அயோத்தியில் ராமர் கோயில்

நீண்ட காலமாக நீடித்து வந்த அயோத்தி பிரச்னைக்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று
அயோத்தியில் ராமர் கோயில்

நீண்ட காலமாக நீடித்து வந்த அயோத்தி பிரச்னைக்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று பலரும் பதற்றத்தில் இருந்த நிலையில், எந்த ஒரு தரப்பினருக்கும் பாதகம் ஏற்படாத வகையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி நல்ல தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.
"சர்ச்சைக்குரிய நிலப் பகுதியில் ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டிக்கொள்ளலாம்; ஸன்னி வக்ஃபு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் ஒதுக்க வேண்டும் என்றும் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கு அறக்கட்டளையை மூன்று மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்' என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இப்படியொரு நல்ல தீர்ப்பை, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்ப்பை ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அளித்துள்ளார். அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சுமுகத் தீர்வுகாண தலைமை நீதிபதி அமர்வில் இடம்பெற்றிருந்த இதர நீதிபதிகளான எஸ்.அப்துல் நஸீர், உள்ளிட்ட அனைவரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியிருந்தது இதன் சிறப்பு அம்சமாகும்.

தொல்லியல் துறையின் ஆய்வில் ராமஜென்மபூமியில் தொன்மையான கட்டடம் இருந்ததும், அந்தக் கட்டடத்தின் தூண்களில் ஹிந்துக்கள் வணங்கும் உருவங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
ஹிந்துக்களின் நம்பிக்கையை வைத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மசூதியை இடித்ததும் தவறான செயல் என்றும் அவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது .
அத்துடன், ஸன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டிக் கொள்வதற்காக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய 2.77 நிலப் பரப்பில் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முதலில் இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் சமரசத் தீர்வு காண மூன்று பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டனர்.
இந்த மூன்று தமிழர்களும் சமரச தீர்வு காண மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, துரிதமாக விசாரித்து தீர்ப்பு வழங்க முடிவு செய்தது உச்சநீதிமன்றம். 40 நாள்கள் விசாரணைக்கு பிறகு அக்டோபர் 16-ஆம் தேதியுடன் இறுதி வாதம் நிறைவு பெற்றது.
பின்னர் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நவம்பர் 9-ஆம் தேதி மேற்கண்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் விருப்பம். (குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் வாரியத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது அனைவருக்கும் தெரிந்திருக்கும்).
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, ராம நவமி தினத்தில் (ராமர் பிறந்த நாள்) ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது.
விசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களால் நிறுவப்பட்ட ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பு, ராமர் கோயில் அமைக்க தேவையான பொருள்களை தயார் நிலையில் வைத்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கோயிலைக் கட்டுவதற்கு தனியாக ஓர் அறக்கட்டளையை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
எனினும் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் பணியை தங்களிடம் ஒப்படைக்குமாறு, மத்திய அரசிடம் ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பு மனு கொடுத்திருக்கிறது.
"ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பு ஒன்றே போதுமானது. இதற்கென ஒரு அறக்கட்டளை தேவையில்லை' என்கிறார் அதன் தலைவர் நிருத்ய கோபால் தாஸ்.
கோயிலின் புதிய மாதிரி வடிவமைப்பு அயோத்தியின் கரசேவகபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. பலரின் முயற்சியால் கற்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்களும், கோயில் கட்டத் தேவையான பிற கட்டுமானப் பொருள்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை கோயில் கட்டுவதற்கு அரசு பயன்படுத்திக் கொள்ளுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
உரிய நேரத்தில் கோயில் அமைக்கும் பணிகள் தொடங்கும் பட்சத்தில் மூன்றில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என்பது திண்ணம்.
வரலாற்றுடன் தொடர்புடைய அயோத்தி
உத்தரப் பிரதேச மாநிலம், ஃபைஸாபாத் மாவட்டத்தில் உள்ளது அயோத்தி. இது ராமாயண காவியத்துடன் தொடர்புடைய புனித நகரமாகும். இந்த நகரில்தான் ஹிந்துக் கடவுள் ராமபிரான் பிறந்தார் என்பது மக்களின் நம்பிக்கை. நல்ல சிந்தனையுடன், உயரிய நோக்கங்களைக் கொண்டு மனித அவதாரம் எடுத்த மகாபுருஷர் ஸ்ரீ ராமர். குப்தர்கள் காலத்தில்தான் (கி.பி. 4 முதல் 5-ஆம் நூற்றாண்டு காலகட்டம்) இந்தப் பூமி, புராண காலத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
கோசல தேசத்தின் தலைநகராக அயோத்தி இருந்துள்ளது என்பது வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணம் வாயிலாகத் தெரியவருகிறது. ஹிந்துக்கள் சரயு நதி பாய்ந்தோடும் அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதை தீர்க்கமாக நம்புகின்றனர். அயோத்தியை ஆட்சி செய்து வந்த தசரத மன்னரின் மூத்த மகனாகப் பிறந்தவர்தான் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமர்.
பாபர் மசூதி சர்ச்சை

ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தியில் ஸ்ரீராமருக்கு திருக்கோயில் இருந்ததாகவும் அங்கு ஹிந்துக்கள் வழிபாடு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், ராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்த ஹிந்து மதம் சார்ந்த கட்டடத்தை இடித்துவிட்டு, பாபர் ஆட்சியின் போது 1528-ஆம் ஆண்டில் மசூதி கட்டப்பட்டது. அதுதான் பாபர் மசூதி. இந்த மசூதியை பாபரின் தளபதி மீர் பாஹி என்பவர் கட்டியுள்ளார்.
19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இருந்தே பாபர் மசூதி பிரச்னை எழத் தொடங்கியது. 1946-ஆம் ஆண்டில் ஹிந்து மகாசபை சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிக்கு உரிமை கோரி போராட்டம் நடத்தியது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவர்கள் பேரணியாகச் சென்று பாபர் மசூதியை இடித்தனர். இதையடுத்து, இரு சமூகத்தினரிடையே வன்முறை ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த நிலப் பகுதிக்கு உரிமை கோரி உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கைத் தாக்கல் செய்த மூவர் ராம் லல்லா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய மூன்று பிரிவினரும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அலாகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பில் எந்தத் தரப்புக்கும் திருப்தி ஏற்படாத நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கோயிலின் மாதிரியை வடிவமைப்பது யார்?

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான மாதிரி வடிவமைப்பை உருவாக்கியவர் கட்டட வடிவமைப்பாளரான சந்திரகாந்த் சோம்புரா. இவர், குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தை வடிவமைத்தவரின் பேரன்தான்!
இரு அடுக்குகளுடன் 270 அடி நீளம், 145 அடி அகலம், 141 அடி உயரம் இருப்பது போன்று ராமர் கோயிலை வடிவமைத்துள்ளார் சோம்புரா.
"எண்கோண வடிவில் கருவறை அமையும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் கோயிலின் வடிவமைப்பில் மேலும் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம்'' என்கிறார் சோம்புரா.
புனித நகரை அழகுபடுத்த ரூ.400 கோடி

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அயோத்தி வளர்ச்சி வாரியம் அமைக்கப்படவுள்ளது.
கோயில்கள் நிறைந்த அயோத்தி நகரை புனரமைத்து அழகாக்க உத்தரப் பிரதேச அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளது. பல்வேறு நகரங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் அயோத்தியை விரைவில் வந்தடைவதற்கு வசதியாக விமான நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.640 கோடியை உ.பி. அரசு ஒதுக்கித் தந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்கின்றனர் அதிகாரிகள்.
மருத்துவமனைகள், 5 நட்சத்திர தங்கும் விடுதிகள், பாரம்பரிய ஹோட்டல் உள்பட பல்வேறு வசதிகளுடன் அயோத்தியை நவீன நகரமாக வடிவமைக்கும் திட்டங்களும் உ.பி. அரசின் வசம் உள்ளன.
அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மன்னர் தாதுவா கட்டிய அரண்மனையைப் பாரம்பரிய ஹோட்டலாக மாற்றவும் திட்டம் உள்ளது. இதற்கு ரூ.5 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அதே போன்று ஃபைஸாபாதிலுள்ள கோஹினூர் அரண்மனையையும் பாரம்பரிய ஹோட்டலாக மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
251 அடி உயர ராமர் சிலை

சரயு நதிக் கரையையொட்டி ரூ.250 கோடி செலவில், 251 அடி உயர ராமர் சிலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 13 கி.மீ. தொலைவுக்கு ராமபிரானின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வழித்தடமும், ஃபைஸாபாத் நகரை இணைப்பதற்காக 5 கி.மீ. தொலைவுக்கு சுற்று வட்டச் சாலையும் அமைய உள்ளது.
"அங்கோர்வாட் போன்ற ராமர் கோயில்'

உலகின் மிகப் பெரிய ஹிந்து கோயிலான அங்கோர்வாட் விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட பிரம்மாண்ட கோயிலாகும். இதேபோல ராமர் கோயிலும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட வேண்டும்' என்பது சாரதா துவாரகை பீட சங்கராச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதியின் விருப்பமாகும்.
ராமர்கோயிலுக்கு முஸ்லிம் தலைவர் நிதி
உத்தரப் பிரதேச மாநில ஷியா மத்திய வஃக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.51,000 நிதி அளித்துள்ளார்.

தங்க செங்கல்: முகலாய பேரரசின் வம்சாவளியைச் சேர்ந்த ஹபீபுதீன் துசி, ராமர் கோயில் கட்டுவதற்காக தங்க செங்கல் அளிப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தார். "2.77 ஏக்கர் நிலத்துக்கு நான்தான் உரிமையாளர் என்று உச்சநீதிமன்றம் கூறினால், ராமர் கோயில் கட்டுவதற்காக அந்த நிலத்தை கொடுப்பேன். ஏனென்றால், மசூதிக்கு முன்பு அந்த இடத்தில் கோயில்தான் இருந்தது' என்று நம்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ராமேசுவரத்திலிருந்து செங்கற்கள்!
கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வெளியான நிலையில் ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் குழு செங்கற்களை அயோத்திக்கு எடுத்து வந்து காணிக்கையாக கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த 12 செங்கற்களும் ராமநாத சுவாமி கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டவையாகும்.


தொகுப்பு : மணிகண்டன் தியாகராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com