Enable Javscript for better performance
தமிழ் சினிமா 2018- Dinamani

சுடச்சுட

  

  தமிழ் சினிமா 2018

  By - ஜி. அசோக்  |   Published on : 14th January 2019 12:15 PM  |   அ+அ அ-   |    |  

  sk15

  தமிழ்த் திரையுலகம் பல ஏற்ற இறக்கங்களோடு 2018-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. மொழி மாற்று படங்கள் உள்பட சுமார் 180 படங்கள் வரை கடந்த ஆண்டு வெளியாகியுள்ளது. இவற்றுள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என முத்தரப்பினருக்கும் லாபம் ஈட்டி தந்துள்ளன. சில படங்கள் சுமாரான வெற்றியையும், பல படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளன. 2018-இல் தமிழ் சினிமாத்துறையில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்த பார்வை...

   

  உதவியாளர்களுக்கு சம்பளம்

  ஒவ்வொரு நடிகர் - நடிகையைப் பொறுத்தும் இந்த உதவியாளர்களின் சம்பளம் மாறுபடும். இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய செலவு ஏற்பட்டது. நடிகர் - நடிகைகளின் உதவியாளர்களுக்கான சம்பளம் மட்டுமே ஒரு படத்துக்கு 20 லட்ச ரூபாய் வரை தரப்பட்டது. இது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. இதில், நடிகர்களின் உதவியாளர்களுக்கு இனிமேல் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட நடிகர்களே வழங்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. சூர்யா, கார்த்தி, விஷால் ஆகிய மூவரும், தங்கள் உதவியாளர்களின் முழு சம்பளத்தையும் தாங்களே கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தனர்.


  காவிரி, ஸ்டெர்லைட் போராட்டம்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களும் இதில் கலந்து கொண்டனர்.  அஜித், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்பட யாருமே கலந்து கொள்ளவில்லை. 

   

  மாற்றம் மட்டுமே...

  கேளிக்கை வரியை குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்துவது, நடிகர்களின் சம்பளத்தை விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயித்து படங்களின் பட்ஜெட்டைக் குறைப்பது, தியேட்டர்களில் நியாயமான டிக்கெட் கட்டணத்தை அமல்படுத்துவது,  தியேட்டர்களின் கட்டமைப்பு வசதிக்கு ஏற்ப டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்வது ஆகியவற்றுடன் தரமாகவும் ஜனரஞ்சகமாகவும் மக்களின் ரசனைத்திறனை மேம்படுத்தும் வகையிலும் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டால் திருட்டு வி.சி.டி.க்களை ஒழிக்கலாம். 

  சினிமா சார்ந்த சங்கங்களில் கடந்த காலத்தில் நிலவி வந்த அரசியல் தலையீடுகள், ஒரு சார்பு நடவடிக்கைகள் போன்றவை களையப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் 2019-ஆம் ஆண்டிலிருந்தாவது வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து தமிழ் சினிமா உலக அரங்கில் தடம் பதிக்கும்.

   

  நா.முத்துக்குமார் - சிவகார்த்திகேயன்

  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் "கோலமாவு கோகிலா'.  அனிருத் இசையமைத்தார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் ஆளுக்கொரு பாடல் எழுதினர். மூவருமே பாடல் எழுதியதற்காக சம்பளம் வாங்கவில்லை. இதில், சிவகார்த்திகேயன் மட்டும் தனக்கு கொடுக்க நினைக்கும் சம்பளத்தை, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கச் சொன்னார். காரணம், சிவகார்த்திகேயனுக்காக முதன்முதலில் பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார். சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான "மெரினா'வில், மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். அதனால்  தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இப்படிச் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


  ஷங்கர் 25

  1993-ஆம் ஆண்டு "ஜென்டில்மேன்' படம் மூலம் திரையுலகுக்கு வந்த இயக்குநர் ஷங்கருக்கு இது 25-ஆவது ஆண்டு.  அதை கொண்டாடும் வகையில் ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த அனைவருமே ஒன்றிணைந்து ஷங்கருக்கு விழா எடுத்தனர். உதவி இயக்குநர்கள் அனைவருமே ஷங்கரைப் பற்றி தனித்தனியாக எழுதி, அதனை ஒரு புத்தகமாகத் தொகுத்து, ஷங்கருக்குப் பரிசாக வழங்கினர். அதைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துபோன ஷங்கர், "இன்றைய தினம், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்' என்றார்.

   


  நெகிழ வைத்த அஜித்

  அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியுள்ள படம் "விஸ்வாசம்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற்றது. அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கினர். திடீரென்று சரவணன் என்ற குரூப் டான்ஸர், தனது உடலில் ஓர் அசாதாரண சூழலை உணர்ந்திருக்கிறார். வாந்தி எடுத்து, மிகவும் உடல் நிலை மோசமாகியிருக்கிறது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி, மருத்துவமனைக்கு விரைந்தனர். ஈசிஜி உள்ளிட்ட அனைத்து டெஸ்ட்களும் எடுக்கும்போதே, அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அஜித்துக்குத் தகவல் தெரியவர, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன், பிரேதப் பரிசோதனை முடியும்வரை மருத்துவமனையிலேயே இருந்திருக்கிறார் அஜித்.


  ஆண்டு  கணக்கு

  வருடத்தில் சுமார் 200 படங்கள் வரை வெளியானாலும், அதில் சொற்ப படங்கள் மட்டுமே வசூல் வேட்டை நடத்தின. 100 படங்கள் வரை வெளியாக வேண்டிய ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரையிலான காலக் கட்டத்தில் தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் 70 படங்கள்தான் வெளியானது. அப்படி வெளியான படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை. 

  நல்லத் திரைப்படத்துக்காக திரையரங்குகளை வெறிச்சோடிப் பார்த்த ரசிகர்களுக்கு இனிமேல் படங்களைப் பார்க்க காசு இல்லை என்று சொல்கிற அளவுக்கு அடுத்தடுத்த படங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்து வெளியானது. சமந்தா நடிப்பில் வெளிவந்த  "யூ டர்ன்', முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த "செக்க செவந்த வானம்' ,  "பரியேறும் பெருமாள்' ,  விஜய் சேதுபதியின் "96',  விஷ்ணு விஷால் நடித்த "ராட்சசன்',  தனுஷின் "வட சென்னை', விஜய் நடித்த "சர்கார்', ரஜினியின் "2.0' என கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மனதை கவரும் மாதிரியான நிறைய படங்கள்  வெளியானது.

   

  கைக் கொடுக்காத இரண்டாம் பாகம்

  ஹாலிவுட், பாலிவுட் பிரபலமான இரண்டாம் பாகம் எடுக்கிற மோகம், இப்போது கோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் "சண்டக்கோழி 2',  "விஸ்வரூபம் 2',  "2.0' என 5-க்கும் அதிகமான படங்கள் வந்திருக்கின்றன. முதல் பாகத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை மட்டுமே நம்பி இயக்குநர்கள் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயக்குநர்கள் தவறி விடுகிறார்கள். 

  ஏற்கெனவே வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம்  "சண்டக்கோழி'. படத்தின் இரண்டாம் பாகம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் ரசிகர்களைக் கவரவில்லை.  வசூலும் பெரிதாக இல்லை.

  "சாமி'யைக் கையில் எடுத்தார் இயக்குநர் ஹரி. 15 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் வசீகரிக்காத நிலையில்,  "சாமி ஸ்கொயர்'  திருப்தியளிக்கவில்லை. 

  தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு ரிலீஸான படம் "மாரி'. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவான இரண்டாம் பாகத்தை பார்த்தவர்கள், முதல் பாகமே பரவாயில்லை என்று சொல்லும் நிலை உருவானது. 

  8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பாகத்தின் தொடர்ச்சியாக  "தமிழ்ப் படம் 2' எடுக்கப்பட்டது. இந்த முறை தமிழ்ப் படங்களைத் தாண்டி ஹாலிவுட் வரை கலாய்த்ததில், சிரித்து சிரித்து வயிற்று வலியுடன் தான் தியேட்டரை விட்டு வெளியே வர முடிந்தது. 

  2010-ஆம் ஆண்டு வெளியான படம்  "எந்திரன்'. இதன் தொடர்ச்சியாக "2.0'-வை உருவாக்கினார் ஷங்கர். படத்துக்குப் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், 3டி என்ற ஒற்றை விஷயம் இந்தப் படத்தின் வசூலைக் காப்பாற்ற உதவியது. இதே போல் "கலகலப்பு 2',  "விஸ்வரூபம் 2' ,  "கோலி சோடா 2'  என பார்ட் 2 படங்கள்  வெளிவந்தன.

  மேற்கு தொடர்ச்சி மலை 

  முகமற்ற, முகவரியற்ற மிக எளிய சாமானிய மனிதர்களின் வாழ்வை, சமரசம் இல்லாமல் தந்ததற்காக  "மேற்கு தொடர்ச்சி மலை'  2018-ஆம் ஆண்டின் உன்னத சினிமா.

  ஏலக்காய் தோட்டத்தின் பச்சை இலைகளுக்குப் பின்னால், உறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை, அன்பை, கருணையை, காதலை, அவஸ்தையை, பிரிவை, நினைவை இவ்வளவு எளிமையாகப் பதிவு செய்ததற்காக இயக்குநர் லெனின் பாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  அதிகாரமும், உலகமயமாக்கலின் போதையும் நிரம்பிய மனித மனங்களுக்கிடையே மனசாட்சியுடன் செயல்பட முயற்சிக்கும் ஒரு மனிதனின் ஊசலாட்டத்தை, கையறுநிலையை, குற்றஉணர்ச்சி நிறைந்த மனசாட்சியை முன்வைத்ததில் "மேற்கு தொடர்ச்சி மலை' தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்துக்கு வழியிட்டிருக்கிறது. எளியவர்களின் வலியை வலிமையாகப் பேசிய இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பு. 
    
  96

  ஓர் அழகான மென்சோகக் கவிதையைப் படமாக்கியது போல் இருந்தது "96'. ராமின் பார்வையில்... அதன்பின் ஜானுவின் பார்வையில் மீண்டும் ராமின் பார்வையில் என காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம். கொஞ்சம் தவறினாலும் விரசமாகிவிடக்கூடிய கதை. கத்தி மேல் நடக்கும் வித்தை மாதிரியேதான். அதீதப் பொறுப்போடு அதைக் கையாண்டார் இயக்குநர் பிரேம். இங்கே, எல்லாருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அதில், கொண்டாட ஒரு காதலும் இருக்கிறது. அந்தக் காதலுக்கு, ஒரு தேவதை உருவமும் கொடுத்துத்தான் வைத்திருக்கிறோம். ஒரு முழுநீளப் படம், உங்களை கடந்த காலத்துக்கு கைபிடித்து அழைத்துச்சென்று அந்த தேவதையிடம் விட்டால்... அதுதான் "96'.

   

  ரியேறும் பெருமாள் 

  பரியின் வழியே மாரி செல்வராஜ் சொன்னது பல தலைமுறைகளின் வலி நிறைந்த வாழ்க்கை. அதை எதார்த்தமாக இரண்டரை மணிநேர சினிமாவில் சொல்ல முடிந்தது என்பது பெரும் ஆச்சரியம். ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கையை ஒரு சின்னப் பத்திக்குள் அடைக்கவே முடியாது. திரைக்கதையில் தேவையற்ற காட்சியென்றோ, வசனமென்றோ சொல்ல ஒன்றுகூட இல்லை. படத்தில் நடக்கும் ஒவ்வோர் அசைவுக்குப் பின்னும் ஒரு காரணமிருக்கிறது, அது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அன்புதான் பிரதானம் என சொல்லப்பட்ட விதத்தில் கவனம் கொள்கிறது இந்த "பரியேறும் பெருமாள்'. 

  கனா

  எட்டாத உயரத்திலிருக்கும் கிரிக்கெட். இன்னொரு பக்கம், எட்டிப்பார்க்க கூட  ஆளில்லாத விவசாயம். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து கதை சொன்னது "கனா'. இரு வாழ்க்கை போராட்டங்களையும் ஒரே கோட்டில் இணைத்து அமைத்திருக்கும் திரைக்கதை, பழக்கபட்டதாய் இருந்தாலும் பார்ப்பதற்கு சுவாரஸ்யம். வசனங்கள்தான் படத்தின் முதுகெலும்பு. காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயி, முருகேசன். தன் தந்தையின் இறுதிச்சடங்கின் இடையில் கூட கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க மறக்காதவர். அந்தளவிற்கு கிரிக்கெட் பைத்தியம்! அப்பாவிடமிருந்து மகள் கெளசல்யாவுக்கும் "கிரிக்கெட்' தொற்றிக்கொள்கிறது. ஒருமுறை, இந்திய அணி தோற்றபோது துன்பத்தில் கலங்கிய அப்பாவின் கண்களில், தான் இந்திய அணியில் ஆடி ஜெயித்து ஆனந்தக் கண்ணீர் வரவழைக்க வேண்டுமென ஆசைப்படுகிறார் கெளசல்யா. இன்னொரு புறம், வறட்சி வஞ்சித்தாலும் விவசாயத்தை விட மாட்டேன், நிலத்தையும் விற்கமாட்டேன் என அடம் பிடிக்கிறார் முருகேசன். "இருவரின் பயணங்களும் இலக்கினை அடைந்ததா..?அவர்களின் பாதையில் குறுக்கிடும் தடைகள் உடைந்ததா..?' அத்தனையிலும் அத்தனை கவன ஈர்ப்பு. 

  60 வயது மாநிறம் 

  "கோதி பன்னா சாதாரண மைகட்டு' என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் இது. இருந்தாலும் ஒரிஜினலின் காட்சிகளுக்கு இணையான காட்சிகளை நமக்கான கலாசாரப் பின்னணியில் உருவாக்கி, மண் மணக்கிற மனிதர்களின் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்து, ஓர் இனிய பயண அனுபவம் ஏற்படுத்திய வகையில் இயக்குநர் ராதாமோகனுக்கு வாழ்த்துக்கள்.

  பிரகாஷ்ராஜுக்கு இன்னுமொரு லைஃப் டைம் படம்.  அப்பாவித்தனமும், பரிதாபமும் மிதக்க அபாரமான உழைப்பு. 60 வயதான அவரின் நடிப்புதான் மொத்த படத்தையும் உயிர்த்துடிப்புடன் தாங்கி நிற்கிறது. வாழ்க்கையை அதன் பக்குவத்தில் புரிந்துக் கொண்டு, அதையே கதையாக்கி வசனங்கள் மூலமாக கலையாக்கினார் வசனகர்த்தா விஜி.  ஓர் ஆணும், பெண்ணும் காதலோடு பார்க்கும் போது, இறைவன் ஒரு தலைமுறைக்கான விதைகளை எடுத்து வைக்கிறான் என ஆங்காங்கே நெகிழவைத்தார். ஒருவிதமான பயணத்தில் தொடங்கி பிரகாஷ்ராஜின் கெந்தலான ஓட்டம் வரையில் அதே ஏற்ற இறக்கங்களோடு பின்தொடர்ந்தது மறக்க முடியாத அனுபவம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai