தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்!

தண்டலம்  நாராயண சாஸ்திரி  குமாரசாமி என்ற த.நா.குமாரஸ்வாமி  சென்னையை அடுத்த பாடியில்  24.12.1907 அன்று பிறந்தார்.  தந்தை, சங்கர நாராயண சாஸ்திரி.  தாயார் ராஜம்மாள்.
தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்!

த.நா. குமாரஸ்வாமி ( 1907 - 1982)

தண்டலம்  நாராயண சாஸ்திரி  குமாரசாமி என்ற த.நா.குமாரஸ்வாமி சென்னையை அடுத்த பாடியில்  24.12.1907 அன்று பிறந்தார்.  தந்தை, சங்கர நாராயண சாஸ்திரி.  தாயார் ராஜம்மாள்.

தந்தை சமஸ்கிருத பண்டிதர் என்பதால்  த.நா.  குமாரஸ்வாமியும்  இளம் வயதிலேயே  சமஸ்கிருதம்  கற்றுக் கொண்டார்.  தமிழ்,  ஆங்கிலம்,  தெலுங்கு மொழிகளிலும்  தேர்ச்சி  பெற்றார்.

சென்னை  முத்தியால்பேட்டை  உயர்நிலைப்  பள்ளியில்  படித்து  முடித்து,  1928-ஆம் ஆண்டு  கல்லூரியில்  தத்துவம்  மற்றும் உளவியல்  பாடங்களில்  பட்டம் பெற்றார்.

படிக்கும்  நாட்களிலேயே  இலக்கிய  ஆர்வம்  கொண்டிருந்தார்.  எனவே, கல்லூரிப் படிப்பு  முடிந்தவுடன்  வங்காளத்தில்  தாகூரின்  "சாந்திநிகேதன் - விஸ்வ பாரதி'யில்  வங்காள  மொழி கற்கச் சென்றார்.  ஆனால்  அது கூடி வரவில்லை.  சென்னை திரும்பி வந்தவர்  சுய முயற்சியில்  அகராதியை துணைக் கொண்டு  வங்காள  மொழியை  கற்கத் தொடங்கினார்.

த.நா.  குமாரஸ்வாமியின்  முதல் சிறுகதை  "கன்யாகுமரி'  1934- ஆம் ஆண்டு தினமணியில்  வெளிவந்தது.

1940-ஆம் ஆண்டு  "விடுதலை'  என்ற முதல் நாவல் வெளிவந்தது.  அப்போது அவரது  வயது 33. 

த.நா.குமாரஸ்வாமியின்  பிரபலமான நாவல்  "ஒட்டுச் செடி'  சென்னை குடிநீர் தேவைக்காக மேயர்  சத்தியமூர்த்தி பூண்டி நீர்த் தேக்கத்தை   ஏற்படுத்தினார். பல கிராமங்கள்  மூழ்கின. மக்கள் வெளியேறினர்.  அதைச் சொல்லும்  நாவல் "ஒட்டுச்செடி' ஆனந்த விகடனில்  தொடராக  வெளிவந்தது. 

அவரின் பிற நாவல்கள்:  "அன்பின் எல்லை',  "கானல் நீர்',   "குறுக்குச் சுவர்', "வீட்டுப்புறா'.

"சந்திர கிரகணம்', "நீலாம்பரி', "இக்கரையும்  அக்கரையும்',  "கற்பகவல்லி' சிறுகதைத் தொகுதிகள். சுமார் 100 சிறுகதைகளை  எழுதியுள்ளார்.

1940-இல்  ஏ.கே. செட்டியார் தயாரித்த  மகாத்மா காந்தி ஆவணப்படத்திற்கு வசனம்  எழுதியவர்  த.நா.  குமாரஸ்வாமி.  அதுவே  மனிதரைப்  பற்றிய  முதல் தமிழ்  ஆவணப்படம்.

வங்காள  மொழியில்  நல்ல  பாண்டியத்துவம்  பெற்ற  த.நா. குமாரஸ்வாமி வங்காள  மொழியிலிருந்து  தமிழுக்கு  நேரடியாக  சரத் சந்திரர்,  பக்கிம்  சந்திர சாட்டர்ஜி, தாராசங்கர்  பானர்ஜி, ரவீந்திரநாத் தாகூர்  ஆகியோரது படைப்புகளை  மொழிப் பெயர்த்துள்ளார்.  நோபல்  பரிசு பெற்ற தாகூரின் கவிதைகளைத் தவிர  அவரின் சிறுகதைகள்,  நாவல், கட்டுரைகள் என அனைத்தையும்  மொழி  பெயர்த்துள்ளார்.

ஆங்கில  மொழி மூலம்  சீனமொழி  நாவலான  "கிழக்கோடும் நதி', செக்கோஸ்லோவாகிய  மொழிச் சிறுகதை  "துர்லக்' , பர்மிய  மொழிச் சிறுகதை "காதலர்'  ஆகியவற்றைத் தமிழில்  மொழிப் பெயர்த்துள்ளார்.  1962-இல்  சோவியத் நாடு  சென்று வந்தார். 

த.நா.  குமாரஸ்வாமியின்  சொந்த இலக்கியப் படைப்புகளான  சிறுகதை, நாவல்,  கட்டுரை  ஆகியவை  கணிசமான  அளவுக்கு  இலக்கியத் தரமாக இருந்தாலும்  50- ஆண்டுகளுக்கும்  மேலாக  மொழிப் பெயர்ப்பு  பணியைச் செய்ததால்  அவரை  எல்லாரும்  சிறந்த மொழிப்  பெயர்ப்பாளராகவே அடையாளம்  காண்கின்றனர். 17.9.1982 அன்று சென்னையில் காலமானார். 

கொத்தமங்கலம் சுப்பு (1910- 1974)

சுப்பையா  கனபாடிகள் மகாலிங்க  அய்யர்  சுப்பிரமணியன்  ( எஸ்.எம். சுப்பிரமணியன்)  என்ற இயற்பெயரைக் கொண்ட  கொத்தமங்கலம் சுப்பு, புதுக்கோட்டை  மாவட்டம்  காரைக்குடியின்  கன்னாரியேந்தல்  கிராமத்தைச் சேர்ந்தவர், தாத்தா  சுப்பையா  கனபாடிகள்,  தந்தை  மகாலிங்க அய்யர்.  தாய் கனகாம்பாள்.  10.11.1910  அன்று பிறந்தார்.


சிறுவயதிலேயே  தாயை  இழந்த  சுப்பிரமணியன்  கொத்தமங்கலம் என்ற ஊரில்  சின்னம்மாவின்   வீட்டில்  வளர்ந்தார்.  எட்டாவது  வரைதான்  படித்தார். இளவயதில் கொத்தமங்கலம்   கிராமத்தில்  பாட்டுப்பாடி  நாடகங்களில் நடித்தபோது  "கொத்தமங்கலம்  சுப்பு'  என்கிற  பெயரைப்  பெற்றார்.


அதே கிராமத்தில்  வணிக  நிறுவனம்  ஒன்றில்  எழுத்தராகப்  பணிபுரிந்தார். 1930-ஆம்  ஆண்டு  திரைப்பட  இயக்குநர்  கே.சுப்பிரமணியன்  மூலம் சினிமாவில்  அறிமுகமானார்.  1935-இல்  கே.சுப்பிரமணியன் இயக்கிய "பட்டினத்தார்'  படத்தில்  நடித்தார்.  அதுவே  அவர் நடித்த முதல் திரைப்படம்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான  எஸ்.எஸ்.வாசன்  அறிமுகம் கிடைத்ததும் ஜெமினி ஸ்டுடியோ  கதை இலாகா பிரிவில்  பணிக்குச் சேர்ந்தார். திரைப்படக் கதை,  வசனம், பாடல்,  நடிப்பு,  இயக்கம்  எனப் பலவற்றிலும்  ஆற்றல் பெற்றிருந்த  கொத்தமங்கலம்  சுப்பு  1953-இல்  "ஒளவையார்'   திரைப்படத்தை இயக்கினார்.  ஜெமினி தயாரிப்பில்  திரைக்கதை,  வசனம்  எழுதிய  முதல் பிரபலமான படம்   "சந்திரலேகா'.

கதைகள்  எழுதும் ஆற்றல்  பெற்றிருந்த கொத்தமங்கலம்  சுப்பு  1957-இல் ஆனந்தவிகடன்  பத்திரிகையில்  "கலைமணி'  என்ற பெயரில்  "தில்லானா மோகனாம்பாள்'  நாவலை  தொடர்கதையாக  எழுதினார்.  அதுவே  அவரது முதல் நாவல். அப்போது  அவரது  வயது 47.

"தில்லானா  மோகனாம்பாள்'  இசை குடும்பத்தை  மையமாகக்  கொண்டு எழுதப்பட்ட கதை.  ஆசிரியரின்  சொந்தக் குறுக்கீடு  ஏதுமில்லாமல் எழுதப்பட்ட  நாவல், அது  1968-ஆம்  ஆண்டு புத்தகமாக  வெளிவந்தது.  பின் ஏ.பி.  நாகராஜனால்  திரைப்படமாகவும்  எடுக்கப்பட்டு  பெரும் வெற்றியைப் பெற்றது.  திரைப்படத்திற்கு  கொத்தமங்கலம்  சுப்பு கதை வசனம்  எழுதினார். அவர் எழுதிய  மற்ற  நாவல்கள்   "ராவ்பகதூர் சிங்காரம்',  "பந்தநல்லூர் பாமா',  "பொன்னி  வனத்து பூங்குயில்',  "மிஸ். ராதா'.

150 சிறுகதைகளும்,  120  வானொலி  நாடகங்களும்,  350  திரைப்படப் பாடல்களும்   எழுதியுள்ளார்.  

3500  பாடல்கள்  எழுதி  "காந்தி மகான்  கதை'  என்ற  வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை  பல ஊர்களில்  அவரே  நடத்தினார்.

1967-  இல்  தமிழ்நாடு  அரசின்  கலைமாமணி  விருதும்,  1971-இல்  மத்திய அரசின்  பத்மஸ்ரீ  விருதும்  பெற்றவர்.

15.2.1974 அன்று  சென்னையில்  காலமானார். 

சாவி ( 1916 -  2001)

சாமா  சுப்ரமணிய  சாஸ்திரி  விஸ்வநாதன்  என்ற சாவி 10.8.1916 அன்று வேலூர் மாவட்டம்  மாம்பாக்கத்தில்  பிறந்தார்.  தாய் :  மங்களாம்பாள்.  தந்தை சாமா சுப்ரமணிய  சாஸ்திரிகள்  சமஸ்கிருத  மொழியில்  வல்லுநர்.  ஆன்மிக மேடைகளில்  கதை  சொல்பவர்,  அதோடு  விவசாயத்தையும் கவனித்துக் கொண்டார்.

காசிக்குப் போய் வந்தபின்  பிறந்ததால்  மகனுக்கு சாமா  விஸ்வநாதன்  என்று பெயர்  வைத்தனர்.  பெயரின்  முதல் எழுத்துக்களைக்  கொண்டு  "சாவி'   என்ற பெயரை  எழுதுவதற்கு  வைத்துக் கொண்டார்.

பள்ளிப் படிப்பை  நான்காவதோடு  கைவிட்டார்.  சுயமாகப்  படித்தார். பதிமூன்றாவது  வயதிலேயே  எழுத ஆரம்பித்த  சாவி  பத்திரிகை  ஆசிரியராகி விட வேண்டும் என்பதில்  தீவிரமாக  இருந்தார்.   ஆரம்பத்தில்  "அனுமன்', "இந்துஸ்தான்',  "சந்திரோதயம்' ஆகிய  பத்திரிகைகளில்   பொறுப்பிலிருந்தார். 

"ஆனந்தவிகடன்'  பத்திரிகையில்  கல்கி  ஆசிரியராக  இருந்தபோது  சாவி ஆசிரியர்  குழுவில்  சேர்ந்தார்.  அப்போது  அவரது  வயது  21.  மாதச் சம்பளம் ரூ.40.

26-ஆவது  வயதில்  வங்கப் பிரிவினை  கிளர்ச்சியின்போது  ஒற்றுமையை வலியுறுத்த மகாத்மா  காந்தி  மேற்கொண்ட  "நவகாளி யாத்திரை'யில்  பங்கு கொண்டார்.

பயணக் கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர்,  நாவலாசிரியர்,  பத்திரிகை ஆசிரியர் ,  என  பன்முகம் கொண்டவர்  சாவி.  தான்  எழுதுவதைவிட  இளம் படைப்பாளிகளை  அடையாளம்  கண்டு  ( சுஜாதா,  பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு  முதலானோர்)  ஊக்குவித்தார்.

ஆனந்தவிகடன் பத்திரிகைக்குப்  பிறகு  "கல்கி',  "தினமணி  கதிர்', "குங்குமம்' இதழ்களில்  ஆசிரியராகப்  பணியாற்றிய  பின் தனது  பெயரிலேயே  "சாவி' என்ற  வார இதழைத் தொடங்கி  நடத்தினார்.

ஆனந்த விகடன்  பத்திரிகையில்  1963- ஆம்  ஆண்டு  "வாஷிங்டனில் திருமணம்'  நாவலை  தொடராக  எழுதினார்.  அதுவே  அவரது  முதல் நாவல். அப்போது  அவரது  வயது 47.  பிராமண  சமூகத்தில்  நடைபெறும்  திருமண சம்பிரதாயங்களை  நுணுக்கமாக  நகைச்சுவையுடன்  சொல்லும்  நாவல். வாசகர்களின்  அமோக  வரவேற்பைப் பெற்ற  அந்நாவல் புத்தகமாகவும், பிறகு நாடகமாகவும்  அரங்கேற்றமானது.

அவருடைய  மற்ற நாவல்கள் "வேதவித்து',  "விசிறிவாழை',  "ஆப்பிள் பசி', "ஊரார்' "நவகாளி யாத்திரை',  "இங்கே  போயிருக்கிறீர்களா?'  கட்டுரைகளை குறிப்பிட்டுச்   சொல்ல வேண்டும்.

பயணக் கட்டுரைகளுக்காக  தனி பதிப்பகத்தை ஆரம்பித்தவர்.  இளம் எழுத்தாளர்களுக்காக  "பூவாளி',  "திசைகள்',  "சுஜாதா', "மோனா' ஆகிய இதழ்களைத்  தொடங்கியவர்.

பத்திரிகை என்பது  கதை,  கட்டுரை,  கவிதைகளை அச்சடித்துக் கொடுப்பதல்ல, பக்கத்திற்குப் பக்கம்  ஓவியங்களும்,  புகைப்படங்களும்  இடம் பெற  வேண்டும்  என்பதை  நடைமுறைப்படுத்திக் காட்டியவர்.
அவரைப்  பார்க்க வரும் எழுத்தாளர் நண்பர்களிடம், பத்திரிகைக்கு  என்ன கொண்டு  வந்திருக்கிறீர்கள்.  அதைக் கொடுங்கள்  முதலில்  என்பார் உரிமையோடும், அன்போடும்.

பத்திரிகை  உலகின்  பீஷ்மர் - பிதாமகன்  என்று சொல்லப்பட்ட  சாவி   தனது   84-ஆவது வயதில்  9.2.2001  அன்று சென்னையில் காலமானார்.

 -  அடுத்த இதழில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com