சுடச்சுட

  
  sk6

  சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 52 - சாந்தகுமாரி சிவகடாட்சம்

  "கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன் நிலை திரியாத் தந்த தமிழ் பாவை'
  - மணிமேகலை (பதிகம் 24.25)
  "கருங்கயல்கண் விழித்து
  நடந்தாய் வாழி காவேரி'
  - கானல்வரி கட்டுரை

  மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, பட்டினப்பாலை போன்ற பல தமிழ் இலக்கியங்கள், காவேரி ஆற்றை போற்றி, அவளின் மேன்மைகளை புகழ்ந்து பாடியிருக்கின்றன.

  என் கணவர் டாக்டர். சிவகடாட்சம், சென்னைவாசியான எனக்கு காவேரி ஆற்றை அறிமுகப்படுத்தி வைத்தார். தஞ்சாவூரில் பிறந்து தன் இளமை பருவத்தை அங்கே கழித்தவர். எங்கள் திருமணம் முடிந்த பிறகு குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக, சென்னையிலிருந்து காரில் தஞ்சாவூருக்கு பயணப்பட்டபொழுது காவேரியின் தரிசனம் எனக்கு கிட்டியது.

  திருச்சிராபள்ளியிலிருந்து தஞ்சாவூருக்குள் நுழையுமுன் காவேரி இரண்டாக பிரிகிறது. இதன் வடக்கு கிளையை கொள்ளிடம் என்று அழைக்கிறார்கள். கிழக்கு நோக்கி வரும் கிளை காவேரி என்ற பெயரையே கொண்டுள்ளது.
  கொள்ளிடத்தின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மீது, எங்களுடைய கார் சென்றபொழுது, அதை நிறுத்தச் சொல்லி என் கணவர் என்னை கீழே இறங்கச் சொன்னார், ஓடிக் கொண்டிருந்த காவேரியின் அழகை ரசிக்க வைத்தார். அவர் கூறினார், ""நான் சிறுவனாக இருந்தபொழுது ஒரு சமயம், கொள்ளிடத்தில் பெரும் வெள்ளம் வந்தது, நானும் என் நண்பர்களும் இந்த பாலத்தில் அமர்ந்து, கால்களை தொங்கவிட்ட பொழுது, பொங்கி, துள்ளி ஓடிக் கொண்டிருந்த காவேரி ஆற்றின் தண்ணீர் எங்கள் கால்களை தொட்டுச் சென்றது'' என்றார்.
  "அப்படியா'' என்று வியந்தேன். 

  "அதற்கு பிறகு அப்படி ஒரு தோற்றத்தை இன்று வரை காணமுடியவில்லை'' என்று ஏக்கப் பெருமூச்சு விட்டார்.

  தஞ்சாவூரின், கிராமப்புறங்களும், பச்சை பசேல் என்று வளர்ந்து முற்றிய நெல் மணிகளை சுமந்து, தென்றல் காற்றில் தலை அசைத்துக் கொண்டிருந்த நெற்கதிர்களை தன்னகத்தே கொண்ட வயல் வெளிகளும், பம்பு செட்டுகளில் அருவிகளாய் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரும், பெரிய, பெரிய கிணறுகளும், அவைகளில் நிரம்பியிருந்த நீரும் காவேரி தாய் தந்த வளம், என்பது தெள்ளென புரிந்தது, அவள் மேல் தீரா காதலை என்னுள் வளர வித்திட்டது.

  தென் இந்தியாவில் பாய்ந்தோடும் கோதாவரி, கிருஷ்ணா நதிகள் வரிசையில் மூன்றாவது பெரிய ஆறாக காவேரி திகழ்கிறது. இந்த ஆற்றை "பொன்னி' என்றும் அழைக்கிறார்கள். கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில், குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் காவேரி உருவாகிறது. தெற்கிலிருந்து, கிழக்கு நோக்கி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாகப் பாய்ந்து ஓடி கிழக்கு டெக்கான் பீட பூமியைக் கடந்து, பிறகு கீழ் நோக்கிப் பாய்ந்து தென்கிழக்கு நிலப்பகுதிகளை தாண்டி, வங்கக்கடலில், தமிழ்நாட்டில் பூம்புகார் என்ற இடத்தில் கலக்கிறது. 

  4400 அடி உயரத்தில் தோன்றிய இந்த காவேரி நதியின் நீளம் 800 கி.மீ.
  இப்படியாக, கர்நாடகத்தில் தொடங்கி, தமிழகத்தில் கடலில் கலக்கும் காவேரியின் பயணத்தில், பல இடங்களில் அவளுடைய அழகிய தோற்றத்தை, மாறுபட்ட நிலைகளை கண்டு பிரமித்து இருக்கிறேன்.
  என் கணவருடன் தென்இந்தியாவில் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபொழுது காவேரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை, கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கல்லணை, மேலணைகளை கண்டு களித்தேன்.

  காவேரி, கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியாக பிரம்மாண்டமாக உருக்கொண்டு கீழ்நோக்கி பாய்வதை பார்த்து பிரமித்திருக்கிறேன். தமிழ்நாட்டில் ஓகேனக்கல் அருவியாக வீழும்பொழுது அதில் குளித்து மகிழ்ந்திருக்கிறேன். கர்நாடக மாநிலத்தில் காவேரி ஆறு கொண்டுள்ள, ஸ்ரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் என்ற இரு தீவுகளையும், தமிழகத்தில் உருவாக்கிய ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவையும், இந்த மூன்று தீவுகளில் உள்ள அரங்கநாத கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருக்கிறேன்.

  ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும், சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும், திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைக்கிறார்கள்.

  ஒரு சமயம், கர்நாடக மாநிலத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் குடகு மாவட்டத்திற்கு என் கணவருடன், நான்கு நாட்கள், சென்றிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை சுற்றி காபி எஸ்டேட்டுகள் விரிந்து பரந்து கிடந்தன. தஞ்சாவூர்காரரான என் கணவர் ஒரு காபி பிரியர். பில்டர் காபியைத்தவிர வேறு வகையில் தயாரிக்கப்பட்ட காபியை கைகளால் தொடமாட்டார். கண்களால் மட்டுமே நோட்டம் விடுவார். வெளிநாடுகளுக்கு பயணப்படும்பொழுது எக்ஸ்பிரஸ்சோ காபி என்றால் மட்டும் சிறிது சுவைப்பார்.

  அன்று, மாலை பொழுதில் ஹோட்டலின் போர்ட்டிகோவில் அமர்ந்து கொண்டு எஸ்டேட்டில் இருந்து பறிக்கப்பட்ட காபிக் கொட்டைகளினால் உருவாக்கப்பட்ட, காபியை ருசித்து குடித்து கொண்டிருந்தார். நான் ஹாட் சாக்லேட் பானத்தை பருகிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்துக் கொண்டிருந்த கர்நாடகத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு குடும்பத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது. அந்த குடும்பத்தின் தலைவர் தன்னை ஒரு கண் மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த கண் மருத்துவரும், இதய மருத்துவரான என் கணவரும் நீண்ட நாட்கள் பழகிய நண்பர்களை போல பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

  குடகு மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மருத்துவர் தன்னை ஒரு "குடவாஸ்' என்று கூறிக்கொண்டார். பல நூற்றாண்டு காலங்களாக குடகை தங்களுடைய இருப்பிடமாகக் கொண்டு, பயிர் செய்து வாழ்ந்து வந்த அந்த இடத்தின் குடிமக்களை குடவாஸ் என்று அழைக்கின்றனர். கால ஓட்டத்தில், கல்வி அறிவு பெற்று, பல குடவாஸ் மக்கள், உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலதுறைகளில் வேலைப்பார்ப்பதாகச் சொன்னார்.

  பிறகு நீங்கள் இருவரும் இங்கே வந்த காரணம் என்ன என்று வினவ, ""நாங்கள் சும்மா ஓய்வு எடுக்க வந்தோம்'' என்றார் என் கணவர்.
  "நீங்கள்?'' என்ற எங்களது கேள்விக்கு, தற்போது பெங்களூரில் வசிக்கும் நான், இங்கே தலைக்காவேரியில், நாளைக்கு மறுநாள் அரங்கேற இருக்கும், மிக புனிதமான நிகழ்ச்சியான (Tula Sankramana) துலா சங்கரமானாவை காணவே தன் குடும்பத்துடன் புறப்பட்டு வந்திருப்பதாகச் சொன்னார்.

  "துலா சங்கரமானாவா அப்படி என்றால்'' என்று ஆவலுடன் கேட்டேன்.
  "என்னது? இந்த திருவிழாவைப் பற்றி உங்களுக்கு தெரியாதா உங்களுக்கு அவகாசம் இருந்தால் அதைப்பற்றி சொல்லுகிறேன்'' என்றார்.

  "கரும்புதின்னக் கூலியா சொல்லுங்கள்'' என்றேன்.

  - தொடரும்


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai