய குடிசையில் வசித்து வந்தான். உடல் நலம் குன்றிப் படுத்த படுக்கையில் கிடக்கும் தன் அம்மாவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். மரங்கள் வெட்டி விற்று வரும் அனைத்தும் அம்மாவின் மருத்துவச் செலவிற்கே சரியாக விடும். பாவம் அச்சிறுவன் பல நாட்களுக்குப் பட்டினிதான்.
  இத்தனை நற்பண்புகள் நிறைந்த சிறுவன் சாங்க்கிற்கு உதவ நினைத்தது ஒரு தேவதை. சந்திர மண்டத்தில் விளைந்துள்ள இலவங்க மரத்தை வெட்ட ஓர் ஆள் தேவைப்பட்டது. பல ஆண்டுகளாக வெட்டி சீரமைக்கப்படாததால் அம்மரம் தன் போக்கில் வளைந்து நீண்டு மிக அகலமாக வளர்ந்து கொண்டே போயிற்று. கவனிப்பாரற்று இருந்ததால் வந்த வினை! மரத்தில் ஒரு புதுக்கிளை முளைத்ததும் பூமியில் ஜனத்தொகை பெருக ஆரம்பித்து விடும்.
  தேவலோகத்தை ஆண்ட துருவன் என்ற அரசன் இந்த ஜனத்தொகை பெருக்கத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்று எண்ணினார். அதற்கு ஒரே வழி மரத்தில் புதுக்கிளைகள் வளர விடாமல் உடனுக்குடன் அதனை வெட்டி எறிந்து சீர்படுத்துவது தான் என்று தீர்மானித்தார். இதனை அறிந்த அந்த நல்ல உள்ளம் படைத்த தேவதை துருவனை அணுகி, நீங்கள் தயவு செய்து அந்த நல்ல உள்ளம் படைத்த அந்தச் சிறுவனிடம் தான் இந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்று கூற அவரும் சம்மதித்தார். உடனே சிறுவன் சாங்க் வரவழைக்கப்பட்டான். சந்திர மண்டலத்தையே மூடி மறைக்கும் அளவிற்கு படர்ந்து விரிந்து நிற்கும் அந்த மரத்தை வெட்ட உத்தரவிட்டார். 
  சிறுவன் மிக மகிழ்வோடு அதற்கு ஒப்புக்கொண்டான். அந்த மரம் பல வருடங்களாக வளர்த்திருந்ததால் மிகவும் வைரம் பாய்ந்து வெட்டுவது மிகவும் கடினமாக இருந்தது.. ஆனாலும் சிறுவன் மனம் தளரவில்லை ஒரு சிறு கிளையை வெட்ட ஒரு வருடமாகி விட்டது.
  அன்று ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி இரவு.. அந்தக் கிராமத்து சீனர்கள் அனைவரும் முழுவட்டமாக வானத்தில் உலாவி கொண்டிருந்த அந்த பெளர்ணமி சந்திரனின் அழகில் மயங்கிப் போய் அதனையே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த போது திடீரெனக் காற்று மண்டலத்தைத் துளைத்துக் கொண்டு ஆகாயத்திலிருந்து மிகப்பெரிய சப்தத்துடன் ஏதோ ஓன்று பூமியில் விழுந்தது!!
  இந்தச் சப்தத்தைப் பெரியவர்கள் ஒன்றும் லட்சியம் செய்யவில்லை என்றாலும் சிறுவர் பட்டாளம் சப்தம் வந்த திசையை நோக்கி ஒடினார்கள் அங்கே கீழே விழுந்திருந்த ஒரு பெரிய மரக்கிளையை இழுத்துக்கொண்டு ஒடி வந்தனர். சிறுவர்களால் சும்மா இருக்க முடியுமா என்ன?, குட்டிப்பட்டாளம் ஒன்று சேர்ந்து மிக மிகப் பிரயாசையுடன் அந்தக் கிளையை இஷ்டப்படி கண்ட துண்டமாகி வெட்டி எரிக்க ஆரம்பித்தனர். ஓ! அந்த மரத்துண்டுகள் எரிந்தன.. எரிந்து கொண்டே இருந்தன.. கோடை காலம் மழைக்காலம்.. வேனிற்காலம் இளவேனிற்காலம் என்று இடைவிடாமல் எரிந்து கொண்டே இருந்தது.
  அப்போது அங்கே வந்த துறவி ஒருவர் ஐயோ குழந்தைகளே என்ன காரியம் செய்து விட்டீர்கள். இது சாதாரண மரமல்ல. சந்திரனில் வளர்ந்து இருக்கும் இலவங்க மரத்தின் கிளை இது. இந்த மரத்தினால் சிறுசிறு கிண்ணங்கள் செய்து அதில் சில அரிசி மணிகளைப் போட்டு வைத்தால் உங்களின் ஏழுதலைமுறைகளுக்கும் மேல் போதும் போதும் என்ற அளவு அரிசி நிரம்பிக்கொண்டே இருக்கும்.
  இதில் பணப்பெட்டி செய்து அதில் கொஞ்சம் சில்லறைகளைப் போட்டு வந்தால் பணப்பெட்டி நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும். எடுக்க எடுக்க குறையவே குறையாது பணப்பிரச்னை என்றால் என்னவென்றே தெரியாமல் உங்கள் தலைமுறைகளைத் திகைக்க வைக்கும் ஒரு சிறு பெட்டி செய்து அதில் ஒரு சிறு துணியைப் போட்டு வைத்தால் போதும்.. ஏழேழு தலைமுறைகளுக்கும் துணிமணிகள் நிரம்பிக்கொண்டே இருக்கும்.. என்று சொல்லவும் அனைவரும் ஒடிப்போய் அந்த மரம் எரிந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தனர். 
  ஒரு சிறு துண்டு மரமாவது எரியாமல் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் சாம்பலை கிளற, ஊஹும் ஒரு சின்னத் துண்டு கூட இல்லை. மரம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த விவரம் சீனா முழுவதும் பரவி விட அன்றிலிருந்து தான் சீனர்கள் அனைவரும் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி இரவில் ஒரு சிறிய கிளையாவது ஆகாயத்திலிருந்து விழாதா என்ற ஏக்கத்துடன் சந்திர மண்டலத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்களாம்!
  -சாரதா விஸ்வநாதன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai