ரோஜா மலரே!16 - குமாரி சச்சு

எப்பொழுதுமே ராகினி செய்யும் குறும்புகள் என்பது அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.
ரோஜா மலரே!16 - குமாரி சச்சு

எப்பொழுதுமே ராகினி செய்யும் குறும்புகள் என்பது அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இதில் என்னையும் துணைக்கு அழைத்துக் கொண்டு விடுவார். சிறுமியாக இருப்பதால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நானும் அவருடன் சேர்ந்து கொள்வேன். நாங்கள் கடற்கரையில் உட்கார்ந்து இருக்கும் போது தனது குரலை மாற்றிக் கொண்டு போவோர் வருவோரை எல்லாம் "டேய்'' என்று கூப்பிடுவார். அந்த நபர் திருப்பிப் பார்க்கும் போது இவர் தலையைக் குனிந்து கொள்வார். யார் தன்னை அழைத்தது என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்ப்பார். அவர் பார்க்கும் போது என்னையும் தலையைக் குனிந்து கொள்ளச் சொல்வார். ஒரு கட்டத்தில் கூப்பிட்டது யார் என்று தெரியாத நிலையில் அந்த நபர் திரும்பவும் நடக்கத் தொடங்குவார். 
"காவேரி'" படத்தின் போதுதான் என்று நினைக்கிறேன். எங்கள் எல்லோருக்கும் ஒரு வேன் வரும். அது மூடாத வேன். கதவு திறக்கும் இடது பக்கத்தில், நானும் மற்றொரு பக்கத்தில் ராகினியும் உட்காருவோம். என்னை ஏன் இப்படி உட்காரவைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் சிறுமி என்பதால் அவர்கள் சொல்வதை எல்லாம் செய்வேன். என்னைப் பொருத்தவரை அது ஒரு விதமான விளையாட்டு என்று நான் நினைத்து கொள்வேன். 
நாங்கள் எல்லாரும் கிருஷ்ணா பிக்சர்ஸ் ஆபிஸ் இருந்த தி.நகர், தணிகாசலம் தெருவில் இருந்து எங்குப் படப்பிடிப்போ அங்குச் செல்வோம். எங்களுடன் பத்மினியும் வருவார். இன்று ராஜேஸ்வரி திருமண மண்டபத்துக்கு எதிரே தான் அன்று "டிராம் ஷெட்' இருந்தது என்று நினைக்கிறேன். இன்று அது மின்சார அலுவலகம் உள்ள கட்டடமாக ஆகிவிட்டது. அந்த நாலு மூலை சந்திக்கும் இடத்தில் ஒரு போலீஸ்காரர் நின்று போக்குவரத்தை சரி செய்து கொண்டிருப்பார்.
அப்போது போலீஸ்காரர் தொப்பிக் குழியாக இருக்கும். வீட்டில் முன்பே எங்கள் எல்லோருக்கும் கமலா ஆரஞ்சு பழங்களைக் கொடுத்து சாப்பிடச் சொல்வார். நாங்களும் சந்தோஷமாகச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை வெளியே எரியும் போது தானே வந்து பத்திரம் என்று வாங்கிக் கொள்வார். இந்த வேனில் ஏறும் போது ஒரு பையில் இந்தத் தோலை எல்லாம் கொடுத்து பத்திரம் என்று சொல்வார். நானும் இந்தத் தோலை எல்லாம் கொடுத்து ஏன் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள் என்று தெரியாமல், அதே சமயம் பத்திரமாக வைத்துக் கொள்வேன். ஒரு வேளை இதை எல்லாம் பொடி செய்து ஏதாவது மருந்து தயாரிப்பார் போலும் என்று நினைத்தேன். நாங்கள் எல்லாம் அந்த வேனில் போகும் போது "எங்கள் வேன் ஒட்டியிடம் அந்த சிக்னலில் போலீஸ்காரரை நெருங்கி போ' என்று கூறுவார்.
இதற்கு மேல் எப்படி நெருங்கிப் போவது என்று úஜ்ல், கொஞ்சம் நெருங்கிப் போயேன் என்று சொல்வார்கள். போலீஸ்காரரை நெருங்கும் போது கையில் உள்ள ஆரஞ்சு பழதோலை அவரது தொப்பியில் உள்ள குழியில் வைத்து விடுவார். இந்தக் குறும்புத்தனம் தெரியாமல் நானும் ராகினி கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக , ஏதோ பொக்கிஷம் போல் அந்த ஆரஞ்சு பழத் தோலை பத்திரமாக வைத்திருப்பேன். ஒரு முறை பண்ணும் போது கண்டு பிடிக்க வில்லை. மறுமுறை போடும் போது கையைப் பிடித்து விட்டார் அந்தப் போலீஸ்காரர். "ஐயையோ, உங்கள் மேலே விழுந்து விட்டதா, நாங்கள் பேசிக்கொண்டே வெளியே போட முயற்சிக்கும் போது இது நடந்து விட்டது" என்று சொல்லி சமாளித்தார். இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பத்மினி, ராகினியை திட்டினார். "இது என்ன விபரீத விளையாட்டு. பிறகுக்கு நாம் கஷ்டம் கொடுக்கவே கூடாது என்ற எண்ணம் நமக்கு என்றும் இருக்க வேண்டும். நீ கெட்டதும் இல்லாமல் குழந்தை சச்சுவையும் இந்தக் குறும்புத்தனம் செய்ய வைத்துக் கெடுக்கிறாய்'' என்று கோபித்துக் கொண்டார்.
நாட்டியத்திற்குப் புதிய ரத்தம் பாய்ச்சிய நடன பெண்மணி பத்மினி. அதனால்தான் அவருக்கு "நாட்டிய பேரொளி' என்ற பட்டத்தையே கொடுத்துப் பெருமை பட்டார்கள் . அவருடன் நானும் நடனம் ஆடியிருக்கிறேன் என்றால் நம்புவீர்களா? ஒரு முறை ஒரு போர் கப்பல் நமது சென்னை துறைமுகத்துக்கு வந்தது. பத்மினியின் சகோதரர் கடற்படையில் வேலை பார்த்து வந்தார். அந்தக் கப்பல் மூன்று நாளோ அல்லது ஒரு வாரம் வரையோ இங்கே நிறுத்தி வைக்கப்படும் என்று சொன்னார். அந்தக் கப்பலில் உள்ள படை வீரர்களுக்கு ஒரு கலை நிகழ்ச்சி செய்து கொடுக்கப் பத்மினியின் சகோதரர் விரும்பினார். அவர் பத்மினியின் வீட்டிற்கு வந்துள்ள போது நானும் அங்கிருந்தேன். பத்மினியின் எல்லா விஷயங்களையும் சரியா நிர்வகிப்பது லலிதா. "நாங்கள் மூன்று பேரும் நடனம் ஆடுகிறோம். எங்களுடன் சச்சுவும் அவரது அக்கா மாடிலட்சுமியும் ஆடட்டும். லட்சுமியும் சரி சச்சுவும் சரி சினிமாவில் நடித்துப் புகழ் பெற்றவர்கள். அது மட்டும் அல்லாமல் அவர்கள் இருவரும் சிறப்பாக நடனம் ஆடுவார்கள்'"என்றார். 
அந்தக் கப்பல் நடுக்கடலில் இருக்கிறது. நாங்கள் நடனம் ஆட வேண்டிய நாளும் வந்தது. நானும், பாட்டியும், என் அக்கா மாடி லட்சுமியும் நேராகப் பத்மினியின் வீட்டிற்குச் சென்றோம். அங்கு தான் நாங்கள் மேக்-அப் செய்து கொண்டு நடன உடைகளை அணிந்து கொண்டு கிளம்பவேண்டும். அங்குச் சென்று பார்த்தால் ராகினிக்கு பத்மினி சலங்கை கட்டி விடுகிறார்கள். பத்மினிக்கு, லலிதா பின்னல் பின்னி விடுகிறார். அந்தக் குழுவில் நாங்களும் இணைந்தோம். நான் குழந்தை என்பதால் என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். மூன்று பேரும் எந்த விதமான பாகுபாடும் பார்க்காமல் எல்லோருக்கும், எல்லோரும் உதவி செய்து கொண்டு தயாரானோம். முன்பே முடிவு செய்த படி நான் இதை ஆடுகிறேன். நீ அதை ஆடுங்கள் என்று என்று சொல்லி அதற்கு ஏற்றாற்போல் இசை வல்லுநர்களிடமும் முன்பே சொல்லி உள்ளதால், எல்லோரும் தயாராகி கிளம்பினோம். 
எனக்கு ரொம்பக் குஷி. கப்பலை பார்க்க போகிறோம் என்று சந்தோஷத்துடன் இருந்தேன். சென்னை துறைமுகத்தை அடைந்தோம். போர் கப்பல் நடுக்கடலில் இருப்பதால், இங்கிருந்து ஒரு சிறிய மோட்டார் படகில் ஏறிக்கொண்டு போர் கப்பல் இருக்கும் இடத்திற்குச் சென்றோம். போர் கப்பல் மிகவும் உயரமாக இருந்தது. கீழே இருந்து கப்பலுக்குள்ளே போக ஒரு மிகப் பெரிய படிக்கட்டு இருந்தது. நாலு படிக் கட்டுகள் ஏறின பிறகு கீழே பார்த்தால் எனக்குப் பயமாகி விட்டது. கிடுகிடுவெனத் திரும்பவும் நான் கீழே இறங்கினேன். "நான் மேலே வரல, எனக்குப் பயமாக இருக்கு''", என்று அழுது கொண்டே சொன்னேன். அப்பொழுதும் பத்மினி தான் என்னிடம் வந்து என்னை அப்படியே அணைத்துக் கொண்டு ஒவ்வொரு படியாக என்னையே ஏறவைத்து அழைத்துச் சென்றார்கள். மொட்டை மாடி போல் உள்ள திறந்த வெளியில் நாங்கள் நடனம் ஆடினோம். ஒரு பக்கம் காற்று எங்களையே தூக்கிக் கொண்டு போவது போல் இருந்தது. வித்தியாசமான அனுபவம். 
இங்கே ஒன்றை நான் சொல்லியே ஆகவேண்டும். எந்த ஒரு நடனமணியும் தனக்காக உள்ள மேடையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். லலிதா, பத்மினி, ராகினிக்கு அந்த உயர்ந்த மனசு இருந்தது. எல்லோரும் முன்னேற வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பண்பு அவர்களிடம் இருந்தது.
"தங்கப்பதுமை' படம்" வெளியானது. அன்றைய பாரகன் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தேன். படத்தில் சிவாஜிக்கு கணேசனுக்கு கண் போனவுடன் பத்மினி அழுது கொண்டே ஒரு பாட்டு பாடுவார். பத்மினி அழுகிறார் என்றவுடன் என்னை அறியாமல் திரை அரங்கே கேட்கும்படி வீறிட்டு அழுதேன். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவுடன், நான் பத்மினியை பார்க்க ஆசை பட்டேன். நேராக அவருடைய வீட்டிற்குக் காரை விடச் சொன்னேன். வீட்டிற்குள் சென்றவுடன் எங்கே அக்கா என்று கேட்டேன். மேலே இருக்கிறார் என்று சொன்னார்கள். அவர்களைப் பார்க்க மேலே போனவுடன், இரண்டு கால் முட்டியிலும் கட்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருந்தார். நேற்று அவர் அழுததால், நான் அழுதேன். இன்று கால் முட்டியில் கட்டுடன் இருப்பதைப் பார்த்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. அவர் எதிரிலேயே விக்கி விக்கி கண்ணீர் விட்டேன். "

"ஒண்ணும் இல்லை. எல்லாம் சரியாகி விடும். நேற்று ஒரு இந்திப் படத்தில் ஒரு நடனக் காட்சி. அதற்கு மாஸ்டர் ஹீராலால் . அவர் எப்பொழுதுமே கொஞ்சம் கஷ்டமான நடன அசைவுகளைத் தருவார். ஆனால் அதைச் செய்தால் நமக்குக் கண்டிப்பாகப் பேர் கிடைக்கும். இரண்டு நாட்களாகக் காட்டின் நடுவே படப்பிடிப்பு. ஒரு பாறையின் மேல் நான் முட்டி போட்டு நடனம் ஆடவேண்டும். குட்டை பாவாடையில் நான் ஆடும் போது கண்டிப்பாக முட்டியில் படும். அதெல்லாம் பார்த்தால் முடியுமா? அந்த நடன அசைவு மிகவும் சிறப்பாக வந்துள்ளது"'' என்று கூறினார். 
நான் நேற்று படம் பார்த்து அழுததைக் கேள்விப் பட்டு, "அது சினிமா தானே. அதற்கெல்லாம் அழலாமா''என்று இழுத்து அணைத்துக் கொண்டார். "நீ நல்லபடியாக வருவே. பாட்டியிடம் எந்தக் காலத்திலும் நீ திட்டு வாங்கக் கூடாது. உனக்கு நல்ல எதிர்காலம் கண்டிப்பாக இருக்கு' என்றார்". என்னைப் பொருத்தவரை பப்பிமாவை போல் இன்னொருவர் பிறக்க முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு என்று இல்லை, அவர் எங்குச் சென்றாலும் அவருக்குத் தெரிந்த பலருக்கும் ஏதாவது பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டு வருவார். எனக்கு என்ன பிடிக்கும், என்ன வாங்கிக் கொண்டு வந்தார் என்று அடுத்த வாரம் சொல்லாமல் இருப்பேனா என்ன? கண்டிப்பாகச் சொல்கிறேன்.
(தொடரும்) 
சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com