Enable Javscript for better performance
தினசரி வாழ்வின் துணைவன்!- Dinamani

சுடச்சுட

  
  sk4

  உலகில் பிறக்கும் உயிரை உருவாக்குவதில் மாதா, பிதா, குரு, தெய்வம் நால்வரும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். குழந்தையை வளர்ப்பதில் அன்னையும், தந்தையும் பாலகனுக்குப் போதிப்பதில் ஆசிரியரும், தன்னை மீறிய ஒரு சக்தி நம்மை ஆட்டுவிக்கிறது என்ற தத்துவத்தில் தெய்வமும் இடம் பெறுகின்றனர். படிப்பறிவு பெற்றுச் சமூகத்தில் பிரவேசிக்கும் வாலிபனுக்குப் பகுத்து அறியும் திறமையையும், அவனை மனிதனாக மாற்றும் தன்மையையும் அளிப்பதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்கும் பொறுப்பும் உண்டு.
   அந்தப் பத்திரிகைகளில் நோக்கமும், துணிவும் கொண்டு இயங்கும் பத்திரிகைகளில் சிறந்ததாகத் தினமணியைத் தான் குறிப்பிட முடியும்.
   நான் பள்ளிப் படிப்பை முடித்து தேசியக் கல்லூரியில் 1955-ஆம் ஆண்டு சேர்ந்ததிலிருந்து தினமணி வாசித்து வருகிறேன். சம்பவங்களைப் பற்றிய செய்தியோடு சமூகத்தையும், அதில் உலவும் ஒவ்வொரு தனி மனிதனையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தைத் தினமணி பத்திரிகை தர்மமாகப் கொண்டிருப்பதால் அதன் சிறப்பே தனித்துவம் பெற்று நிற்கிறது. வாசகர் நெஞ்சில் நிலவி நிற்கும் ஐயங்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. தினமணி நடுப்பக்க கட்டுரைகளைப் படித்தால் கேள்விகள் பிறக்கும். சிந்தனை விரியும்; ஐயங்கள் விலகும். இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வம் எழும். ஏ.என். சிவராமன் தினமணியின் ஆசிரியராக இருந்த போது" கணக்கன்' என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரைகள் எங்களைப் பொருளாதாரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள வைத்தன.
   இதைத் தவிர தினமணி புதுமைகளைக் கையாண்டு பல தகவல்களை வாசகர்களுக்குப் பரிமாறியிருக்கிறது. "வேருக்கு நீர் வார்த்தவர்கள்' என்ற தலைப்பில் தமிழின் சிறப்பைப் பற்றிக் கூறிய பெரியோர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. தங்கள் எழுத்தாற்றலால் தமிழுக்குப் பெருமை சேர்த்த சான்றோர்களை வகைப்படுத்தியது. சமூகம், அரசியல் இவற்றில் கவனம் செலுத்தும் அனைவரது வாதப் பிரதிவாதங்களையும் வெளியிட்டு அவற்றைப் பற்றிய வாசகர்களுடைய கருத்தையும் கடித வடிவத்தில் வெளிக் கொணர்ந்தது.
   "இன்று இவர்கள் பிறந்த நாள்' என்ற தலைப்பில் பல பிரபலங்களைப் பற்றிய செய்திகள் வெளியானதை இப்போதும் நினைவு கூறலாம். "திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்' என்ற தலைப்பில் ஆறு நாட்களுக்குத் தொடர்ந்து வெளியான எஸ்.குருமூர்த்தியின் கட்டுரையும், நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய "அறிவியலுக்கு அப்பால்' என்ற கட்டுரையின் சுவாரசியம் என்றும் நினைவில் நிற்பவை.
   வள்ளுவர் முதற்றே அறிவு, "யுகத்துக்கு ஒருவன்', "ஆத்திகப் பெரியார்', "தமிழுக்குப் புனை பெயர் கம்பன்', "மொழிகாத்தான் சாமி', "தமிழைத் துறக்காத துறவி", "சிறுகதைச் சித்தன்", "பட்டறிவுப் பாவலன்", "கலப்பை எழுதிய கவிதை", "கருமூலம் கண்ட திருமூலர்", ஆகிய கட்டுரைகளை எழுதிய கவிஞர் வைரமுத்துவின் தமிழ்ப்புலமையையும் வியக்காமலிக்க முடியாது.
   தினமணியின் "வெள்ளிமணி' பகுதி கோயில்கள் பலவற்றையும் அது எழுந்த வரலாற்றையும் அறிந்து கொள்ள வழி செய்கிறது. சனிக்கிழமை உடன் வரும் "சிறுவர்மணி' என்ற பகுதி சிறுவர்களுக்கான கதைகளையும் புதிர்களையும் அளித்து மகிழ்கிறது.
   செவ்வாய்க்கிழமை "இளைஞர் மணி' என்ற வடிவத்திலும், புதன்கிழமை "மகளிர் மணி' என்ற உருவத்திலும், நம் கைகளில் தவழ்கின்றன. இளைஞர்களுக்குத் தேவையான அறிவுரைகளும் மகளிரைப் பற்றிய மதிப்புரைகளும் அவற்றில் இடம் பெறுகின்றன. இளைஞர் மணியில் வெளியான த.ஸ்டாலின் குணசேகரனின் "இளைய பாரதமே எழுக!' கட்டுரைத் தொடரும், சுகி சிவம் எழுதிய "நீ .. நான்.. நிஜம்' கட்டுரைத் தொடரும் இளைஞர்களுக்கு ஒரு உயிர்ப்பு சக்தியாகத் திகழ்ந்தது என்றால் மிகையில்லை.
   ஞாயிறு "கொண்டாட்டம்' இலக்கியத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை தினமணி செய்தித்தாளோடு உடன்பிறப்பாக நம்மிடம் வந்து சேருவது "தினமணி கதிர்' இதழ். அதில் எனக்குப் பிடித்த பகுதி பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் எழுதி வரும் "ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்' தமிழ் செய்தித்தாள் தினமணியின் பெருமையைப் பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் அது நம் தினசரி வாழ்வின் துணைவன்.
   கட்டுரையாளர் : மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், எழுத்தாளர் திருச்சியைச் சேர்ந்தவர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai