சுடச்சுட

  

  சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் - 76: காசியில் நாள்தோறும் திருவிழா!   

  By -சாந்தகுமாரி சிவகடாட்சம்  |   Published on : 15th July 2019 01:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  14konda2b


  "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
  அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
  அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
  அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே'
                                                            - திருமூலர்

  சிவம் என்றால் அன்பு, மங்களம், உயர்வு, களிப்பு, நன்மை, முத்தி, கடவுளின் அருவுரு நிலை, சிவத்துவம் என்று அர்த்தம். இப்படி அன்பு உருவமான சிவத்தை, அருட்பெரும் ஜோதியாக, உயர்ந்து நிற்பவரை, லிங்க வடிவமாக நம் முன்னோர் வழிபட்டனர். அப்பரமனுக்கு இந்தியா முழுவதிலும் ஆலயங்கள் அமைத்தனர். பிழைப்புக்காகவும், வணிகம் செய்வதற்காகவும் கடல்கடந்து சென்ற இந்தியர்களும் சிவனுக்கு, தாங்கள் குடியேறிய நாடுகளில் கோயில்கள் எழுப்பி வழிபட்டனர்.

  "சித்தத்தில் சிவனை இருத்திவிடு உனது தேவைகள் அனைத்தும் உன்னை வந்தடையும்' என்கிறது உபநிடதம். சிவம் என்றால் மங்களம், லிங்கம் என்றால் அடையாளம் என்று பொருள். ஆகையினால் சிவலிங்கம் மங்கள வடிவம். மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும், பிறப்பின் குறிக்கோள் அதுவாக இருக்கிறது.

  அறுபத்து மூன்று சிவபக்தர்களை நாயன்மார்களாக்கியது அவர்களுடைய ஈடு இணையில்லாத சிவபக்திதானே, மார்க்கண்டேயனை சிரஞ்சீவியாக்கியதும், காரைக்கால் அம்மையாரை அந்த சிவனே அம்மை என்று அழைத்ததும், கண்ணப்பரை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கமாகவே இருக்கிறது.

  சிவ பக்தர்களுக்கு சிவலிங்கம் என்பது ஒரு கல் இல்லை. அது எல்லா கதிரியக்கங்களும் கொண்ட ஒரு அண்டம். அதனால்தான் அதை குளிர்விக்க, கலசங்களில் ஓட்டையிட்டு, அதில் நிரம்பியுள்ள தண்ணீரை சொட்டு, சொட்டாக லிங்கத்தின் தலையில் விழச் செய்கிறார்கள். அசையாத சிவலிங்கம் உலகை அசைய வைத்து இயக்குகிறது. அதுமட்டுமா தன் பக்தர்களுடன் பேசுகிறது. உடல் உணர்வைத் தாண்டி அவரை மேலே எழுப்புகிறது. கடவுளிடம் தொடர்பு கொள்ள அவரைத் தூண்டுகிறது. ராமபிரான் ராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டிருக்கிறார். ராவணன் தங்க லிங்கத்தை அதன் மாய சக்திகளுக்காக வழிபட்டு வந்தார்.
  தியாகத்தின் பெருமையை சுட்டிக்காட்டுவது சிவலிங்கம். பிறக்கும்போது எந்த பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை. இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப் படுகிறோம். பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே விட்டுவிடு, என்னைப்பார் என்னில் எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம்.

  கூர்ம, வாயு, சிவ, புராணங்கள் சிவலிங்கம் தோற்றத்தை விவரிக்கின்றன. இந்துக்கள் போற்றி கொண்டாடும் சிவராத்திரி அன்று, சிவன் ஜோதிப்பிழம்பாகத் தோன்ற, அவருடைய அடியையும், முடியையும் காணப் புறப்பட்ட பிரம்ம தேவரும், விஷ்ணுவும் அம்முயற்சியில் தோற்க, தன்னுடைய மேன்மையையும், பலத்தையும் நிலைநிறுத்தி பிரம்மனும், விஷ்ணுவும் தன்னிலிருந்து தோன்றியவர்கள் என்பதை சுட்டிக்காட்டி லிங்கரூபமாக, சிவன் காட்சி அளித்தார். எனவே இப்படி ஜோதிப் பிழம்பாக சிவன் காட்சி அளித்த இடங்களில் எல்லாம் ஜோதிர்லிங்கங்கள் தோன்றின.

  நம் புண்ணிய பூமியான பாரதத்தில் மொத்தம் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் இருக்கின்றன. அவை இருக்கும் கோயில்கள். சோம்நாத் கோயில், குஜராத்,  மல்லிகார்ஜூனா கோயில், ஆந்திரப்பிரதேசம்,  மஹா காலேஷ்வர் ஆலயம், மத்தியப்பிரதேசம்,  கேதார்நாத் கோயில், உத்தரகண்ட், ஓங்காரேஷ்வரர் கோயில், மத்தியப்பிரதேசம்,  பீமாஷங்கர் கோயில், மகாராஷ்டிரா,  காசி விஸ்வநாதர் கோயில், உத்திரப்பிரதேசம், திரிம்பகேஷ்வரர் கோயில், மகாராஷ்டிரா, பைத்யநாத்தாம் கோயில், ஜார்கண்ட்,  நாகேஸ்வரர் கோயில், உத்தரகண்ட்,  ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில், தமிழ்நாடு, குஷ்மேஷ்வர் கோயில், ராஜஸ்தான்.

  இவ்வளவு ஜோதிர்லிங்க கோயில்களும் இந்துக்களுக்கு மிக புனிதமானதாக இருந்தாலும், இவைகளில் தலையானதாக விளங்குவதும், வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒவ்வொரு இந்துவும் அங்கே சென்று கங்கையில் மூழ்கி எழுந்து, அங்கே குடிகொண்டு அருள்பாலிக்கும் ஜோதிர்லிங்கத்தை வழிபட விழைவதும் காசி விஸ்வநாதரின் ஆலயமாக இருக்கிறது. இன்றளவும் எண்ணற்ற முதியோர் காசியில் உயிர் நீக்கக் காத்திருப்பது, பிறவிப் பிணி நீக்கப்பட்டு, அந்த ஈஸ்வரனோடு ஐக்கியப்படவே என்பது யாவரும் அறிந்ததே.

  திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் என் கணவருடன் காசிக்குச் சென்றேன்.  பல ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு முன் மீண்டும் காசிக்கு செல்லும் அரிய வாய்ப்பினை அந்த ஈசனின் அருளால் கிடைக்கப் பெற்றோம். சிறுவயதில் சுற்றுலாத்தலமாக, பார்த்த கண்களும், உள்ளமும், இன்று அந்த புனித நகரத்தின் ஆன்மிக அதிர்வுகளை உள்வாங்கி பக்தியில் மூழ்கின.

  நம் இந்திய நாட்டிலும், பல வெளிநாடுகளிலும், எண்ணற்ற திருவிழாக்களைக் கண்டு களித்த எனக்கு, காசி நகரத்தில் நாள்தோறும் அரங்கேறிய கொண்டாட்டங்கள், கடல் அலையென திரளும் மக்கள் கூட்டம், கங்கை நதிக்குக் காட்டும் தீப ஆராதனைகள், காசி விஸ்வநாதருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள், டமரு பூஜை, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வழிபாடுகள் என்று அந்த காசி நகரமே நாள்தோறும் திருவிழா கோலம் பூண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
  காசிக்கு, வாரணாசி என்ற பெயரும் உண்டு. வருணா என்ற ஆறும், அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரின் கங்கை ஆற்றில் ஒன்று கூடுவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.

  "ரிக்' வேதம் இந்த நகரத்தை ஒளி பொருந்திய நகரம் என்ற பொருளில் காசி எனக் குறிப்பிட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு  இணையாகாது என சிவபெருமான் காசியின் பெருமையை கூறுகிறார்.

  12,000 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்ட நகரமான காசியில் பண்டிதர்கள், ஆன்மிகவாதிகள், கணித மேதைகள், விஞ்ஞானம், இசை, வானசாஸ்திரம் என்று எல்லாமே அங்கே சங்கமமாகி இருந்தது. இந்த நகரத்தின் அமைப்பு, மக்கள் என்று எல்லாமே சிவபெருமானுக்குப் பிடித்துப்போக அவர் அந்த நகரத்தை விட்டுப் போக மனமில்லாமல் இருந்தார்.

  ஆனால், காசியின் மன்னனான திவோதாசாவுக்கு, சிவன் அங்கே இருப்பது பிடிக்கவில்லை. ஒரு மன்னனுக்கு தான் மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிவனை வெளியேற்றி விட்டான். சிவனோ மீண்டும் காசிக்குள் நுழைய, இரண்டு பூத கணங்களை அனுப்பி நாட்டின் நிலைமையை அறிந்து வரச்சொன்னார். காசியின் அழகில் மயங்கிய அவை அந்த நகரத்தின் வெளிப்புறத்தில் நிரந்தரமாக தங்கிவிட்டன.  மீண்டும் இரண்டு பூதகணங்களை அனுப்ப அவையும் திரும்பி வரவில்லை. இன்றும் காசியின் நான்கு மூலைகளில் இந்த பூதகணங்களின் சிலைகளைக் காணலாம். கணேசர், குபேரன் என்று சிவனால் அனுப்பப்பட்டவர்கள் எல்லோருமே காசியிலேயே தங்கிவிட்டனர். காசியின் அழகிலும், மகத்துவத்திலும் தெய்வங்களே மயங்கியபோது பூலோக மக்களும், நானும் அந்த நகரத்தின் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியுமா?

  வாருங்கள் முதலில் கங்கையில் மூழ்கி எழுவோம், பிறகு காசி விஸ்வநாதரை தரிசிப்போம், நாள்தோறும் அரங்கேறும் திருவிழாக்களில் பங்குபெறுவோம்.
  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai