சுடச்சுட

  
  sk7

  ""அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கிறது. அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடுகிறது. அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தைக் கடந்த மாதிரி. இதுதான் இந்தக் கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொடுப்பதில்தான் நிறையச் சவால்'' என கதையின் உள்ளடக்கம் பேசி கரம் கொடுக்கிறார் இயக்குநர் ராம்சேவா.  "கண்ணெதிரே தோன்றினாள்' ரவிச்சந்திரனின் உதவியாளர். "என் காதலி சீன் போடுறா' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வருகிறார். 

  நீங்கள் பேசுகிற விதம் சரி.... இப்போதுள்ள டிரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதான் இங்கே முக்கியம்...

  ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்தத் துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது.  அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள்.  எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை  அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாகக் காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான்  எந்த விஷயமும் ஈடேறும்.  இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும்.  அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்தக் கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டத்துக்கு உட்பட்டு செய்து முடித்திருக்கிறேன். 

  எப்படி வந்திருக்கிறது படம்...

  நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்து கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்தக் கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம்.  ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், க்ரைம் த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம்.  நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளைக் கடந்து விடுகிற மனசு, ஏதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும்.  அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. அன்பும், போராட்டமும்தான் இந்த மானுடத்தின் நிரந்தரம். நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்துப் போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறு பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறோமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்புகிறோமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததைக் கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்தக் காலம் ஒரு தனி மனிதனுக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம். நம்பிக்கை துரோகத்தின் வலியை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை. 

  இளம் தலைமுறையினருக்கான படமா...

  ஆமாம், காதலை வேறு கோணத்தில் அணுகி வந்திருக்கிறேன். அது எல்லாமே இளம் தலைமுறைக்கான புரிதலாகத்தான் இருக்கும். ஒரு படம் என்னென்ன அனுபவங்களைத் தரும் என எனக்குள்ளேயே ஒரு கணக்கு இருக்கிறது. அதற்குத் தகுதியாக இந்தப் படம் வந்திருக்கிறது. இந்தப் படம் ஒரு அசல் வாழ்க்கையை விட்டு, கொஞ்சமும் விலகாமல், ஏற்றி வைத்தும் சொல்லாமல், அச்சு அசலாக வந்திருப்பதுதான் விசேஷம். சொல்லியே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறேன். சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆரம்பத்திலிருந்து உழைப்புதான் நம்மை உயரத்துக்குக் கொண்டு போகும் என எண்ணுகிறேன். அந்த முயற்சியில் இறங்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.  ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். காதல், அன்பு, கலாட்டா, துரோகம் எல்லாமும் கதை. காமெடி, ஃபேமிலி பேக்கேஜ் இரண்டும் இந்தப் படத்தில் சரி பாதி இருக்கும். எல்லாமே புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன். சில விஷயங்களை ஊடுருவிப் பார்த்தால், இது எல்லாருக்குமான சினிமாவாகவும் இருக்கும்.   வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் பேபி ஜோசப் சாருக்கு நன்றிகள். 
  ஹீரோயின் புதுசா தெரியுறாங்க... 

  "அங்காடி தெரு' மகேஷூக்கு இது புது அடையாளம். படத்தை முடித்து விட்டுப் பார்க்கும் போது, அவரைத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  என் ஹீரோ என்பதற்காகச் சொல்லவில்லை.   மனுஷன் அப்படி ஓர் உழைப்பாளி.  ஹீரோயின் ஷாலு. வட மாநிலத்துப் பொண்ணு. ஆனால் அழகு தமிழ் முகம். ஏற்கெனவே மாடலிங், விளம்பரம் என வேலை தெரிந்த பொண்ணு.  பாட்டு, கிளாமர்னு சும்மா வந்துட்டுப் போகாமல், அவ்வளவு தூரம் நடிக்க ஸ்கோப் இருக்கிறது அந்தப்  பொண்ணுக்கு.  

  இதில் சில காதல் இடங்கள் இருக்கிறது. இருவருக்கும் காதல் உணர்வுகள் அரும்புவது சகஜமே. காதல் மாதிரி மனசை சுத்தப்படுத்துவதும் கிடையாது, கிறுக்கு பிடிக்க வைப்பதும் கிடையாது என புரிய வைத்து இருவரையும் நடிக்க வைத்திருக்கிறேன். "ஆடுகளம்' நரேன், மனோபாலா, விஜய் டிவி. கோகுல் என பல முக்கிய கதாபாத்திரங்களுக்கு நம்பகமான நடிகர்கள் இருக்கிறார்கள். சரியான திட்டமிடலுடன் 23 நாட்களில் படமாக்கி முடித்துவிட்டேன். அம்ரிஷின் இசையில் நான்கு பாடல்களும் ஹிட். பின்னணி இசை இன்னும் பெரும் பலமாக கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai