எம்ஜிஆரின் கண் கண்ட கடவுள்!

நிச்சயம் உண்டு. ஆனால் அந்த நம்பிக்கையிலும்  ஒரு அளவுகோலை வைத்திருந்தார்.
எம்ஜிஆரின் கண் கண்ட கடவுள்!

சென்ற இதழ் தொடர்ச்சி..

எம்ஜிஆர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா?

நிச்சயம் உண்டு. ஆனால் அந்த நம்பிக்கையிலும்  ஒரு அளவுகோலை வைத்திருந்தார். அதாவது நேரம் காலம் பார்த்து தனது அன்றாட கடமைகள் செய்வது, பூஜைகள் வழிபாடுகள், போன்றவற்றில் நம்பிக்கை கொள்வது என்றெல்லாம் அவரிடம் கிடையாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி நிச்சயம் உள்ளதாக மட்டுமே நினைத்தார். முதலில் எம்ஜிஆரின் கண்கண்ட கடவுள் அவரது அன்னையே ஆவார். நமது தாய் தந்தையை நேசித்து,  அவர்களைப் போற்றி வாழ்தல் மட்டுமின்றி ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வது போன்றவைகளே  ஆன்மீகத்தின் முக்கிய படி என்பதில் திடமாக இருந்தவர் எம்ஜிஆர். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பது என்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்தியாவைக் கடந்து எம்ஜிஆர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் எது?

தனது சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்த காலங்களில் பர்மாவுக்கு கப்பலில் பயணம் மேற்கொண்டதே அவரது முதல் வெளிநாட்டுப் பயணம். அதன்பின் 1965-இல் இலங்கைக்கு அந்நாட்டின் அரசாங்கத்தின் பேரில் அங்கு சென்று வந்தது போன்று பல்வேறு நாடுகளுக்கும் அரசாங்க அழைப்பின் பேரில் சென்று வந்துள்ளார்.

எம்ஜிஆரின் பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களில் உங்களுக்கு பிடித்த அவரது வெளிநாட்டுப் பயண நிகழ்ச்சி ஒன்றினை கூறுங்கள்?

ஏறத்தாழ பெரும்பாலான வெளிநாடுகளுக்கு எம்ஜிஆர் சென்று வந்துள்ளார். அத்தனையும் வரலாறு படைத்த பயணங்கள் என்றாலும் என்னை ஆச்சரியப்படவைத்த அவரது வெளிநாட்டு சாதனைப் பயணம் ஒன்று உண்டு. 1972-ஆம் ஆண்டு  சிங்கப்பூர் நாட்டு அரசாங்கத்தின் சார்பில் அங்கு அழைக்கப்படுகிறார் எம்ஜிஆர். அந்தநாட்டின் பின் தங்கிய ஒரு நகரின் வளர்ச்சிக்காக கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி பெற்று தருவதே இப்பயணத்தின் முக்கிய அம்சமாகும். எம்ஜிஆருடன் நடிகர்கள் நாகேஷ், முத்துராமன்,  வட இந்திய நடிகர் சசிகபூர், மற்றும் ஜெயலலிதா, பி.சுசீலா, டி.எம்.எஸ் உட்பட மேலும் பல கலைஞர்கள் சென்றனர். அங்கு சென்ற எம்ஜிஆரை சிங்கப்பூர் மேயரே நேரில் வந்து மிகப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து அவரை மிகுந்த அன்புடன் வரவேற்றார். முன்னதாக சிங்கப்பூர் மேயர், எம்ஜிஆரை அவரது அறைக்கு அழைத்துச் சென்று அந்த நகர் பகுதி,  முன்பு எப்படியிருந்தது தற்போது எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை வரைபடங்கள் மூலமாக விளக்கினார்.  அதுபோல் ஒரு குறிப்பிட்ட நகரின் ஒரு வரைபடத்தைக் காண்பித்து அந்த நகரின் வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுத்தப்படப்போகிறது என்பதையல்லாம் விளக்கிக் கூறி கலைநிகழ்ச்சிக்கான நிதியின் அவசியத்தை உணர்த்தினார்.. நகரில் நிகழ்ச்சி நடைபெற்ற போது எண்ணற்ற சீனர்களும்,  மலாய் மொழி பேசும் மக்களும் பெருமளவு தமிழர்களும் திரண்டு வந்து சிறப்பித்தனர். 

குறிப்பாக நேஷனல் திரையரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் டிக்கட் கிடைக்காமல் பெரும்பாலான ரசிகர்கள் அரங்கைச் சுற்றிலும் நிறைந்திருந்தனர் .அதுபோலவே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்படியிருந்தும் இடமின்றி வெளியில் நின்றவர்கள் எண்ணிக்கை என்பது அரங்கில் உள்ளவர்களை விட நூறு மடங்கு அதிகமாக இருந்தது.  இதில் குறிப்பாகக் கூற வேண்டியது என்னவென்றால், நிகழ்ச்சிக்காக தனிப்பட்ட முறையில் நாடகங்களை நடத்தத் திட்டமிடாமல் அங்கு சென்ற பின்னரே சூழ்நிலைக்கு தக்கவாறு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.  எம்ஜிஆருக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பிலும் சீன, மலாய் மற்றும் தமிழ் மக்களின் சார்பிலும் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பை கண்டு வட இந்திய நடிகர் சசிகபூர் உட்பட அவருடன் வந்திருந்த மற்றவர்களும் வியந்து போயினர். அப்படியாக கலை நிகழ்ச்சிகள் வாயிலாக கிடைத்த சுமார் ஒரு லட்சம் டாலர் தொகையினை சிங்கப்பூர் மேயரிடம் வழங்கினார்.  சிங்கப்பூர் நாட்டு மக்களின் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சியினை காண பல ஆயிரக்கணக்கில் திரண்ட விதம் இவற்றையெல்லாம் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனார் எம்ஜிஆர். இறுதியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எம்ஜிஆருக்கு நன்றி கூறினார்கள். அந்நகரத்தின் திட்டத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பாடுபடும் விதத்தை எடுத்துக் கூறி அவர்களை மேடையில் பாராட்டிப் பேசினார்.

உங்கள் தனிப்பட்ட வாழ்வில் எம்ஜிஆர் செய்துள்ள உதவிகள் எவை?

1976-ஆம் வருடம் ஜனவரி மாதம், எனது மூத்த மகள் ராதா திருமணம் குறித்து எம்ஜிஆரிடம் கூறினேன். மிகவும் மகிழ்ச்சியடைந்த எம்ஜிஆர் மாப்பிள்ளை குறித்த விவரங்கள் எல்லாம் கேட்டறிந்தார். பின் திருமண மண்டபத்தையும் எம்ஜிஆரே முடிவு செய்தார். அப்போது தி.நகர் பசுல்லா சாலையில் இருந்த இயக்குநர் ப.நீலகண்டனின் சொந்த திருமண மண்டபமான மகாலஷ்மி திருமண மண்டபத்திற்கு எம்ஜிஆரே வாடகை செலுத்தி அனுமதி பெற்றுத்தந்தார். பின் மேலும் என்னிடம் திருமணத்திற்கு ஆகும் செலவுத் தொகை பட்டியலை கேட்டுப் பெற்று அதற்கான பணத்தையும் தந்துவிட்டார். அதன்பின் திருமணத்திற்கு வந்ததோடு பின்னர் ராமாவரம் தோட்டத்திற்கு மணமக்களை வரவழைத்து விருந்து அளித்து, ஒரு பெட்டியில் ஆறு வெள்ளி தம்ளர்கள் வீதம் இரண்டு பெட்டிகளை மணமக்களுக்கு அளித்தார். இது என் வாழ்வில் எம்ஜிஆர் செய்த மறக்க முடியாத உதவி. அடுத்து 1984-இல் எனது இரண்டாவது மகன் நாராயணனுக்கு சென்னை துறைமுகத்தில் வேலைக்கான நேர்காணல் நடந்தது. பின் இது குறித்து கூற, அப்போது எனது மகனை எம்ஜிஆரிடம் அழைத்து சென்றிருந்தேன். அவனிடம் எம்ஜிஆர் ஏன் இப்போதே வேலைக்கு செல்ல வேண்டுமென்கிறாய்?  மேலும் நன்றாகப் படித்து இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாமே என்றார். அவனுக்கு அப்போது  19 வயதே என்பதால் அவன் மேலும் படிக்க வேண்டும் என விரும்பினார் எம்ஜிஆர். ஆனால் வேலைக்குச் செல்வதில்  அவன் விருப்பம் உடையவனாக இருந்ததால், அவனது எண்ணத்தை புரிந்துகொண்டு அவரது முதன்மை தனி செயலாளரான பி.பரமசிவத்திடம் கூறி அந்த வேலையை பெற்றுத்தருமாறு கூறினார். அதன்படி அன்றே பரமசிவம் சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவரான அசோக் ஜோஷியிடம் விவரத்தைக் கூறினார். அதே போல் எனது இளைய மகள் கீதா  1984-இல் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.ஈ.டி மகளிர்   கல்லூரியில் ஆ.நஇ  பிரிவிற்கு விண்ணப்பித்து இருந்தார். அது குறித்து எம்ஜிஆரிடம் கூறினேன் உடனே அவரது முதன்மை தனிச்செயலரான பரமசிவத்திடம் கூறினார் எம்ஜிஆர். பரமசிவம் அப்போது கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்த அனந்த பத்பமநாபனிடம் கூறி கல்லூரியில் இடத்தைப் பெற்றுத் தந்தார்.

1987-இல் எனது மூத்தமகன் கோவிந்தராஜ் ஸ்டண்ட் யூனியனில் சேர விரும்பினான். அதன்படி எம்ஜிஆரிடம் கூறி ஆசி பெற அவனை அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது அவனுக்கு 23 வயதே இருந்ததால் அவனிடம் என்ன படித்துள்ளாய்? எனக் கேட்டார் எம்ஜிஆர். +2 வரை படித்துள்ளதாக கூறிய அவனிடம் "ஏன் மேலே படிக்க விருப்பம் கொள்ள வில்லை. ஸ்டண்டில் சேர உன் அப்பா வற்புறுத்தினாரா?' என சிரித்துக்கொண்டே கூறிய எம்ஜிஆர் சரி போகட்டும் போலீஸ் உதவி ஆய்வாளருக்கான தேர்வு நடைபெற உள்ளது தேர்வு எழுதி காவல்துறையில் சேர்ந்து சமூகத்தில் உன்னால் முடிந்த அளவு மக்களுக்கு நன்மை செய்  என அவனுக்கு ஆசி கூறி அனுப்பினார். அப்போது அப்பணிக்கு கல்வித்தகுதி +2 போதுமானதாக இருந்ததால் அப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கூறினார் எம்ஜிஆர். அன்று எம்ஜிஆர் கூறியபடி காவல்துறை உதவிஆய்வாளர் (1987 க்கானபிரிவு ) தேர்வு எழுதியிருந்தால் இன்று அவன் அஈநட ஆக ஆகியிருப்பான்.  ஆனால் அவனது ஆர்வம் சினிமா துறையிலேயே இருந்ததால் ரஜினி நடித்த "பிளட்ஸ்டோன்' எனும் ஆங்கில படத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்ததால் எம்ஜிஆர் கூறியபடி காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வில் கலந்து கொள்ளவில்லை. துரதிஷ்டவசமாக எம்ஜிஆர் அறிவுரைப்படி அவனால் நடந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அன்று எம்ஜிஆர் கூறியபடி நடந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் இன்றளவிலும் அவன் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு என் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளையும் எம்ஜிஆரிடம் கூறியபோதெல்லாம் அனைத்தையும் மிகவும் கனிவுடன் கேட்டு தேவையான உதவிகளைச் செய்துள்ளார். எனக்கு மட்டுமல்ல அவருடன் இருந்த அனைவரது பிரச்னைகளையும் தனது சொந்தப் பிரச்னைகளாக எண்ணி அனைவருக்கும் தேவைப்படும் உதவிகளை செய்தவர் எம்ஜிஆர் என்பதை இந்த நேரத்தில் மிகவும் வாஞ்சையுடன் நினைவு கொள்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு பாதுகாவலராக பணியாற்றியுள்ளது குறித்து?

1982-ஆம் ஆண்டு கட்சியில் அவர் சேர்ந்தது முதலே சில காலம் நாங்கள் அவருக்கு பாதுகாவலராக செயல்பட்டுள்ளோம். அதாவது எம்ஜிஆர் இருந்த காலம் வரை.

எம்ஜிஆருக்கு மெய்காப்பாளராக பணியாற்றிய நீங்கள் ஜெயலலிதாவுக்கும் பாதுகாவலாக செயல்பட காரணம்?

அதாவது ஜெயலலிதா கட்சியில் சேர்ந்தது முதலே கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களின் மறைமுக அல்லது நேரடி எதிர்ப்புகளுக்கு உள்ளானார். அதே போல் மறுபுறம் திமுகவினரின் எதிர்ப்புக்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டிய சூழல். எனவே தான் அவரது இருபுற எதிர்ப்புகளையும் கருத்தில் கொண்ட எம்ஜிஆர் பாதுகாப்பு என்பது ஜெயலலிதா அவர்களுக்கு மிகமிக அத்தியாவசியமான ஒன்று என்பதைக் கருத்தில் கொண்டு அவரது பாதுகாப்பு பணிக்கும் எங்களை (தர்மலிங்கம், நார்த்தார் சிங், முத்து, மற்றும் நான்)   பணித்தார் எம்ஜிஆர்.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com