தினமணியின் தலையங்கம் மிகச்சிறப்பு! -சந்திரமௌலி

"உன் கையில் இருக்கும் நாளிதழ் எது என்று கூறு. நீ யார் என்பதை நான் கூறுகிறேன்'' என்பது உண்மை மொழி
 தினமணியின் தலையங்கம் மிகச்சிறப்பு! -சந்திரமௌலி

"உன் கையில் இருக்கும் நாளிதழ் எது என்று கூறு. நீ யார் என்பதை நான் கூறுகிறேன்'' என்பது உண்மை மொழி. தேசியத்தையும், தமிழையும் தனது இரு கண்களாகக் கொண்டு போற்றிய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி "தினமணி' தொடங்கப்பட்டது என்பது தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெருமை மிகு செய்தி.
 1934-இல் உருவாகி 85 ஆண்டுகளைத் தாண்டி 86-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமணியின் 1961-ஆம் ஆண்டு முதலாக 58 ஆண்டுகளுக்கு மேலான வாசகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்.
 டி.எஸ். சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு 1934-இல் தொடங்கி 1943-ஆம் ஆண்டு வரை துவங்கப்பட்ட "தினமணி', பாரத நாட்டின் விடுதலை வேள்வியில் மிகச் சிறப்புடன் பங்கேற்றதும், தொடர்ந்து தியாகி ஏ.என்.சிவராமன், கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் போன்ற ஆசிரியர்கள் தினமணியின் வளர்ச்சியில் பெரும் பங்கேற்றத்தை அறிவேன். சுதந்திரப் போராட்ட தியாகி ஏ.என்.சிவராமன் சிறைவாசத்தை அனுபவித்தும் கூட தனக்கு வழங்கப்பட இருந்த "பத்ம பூஷண்' விருதைக்கூடப் பெறுவதற்கு வெட்கமடைகிறேன் என்று வாங்க மறுத்தவர் என்பது எத்தனை பெரிய செய்தி!
 அவர் தினமணியில் "கணக்கன்' என்ற பெயரில் எழுதி வந்த பொருளாதாரக் கட்டுரைகளை, நான் விரும்பிப் படிப்பது உண்டு. அவற்றைப் பாராட்டி நான் அவருக்கு எழுதிய கடிதத்துக்கு நன்றி பாராட்டி, தீபாவளி வாழ்த்து அனுப்பியிருந்ததும் நான் மறக்க முடியாத செய்தி.
 தினமணி என்னுடைய பணி நிறைவுக் கால நிகழ் நாட்களின் ஒரு அங்கமாக விளங்குகிறது. ஆண்டு சந்தா மூலம் தினமணி மற்றும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பெற்று படித்து வரும் எனக்கு, ஏதாவது ஒரு நாளில் ஏதாவது ஒரு காரணத்தால் நாளிதழ் வராவிட்டால் வெளியூரிலிருந்து வாங்கி வரச் செய்து உறங்கும் முன்பு படிப்பது எனது வழக்கம். இப்பழக்கம் காரணமாக எனது மனைவியும் இரு மகன்களும் தினமணியில் தனிச்சிறப்புகளை உணர்ந்து அவர்களும் தொடர்ந்து வாசகர்களாகத் திகழ்கின்றனர்.
 தினமணியில் என்னைக் கவர்ந்த அம்சங்கள்:
 ஆரம்பக் காலங்களில் வடமொழிச் சொற்கள் செய்திகளில் அதிகம் இடம் பெற்றிருந்தன. நாளடைவில் அருமைத் தமிழில், ஆட்சி மொழித் தமிழில் வெளிவருவது -அதனைத் தவறாது நடைமுறைப்படுத்துவது.
 உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகளைத் தொகுத்து கோர்வையாகவும், உண்மைச் செய்திகளை மட்டுமே வெளியிடுவது.
 ஆணித் தரமான தலையங்கம் மிகச்சிறப்பு. புள்ளி விவரங்களுடன், தெள்ளத் தெளிவாக கருத்துகளை வலியுறுத்தி வெளியிடும் பாங்கு இது வேறு எந்த இதழிலும் இல்லாத சிறப்பு.
 கட்டுரைகள் மற்றும் துணைக் கட்டுரைகள் தேசிய முக்கியத்துவம் மற்றும் அப்போதைக்கு சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படச் செய்யும் நோக்கில் தேர்ந்தெடுத்து வெளியிடும் பாங்கு.
 வாசகர்களின் கடிதங்கள், அன்புள்ள ஆசிரியருக்கு பகுதி மூலம் வாசகர்களின் சிந்தனைகளுக்கு ஊக்குவித்து, வாசகர்களுக்கும் தெளிவை உண்டாக்குதல்.
 தீபாவளி, பொங்கல் மலர்களை என்றும் பாதுகாக்கும் வகையில் சிறப்பாக வெளியிடுவது.
 டிசம்பர் சீசனில் வெளியான சங்கீத மலர்கள் கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் 2014 வரை வெளியான இசைமலர்களைத் தொகுத்து இரு கட்டுகளாகப் பைண்டு செய்து வைத்துள்ளேன். பொக்கிஷமாகப் பாதுகாக்கும் அவற்றை ஒவ்வொரு முறை படிக்கும் போது அப்போது தான் புதிதாகப் படிப்பது போல உணர்வு தோன்றுகிறது.
 தினமணி நடுப்பக்க கட்டுரைகளில் மிகச் சிறந்தவற்றை சேகரித்து வைத்துள்ளேன். தேவைப்படும் போது குறிப்பெடுக்க அவை உறுதுணையாக இருக்கின்றன.
 விற்பனை நோக்கமின்றி நடிகர், நடிகையாரைப் பற்றிய செய்திகளையும் கண்ணியமாக வெளியிடும் முறை.
 சுதந்திர போரில் தனது கடமையைச் சிறப்பாக ஆற்றிய தினமணி, விடுதலைக்குப்பிறகும் சுதந்திரம், சமத்துவம் ஆகிய லட்சியங்களுக்காகப் பணி புரிந்து வருகிறது.
 மேலே குறிப்பிட்ட தினமணியின் முன்னாள் ஆசிரியர்கள் தவிர அதனுடன் தொடர்பு கொண்ட சங்கு சுப்பிரமணியம், ஏ.ஜி.வெங்கடாச்சாரி, ந.ராமரத்தினம், வி. சந்தானம், புதுமைப்பித்தன், இளங்கோவன், துமிலன், நா.பார்த்தசாரதி, கஸ்தூரி ரங்கன் ஆகியோரது பங்களிப்பும் பாராட்டுக்குரியவை!
 கட்டுரையாளர்:
 கண்காணிப்பாளர் கல்வித்துறை (ஓய்வு)
 ஊத்துக்குளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com