விவசாயமே தேசத்தின் ஆதாரம்.!

விவசாயிகளிடம் சமூகம் வாங்கும் பொருள்களுக்கு மலிவான விலையே கொடுக்கப்படுகிறது. அதே விவசாயி தனக்காக ஒரு பொருளை வாங்க நினைக்கும்போது, சமூகம் சொல்லும்...
விவசாயமே தேசத்தின் ஆதாரம்.!


""விவசாயிகளிடம் சமூகம் வாங்கும் பொருள்களுக்கு மலிவான விலையே கொடுக்கப்படுகிறது. அதே விவசாயி தனக்காக ஒரு பொருளை வாங்க நினைக்கும்போது, சமூகம் சொல்லும் விலை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. பற்றாக்குறைக்கு விவசாயி, தனது சேமிப்பையே பயன்படுத்த வேண்டும். சேமிப்பை பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டால், சாகுபடிக்கு என்ன செய்வது? கடன்தான் வாங்க வேண்டும். ஆக, இந்த உலகுக்கு உணவு படைப்பதற்காக அல்லும் பகலும் உழைத்துக்கொண்டே இருக்கும் உழவனைக் கடனாளியாக்குவது யார்? அரசுகளும் சமூகமும்தானே! விதையை விற்றுவிட்டு வாழ்வைத் தொலைக்கும் அவலத்துக்கு விவசாயிகளைத் தள்ளுவது நியாயமா?'' - என கேள்வி கேட்டு அதற்குப் பதிலும் தருகிறார் இயக்குநர் சுப்ரமணியம் சிவா.  "வெள்ளை யானை' படத்தின் மூலம் விவசாயப் பின்னணியைக் கதையாக்கி வருகிறார்.

"வெள்ளை யானை' தலைப்பே வசீகரமாக இருக்கிறதே...
வெள்ளை யானை என்பது விவசாயிகள்தான். எல்லா விதைகளும் வெள்ளை நிறத்தால் ஆனது. எல்லாவற்றுக்கும் ஆதாரம் உணவு. இந்த உணவின் அடிப்படை விதைகள். விதைகள் இருந்தால்தான் உணவை உற்பத்தி செய்யலாம். உணவுக்கு எப்படி விதைகள் மையமாக இருக்கிறதோ, இந்த உயிர்கள் வாழ்வதற்கு மையமாக இருக்கிறவன் விவசாயி. மருத நிலத்தின் அரசன் இந்திரன். இந்திரனின் வாகனம் வெள்ளை யானை. இந்தத் தலைப்புக்குப் பின்னால் இப்படிப் பல கதைகள் இருக்கின்றன. அது ஒரு உருவகம்தான். மற்றபடி விவசாயம்.. விவசாயி... இதுதான் கதை.  
இலக்குகளுடன் இந்தப் பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கனத்து ஞாபகங்கள் முளை விடுகின்றன. அப்படி எனக்குள் உருவான ஒரு அம்சம்தான் இதன் கரு. விவசாயம்தான் பேசு பொருள்.   அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு.விவசாய நிலம் என்பது கதையின் நெகிழ்வான பின்னணிதான். மனித உறவுகளும் முதன்மையானது. விவசாயத்தின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும்  உணவை சார்ந்து இருக்கின்றன.  விவசாயம் நீரை சார்ந்துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் சொல்லுவதே கதை. 

வேறு எந்த அம்சத்தைக் கதை முன்னெடுக்கும்...
பெரும்பாலும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ஊர்களில் விவசாயம் பார்க்கிறார்கள். அடுத்தத் தலைமுறை எல்லாம் வெவ்வேறு வேலைகளுக்குப் போய் விட்டோம். தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்ய வருவதை விவசாயத் தகப்பன்களே விரும்பவில்லை. இந்த கஷ்டம் எல்லாம் என்னோடு போகட்டும் என்பதுதான் அவர்களின் நினைப்பு. விவசாயம்தான் ஒரு தேசத்தின் ஆதாரம். அதை மெல்ல மெல்ல சாகடித்து விட்டால் என்ன ஆகும் இந்த தேசம். இதற்கு யார் பொறுப்பு. வீரிய விதையும் ஒட்டு விதையும் தந்து விவசாயத்தைக் கீழே இழுப்பது யார்.

 பக்கத்து மாநிலம் கேரளத்தில் எல்லா அரசு குழுக்களிலும்  ஒரு விவசாயிக்கும் இடம் உண்டு. விவசாயியின் ஆலோசனை அங்கு கேட்கப்படுகிறது. இங்கே ஒரு விவசாயியை எப்படி மதிக்கிறது அரசும் சமூகமும். விவசாயத்தை மட்டமாகப் பார்க்கும் சமூகத்தில்தானே இருக்கிறோம். ஒரு சினிமாக்காரரோ, கிரிக்கெட் வீரரோ அல்ல... விவசாயிதான் இந்த நாட்டின் கதாநாயகன் என்பதை உணருகிற காலம் வந்து விட்டது. விவசாயத்தின் மீதான கடமையையும், கருணையையும் நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளையும் உணரச் செய்வதுதான் இன்றைய முதல் தேவை. 

கதைக்காகச் சுற்றி வந்ததில் என்ன அறிந்தீர்கள்....
கதைக்காகச் சுற்ற வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் தஞ்சையின் பூர்வீகக்குடி நான். தஞ்சை பெரு நகரத்து மகன். விவசாயின் பிள்ளை. அதனால் எந்தச் சான்றையும் தேடி அலையவேண்டியதில்லை. இலக்குகளுடன் சென்னைக்கு வந்த காலத்திலிருந்து விவசாயத்தின் தேவையை உணர்ந்தே இருக்கிறேன்.

ஒரு வாய் சாப்பாடு... அம்மாவை, அப்பாவை, ஊரை, காதலியை, இழந்ததை, தவறுகளை, லட்சியத்தை... எதை எதையோ நினைவுப்படுத்தியிருக்கிறது. பசி ஏற்படுத்தும் அவமானத்தையும் வலியையும் விட வலியது வேறு இல்லை. பசியைத் தீர்ப்பது ஒரே கனிதான். ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம். பசியும் ஆசையும் உயிர்களை ஒரே பாதையில் துரத்திக் கொண்டே இருப்பது ஏன்... என்ற கேள்விதான் அவ்வப்போது பிரதானமாக எழும். 

நிலம் இழந்து துயரப் பரப்புகளில், பசியின் உதிரம் பெருகப் பெருக அலைய விட்ட வரலாற்றை எந்தச் சாபம் தண்டிக்கப் போகிறது. முக்கியமான தேவை நீர் ஆதாரம்தான். விவசாயிக்கு வேறு எதுவுமே தேவையில்லை. தண்ணீர் தந்தால் போதும். அவன் தற்சார்பு மனிதனாக மாறி விடுவான். மேட்டூரிலிருந்து குறிப்பிட்ட பத்து கிலோ மீட்டர் ஒன்றுக்காவது தடுப்பணைகள் வேண்டும். இது டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கியமான கோரிக்கை. 

நடிகர்களை விவசாயக் களத்துக்குப் பழக்கப்படுத்துவது கொஞ்சம் சவால் நிறைந்த வேலை...
நான் நம்பிய ஒரே நடிகன் சமுத்திரகனி. வாழ்க்கைக்குள் இருந்து நடிப்பைத் தேடுகிற மனிதன். கீழ் மட்டத்திலிருந்து சில உயரங்களைத் தொட்டவர். நம்பி போய் கதை சொன்னேன், நம்பிக்கையை ஏமாற்றாமல் கைக் கொடுத்தார்.

சில ஏக்கர் நிலங்களை உழுது, சேறாக்கி அதில் அவரை நடிக்க வைத்தேன். மூட்டை தூக்குவது, மடை மாற்றித் தண்ணீர் விடுவது, மாட்டு வண்டி ஓட்டுவது என எளிய விவசாயியாகவே மாறிப் போனார். அவரின் மனைவியாக ஆத்மிகா நடிக்கிறார். அவரின் பங்களிப்பும் ஒரு சேர கைக்கு வந்திருக்கிறது. இந்த இருவருமே கதையின் நகர்வுகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மூர்த்தி, சரண்யா, எஸ்.எஸ்.ஸ்டேன்லி, ராமதாஸ் இப்படிப் பல நடிகர்கள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com