தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - நா.கிருஷ்ணமூர்த்தி

"எழுதாத நாளெல்லாம் வீணான நாட்கள்' என்று சொல்லிக் கொண்ட முத்துவேல் கருணாநிதி என்ற கலைஞர் மு.கருணாநிதி தஞ்சை மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில்

ப.சிங்காரம் ( 1920- 1997)

பழனிவேல் சிங்காரம் என்ற ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 1920-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை கு.பழனிவேல். தாய் உண்ணாமலை அம்மாள்.
ஆரம்பக் கல்வியை பிறந்த ஊரான சிங்கம்புணரியிலும், பள்ளியிறுதிப் படிப்பை மதுரை புனிதமேரி பள்ளியிலும் முடித்த ப.சிங்காரம் 18 வயதில் உறவினர் மூலம் மலேசியா சென்றார். கடல்கடந்த வாழ்க்கையில் மிகுந்த சிரமம் இருந்தது. மலாய் மொழியைக் கற்று கப்பலில் மராமத்துப் பணிகளைச் செய்தார்.
25 வயதில் திருமணம் செய்து கொண்ட ப.சிங்காரம் மனைவியையும், குழந்தையையும் முதல் பிரசவத்தில் இழந்தார்.
1946- இல் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்த பிறகு மதுரை திரும்பினார். அமெரிக்க, ரஷிய இலக்கியங்களைப் படித்தார். ஹெமிங்வே, வில்லியம் ஃபாக்னெர், செகாவ், டால்ஸ்டாய், தாஸ்தோவெஸ்கி ஆகியோர்களின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டார். ஹெமிங்வேயின் "ஃபேர்வெல்டு ஆர்ம்ஸ்' நாவல் அவரை மிகவும் பாதித்தது. டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' நாவலை விட "அன்னகரீனா' நாவல் தனக்குப் பிடித்தமானது என்பார். தமிழில் புதுமைப்பித்தனையும், மெளினியையும் சிறப்பித்துச் சொல்லுவார்.
மதுரை தினத்தந்தி நாளிதழில் 1946- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து உடல்நிலை காரணமாக 1987-இல் விருப்ப ஓய்வு பெற்றார்.
ப.சிங்காரம் இரண்டு நாவல்கள் எழுதினார். 1950-ஆம் ஆண்டு எழுதிய முதல் நாவல் "கடலுக்கு அப்பால்' கலைமகள் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அப்போது அவரது வயது 30. முதல் நாவல் புத்தக வடிவில் 1959-இல் வந்தது.
"புயலிலே ஒரு தோனி' என்ற இரண்டாவது நாவலை 1962- இல் எழுதினார். ஹெமிங்வேயின் "Farewell to Arms" நாவலின் பாதிப்பு. சுமத்ரா தீவில் இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்தபோது ஏற்பட்ட பாதிப்பை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல். பதிப்பகத்தார் எவரும் நாவலை புத்தகமாகக் கொண்டு வரவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு 1972-இல் புத்தகமாக வெளிவந்தது.
மதுரை YMCA விடுதியில் 50 ஆண்டுகள் தனியாக வாழ்ந்தார். தன்னிடமிருந்த சேமிப்பை சமூக சேவை அறக்கட்டளை ஒன்றுக்கு 1997-ஆம் ஆண்டு அளித்ததோடு தனது இறப்பை உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார். 30.12.1997 அன்று அவரது 77-ஆவது வயதில் மதுரையில் காலமானார். 

மு.கருணாநிதி (1924- 2018)

"எழுதாத நாளெல்லாம் வீணான நாட்கள்' என்று சொல்லிக் கொண்ட முத்துவேல் கருணாநிதி என்ற கலைஞர் மு.கருணாநிதி தஞ்சை மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் 03.06.1924 அன்று பிறந்தார். தாய் அஞ்சுகம் அம்மாள். தந்தை முத்துவேல்.
பள்ளிப் படிப்பு 10-ஆவது வரையில்தான். ஆனால் எழுத்து, படிப்பு, பேச்சு, நடிப்பு என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு உழைத்தவர்.
13 வயதில் "மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். அண்ணாதுரையின் "திராவிடநாடு' இதழில் எழுதினார். பெரியாரின் "குடியரசு' இதழில் உதவி ஆசிரியராக இருந்தார்.
மு. கருணாநிதி தேசிய காங்கிரஸ் கட்சியின் வழியாக உருவாகவில்லை. பெரியாரின் நீதிக் கட்சி வழியாக அரசியலுக்கு வந்தார்.
தமிழ் மொழியில் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கருணாநிதி சினிமாவிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 
பிற பத்திரிகைகளில் எழுதுவதைவிட சொந்தப் பத்திரிகையில் எழுதலாம் எனத் தீர்மானித்து "முரசொலி' இதழை 1942- ஆம் ஆண்டு தொடங்கினார். அதில் முழு மூச்சோடு எழுதினார்.
1944- ஆம் ஆண்டு "பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அதில் அவர் நடிக்கவும் செய்தார்.
1947-இல் சினிமாவிற்கு திரைக்கதை வசனம் எழுதத் தொடங்கினார். முதல் திரைப்படம் "ராஜகுமாரி' தொடர்ந்து 65 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 
"மந்திரிகுமாரி', "பராசக்தி', "மனோகரா', "மலைக்கள்ளன்' ஆகிய திரைப்படங்கள் மகத்தான வெற்றி. பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்தப் படங்களில் இடம் பெற்ற அடுக்குமொழி வசனங்கள் ஒலித்தன. இளைஞர்களின் வாய்களில் முணுமுணுக்கப் பட்டன.
மு.கருணாநிதி எழுதிய முதல் நாவல் "சுருளிமலை' என்றும் சிலர் "வெள்ளிக்கிழமை' என்றும் சொல்வதுண்டு. அது தொடர்கதையாக வெளிவந்து. பின்னர் புத்தகமாகவும் வந்தது. 
மு.க.வின் பிரபலமான பிறநாவல்கள்: "தென்பாண்டி சிங்கம்', "ரோமாபுரி பாண்டியன்', "பொன்னர் சங்கர்', "ஒரே இரத்தம்'.
1953- ஆம் ஆண்டு கல்லக்குடி ( டால்மியாபுரம்) ரயில் மறியல் போராட்டத்தில் 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்று திருச்சி சிறைச் சாலையில் இருந்தார். அந்நிகழ்ச்சியை ஆவணப்படுத்தி ஆறுமாத கடுங்காவல் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
மு.கருணாநிதியன் சுயசரிதை புத்தகம் "நெஞ்சுக்குநீதி' அதன்முதல் பகுதி சாவி ஆசிரியராக இருந்தபோது தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. மற்ற ஐந்து தொகுதிகளும் முரசொலி, குமுதம், குங்குமம் இதழ்களில் தொடராக வெளிவந்தன. சுயசரிதை சுமார் 5000 பக்கங்கள் கொண்டவை.
இயற்கை அனுமதித்தால் நெஞ்சுக்குநீதியின் ஏழாவது தொகுதியையும் எழுதுவேன் என்று சொன்னவர். திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார். ரஷிய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் "தாய்' நாவலை கவிதையாக எழுதியுள்ளார். 
2016- ஆம் ஆண்டு வரை இடைவிடாது எழுதி வந்த மு.கருணாநிதியால் உடல் நலக் குறைவால் அதன்பின் எழுதமுடியாமல் போனது.
13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை முதலமைச்சராகவும் இருந்த கலைஞர் மு.கருணாநிதி தனது 94-ஆவது வயதில் 7.8.2018 அன்று சென்னையில் காலமானார்.

ஆ.மாதவன் (பிறப்பு 1934)

ஆவுடை நாயகம் மாதவன் என்ற ஆ.மாதவன் 1934-ஆம் ஆண்டு பிறந்தார். தாய் சரஸ்வதி அம்மாள் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பள்ளிப்படிப்பில் மலையாள மொழியை முதல் பாடமாகப் படித்தார். பத்தாம் வகுப்பு முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக வணிகத்தில் ஈடுபட்டார். 
ஆ.மாதவன் திராவிட சிந்தனை உடையவர். தமிழ் அறிவாளி. தமிழில் நிறைய எழுதவேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர். 
அவருடைய முதல் சிறுகதை 1952-இல் முரசொலி பொங்கல் மலரில் வெளிவந்தது. திருவனந்தபுரம் பஜார் - சாலைத் தெருவில் சிறிய பாத்திரக் கடை வைத்திருக்கிறார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து "சாலைத் தெருக் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். அது முதல் அவரை "கடைத் தெருவின் கதை சொல்லி' என்று நண்பர்கள் அழைக்க ஆரம்பித்தனர். 
ஆ.மாதவனின் முதல் நாவல் "புனலும் மணலும்' வாசகர் வட்ட வெளியீடாக 1974-ஆம் ஆண்டு வெளியானது. அப்போது அவரது வயது 40. அவருடைய மற்றொரு முக்கிய நாவல் "கிருஷ்ண பருந்து'. அது அவருக்கு இலக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. 
"எனக்கும் ஒரு நாள் சாகித்ய அகாதமி விருது கிடைக்கும்'' என்று நம்பிக்கையோடு பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன ஆ.மாதவனுக்கு 2014- ஆம் ஆண்டு இலக்கிய "சுவடிகள்' என்ற நினைவுக் குறிப்பு புத்தகத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 
தமிழில் அதிகமாக எழுதும் ஆ.மாதவனின் மலையாள மொழி நாவல் "நான் இனி உறங்கட்டும்'. 
எழுத்தாளர் மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் "யட்சி' மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அது தவிர மலையாள மொழி சிறுகதைகள், கட்டுரைகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். தற்போதும் திருவனந்தபுர வாசியாகவே இருந்து வருகிறார். 

டி. செல்வராஜ் (பிறப்பு 1938)

டி. செல்வராஜ் எனும் டேனியல் செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் ஊரில் 1938 -ஆம் ஆண்டு பிறந்து மூணாறில் வளர்ந்தவர். தந்தை டேனியல் தேயிலைத் தொழிலாளி. தாய் ஞானாம்பாள். மனைவி பாரத புத்ரி. 
1959 -இல் திருநெல்வேலியில் இளங்கலை பட்டம் பெற்ற பின் சென்னை சட்டக்கல்லுôரியில் படித்து 1962-இல் பட்டம் பெற்றார். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். முற்போக்கு கருத்துகள் உடையவர். கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஜீவாவின் சீடர். 
1957-58 ஆண்டுகளில் அவரது ஆரம்பகால கதைகளை "ஜனசக்தி' யிலும், சிதம்பர ரகுநாதனின் "சாந்தி'யிலும் எழுதினார். 
1964-ஆம் ஆண்டு தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட "மலரும் சருகும்' நாவலை எழுதினார். அதுவே அவரது முதல் நாவல். அப்போது அவரது வயது 26. முதல் நாவலே அவருக்கு இலக்கிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. 
திண்டுக்கல்லில் வழக்கறிஞராக இருந்த டி. செல்வராஜ் அப்பகுதியில் தோல் பதனிடும் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு பல தொழிலாளர்கள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களின் வாழ்க்கையையும் பிரச்சனைகளையும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து "தோல்' என்ற பெரிய நாவலை எழுதினார். 
2010-ஆம் ஆண்டு வெளியான "தோல்' நாவலுக்கு 2011- இல் தமிழக அரசு விருதும், 2012-இல் சாகித்ய அகாதமி விருதும் கிடைத்தது. டி. செல்வராஜ் திண்டுக்கல்லில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார். 
- அடுத்த இதழில் நிறைவுறும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com