பிடித்த பத்து: சங்கீதம் முதல் உலகப் பொருளாதாரம் வரை

மாதா பிதா குரு தெய்வம்: சிறிய வயது முதலே, பெரியோர் சொல் கேட்டு நடப்பது நல்லது என்று சொல்லி வளர்க்கப் பட்டவன். மாதா பிதா குரு தெய்வங்களின் வழியில், அவர்கள் வயதை மதித்து மரியாதை கொடுப்பதும்
பிடித்த பத்து: சங்கீதம் முதல் உலகப் பொருளாதாரம் வரை

மாதா பிதா குரு தெய்வம்: சிறிய வயது முதலே, பெரியோர் சொல் கேட்டு நடப்பது நல்லது என்று சொல்லி வளர்க்கப் பட்டவன். மாதா பிதா குரு தெய்வங்களின் வழியில், அவர்கள் வயதை மதித்து மரியாதை கொடுப்பதும், அவர்கள் சொல் கேட்பதும் எனக்குப் விருப்பம் அதிகம். அது நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பின்பற்றினாலும் பற்றாவிட்டாலும், இன்முகத்தோடு பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வதே அவர்களது மகிழ்ச்சியான ஆசீர்வாத பலத்தினை நமக்கு சேர்த்து பலம் கொடுக்கும். பெரியவர்களின் அனுபவம் நமது வயதை விட பெரியது. 

இசை: எல்லா வகையான சங்கீதங்களையும் பேதமின்றி கேட்பேன்.  ஒவ்வொரு இசையிலும் ஒவ்வொரு ரசிக்கத்தக்க தனித்தன்மை இருக்கும். ஒருவருக்கு அழகானது அடுத்தவருக்குப் பிடித்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் பொதுவாக உள்ள நல்ல தன்மைகளை ஆராய்ந்து அடுத்தவரின் இசையையும் மதித்து தேடுவது எனக்குப் பிடிக்கும் அதிகம். பல நேரங்களில், எப்படி எல்லாம் மேலும் பாடவேண்டும் என்ற எண்ணத்தைத் தருவதைப் போலவே, எப்படியெல்லாம் பாடக்கூடாது என்ற உண்மையையும் சில நேரங்களில் உணர்த்துவது இந்த இசை கேட்கும் அனுபவமே. 

மலைவாச ஸ்தலம்: கொடைக்கானலில் உள்ள எங்களது "பத்மஸ்ரீ' வீட்டில் சிலிர்க்க வைக்கும் பனி மேகமாய் சூழ இருப்பது தனி சுகம். மனம் அமைதி பெறவும், கற்பனைகள் தங்கு தடையின்றி பெருகவும், ஏற்ற சூழலை தருகின்ற மலைவாச ஸ்தலங்கள் இயற்கை நமக்குத் தந்த வரம். சென்னை வாசிகளுக்கு திருமலை திருப்பதி யாத்திரை மலைவாச சுகத்துடன் கூடவே  ஆன்மீக சுகத்தினை தரும்.  அதிலும் குற்றால சாரல், அங்கு வழக்கமான அருவி குளியல் சுகத்தினையும் மிஞ்சக்கூடியது. எனதருமைத் தந்தையார் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் குடும்பத்தோடு குற்றால சீசனுக்கு செல்லும்போதெல்லாம், சாரல் தொடங்கிய உடனேயே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு எங்களை அழைத்துக்கொண்டு ஐந்தருவி சாலையில் சாரலை அனுபவிக்க நடக்கத் தொடங்கிவிடுவார். குஷியான மூட் வந்துவிட்டால் பாடலை முணுமுணுக்கத் தொடங்கி ராகம் பாட ஆரம்பித்துவிடுவார்.  பிறகென்ன..? எங்களுக்கும் பரவச அனுபவம் தான். 

அழுகை: தனிமையில் அழ பிடிக்கும். வெற்றி-தோல்வி, இன்ப துன்பம், ஏற்ற இறக்கங்கள், உயர்வு தாழ்வு நிலைகள், நம் மனதை உருக்குகின்ற பக்தி நிலை, இசை போன்றவை என மனிதனின் அனைத்து உணர்வுகளிலும் ஊடுருவி அழுகை துணைவருவது மனித வாழ்வில் காலத்தின் கட்டாயம். மனிதன் குழந்தையாகப் பிறந்த மறுகணமே மருத்துவக் குழு, உறவினர்கள் என அனைவருமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உயிர்ப்பு அறிகுறி இது தானே! ஆனந்த கண்ணீர், துன்பக் கண்ணீர் என்று எத்தனை வகைப்படுத்தினாலும், உணர்வுகள் அளவை மிஞ்சி தாக்கும்போது, அதற்குத் தகுந்த வடிகாலாக இருந்து, அழவே கூடாது என்ற எண்ணத்துடன் உள்ள ஆண்களின் கண்களில் கூட கண்ணீர் கசிந்து முட்டும் நிலை வரும். பல நேரங்களில் தனிமையில் தன்னிலை உணரும் சமயங்களில், நல்லனவற்றை மகிழ்ந்து ரசிக்கும்போதும் திருத்தப்பட வேண்டிய நடைமுறைகளைப் பற்றி தனிமையில் சிந்திக்கும்போது கண்களில் சுரக்கும் நீர், ஒருவிதமான இதம் தந்து மனச்சுமையை குறைத்து ஏகாந்தம் தருவதை உணர்ந்திருக்கிறேன். 

நடை பயிற்சி: காலை மாலை வேளைகளில், மெரினாவில் நடை பயிற்சி சென்னைவாசிகளுக்கு வரப்பிரசாதம். அதிகாலை "வாக்கிங்' உடலுக்கு பயிற்சி மட்டுமல்ல, நம் மனதையும் தெளிவான சூழலில் வைக்கும். அன்றைய நாள் வேலைகளை தெளிவாக திட்டமிட்டு வரிசைப்படுத்தி செயல்பட அதைவிடச் சிறந்தது இருக்க முடியாது. எல்லா தரத்திலும் வகை வகையான நண்பர்கள் பலரை சந்திக்கவும், அரசியல், சினிமா, சங்கீதம் முதல் உலக பொருளாதாரம் வரை, நாட்டு நடப்பு விஷயங்கள் பற்றிய வெகுஜன மனநிலை அலசல் கருத்துகளை அறிந்து கொள்ளவும் நல்ல தளம். சமீப காலங்களில் ஒரு பேரணி போலவே பெருகிவிட்டது மெரீனா நடைபயிற்சியாளர்களின் கூட்டம். சிரிப்பு பயிற்சி கழகம், யோகாசன குழுமம் உள்ளிட்டவை காலை வேளைகளின் பரவசம். 

உணவு: நல்ல உணவு எதுவாயினும் அளவாக சாப்பிட விரும்புவேன். இறைவன் நமக்கென்று தருகின்ற உணவினை, நமக்காக நெருப்பு அனலில் பாடுபட்டு தயாரிக்கப்படும் உணவை அன்னலட்சுமியை அலட்சியப்படுத்தக்கூடாது என்ற வழிமுறையில் வளர்க்கப்பட்டதால், எனக்கு உணவில் பிடிக்காதது என்பதே இல்லை. கனிந்த அன்போடு தருகின்ற எதையும் பணிவோடு ஏற்பதே என் வழக்கம். இருப்பதை திருப்தியாக ருசித்து சாப்பிட்டுவிட்டு நன்றி பாராட்ட வேண்டும் என்பது எங்கள் வளர்ப்பு முறை. எத்தனை சுவைகள் கண்டாலும், தாய் தந்த சுவையே தனி. எனதருமைத் தாயார்  சுலோச்சனா கோவிந்தராஜன் முழுமையான சைவம். அசைவமே சாப்பிடாதவர் என்றாலும் அவரது கைவண்ணத்தில் எங்களுக்காக அவர் சமைத்துத் தருகின்ற சைவ-அசைவ உணவு வகைகளின் கைப்பக்குவத்திற்கு ஈடு இணை இல்லை. மதுரை நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதெல்லாம் என் சகோதரர் அன்புவேல் வழங்கும் உணவு, திருவாரூர் மைத்துனர் வி.கே.கே.ராமமூர்த்தி வீட்டு சாப்பாடு, மாமியின் மணக்கும் வத்தக்குழம்பு, மிளகு பெருங்காயம் தூக்கலாக மணக்கும் சூடான தக்காளி பருப்பு ரசம், சூடான ஆவி பறக்கும் வெள்ளை மல்லிகை போன்ற அரிசி சாதத்துடன் கிடைத்தால் சொர்க்கபோகம் தான். பொதுவாக, சாப்பிட்டவுடன் திருப்தி என்று சொல்லும் வழக்கத்தை  பின்பற்றி வருகிறேன்.

நட்பு: எளிமையான நட்புகள் எனக்கு அதிகம். அவர்களின் உண்மையான கருத்துகளையும் விமர்சனங்களையும் மதித்துக் கேட்பேன். பல சமயங்களில் நம்மை பற்றிய விமர்சனங்கள் இக்கட்டான தருணங்கள் நண்பர்கள் வாயிலாக வரும்போது, அதில் உள்ள உண்மைகளை சமதளத்தில் ஆய்ந்தால், நட்பின் உண்மைகளும் அவர்களை பற்றியும் நமக்குப் புரியும். நமது பழகு முறையும் நல்ல எண்ணங்களும் உறுதியாக இருந்தால் அதனையொத்த கருத்துள்ளவர்கள் களங்கமில்லாத நண்பர்களாக நம்முடனே என்றும் இருப்பார்கள், மற்றவர்கள் தாமாகவே சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடுவார்கள்.  எனக்கு வாய்த்த பள்ளி-கல்லூரித் தோழர்-தோழியர், பொது வாழ்க்கை நண்பர்கள், இசையுலக நண்பர்கள், உறவுகளான நண்பர்கள் என அனைவரும் அத்தகைய நல்ல துணைகளே! 

முயற்சி: வெற்றியின் முதல் படியான தோல்விகளை, சவால்களைப் பிடிவாதமாக விடாமுயற்சியுடன் சமாளிக்க வேண்டும். தளராத முயற்சியுடன் விடாப்பிடியாக பிடிவாதத்துடன், காரணத்தைக் கண்டுபிடித்து ஜெயிப்பது எனக்குப் விருப்பமான ஒன்று. ஜெயித்தால் மகிழ்ச்சியில் துள்ளுவதும் தோற்றால் தளர்வதும் எனக்கு பழக்கமில்லாத ஒன்று. இசை முயற்சிகளின்போதும் என் மருத்துவ எம்.டி மேற்படிப்பின்போதும் பல தோல்விகளை சந்தித்திருக்கிறேன். காரணமில்லாமல் காரியமில்லை. அது இயல்பான இயற்கையான போட்டிகளால் நியாயமாக இருக்கலாம். அது ஆரோக்கியமான ஒன்று. இசை, மருத்துவம் என இரு துறைகளில் ஈடுபட்ட எனக்கு இது போன்ற அழுத்தங்கள் ஏராளம். நம்மை விரட்ட நினைப்பவர்களே நம்மைப் பாராட்டும் அளவிற்கு நமது பயிற்சிகளையும் முயற்சிகளையும் பண்படுத்தி, தன்மானத்துடனும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமலும் வெற்றிகாண முயலவேண்டும் என்பது என் வழி.

தீர்ப்பு: பல தளங்களில் நிர்வாக பொறுப்புகளில் இருக்கும்போது, பிரச்னைகள் வருவது இயல்பு. அது நம்மிடம் வரும்போது பொறுமையிழந்து கொந்தளிப்புடன் கொண்டு வரப்படும். ஆனால் அதனை தலைமைப் பொறுப்பில் உள்ள நாம் கையாண்டு தீர்வு காணும்போது, பொறுமையோடு வேண்டுதல் வேண்டாமையின்றி, நிதானமாய் சீர் தூக்கிப் பார்த்து உண்மை நிலையை உணர்ந்து செயலாற்ற வேண்டும். ஏதோ அவசரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட கூடாது. பல தருணங்களில் தண்டிப்பதை விட கண்டித்து திருத்துவதே நிரந்தரத் தீர்வை தரும். 

வாழ்த்தவும் வாழ்த்துப் பெறவும்:  திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்று இருப்போருக்கு பல நேரங்களில் இந்த வாழ்த்து பலம் இன்றியமையாதது. வாழ்த்தும் உள்ளம் என்பது எல்லோருக்கும் எளிதாக வந்து விடுவதில்லை. எனது தந்தையார் சீர்காழியார்  அடிக்கடி "வாழ்க! வளர்க!' என்று வாயார வாழ்த்துவார். "வாழ்க வையகம்' என்று எழுதித்தான் ஆட்டோகிராப் கையெழுத்திடுவார். இறைவன் சந்நிதியில் பயபக்தியுடன் தொழும்போதும் "உலகம் வாழ்க! சகல நற்குணங்களையும் கொடுப்பாய், துர்குணங்களைப் போக்குவாய்' என்றுதான் பிரார்த்திப்பார். அவ்வளவு ஏன்? அவரது வாழ்வின் இறுதி மூச்சில் கூட என்னையும் என் தாயாரையும் வாழ்த்திவிட்டு, நிறைவாக "முருகா! முருகா! உலகம் வாழ்க!' எனப் பிரார்த்தித்து இயற்கை எய்தினார். தன் கச்சேரியைக் கூட "ஆறிரு தடந்தோள் வாழ்க!' என்ற திருப்புகழ் வாழ்த்துடன் தான் நிறைவு செய்வார். அவரது அடிச்சுவட்டில் நானும் அந்த வாழ்த்தினை நிறைவாகப் பாடி, "உலகம் வாழ்க - இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க' என்று மூன்று முறை வாழ்த்துப் பாடியே நிகழ்ச்சியை இன்று வரை நிறைவு செய்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com