ரசிகர்களைச் சொல்லி குற்றமில்லை

பயணங்களே அற்புதம்! ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் அழுக்குதான் இருக்கும்.
ரசிகர்களைச் சொல்லி குற்றமில்லை

பயணங்களே அற்புதம்! ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் அழுக்குதான் இருக்கும். ஓடுவது சின்ன ஓடையாக இருந்தாலும், அந்தத் தண்ணீர் கண்ணாடியாகி விடும். 

வாழ்க்கையில் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்று விடக் கூடாது என்பது என் தீர்மானம். வெகு நேரம் பயணம் செய்யும் போது, சற்று அலுப்பு வரலாம். ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட, ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல்தான் இருக்க வேண்டும்.  ஏனென்றால், எந்த ஓய்வும் நம்முடைய அடுத்த பயணத்துக்கான ஆயத்தம்தான். பணம், புகழ், காதல், கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே இந்த பயணங்கள் மூலமாகத்தான் கிடைத்தது. ஒளிப்பதிவு பட்டியல் எப்போதுமே தேர்ந்த தேர்வாக இருக்கிறதே என்ற கேள்விக்கு ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் அளித்த பதில் இது. 

ரசனையும், தீவிரமும் இவரது தனி பாணி. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமா முழுமைக்கும் பயணிக்கும் படைப்பாளி. சேரனின் திருமணம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி என அடுத்தடுத்து எதிர்பார்ப்புக்குரிய படங்களில் சுழன்று கொண்டிருக்கிறார்.

ஒளிப்பதிவுக்கான முதல் சுவாரஸ்யம் எதிலிருந்து தொடங்கும்....

திரைக்கதைதான் முதல் சுவராஸ்யம். அதை காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். இத்தனை வருட பயணம், இத்தனை படங்கள் என பயணித்து வந்த போதிலும், ஒளியின் சூட்சுமமே புரியவில்லை. காற்று, ஒளி, தண்ணீர் எல்லாம் ஒரு சேர சேர்ந்தால் விதை துளிர்க்கும். அது போல்தான் அது. "இருள் என்பது குறைந்த ஒளி' என்றார் பாரதி.  ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது.  ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதை பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி.  ஒரு நல்ல திரைக்கதைதான் கேமிராவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், கேமிராமேனுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால்,  உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. 

சேரன், பிரபுசாலமன், வெங்கட்பிரபு என பல இயக்குநர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் போது, தமிழில் தொடர்ந்து பணியாற்றுவதை குறைத்து கொண்டது ஏன்...

நம்பிக்கைக்கு நன்றி. பல மொழிகள் இருந்தாலும், எனக்கான ஒரே மொழி சினிமாதான்.  என் உலகமே அதுதான். ஓர் இருக்கையில் கட்டிப் போட்டாலும், சினிமாதான் மன ஓட்டமாக இருக்கும். அது என் இயல்பு. ஏதோ ஒரு விபத்தில் சினிமா ஒளிப்பதிவு கலைக்கு வந்தவன் அல்ல நான். விரும்பி ஏற்றுக் கொண்டது. என் உயரமும் இதுதான்... என் தாழ்வும் இங்கேதான் என்று தீர்மானித்து வந்தவன். பணியாற்றுவது குறைந்து போனதற்கு காரணம், கதைகள்தான். ஒரு கதை என்னை ஈர்க்க வேண்டும். எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றித் தரிசித்து அப்படி தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா. அப்படியான சினிமாக்கள்தான் என் தேர்வு. சேரனின் பொக்கிஷம் அப்படி அமைந்து வந்ததுதான். என் பயணத்தில் சில தவறான படங்களும் இருப்பதால்தான், என் அனுபவங்கள் பெரிதாகிறது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வருகிறது. சில நேரங்களில் இங்கே என்ன மாதிரியான படங்கள் செய்ய வேண்டும் என்ற குழப்பமும் வரும். அதனால்தான் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை. 

நடிகராகவும் வெளிப்பட்டு இருந்தீங்க... அது குறித்த அடுத்த திட்டம் இருக்கிறதா...

அது பெரும் அனுபவம். சினிமாதான் இலக்கு என்று யோசித்த வயதில், நான் போய் நின்ற இடம் அரசு திரைப்படக் கல்லூரி. அங்கேயிருந்துதான் நம் ஒளிப்பதிவு கலையை தொடங்க வேண்டும் என்று  சென்ற போது, எனக்கு நடிப்பு பயிற்சி வகுப்பில்தான் இடம் கிடைத்தது. இருந்தாலும், அதையும் விரும்பி கற்றேன். பின்னர் வெளியே வந்து, நான் சென்றது ஒளிப்பதிவை கற்றுக் கொள்ள... எப்போதும் ஒளிப்பதிவு, கேமிரா, வெளிச்சம் என்றுதான் மனசுக்குள் அலை அடிக்கும். ஓர் இடைவெளியில் வந்த வாய்ப்புதான் நடிப்பு. வாய்ப்பு தந்த இயக்குநர் மணீஸþக்கு நன்றி. ஆனால், நடிப்பு என்பது எனக்கு இப்போதும் அனுபவமாகத்தான் இருக்கிறது.  அதில் வெற்றி கிடைக்காதது ஒரு வகையில் நல்லதுதான். தோல்விதான் அனுபவங்களை அள்ளித் தந்திருக்கிறது. இன்னும் நல்ல படங்களாக அவை தந்திருக்க வேண்டும். அதற்காக வருத்தப்பட்டு பயன் இல்லை. இனி வருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் பரவாயில்லை. தோல்விகள்தான் இங்கே தத்துவங்களை உருவாக்குகிறது. 

இந்த ஆண்டில் ஆச்சரிய சினிமாக்கள் பல வந்திருக்கின்றன... யாரெல்லாம் கவனம் ஈர்த்தார்கள்...

ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கு ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றி போய் கதை செய்வது மட்டும்தான்.  அதைப் புரிந்து கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். இந்த வருடத்தைப் பொருத்தவரை 96 படம் கவர்ந்திருந்தது. மகேந்திரன் - சண்முகம் என இரு ஒளிப்பதிவாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் பொறுப்பு பிடித்திருந்தது. கலைஞனுடைய கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகனின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவேறும். "மேற்கு தொடர்ச்சி மலை' போன்று நிறைய நல்ல முயற்சிகள் நடந்திருக்கின்றன. அனைவருக்கும் பாராட்டுக்கள். எனக்கு பொதுவாக ஆர்தர் வில்சன்  படங்கள் பிடிக்கும். பாலிவுட்டில் அசோக் மேத்தா  படங்கள் பெரிதும் பாதிக்கும்.  "துருவங்கள் பதினாறு' பிடித்திருந்தது. வியாபாரம் தாண்டி சினிமாவின் உன்னதத்தை புரிந்துக் கொள்வதும் இங்கே முக்கியம். ரசிகர்களை சொல்லி குற்றமில்லை. நாம்தான் தயாராக வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com