தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்!

ராஜம் என்கிற  இயற்பெயரைக் கொண்ட  ராஜம்  கிருஷ்ணன்  திருச்சி மாவட்டம்  முசிறியில்  1925-ஆம்  ஆண்டு  பிறந்தார்.
தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்!

ராஜம்  கிருஷ்ணன் (1925- 2014)

ராஜம் என்கிற இயற்பெயரைக் கொண்ட ராஜம் கிருஷ்ணன்  திருச்சி மாவட்டம் முசிறியில்  1925-ஆம்  ஆண்டு  பிறந்தார்.

தமிழில் சிறுகதைகள்  எழுத  ஆரம்பித்த போது  கணவரின்  பெயரையும் சேர்த்து ராஜம் கிருஷ்ணன் என எழுதினார். அவருக்கு முறையான பள்ளிப்படிப்பு,  கல்லூரிப் படிப்பு  அமையவில்லை.

ராஜம்  கிருஷ்ணன்  தமிழிலக்கியத்தின்  முற்போக்குவாதி, பெண்ணியவாதி எனக் கொண்டாடப்படுபவர். விவசாயிகள், ஏழைகள்,  உப்பளத் தொழிலாளிகள், காட்டுக் கொள்ளையர்கள்,  பெண் தொழிலாளர்கள்  என பலதரப்பட்டவர்களைப்  பற்றி  எழுதினார்.  பெண்ணியக்  கட்டுரைகளை முனைப்புடன்  எழுதினார்.

ராஜம் கிருஷ்ணன்  40 நாவல்களும்  100-க்கு  மேற்பட்ட  சிறுகதைகளும்,  20 நாடகங்களும்,  2 வாழ்க்கை  வரலாற்று நூல்களும்  எழுதியுள்ளார்.  1950-இல் ‘NEWYORK HERALD  TRIBUNE'  நடத்திய  தமிழ்ச்  சிறுகதைப் போட்டியில்  பரிசு பெற்றவர்.

ராஜம்  கிருஷ்ணணின் முதல்  நாவல் "பெண்குரல்'  1953-  ஆம்  ஆண்டு "கலைமகளில்'  வெளிவந்தது.  அப்போது  அவரது  வயது 28.

"குறிஞ்சித்தேன்', "வளைக்கரம்', "வேருக்குநீர்'  ஆகிய  நாவல்கள் பிரபலமானவை.  1958-இல்  "மலர்கள்'  நாவல்  ஆனந்த விகடன்  பரிசுபெற்றது.

களப்பணியாற்றி  தமிழில்  நாவல்கள்  எழுதிய  முன்னோடியான  ராஜம் கிருஷ்ணன்,  களப்பணியின்போது  பல இன்னல்களை  அனுபவித்துள்ளார். 

1973-ஆம் ஆண்டு  "வேருக்கு நீர்'  நாவல்  "சாகித்ய  அகாதெமி'  விருது பெற்றது. 19-20-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இந்தியப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை,  வாழ்க்கைக் குறிப்புகளோடு தொகுத்து வெளியிட்டார். காலந்தோறும்  "பெண்'  கட்டுரைத் தொகுப்பு  மிகவும்  பிரபலமானது.

தமிழக "திரு.வி.க.' விருது,  "சோவியத் நாடு' விருது,  "சரஸ்வதி சம்மான்'  விருது எனப் பல விருதுகளைப்  பெற்றுள்ளார்.

2009-ஆம் ஆண்டு ராஜம் கிருஷ்ணன் வாழும்போதே அவரது படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டது.

உடல்  நலிவுற்று  2014- ஆம் ஆண்டு  தனது  89-ஆவது  வயதில்  சென்னையில் காலமானார்.

ஹெப்சிபா  ஜேசுதாசன் ( 1925-  2012)

குமரி மாவட்டம்  தக்கலையைச் சேர்ந்த  புலிப்புனம்  ஹெப்சிபாவின்  சொந்த ஊர்.  அவரது தந்தை  பர்மாவில்  மர வியாபாரம்  செய்து வந்தார். குடும்பம் பர்மாவில் இருந்தது.  1925- ஆம் ஆண்டு  ஹெப்சிபா பர்மாவில்  பிறந்தார்.

இரண்டாம்  உலகப் போர்  முடிந்ததும்,  குடும்பம்  நாகர்கோவிலுக்கு  புலம் பெயர்ந்தது.  நாகர்கோவில் பள்ளியில்  படித்து,  கல்லூரியில்  முதுகலைப் பட்டம் பெற்று  திருவனந்தபுரம்  பல்கலைக்கழகக் கல்லூரியில்  தமிழ்ப் பேராசிரியராக  பணியாற்றினார்.  ஆங்கிலப்  பேராசிரியரான  ஜேசுதாசனை திருமணம்  செய்து கொண்டார்.  கணவரின்  பெயரைச் சேர்த்து  ஹெப்சிபா ஜேசுதாசன்  என  பெயரை  வைத்துக் கொண்டு 1964-  ஆம்  ஆண்டு  தனது முதல் நாவல்  "புத்தம் வீடு' எழுதினார்.  அப்போது  அவரது  வயது 39. முதல் நாவலே  அவருக்கு  இலக்கிய  அங்கீகாரத்தைத் தந்தது.  அதன்பின்  அவர் மூன்று நாவல்கள்  எழுதினார்.  "டாக்டர்  செல்லப்பா' ( 1967) ,  "அநாதை' ( 1978), "மா-னீ'  (1982).

"புத்தம் வீடு' நாவல் மலையாளத்திலும், ஆங்கிலத்தில்  “LIZZY'S LEGACY' என்றும்  மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஹெப்சிபா  ஜேசுதாசன் பாரதியாரின்  "குயில் பாட்டை'  ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்துள்ளார்.  கவிதை,  கட்டுரை,  சிறுவர்  இலக்கியம், மொழி பெயர்ப்பு என பலதுறைகளிலும்  எழுதியுள்ளார்.

கணவர்  ஜேசுதாசனோடு சேர்ந்து  “COUNTDOWN FROM SOLOMON (or) THE TAMILSDOWN  THE AGES THROUGH THIER  LITERATURE'  என்ற   தமிழ்  இலக்கிய வரலாற்று  நூலை  4 பாகங்களாக  4 ஆண்டுகளில்  எழுதியுள்ளார் ( 1999 - 2002). கணவர் ஜேசுதாசன் 2002  -ஆம் ஆண்டு  இறந்த  பின் கிறிஸ்துவ  மத சேவையில் ஈடுபட்ட  ஹெப்சிபா ஜேசுதாசன்  2012- ஆம்  ஆண்டு  புலிப்புனம்  ஊரில் தனது 87-ஆவது  வயதில்  காலமானார்.

ஜி. நாகராஜன் ( 1929- 1981)

1929 -ஆம் ஆண்டு  மதுரையில்  பிராமண குடும்பத்தில்  ஏழாவது  குழந்தையாக கணேச அய்யர்  நாகராஜன் என்ற ஜி. நாகராஜன்  பிறந்தார்.  தந்தை  கணேச  அய்யர் வழக்கறிஞர்.

மதுரை, பழனி ஆகிய ஊர்களில் பள்ளியிறுதிப் படிப்பை  முடித்த ஜி.நாகராஜன்  புகுமுக வகுப்பை மதுரை கல்லூரியில் சேர்ந்து பின் இளங்கலை,  முதுகலை  பட்டங்களைப் பெற்றார்.  கணிதத்தில்  நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று  அறிவியல்  மேதை  சி.வி. ராமனிடம்  தங்கப் பதக்கம் பெற்றார்.

மதுரை  அமெரிக்க  கல்லூரியில் பணிபுரிந்த  அவரை சிறந்த  ஆசிரியராக தேர்ந்தெடுத்து அமெரிக்காவுக்கு  ஆராய்ச்சி  படிப்பிற்காக  அனுப்ப தீர்மானித்தபோது  ஜி.நாகராஜன்  தன்னை இடதுசாரி   கட்சி இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டதால்  வேலையைத் துறந்தார்.  அதன்பின்  பல பயிற்சிக் கல்லூரிகளிலேயே  வேலை பார்த்தார்.

1950- ஆம்  ஆண்டு முதல்  சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார்.  1957- ஆம் ஆண்டு  "ஜனசக்தி'யில்  "அணுயுகம்'  என்ற கதை  வெளியானது.

ஒதுக்கித் தள்ளிய  பாலியல் தொழிலாளர்களையும், அவர்களின்  தரகர்கள் பற்றியும்  ஜி.நாகராஜன்ஆபாசமின்றி  கதைகள் எழுதினார். அவர் எழுதிய "குறத்திமுடுக்கு' என்ற  குறுநாவலை  அவரும்,  அவரது நண்பர்களுமாகச் சேர்த்து  நடத்திய  பித்தன்  பட்டறை  பதிப்பகம்  மூலம்  வெளியிட்டனர்.

"நாளை  மற்றும்  ஒரு நாளே' நாவல்  ஜி.நாகராஜனின்  முதல் நாவல்  மட்டுமல்ல அவரது  ஒரே நாவலும்  கூட.  1974- ஆம்  ஆண்டு வெளிவந்தது.  அப்போது அவரது வயது - 45,  நாவலை  "ஞானரதம்'  பத்திரிகை  வெளியிட்டது. முதல் நாவலிலேயே  அவரொரு சிறந்த  நாவலாசிரியராக  அங்கீகரிக்கப்பட்டார்.

"கண்டதும் கேட்டதும்'  சிறுகதைத் தொகுப்பும்,  “WITH  FATE  CONSPIRES'  என்ற ஆங்கில நாவலும், மாணவர்களுக்கென்று  "காந்தியின்  வாழ்க்கை  வரலாறு' நூலும்  எழுதிய  ஜி.நாகராஜன்  மதுரை  ராஜாஜி  மருத்துவமனையில்  1981- ஆம் ஆண்டு  தனது  52-ஆவது  வயதில்  காலமானார். 

ஆர்.சூடாமணி ( 1931- 2010)

1931- ஆம் ஆண்டு   சென்னையில்  பிறந்த எழுத்தாளர்  சூடாமணியின்  தந்தை ராகவன். தாய் கனகவல்லி. வசதியான  குடும்பத்தில்  பிறந்த சூடாமணி சிறுவயதில்  ஊனமுற்றதால்  பள்ளிக்குச்  செல்லவில்லை.  வீட்டிலிருந்தபடியே தமிழும்,  ஆங்கிலமும் படித்து புலமை பெற்றார். கலையிலும், இலக்கியத்திலும் ஆர்வம் இருந்ததால்  தமிழிலும்,  ஆங்கிலத்திலும் சிறுகதைகள், நாவல்கள்  எழுத ஆரம்பித்தார்.  ஆர். சூடாமணிக்கு  ஓவியம் வரையவும்  தெரியும்.

தமிழில்  எழுதும்போது  சூடாமணி  என்றும்  சில நேரங்களில்  ஆங்கிலத்தில் எழுதும்போது  சூடாமணி ராகவன்  என்றும் எழுதினார்.

வீட்டிற்குள்ளேயே  இருந்ததால்  உள்மனமும்,  உளவியிலும்,  யதார்த்தமும் அடிப்படையாகக் கொண்டு எழுதினார்.  ஆழ்ந்த  மனரீதியானது  அவரது     எழுத்துலகம்.

"காவேரி'  அவரது முதல் சிறுகதை,  1957-இல்  அதை எழுதினார்.  அதன்பின் அவர் சுமார்  500  கதைகள்  எழுதியுள்ளார்.

சூடாமணியின் முதல் நாவல்  "மனதுக்குள்  இனியவள்', 1957-ஆம் ஆண்டு கலைமகளில் வெளிவந்தது. அப்போது அவரது  வயது  26. 1960-இல்  அது புத்தகமாக வெளியிடப்பட்டது. 1965-இல் வெளிவந்த  அவரது "புன்னகை பூங்கொத்து' நாவல் பிரபலமானது. குறுநாவல்கள் எழுதியுள்ள சூடாமணி "இருவர் கண்டனர்' என்ற நாடகமும் எழுதியுள்ளார். நாடகம் பலமுறை மேடையேறியுள்ளது.

1959-இல்  எழுதப்பட்ட "பிஞ்சு முகம்' குறுநாவலும், 1974-இல் "இரவுச்சுடர்' குறுநாவலும் பிரபலமானது, "இரவுச் சுடர்', "யாமினி' என்ற பெயரில்  ஆங்கிலத்தில்  மொழி பெயர்க்கப்பட்டது.

"அழகின்  எளிமை'  சூடாமணியின் வாழ்க்கையைச் சொல்லும்  ஆவணப் படம்.
ஆர். சூடாமணியின் சிறுகதைகள் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்திய மொழிக் கதைகளை  சூடாமணி தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ்  வளர்ச்சிக் கழகம்,  கலைஞர்  கருணாநிதி விருது  முதலிய விருதுகளைப் பெற்றவர்.

2010 -ஆம்  ஆண்டு  தனது  79-ஆவது  வயதில்  சென்னையில்  காலமானார்.

சு.சமுத்திரம் ( 1941 - 2003)

திருநெல்வேலி மாவட்டம்  கடையம் திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா  சமுத்திரம் என்கிற  சு.சமுத்திரம்  1941-ஆம்  ஆண்டு  பிறந்தார். தந்தை  சுப்பையா,  தாய் சின்னத்தாய்  அம்மாள்.

பாளையங்கோட்டை  கல்லூரியில்  இளங்கலைபட்டம் பெற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ்ச்சேவை  பிரிவில்  பணிபுரிந்தார்.

தனது  33-ஆம்  வயது முதல்  எழுதத் தொடங்கிய  சு.சமுத்திரம் ஒடுக்கப்பட்டவர்களின்  குரலாக  கதைகள்,  நாவல்கள்,  கட்டுரைகள், நாடகங்கள்  எழுதினார்.  ஆரம்ப காலத்தில்  "செம்மலர்',  "தாமரை'  இதழ்களில்  எழுதினார்.  பின் பத்திரிகையில்  எழுதி  புகழ் பெற்றார்.

1977- ஆம் ஆண்டு  எழுதிய  "ஒரு கோட்டுக்கு வெளியே' நாவல் சு. சமுத்திரத்தின்  முதல் நாவல்.  அப்போது அவரது  வயது  36. 15 நாவல்கள் எழுதியுள்ளார்.  "வேரில்  பழுத்த  பலா',  "வாடாமல்லி',  "காகித உறவுகள்', "வெளிச்சத்தை  நோக்கி'  ஆகிய  நாவல்கள்  பிரபலமானவை.  8 குறுநாவல்களும்,  2 கட்டுரை நூல்களும்,  1 நாடகமும், 20   தொகுதிகளில்  சுமார் 500 சிறுகதைகளும்  எழுதியுள்ளார்.

1990- ஆம் ஆண்டு  "வேரில்  பழுத்த பலா'  நாவலுக்கு  சாகித்ய  அகாதெமி விருது கிடைத்தது.  தஞ்சை   தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்  "தமிழன்னை' விருது,  "கலைஞர்' விருது  ஆகியவற்றைப்  பெற்றவர்.

01.04.2003 -அன்று  சென்னையில்  சாலை விபத்தொன்றில்  தனது 62-ஆவது வயதில் காலமானார்.

-  அடுத்த இதழில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com