திரையுலகில் புதிய அலையை  ஏற்படுத்திய சாதனையாளர் மிருணாள்  சென்!

சர்வதேச  திரையுலகில்  பிரபலமான சத்யஜித்ரேவுக்கு அடுத்து,  சர்வதேச அளவில் இந்தி திரைப்படங்களுக்கென  தனி இடம்  பெற்றுதந்த  இயக்குநர் மிருணாள் சென்.  
திரையுலகில் புதிய அலையை  ஏற்படுத்திய சாதனையாளர் மிருணாள்  சென்!

சர்வதேச  திரையுலகில்  பிரபலமான சத்யஜித்ரேவுக்கு அடுத்து,  சர்வதேச அளவில் இந்தி திரைப்படங்களுக்கென  தனி இடம்  பெற்றுதந்த  இயக்குநர் மிருணாள் சென்.  அவர், தனது  95-ஆவது  வயதில் டிசம்பர் 30- ஆம் தேதியன்று கொல்கத்தாவில்  காலமானார்.

47- ஆண்டுகளில்  வங்க மொழியில்  மட்டுமின்றி இந்தி,  தெலுங்கு,  ஒடியா மொழிகளிலும், 10 ஆவண  படங்கள் உள்ளபட 45 படங்களை இயக்கிய மிருணாள்  சென், சொந்தமாக  5 படங்களையும் தயாரித்துள்ளார்.  இவரது வாழ்நாளில்  7  தேசிய  விருதுகள்  உள்பட  பல சர்வதேச  விருதுகளையும் சேர்த்து  24  விருதுகள்  பெற்றுள்ளார்.  1955- ஆம்  ஆண்டு  உத்தம் குமார் கதாநாயகனாக  நடித்து இயக்கிய  "ராத் போரே'  இவரது முதல்  படமாகும். 2002-ஆம்  நந்திதாஸ்  நடித்த "அமர் பூபன்'  இவர் இயக்கிய  கடைசி படமாகும். இவரது  இயக்கத்தில்  சுசித்ரா சென்,   கானன் தேவி, உத்பால் தத்,  ஓம்புரி, சப்னா ஆஷ்மி, நஸ்ருதீன் ஷா,  ஸ்மிதா  பாட்டீல், மிதுன் சக்ரவர்த்தி (அறிமுகம்) போன்றவர்களும்  நடித்துள்ளனர். 

1923- ஆம் ஆண்டு  மே 14-ஆம் தேதி   தற்போதைய  பங்களாதேஷ், பரித்பூரில் பிறந்த மிருணாள்  சென்,  16-ஆவது  வயதில்  கொல்கத்தாவில்  குடியேறினார். அப்போது  கம்யூனிச  கொள்கைகளில்  ஈடுபாடு  ஏற்பட்டதால், அவர்களது மேடை  நாடகங்களில்  நடிக்கத் தொடங்கினார்.  சிறுவயது முதலே  சினிமா மீது ஆர்வமிருந்தாலும்,  பணவசதி  இல்லாததால்  மருத்துவ   பிரதிநிதியாக வேலை  பார்த்து வந்தார்.  ஒருநாள்  வெறுப்படைந்து  ஜான்சியில் தான் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பியவர், கண்ணாடி முன்  வெற்றுடம்புடன் நின்றபடி, இந்த முகத்தை வைத்துக் கொண்டு மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்ப்பதைவிட,  தன்னுடைய சினிமா கனவை  எப்படியும்  நிறைவேற்ற வேண்டுமென  உறுதி எடுத்துக் கொண்டாராம், அடுத்து இரு நாட்களில் வேலைக்கு  ராஜிநாமா  கொடுத்த  சென்,  உத்தம் குமார்  கதாநாயாகனாக நடிக்க  "ராத் போரே'  (1955) என்ற  படத்தை தயாரித்து  வெளியிட்டார்.

படம் படு தோல்வியடைந்தது. அதில் நடித்த  உத்தம்குமாருக்கும்  அடுத்து வந்த படங்களில்  நடிக்கும் வாய்ப்பையும்  இழக்கும்  நிலை ஏற்பட்டது.  பணப் பிரச்னை வேறு.  என்ன செய்வதென்று  தெரியாமல்  நடைபாதையில்  சென்று கொண்டிருந்த  சென்'னை பார்த்த,  பாடகர் ஹேமந்த்  முகோபாத்யாய், ஆறுதல்  கூறி  அடுத்து  "நீல்  ஆகாஷேர்  நீச்சே'  (1958) என்ற படத்தை  இயக்க உதவி செய்தார்.  இவர் அடுத்து  இயக்கிய  "பைஷே  ஷ்ரவான்'  (1960)  லண்டன் மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்ட  இவரது  முதல் படம் இது.

1969- ஆம் ஆண்டு  இவரது இயக்கத்தில்  வெளியான  "புவன் ஷோம்'  தேசிய மற்றும் சர்வதேச  அளவில் பாராட்டைப்  பெற்றாலும்,    சத்யஜித்ரே  உள்பட பலரது  கடும் விமர்சனத்திற்குள்ளாயிற்று.சத்யஜித்ரே  இயக்கிய  "ஆகாஷ் குசும்'  படம்  தொடர்பாக ரேவுக்கும், சென்னுக்கும்  இடையே,  இரண்டு மாதம் பத்திரிகைகளில்  ஒருவருக்கொருவர் தாக்கி  விமர்சித்ததும் உண்டு. இருப்பினும்  ரே மீது  சென்  கடைசிவரை, நல்லமதிப்பும்,  மரியாதையும்  வைத்திருந்தார்.

சத்யஜித்ரேவுக்கு பிறகு சர்வதேச  திரையரங்கில்  இந்திய படங்களுக்கு  தனி சிறப்பைப் பெற்று தந்த  சென்,  தனது  யதார்த்தத்தை  அரசியல்,  சமூக படங்களில்  நடுத்தர  மக்களின்  குடும்ப பிரச்னைகளோடு, நிகழ்கால  சமூக பிரச்னைகளையும் சேர்த்து  சொன்னதால்  பல படங்கள் இந்திய  சினிமாவில் முக்கியத்துவம் பெற்றன.   வங்க  மொழியுடன்  இந்தி,  தெலுங்கு,  ஒடியா மொழி படங்களையும்  இயக்கிய  போது,  அந்த மொழிகள் பற்றி தெரியாமல் எப்படி இயக்குகிறீர்கள் என்று  இவரிடம்  கேட்டார்களாம்.  ""மொழி வேறு என்றாலும்  விவசாயிகள், நாட்டுப் பிரச்னைகள்  எல்லாம்  ஒன்று தானே?  இதில் என்ன வேறுபாடு  இருக்கிறது?''  என்று  கேட்டாராம்.  இவர் தெலுங்கில் இயக்கிய  "ஒக்க  ஊரி கதா' 

( 1977) தேசிய  விருது பெற்றது. சிறந்த  இயக்குநருக்காக  4 முறை  விருது பெற்ற இவர்,  பத்மபூஷண்,  தாதா சாகேப்  விருது உள்பட  சர்வதேச  அளவிலும்  பல விருதுகளை  பெற்றுள்ளார்.

"புவன் ஷோம்'  படத்தை   பற்றி  ஒரு சுவையான தகவலும்  உண்டு.  குஜராத், பவநகரில் படப்பிடிப்பை  நடத்திமுடித்த  மிருணாள்சென்,  படத்தை  எடிட்டிங்   செய்வதற்காக  மும்பை வந்தார்.  ஒருநாள்  தனது  நண்பர்  கே. ஏ.  அப்பாûஸ சந்திக்க  சென்றிருந்தபோது, அவர்  "சாத் இந்துஸ்தான்' படத்திற்காக  நடிகர் தேர்வு  நடத்திக் கொண்டிருந்தார்.  அப்போது  அவர் ,  ஒரு கூட்டத்தில் பின்னணி  பேச நல்லகுரல் வளம்  கொண்ட  புதுமுகம் தேவைப்படுவதாக கூறினார்.  அந்தநேரம்  அங்கு  கூட்டத்தில்  இருந்த உயரமான  வாலிபர்  ஒருவர் எழுந்து,  ""தனக்கு வங்க மொழி  தெரியும்''  என்று கூற,  அவரை  பார்த்த  சென், ""நீ பேசும்  வங்க மொழி  உச்சரிப்பு  சரியில்லை என்றாலும்,  குரல் நன்றாக இருக்கிறது.  இந்தி உச்சரிப்புக்கு சரியாக இருக்கும்'' என்று கூறி,  அவருக்கு பின்னணி  குரல் கொடுக்க  வாய்ப்பளித்தாராம். வேலை முடிந்தவுடன்  அந்த வாலிபருக்கு  சென்'னால்  அதிக  பணம் கொடுக்க முடியவில்லை, அந்த வாலிபரோ, ""நான் பணத்துக்காக  வேலை செய்யவில்லை''  என்று கூறினாலும், சென் தன் கையிலிருந்த  பணத்தை அவரிடம்  கொடுத்தாராம்.  அப்போது   அந்த வாலிபர்,  ""படத்தில்  என்னுடைய பெயரை  போடுவீர்களா?''   என்று கேட்டாராம்.  

""நிச்சயமாக''  என்று  சென் சொல்ல,  ""அப்படியானால்  என்னுடைய  முழு பெயரை  அமிதாப் பச்சன்  என்று  போடாமல்  வெறும்  அமிதாப்''  என்று போடும்படி  கேட்டுக் கொண்டாராம் அந்த வாலிபர்.

அப்போது  சினிமா  வாய்ப்புக்காக  முயற்சி மேற்கொண்டிருந்த அமிதாப்பச்சன்,  மிருணாள் சென்  படத்திற்காக  பின்னணி குரல் கொடுத்ததோடு சரி, அவரது  படத்தில்  நடித்ததில்லை. 

பின்னர்  புகழ் உச்சியில்  இருந்தபோது  பலமுறை  சென் படத்தில் நடிக்க அமிதாப்  கேட்ட போதெல்லாம்,  ""உங்கள்  தோற்றத்திற்கேற்ப  பாத்திரம் அமைந்தால் நிச்சயம்   வாய்ப்பளிக்கிறேன்''  என்று கூறி  வந்தாராம்.  

ஒருமுறை  பேட்டியொன்றில்  இச்சம்பவத்தை பற்றி அமிதாப் குறிப்பிட்டபோது, பின்னணி  குரல் கொடுத்ததற்காக  சென்  தனக்கு  500   ரூபாய் கொடுத்ததாக கூறியிருந்தார். இதுபற்றி  மிருணாள்  சென்னிடம்  கேட்டபோது, ""உண்மைதான்.  நான் அந்த வாலிபருக்கு  கொடுத்தது  300 ரூபாய்தான்.  500 அல்ல. அவருக்கு  நினைவில்லை  போலிருக்கிறது'' என்று  சொன்னாராம்.

கடைசி  படத்திற்குப்  பின் வேறு படங்களை  தயாரிக்கவோ,  இயக்கவோ இல்லை என்றாலும்,  புதிய படைப்பாளிகள்,  இயக்குநர்களிடம்  தொடர்பில் இருந்ததோடு  அவர்களை   பாராட்டியும்,  ஆலோசனைகளை  கூறியும்  வந்தார். இது தவிர  சர்வதேச  நாடுகளில்  நடக்கும்  திரைப்பட விழாக்களில்  நடுவராக இருந்ததும்  உண்டு.  "உலகில்  பிறந்ததற்கான  கடமைகளை செய்ய  தயங்க கூடாது'  என்று கூறுவாரே   தவிர,  திரையுலகிலிருந்து  ஓய்வு  பெற்றதாக ஒருமுறை  கூட  மிருணாள்  சென்  அறிவித்ததில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com