என்றும் இருப்பவர்கள்! - 4

தேசப் பற்று, அரசியல் ஆர்வம், இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களுக்கு இன்னொருவர் பத்திரிகைப் போதுமானதாகப் படுவதில்லை. தன் கருத்துகளை, விமர்சனங்களை எடுத்துச் சொல்ல தனக்கே சொந்தமாக
என்றும் இருப்பவர்கள்! - 4


மணிக்கொடி சீனிவாசன்,  பி.எஸ்.ராமையா

தேசப் பற்று, அரசியல் ஆர்வம், இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களுக்கு இன்னொருவர் பத்திரிகைப் போதுமானதாகப் படுவதில்லை. தன் கருத்துகளை, விமர்சனங்களை எடுத்துச் சொல்ல தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும். சொந்தம் என்பதே பூரண சுதந்திரம் கொடுக்கக்கூடியது என்று எழுத்தாளர்கள் சிலர் பத்திரிகைகள் ஆரம்பித்து நடத்தினார்கள்; நடத்தி வருகிறார்கள். எழுத்தாளர்களின் பத்திரிகைகள் எத்தனை பிரதிகள் விற்பனையாகின்றன. யாரெல்லாம் படிக்கிறார்கள் சமூகத்தில் தன் பத்திரிகை ஏற்படுத்தி இருக்கும் மாறுதல்கள் என்ன என்பதைப் பற்றியோ-எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என்பது பற்றியோ கவனத்தில் கொள்வது இல்லை.

எழுதுவது இன்னும் நேர்மையாக எழுதுவது, கதையென்றால் சுவாரசியமாக எழுதுவது, கவிதை என்றால் உணர்ச்சிகரமாக எழுதுவது, அரசியல் கட்டுரையென்றால் அரசாங்கத்தை நிலைய குலைய வைக்கும் படியாகவே எழுதுவது- என்பதற்காகப் பத்திரிகைகள் ஆரம்பிக்கிறார்கள். எழுதியதற்காக தேசதுரோகச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேச விடுதலைக்குப் பாடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலையாகி வந்து பத்திரிகைகள் நடத்தி இருக்கிறார்கள். தேச சேவையிலும், பத்திரிகை நடத்துவதிலும் முன்னணியில் இருந்தவர்களில் ஒருவர் குப்புசாமி ஐயர் சீனிவாசன். அவர் ஸ்டாலின் மாதிரி மீசை வைத்துக் கொண்டு இருந்தார். எனவே அவரை "ஸ்டாலின் சீனிவாசன்' என்றே அழைத்து வந்தார்கள். 

அவர் 1933-ஆம் ஆண்டில் தனது உற்ற தோழர்களான  வ.ரா,  டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு ஏற்படுத்த "மணிக்கொடி' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். மணிக்கொடியைத் தொடங்கிய மூவருமே நன்கு கற்றவர்கள். அரசியல் தெரிந்தவர்கள். தமிழில் எழுதும் வல்லமை பெற்றவர்கள். தாங்கள் எழுதியதோடு பாரதிதாசன் எழுதிய "தமிழுக்கு அமிழ்தென்று பேர்' உட்பட பல கவிதைகளையும் பிரசுரம் செய்தவர்கள்.

எதனோடும்  சமரசமற்ற பத்திரிகைகள் நீண்ட காலம் தொடர்ந்து வருவது சாத்தியமில்லைதான். மணிக்கொடிக்கும் இது பொருத்தமாயிற்று. மணிக்கொடி சீனிவாசன் மும்பைக்கு ஆங்கில பத்திரிகையில் பணியாற்ற புறப்பட்டுச் சென்றார். வ.ரா விற்கும், டி.எஸ் சொக்கலிங்கத்திற்கும் பத்திரிகை நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தினமணி நாளிதழ் தொடங்கப்பட்டது. சொக்கலிங்கம் அதன் ஆசிரியரானார். வ.ரா. வீரகேசரியில் பணியாற்ற இலங்கை சென்றார். 

ஸ்டாலின் சீனிவாசன் அறிவு நாணயம் மிக்கதோர் மனிதராக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவித்து எழுதி வந்த அவர் சுதந்திரத்திற்குப் பிறகு கலை,கலாசாரம், சினிமாவை நேர்வழிபடுத்த  விரும்பினார். சென்னை மாகாண சினிமா தணிக்கை குழுவின் முதல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் வந்த காலம் தமிழகத்தில் சினிமாவில் புதிய கருத்துகள், காட்சிகள் இடம் பெற்று வந்த காலம். எனவே சினிமா மீது கவனம் செலுத்த அரசு ஆரம்பித்தது.
1953-ஆம் ஆண்டில் மு. கருணாநிதி திரைக்கதை வசனத்தில் "பராசக்தி' படம் தணிக்கைக்குச் சென்றது. பராசக்திக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக்கூடாது. அது நம்பிக்கைகளைப் பழிக்கிறது. கேலி செய்கிறது என்று சொல்லப்பட்டது. சினிமா தணிக்கைக்குழுவின் தலைவராக இருந்த ஸ்டாலின் சீனிவாசனுக்குப் பலரும் நெருக்கடி கொடுத்தார்கள். அதில் அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் இருந்தார்கள்.

அவர் எதற்கும் பணியாமல் "பராசக்தி' சினிமா படத்தைப் பார்த்துவிட்டு வெளியிடுவதற்குத்  தடையேதும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்தார். அது ஐம்தாண்டுகளுக்கு முன்னால் முற்போக்கான செயல் என்று பாராட்டப்பட்டது.
லட்சுமிகிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் நடைபெற்ற இலக்கியக்கூட்டம் ஒன்றுக்குச்சென்று இருந்தேன். ஸ்டாலின் சீனிவாசனும், பி.எஸ்.ராமையாவும் அதில் பங்கேற்பாளர்களாக இருந்தனர். அவர்கள் பேச்சு, நாடகம், சினிமா, தணிக்கைப் பற்றியதாக இருந்தது. எதிரில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருந்தேன்.

ஸ்டாலின் சீனிவாசனிடமிருந்து, மணிக்கொடியை வாங்கி "அவ்வளவும் கதைகள்' என்ற தலைப்பில் போட்டு மணிக்கொடியைக் கொண்டு வந்தவர் பி.எஸ்.ராமையா . 1940-ஆம் ஆண்டில், இனி வருங்காலம் என்பது எழுத்தாளர்களுக்கு, சினிமாதான் என்று ஜெமினி ஸ்டூடியோவிற்குச் சென்றவர். "பூலோகரம்பை', " மதனகாமராஜன்', "தேரோட்டிமகன்' உட்பட பதினாறு திரைப்படங்களுக்கு கதையோ, கதை வசனமோ எழுதியவர். சில படங்களுக்கும் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளவர். ஒலி, ஒளியமைப்பில் திறமை பெற்றவர் என்பதால் பணியாற்ற லண்டன் சென்று வந்தவர். இருவரும் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு சினிமாவைப் பற்றி பேசுவது கேட்பதற்குச் சுவாரசியமாக இருந்தது. 

பி.எஸ்.ராமையா கதை வசன கர்த்தா, இயக்குநர் படம் என்பதை ஓட வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது தான் அவர் பணி. அதோடு பணம் சம்பாதிக்க வேண்டும். சினிமா பணம் போட்டு பணம் எடுக்கும் காரியம். 

ஸ்டாலின் சீனிவாசன் திரைப்பட தணிக்கை வாரியத்தலைவர். பொறுப்பு மிக்கவர். சரியானப் படத்தை, தரமான காட்சிகளை நேர்மையான வசனங்களைப் படம் கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டியவர் இருவரும் சினிமாவில் இருந்தாலும், வேறுவேறு வேலை செய்கிறவர்கள்.
நான் ஸ்டாலின் சீனிவாசனைப் பார்த்து, ""சார் உங்கள் சினிமா தணிக்கைப் பணி எப்படி இருந்தது. பராசக்தியில் பிரச்னைகள் இருந்தன என்று சொல்கிறார்களே'' என்று கேட்டேன்.

""பராசக்தி தணிக்கை முடிந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நான் தரமான படம் வெளியிடுவதற்கு உரியதா என்று சான்றிதழ் கொடுத்தேன். படத்தைப் பார்க்காமல் எதிர்த்தவர்கள் எல்லாம் பராசக்தியைப் பார்த்ததும் அடங்கிப் போய்விட்டார்கள். என் மீது ஒரு புகார் கூட வரவில்லை'' என்றார்.

ஸ்டாலின் சீனிவாசன் கதை, கவிதை எழுதுகிற எழுத்தாளர் இல்லை. ஆனால் சமூகம் பற்றி யதார்த்த நிலவரங்கள் பற்றி உயிரோட்டமான உரைநடையில் எழுதுகிறவர்.

மணிக்கொடியை இலக்கியப் பத்திரிகையாக இன்று சிறுபத்திரிகைகைளின் வாரிசு என்று சொல்லப்படும் அளவிற்கு மணிக்கொடியை மேலே கொண்டு வந்தவர், பி.எஸ்.ராமையா. அவர் ஆசிரியராக இருந்த மணிக்கொடியில் தான் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் எல்லாம் எழுதினார்கள். அவர்களில் நவீன தமிழ்ச்சிறுகதைகளின் உச்சமான எழுத்தாளரான மணி, ஒரு சிறுகதை எழுதி நண்பர் மூலமாக ராமையாவிற்குக் கொடுத்து அனுப்பினார். கதாசிரியர் பெயர் இல்லை. சிறுகதை மட்டுந்தான் இருந்தது. எனவே கதாசிரியர்க்கு "மெüனி' என்று பெயரிட்டு மணிக்கொடியில் பிரசுரம் செய்தார். மணியும் "மெüனி' என்ற பெயரை ஏற்றுக்கொண்டு, பின்னால் எழுதிய கதைகளை அந்தப் பெயரிலேயே எழுதினார். மெüனி புதுமைப்பித்தனுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். அவரை "தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்' என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டார்.

பி.எஸ்.ராமையா வேகமாகச் சிறுகதைகள் எழுதக்கூடியவர். அவர் சிறு வயதிலும், இளம் பருவத்திலும் பல வேலைகள் பார்த்தவர். ஓட்டல் சர்வர், ஜவுளிக்கடை கணக்கர், எழுத்தாளர், காதி பண்டார் துணி விற்பனையாளர், சினிமா கதை வசனகர்த்தா என்று. ஆனால் அவர் அடிப்படையில் கலைஞர். கலைகள் பற்றி கற்றுத் தேர்ந்தவர் இல்லை. ஆனால் தன் உள்ளுணர்வு வழியாக அறிந்தும், அறியாமல் எழுதியவர். எனவே சிறுகதைகள் எழுதுவது அவருக்கு எளிதாக இருந்தது. அதுபற்றி பின்னால் அவர் சொன்னார், சிறுகதைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் பேனாவை எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தால் தங்கு தடையின்றி எழுதிவிடுவேன்.  "தினமணி' கதிரில், ஆனந்த விகடனில் எல்லாம் வாரம் ஒரு சிறுகதை வீதம் ஓராண்டு காலம் எழுதி இருக்கிறேன். "என் சிறுகதைகளை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. வாசகர்கள் படிக்கிறார்கள். என் முதல் சிறுகதை "மலரும் மணமும்', அதிகமாக யோசிக்காமல் தான் எழுதினேன். அது வெளியாகி அறுபதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. சிறந்த கதை என்று பலரும் சொல்கிறார்கள். நான் அது பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை' என்று ஒரு முறை எழுதினார். 

சி.சு செல்லப்பாவிற்கு மிகவும் பிடித்தமான தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் பி.எஸ்.ராமையா தான். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் என்று சொல்ல முடியாது. அவருக்கு இவர் கதைகள் பிடித்திருந்தன. ஒரு கதை வாசகர்களுக்கு ஏன் பிடித்தமான கதையாகிறது என்பதை விமர்சனங்களாலும், வாசகராலும் சொல்ல முடியாது.

ராமையா சிறுகதைகளைப் பற்றி விவரமாக 1998-ஆம் ஆண்டில் சி.சு.செல்லப்பா, ராமையாவின் சிறுகதை "பாணி' என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். அதோடு அவர் முந்நூறு கதைகள் எழுதியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

"கசடதபற' - என்ற இலக்கிய சிற்றிதழில் தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்களான கு.அழகிரிசாமி, விந்தன். ராமையா பற்றியெல்லாம் 1970-ஆம் ஆண்டில் எழுதினேன். அதில் தமிழ்ச்சிறுகதைகளின் சரித்திரம் எழுதப்படும் போது, பி.எஸ்.ராமையா பெயர் விடுபட்டுப் போய் விடும் என்று எழுதியிருந்தேன். சிட்டி கோபித்துக் கொண்டார். "சி.சு.செல்லப்பா உன் காலத்திற்குப் பின்னும் படிக்கப்படுவார். நீ எழுதியது எல்லாம் விமர்சனமே இல்லை' என்று கடுமையாக உரைத்தார். 

க.நா.சுப்பிரமணியம் டில்லியில் இருந்து வந்திருந்தார். ஒட்டலில் தங்கி இருந்த அவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன். இருவரும் இலக்கியம், எழுத்தாளர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் இடையில் அடிக்கடி சி.சு.செல்லப்பா பெயர் வந்து கொண்டிருந்தது. பிறகு அவர் பற்றி விசாரித்தார். ராமையா பற்றியும் கேட்டார். ""புறப்படு'' என்று எழுந்தார்.

""செல்லப்பாவை பார்க்கவா'' என்று கேட்டேன். ""இல்லை. இல்லை. செல்லப்பா உற்சாகம் இல்லாதவர் நானே பாதி உற்சாகி, செல்லப்பாவைப் பார்த்தால் என் பாதி உற்சாகமும் போய்விடும். நாம் ராமையாவைப் போய்ப் பார்க்கலாம். அவர்தான் பெரிய உற்சாகி. எத்தனையோ கஷ்டம் வந்தாலும் உற்சாகத்தை விட மாட்டார்'' என்றார். 

இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தோம்.

""இரண்டு பேர்களுக்கும் வயதாகிவிட்டது. அடுத்த வாரம் டில்லிக்குப் போகப் போகிறேன். நான் திரும்பி வரும் போது அவர் இருக்கிறாரோ இல்லையோ- பார்த்துவிட்டுப் போகலாம்'' என்ற படி ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார்.

சென்னை பெசன்ட் நகரில் என் நண்பர் சாமிநாதன் இருந்தார். அவர் "ஐராவதம்' என்ற பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வந்தார். அவர் சமூக நலக் கூடத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். பி.எஸ்.ராமையா பெசன்ட்  நகர்வாசியாக இருந்தார். அவர் தலைமையில் என்னைப் பேச அழைத்தார். 

இலக்கியக்கூட்டத்திற்கு அவர் எனக்கு முன்பாகவே வந்திருந்தார். நான் அவரிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். "சாயாவனம்' எழுதியவன் தானே. உன்னை இரண்டு மூன்று முறை லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வீட்டில் பார்த்து இருக்கிறேன். நல்லா இருக்கிறீயா, என்ன எழுதிக் கொண்டு இருக்கிறாய்'' என்று கேட்டார்.

தலையசைத்து சிரித்து மழுப்பினேன்.

1982-ஆம் ஆண்டில் அவர் எழுதிய "மணிக்கொடி காலம்' என்ற கட்டுரைத் தொகுதிக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அது "தீபம்' இதழில் தொடராக வந்தது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற பி.எஸ்.ராமையாவிற்கு, தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபாவில்  பாராட்டுக்கூட்டம் நடத்தப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளார்கள், வாசகர்கள், அவர் குடும்பத்தினர் கூடி இருந்தார்கள். எல்லோரும் அவரைப் புகழ்ந்து அவர் சாதனைகளைப் பாராட்டி பேசினார்கள். அவருக்கு எழுபத்தெட்டு வயதாகி இருந்தது. கேன்சர் நோய் முற்றிவிட்டது.

பாராட்டுக்குப் பதிலாக நன்றி கூற எழுந்தவர் ஒரு நிமிடத்திற்குப் பிறகு அழ ஆரம்பித்துவிட்டார். ""நான் நெடுநாட்களுக்கு  உயிரோடு இருக்கப்  போவதில்லை. உங்களை எல்லாம் இனி பார்க்கமாட்டேன் என்றே படுகிறது. அதுதான் வருத்தமாக இருக்கிறது''  என்று மேடையை விட்டு இறங்கி ஒவ்வொருவர் கையையும் பிடித்து அன்போடு குலுக்கினார்.

நான் அவர் முன்னே சென்று கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தேன். அவர் கட்டியணைத்துக் கொண்டார். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com