வீழ்ந்தும் எழ வைத்த சைக்கிள்!

சிறுவயதில் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தால் ஒரு கால் எனக்கு அகற்றப்பட்டது. பத்து வயதில் செயற்கை கால் பொருத்தப்பட்டது.
வீழ்ந்தும் எழ வைத்த சைக்கிள்!

சிறுவயதில் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தால் ஒரு கால் எனக்கு அகற்றப்பட்டது. பத்து வயதில் செயற்கை கால் பொருத்தப்பட்டது. எந்த சைக்கிளால் நான் கால்களை இழந்தேனோ அந்த சைக்கிள் வைத்தே சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியமே நான் ஓட தொடங்கிய மையப்புள்ளி என பேச ஆரம்பிக்கிறார் எம்.ஆர். சவுந்தர்ராஜன். சைக்கிள் பந்தயத்தில் உலக அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர். சைக்கிளிலேயே தமிழகத்தைச் சுற்றி வந்த பெருமைக்குரியவர். உங்கள் வாழ்க்கைப்

பயணம் பற்றிச் சொல்லுங்கள் என்றதும் பேச ஆரம்பித்தார்: 

""நான் பிறந்தது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம்  அருகேயுள்ள மாடநாடார் குடியிருப்பு  என்னும் சிறிய கிராமம். பள்ளிப்பருவம்  அங்குள்ள அரசு பள்ளியில் தான். நான் கலந்து கொண்ட பேச்சு போட்டி, ஓட்டப்பந்தயம் மற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் நான் தான் முதல் மாணவன்.  ஒன்பது வயது இருக்கும் போது சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. அந்தக் காயத்தைச் சரியாகக் கவனிக்காமல் விடவே ஒரு கால் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

விளையாட்டில் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களிடம்,  கால் இல்லாமல் என்னால் ஓட முடியாதே என மிகவும் மனம் வருந்தினேன். செயற்கை கால்களைப் பொருத்திய பின்பு நீ நடந்தே பல சாதனை புரியலாம் என்றார்கள். செயற்கை கால் பொருத்திய பின் முதல் மூன்று மாதங்கள் மிகுந்த வலியால் கஷ்டபட்டேன். ஆனால் மனம் தளரவில்லை. 

அதன் பின்பு எங்கள் ஊரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றேன். சைக்கிள் ஓட்டும் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். பலர் கிண்டல் அடித்தார்கள். கேலி பேசினார்கள். ஆனால் நான் யாருடைய பேச்சையும் பொருட்படுத்துவதில்லை.

தொடர்ந்து சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றுச் சாதனை படைக்க வேண்டும் என விரும்பினேன். சென்னை வந்து ரப்பர் கம்பெனியில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டே பட்டப்படிப்புப் படித்தேன். மாநில அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டி, ஈட்டி எறிதல், ஷாட்புட்  மூன்றிலும் தங்கம் பதக்கம் வென்றேன். அந்தப் போட்டிக்கு பரிசு வழங்க வந்திருந்த காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், என்னைப் பற்றி விசாரித்துவிட்டு என்னை அவருடைய அலுவலகம் வந்து பார்க்க சொன்னார். 

விபத்து நடந்தது எப்போது என கேட்டறிந்தார். என்னுடைய தந்தை உயிருடன் இல்லை என்பதையும் அவரிடம் சொன்னேன். "உன்னுடைய விவரங்களை எழுதி எனக்கு மனுவாகக் கொடு அரசுக்கு அனுப்பி வைக்கிறேன். நல்லதே நடக்கும். ஆனால் உன்னுடைய முயற்சிகளை ஒரு போதும் கைவிடாதே' என ஆறுதல் சொன்னார். தமிழகம் முழுவதும் சைக்கிளிலே சுற்றி வர திட்டம் போட்டேன். 

அதன் படி உழைப்பாளர் சிலையில் எனது பயணம் தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், மதுராந்தகம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம், பழனி, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி வழியாக கன்னியாகுமரி அடைந்தேன். திரும்பும் போது ராதாபுரம், திருச்செந்தூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக சென்னை கிண்டியை அடைந்தேன். 

நான் தனியொரு நபராக சைக்கிளில் சென்றேன். பாதுகாப்பிற்காக காவல்துறையினர் உடன் வந்தார்கள். ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் போது இளைஞர்கள் எனது பயணத்தை பாராட்டி ஊக்குவிப்பார்கள். எனக்கு தேவையான உதவிகளை செய்து தந்தார்கள். நாள்தோறும் குறைந்து 9 முதல் 12  மணி நேரம் சைக்கிள் பயணம் இருக்கும். 

அந்தத் திட்டத்தின் படி 140 மணி நேரத்தில் 2850 கி.மீ சைக்கிளிலேயே பயணம் செய்து திரும்பினேன். தமிழ்நாட்டைச் சுற்றி வந்த போது எனக்கு மொழி பிரச்னை ஏதுமில்லை.

ஆனால் இந்தியாவை சுற்றி வருவது சற்று சவாலாகத்தான் இருந்தது. சென்னை காந்தி சிலையில் என்னுடைய பயணம் தொடங்கியது. விஜயவாடாவை தாண்டும் போது ஆடுகள் திடீரென கூட்டமாக வந்தது. இதனால் பைக்கில் இருந்து விழுந்துவிட்டேன். அந்தப் பகுதியில் இந்த காவல்துறையினர் உதவி செய்தார்கள். "இங்கேயே இரண்டு நாள்கள் தங்கிவிட்டு பயணத்தை தொடருங்கள்' என்றார்கள். ஆனால் நான் காயத்திற்கு சிகிச்சை எடுத்துவுடன் கிளம்பிவிட்டேன். 

ஜெயாபூர் வழியாக கட்டாக், கொல்கத்தா, அஸ்ஸாம் சென்றேன். பிரம்மபுத்திரா நதி அருகே செல்லும் போது நக்சலைட்டுகள் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். எனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும். அவர்களுக்கு இந்தி மட்டுமே தெரிந்திருந்தது. என்னைப் பற்றி விசாரித்தார்கள். எதற்காக இந்தப் பயணம் என்று கேட்டார்கள். அரசாங்கம் எங்களை உளவு பார்க்கச் சொல்லி அனுப்பியதா? என்று பல கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்தார்கள். சாதனைக்காக மட்டுமே இந்தப் பயணம் என்றேன்.

கையிலிருந்த 25 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். வேறு யாராக இருந்தாலும் சுட்டு போட்டு இருப்போம் என்றார்கள். மரணத்தின் பிடியில் இருந்த தப்பித்த அனுபவம் அது. அப்போது புதுதில்லியில் தமிழக அரசின் அதிகாரியாக இருந்த விக்ரம்கபூர் எனது பயணம் நிறைவேற அனைத்தும் உதவிகளையும் செய்தார். இதனால் பைக்கில் 19 நாள்கள் தொடர்ச்சியாக 28 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவைச் சுற்றி வந்தேன். 

சாதனையின் தொடர்ச்சியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எனக்கு சமூக நலத்துறையில் இளநிலை உதவியாளராகப் பணி நியமனம் செய்தார். பணியில் சேர்த்த பிறகும் சாதிக்க வேண்டும் என்ற வெறி குறையவில்லை. நாள்தோறும் செங்கல்பட்டு வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்வேன். 

அதனைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் ஓட்டும் பந்தயதில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.

ஜெர்மனியில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். சாம்பியன் பட்டம் வென்றேன். 2018-ஆம் ஆண்டு என்னுடைய சாதனைகளைப் பாராட்டி "கிராண்ட் அச்சீவர் அவார்டு' அமெரிக்காவில் வழங்கினார்கள்.  சிறு வயதில் எந்தப் பள்ளியில் என்னைக் கேலி பேசி கிண்டல் அடித்தார்களோ அந்தப் பள்ளியில் நடத்தப்பட்ட விழாவிற்கே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினேன். தன்னம்பிக்கை,  இடை விடாத உழைப்பு இருந்தால் மட்டுமே இந்த உலகம் உங்களை ஒரு நாள் கொண்டாடும் என்பதை நான் அன்று உணர்ந்தேன்.இன்று என்னைப் பல பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளராகப் பேச அழைக்கின்றனர் .

முயன்றால் முடியாதது எதுவுமில்லை. தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தான் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நான் சொல்லும் யோசனை. கல்வி, விளையாட்டு இவை இரண்டும் இரு கண்கள் போன்றவை. கல்வி எந்தளவு அவசியமோ அந்தளவு உடல் ஆரோக்கியமும் அவசியம் இதனை உணர்ந்து நமது மாணவர்கள் செயல்பட்டால் எதிர்காலம் நிச்சயம் நல்ல முறையில் அமையும். அடுத்ததாகக் காரில் உலகத்தைச் சுற்றி வர முடிவு செய்தேன். 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலகத்தை சுற்றி வர திட்டமிட்டேன். அதற்கான பண வசதியும், பாதுகாப்பு வசதியும் இல்லாமல் போனதால் அந்தச் சாதனை நிறைவேறாமல் உள்ளது.

எட்டு வயதில் தொடங்கிய விளையாட்டுப் பயணம் இன்று வரை தொடர்கிறது. என்னைப் போன்று கிராமபுறத்தில் பண வசதியில்லாமல் இருக்கும் பல விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். அவர்களை அடையாளம் கண்டு நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதற்கு விளையாட்டுத்துறையில் அரசு நல்ல பதவி வழங்கினால் என்னுடைய சேவை வாழ்நாள் முழுவதும் தொடரும்'' என்கிறார் சவுந்தர்ராஜன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com