சுடச்சுட

  
  kadhir3

  மதுரை  நகர சுற்று வட்டாரத்தில்  சாலை அல்லது  தெரு ஓரம்  முதியவர் யாராவது   அநாதையாகக்  கிடந்தால், பொது மக்களும் சரி...  காவல்துறையும் சரி.... முதியவரை காப்பாற்ற உடனே அழைப்பது  "ஐஸ்வர்யம் அறக்கட்டளை' நடத்தி வரும் "நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மையத்தைத்தான்.

  ஐம்பது படுக்கைகளுடன்  செயல்பட்டு வரும் இந்த  மறுவாழ்வு மையத்தில் வாழ்க்கையின் விளிம்பில் அநாதைகளாக நிற்கும்   பதினோரு  ஆண், இருபத்தாறு  பெண்  வயோதிகர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு உடை தங்குமிடம், மருத்துவ சிகிச்சைகளை மருத்துவமனை இலவசமாகச் செய்து வருகிறது. "முதுமைக்கு முழு மரியாதை' தந்து வரும் இந்த மருத்துவ நிலையம், மதுரை விளாச்சேரி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த  மருத்துவமனையுடன்  சில மலைக்கவைக்கும்  செய்திகளும் உண்டு. அவற்றை மருத்துவமனையை நிர்வகித்து வரும் டாக்டர் ஆர். பாலகுருசாமி கூறுகிறார்: 

  ""இந்த மருத்துவமனையில்   ஏழு மருத்துவர்கள்   சேவை  புரிகிறார்கள்.  இந்த ஏழு மருத்துவர்களும்  வெவ்வேறு மருத்துவ நிலையங்களில்  பணி புரிபவர்கள். சேவை மனப்பான்மையில் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் முதியோர் மறுவாழ்வு மையத்திற்கு வந்து மருத்துவ  ஆலோசனைகள் சிகிச்சைகள் நல்கி வருகின்றனர்.'' 

  "தொடக்கத்தில்  சேவை மனப்பான்மையுடன்  நானும் உடன் மருத்துவம் படித்த அமுதநிலவன், சபரி மணிகண்டன் சேர்ந்து "முதியோர் மறுவாழ்வு மையம்' தொடங்குவது குறித்து  விவாதித்தோம்.  எங்கள் முயற்சியில்  டாக்டர்களான வித்யா மஞ்சுநாத், வெங்கடேஷ், சதீஷ், பிரபுராம், நிரஞ்சன் இணைந்து கொண்டனர்.  நாங்கள் அனைவரும்  அப்போதுதான்  டாக்டர்  தொழிலைத் தொடங்கியிருந்தோம்.  முதியோர்  மறுவாழ்வு மையம் தொடங்க   வாடகைக்கு கட்டடம் கிடைக்க வில்லை.

  "முதியவர்களுக்கு  மறுவாழ்வு  மையம்'   என்று சொல்கிறீர்கள்... பலரும் இயற்கை அடைய வாய்ப்பு உள்ளது. அடிக்கடி மரணம்  நடக்கும் - கட்டடத்தை பிறகு   யாரும் வாங்க மாட்டார்கள்.  வாடகைக்கும் எடுக்க மாட்டார்கள்''  என்று சொல்லி  யாரும்  வீட்டை, கட்டடத்தை வாடகைக்கு கொடுக்க முன்வரவில்லை. கடைசியில்   மதுரை நகரத்திலிருந்து  ஒதுங்கி இருந்த கடச்சனேந்தலில் பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுக் கிடந்த வீட்டை வாடகைக்கு எடுத்தோம். பாழடைந்த வீட்டினை, புதர்கள் மண்டிக்கிடந்த சுற்றுப்புறத்தை எங்கள் செலவில்  புதுப்பித்தோம். சாலைகளில் தெருக்களில்  கவனிக்க யாருமின்றி திரியும் நோயுடன் அல்லாடும், முதியோர்களை காவல்துறையின் அனுமதியுடன் சேர்த்துக் கொண்டோம். வாடகை, நிர்வாக செலவு, செவிலியர்களுக்கு  சம்பளம் என்று  செலவுகள்  நீண்டன .  அவற்றை நாங்கள் ஏழு பேரும் பகிர்ந்து கொண்டோம்.

  பொருளாதாரப்  பற்றாக் குறையால் மையத்தை விரிவாக்கம் செய்ய முடியவில்லை. அந்த சூழ்நிலையில் எங்கள்  மையம் குறித்த  செய்தி  ஆங்கில நாளிதழ் ஒன்றில்   வெளியானது.  எங்களின்  சேவைக்காக  பலரும் பாராட்டினர்.  உதவி செய்வதாகச் சொன்னார்கள். சில தினங்களில் ஜனார்த்தனன்  என்பவர் என்னை அழைத்தார்.   அவர் சொன்ன  வார்த்தைகள் என்னைச்  சிலிர்க்க வைத்தன. அவரது  வார்த்தைகளுக்கு முன்  எங்களது சேவை சாதாரணமாக தோன்றியது.

  "விளாச்சேரியில்  எங்களுக்கு சொந்தமான  இருபத்தேழு  சென்ட்  நிலத்தை உங்கள்  மையத்திற்கு அன்பளிப்பு செய்கிறோம்'  என்றார். சொத்திற்காக பந்தங்கள் பகையாக  மாறும் இன்றைய காலகட்டத்தில்  பல லட்சங்கள் மதிப்புள்ள  மனையை அன்பளிப்பு செய்ய  யாருக்கு மனம் வரும்.  நிலம் அன்பளிப்பாகக் கிடைத்தாலும்  பத்திரம் பதிவு செய்ய  குறைந்தது ஒன்றரை லட்சம் தேவைப்பட்டது.  அத்தனை பணம் எங்களிடத்தில் இல்லை. எங்களுக்கு என்ன    செய்வதென்று   தெரியவில்லை.

  எங்களிடமிருந்து  தகவல் ஏதும் வராததால்  சில  நாட்கள் கழித்து ஜனார்த்தன் மனைவி  ஜலஜா  தொடர்பு கொண்டு, ""நிலத்தை நாங்க தானமாகத் தரத் யாராக   இருக்கிறோம்...  உங்களிடமிருந்து  எந்தத் தகவலும் இல்லையே..'' என்றார். "பத்திரம் பதிவு செய்ய  எங்களிடம் பணம் இல்லை  அதனால்தான் எங்களால் எடுக்க முடியவில்லை' என்று நிலைமையை விளக்கினேன். "இவ்வளவுதானா... நாங்களே  பத்திர செலவும் செய்கிறோம்... தான பத்திரத்துக்கு ஏற்பாடு செய்கிறோம்... கவலைப்படாதீர்கள்'' என்று எங்களது வயிற்றில் பால் வார்த்தார்.  

  பத்திர  பதிவின்  எல்லா வேலைகளையும்  ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினர் செய்தார்கள்.  நிலம் இலவசமாகக் கிடைத்தாலும் கட்டடம்  கட்ட வேண்டுமே... 

  ஜனார்த்தனன் - ஜலஜா  கட்டடம் கட்டவும்  நிதி கொடுத்து உதவினார்கள். அத்துடன்  நின்றுவிடவில்லை.   அவர்களின்  உறவினர்களைத்  தொடர்பு கொண்டு கணிசமான அளவில்  நிதியும்  சேகரித்துத்  தந்தனர்.   நண்பர் டாக்டர் அமுத நிலவன்  தனது  தாயார் நேத்ராவதி  நினைவாக  கட்டட  நிதி அளித்தார்.  எங்கள் சேவைகளைத்  தெரிந்து கொண்ட பலரும்  நிதியுதவிகள் செய்தனர். குறிப்பாக  மதுரை அரவிந்த்  கண் மருத்துவமனை  நிர்வாகிகள் இங்கே வந்து  கள ஆய்வு செய்து    நிதி உதவி செய்தனர்.  ஜனார்த்தனன்-ஜலஜா  தம்பதியினர்  ஆண்டிற்கு  ஒரு  லட்சத்து  இருபதாயிரம் ரூபாய் நன்கொடை தந்து வருகிறார்கள். மதுரையைச் சேர்ந்த  ஐஏஎஸ் அதிகாரி  ராஜ மாணிக்கம்  உதவி செய்து வருகிறார்.   மனிதம்  இன்னும்  உயிருடன் இருக்கிறது  என்பதற்கு  இதுவெல்லாம் சான்று'' என்கிறார் டாக்டர் பாலகுருசாமி.ஜலஜா  தொடர்கிறார்...

  ""கணவர்  பணி நிறைவு செய்ததும்  முதியோர்களுக்கான  ஓய்வுவிடுதி ஒன்றினை  சொந்தக் கட்டடத்தில்  தொடங்கினோம். லாப நோக்கத்திற்காகத் தொடங்காமல்  சேவை மனப்பான்மையுடன் தொடங்கினோம். எல்லா செலவுகளும்  எங்களுடையது. இதுதவிர , "வைபவ்  சேவா' அறக்கட்டளை ஒன்றினை  ஏற்படுத்தி    ஏழை  எளியவர்களின்  குழந்தைகளுக்கு  படிக்க   நிதி உதவியும் செய்து  வருகிறோம். சில மாதங்களில்,  வேலைப்  பளு கூடியதினால் கணவரால் தனியாக  விடுதியை நிர்வகிக்க  முடியாது  என்ற நிலை   வந்த போதும்,  ஓய்வு  விடுதியை  மூடவில்லை. கணவரின்  சேவைக்கு உதவியாக இருக்க  நான்  விருப்ப ஓய்வு  எடுத்தேன். பல ஆண்டுகள்  ஓய்வு விடுதி  நடத்தி வந்த  எனக்கும்  காலில் பிரச்னை ஏற்பட்டது. கணவருக்கும் கண்களில் பார்வை குறையத் தொடங்கியது. அதனால் முதியோர் விடுதியை நிறுத்த முடிவு செய்தோம்.  அதற்காக  மிகவும் வேதனைப் பட்டோம். விடுதியில் இருந்தவர்ளுக்கு  பிரியாவிடை சொன்ன போது அழுதே விட்டோம். முதியவர்களுக்கு சேவை செய்ய கொடுத்து வைக்கலையே என்று பரிதவித்தோம் அப்போதுதான் பாலகுருசாமி தன் நண்பர்களுடன் நடத்திவரும் "முதியோர் மையம்' குறித்து தெரிய வந்தது. அவர்கள் மூலமாக முதியவர்களுக்கு உதவ  ஆண்டவன் இன்னொரு  வழி காட்டியிருக்கிறான் என்று  முடிவுக்கு  வந்தோம் . முதுமையில் இயலாமை   ஒவ்வொரு நபருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு சுமை.  கவனிக்க  யாரும் இல்லாத வயோதிகர்களின்  நிலைமை   மிகவும்  பரிதாபமானது.  அந்த  சுமையைப் பகிர்ந்து  கொண்டு   முதுமையில்  நோயினால் வரும் வலி உபாதைகளைக் குறைத்து சந்தோஷமாக  ஆடிப்  பாடி  வாழ வைக்க   முடியாவிட்டாலும் அமைதியாக  மன சாந்தியுடன்  வாழ  வகை செய்துவரும் அமைப்புடன்தான் நாங்களும் இணைந்திருக்கிறோம்  என்பதில்  எங்களுக்கு  அளவற்ற திருப்தி'' என்கிறார்  ஜலஜா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai