Enable Javscript for better performance
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்!- Dinamani

சுடச்சுட

  

  இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 

  By DIN  |   Published on : 21st July 2019 10:17 AM  |   அ+அ அ-   |    |  

  kb

  தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர். 100 படங்களை இயக்கியவர், நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களை அறிமுகப் படுத்தி பெரிய நட்சத்திரங்களாக்கியவர். அவர்தான் இயக்குநர் சிகரம் என்று மக்களால் புகழப்படும் இயக்குநர் கே.பாலசந்தர். 
  இவரது 89- ஆவது பிறந்த நாள் சென்ற வாரம் கொண்டாடப்பட்டது. மூன்று விழாக்கள் மூலம் அவரது புகழை கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் விழா அவரது குடும்பம் நடத்தியது. அதாவது கவிதாலயா சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவரது மகள் புஷ்பா கந்தசாமியும், மாப்பிள்ளையான கந்தசாமி பரதனும் நடத்தினார்கள். 
  குறிப்பாக, ராஜேஷ் வைத்தியாவின் "Do you have a minute Series' "ஒரு நிமிடம் ஒரு பாட்டு' என்ற வகையில் சுமார் 30 நிமிடங்கள், நம்மை பாலசந்தரின் சினிமா உலகிற்கே அழைத்து சென்று விட்டார். 
  இந்த விழாவில் கவிதாலையா திரைப்பட நிறுவனம் யூ-டியூப் சேனலைத் துவங்கியது. இந்த விழாவில் கந்தசாமி பரதன் பேசும் போது பாலசந்தர் சொன்னதாக அவர் குறிப்பிட்டது. "நான் பெரிய திரைக்கும், சின்னதிரைக்கும் படமெடுத்து இருக்கிறேன். இனிமேல் அவர்களின் தனிப்பட்ட திரைக்கும் (personal screen) படமெடுக்க போகிறேன்' என்று சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பே சொன்னார். "தனிப்பட்ட திரை என்று சொன்னது ஒவ்வொருவர் கையிலும் உள்ள கைபேசி என்று இப்போது எனக்குப் புரிந்தது. என்ன ஒரு தீர்க்கதரிசி கே.பி'என்றார் கந்தசாமி பரதன். 
  "நான் எடுக்கும் படத்தில் உனக்கு சரியான பாத்திரம் இல்லை என்று கூறியவர், "சிந்துபைரவி'' படத்தில் நடிக்க அழைத்த போது வயதானவருக்கு இரண்டாம் தாரமாக நடிக்க வேண்டும் என்று பாலசந்தரின் உதவியாளர் அனந்து, சொன்னபோது கண்டிப்பாக ஏதாவது பண்ணுவார் என்று நான் நம்பினேன். அது நடந்தது' என்றார் சுஹாசினி.

  இரண்டாவது பிறந்த நாள் விழா பாரதிய வித்யா பவன் சார்பில் நடைபெற்றது. அதன் தலைவர் என்.ரவி தலைமை தாங்கினார். இயக்குநர் சிகரம் பாலசந்தர் பெயரில் விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்றவர் நடிகர் ஏ.ஆர்.எஸ். இந்த விருதை நிறுவியர் பாலசந்தரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான கவிதாலயா கிருஷ்ணன். 
  "ஒரு நாள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, இயக்குநர் பாலசந்தர் "என் பெயரில் விருது நிறுவி நீ வழங்குவாயா'"என்று கேட்டார். "அவர் விருப்பத்தைதான் நான் இன்று நிறைவேற்றி இருக்கிறேன்'' என்றார் கவிதாலயா கிருஷ்ணன். இந்த விருதை தலைவர் ரவி வழங்க, நல்லி குப்புசாமி செட்டி, இசைக்கவி ரமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். 
  தலைமை உரையில் என். ரவி, நடிகர் ஏ.ஆர்.எஸ். நடிப்பைப் புகழ்ந்தார். "அவர் சிறந்த நடிகர் மட்டும் அல்ல. பல முதலமைச்சர்களுடன் நடித்தவர். சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர், ஜெயலலிதாவுடன் நடித்து பாராட்டுப் பெற்றவர்.
  மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி வழங்கும் "புரஸ்கார்' விருது பெற்றவர். இந்த விருது இதுவரை தமிழகத்தில் நான்கு பேர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.சண்முகம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பூர்ணம் விஸ்வநாதன். ஜந்தாவதாக நமது நடிகர் ஏ.ஆர்.எஸ். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவர்' என்றார்.
  விழாவின் இறுதியில் பாலசந்தருக்கு பிடித்தமான நாடகம் நடைபெற்றது. அது மும்பை ஷண்முகானந்தா தியேட்டர் குரூப் நடத்திய "அர்த்தநாரீஸ்வரம்'' என்ற நாடகம். இந்த நாடகத்தை நடித்து, எழுதி, இயக்கியவர் சந்தோஷ்ராஜன் என்ற பெண்மணி. 
  நாடகம் முடிந்தவுடன் அவர் சொன்னதுதான் மனதை தொட்டது. இயக்குநர் சிகரம், மும்பை வந்த பொழுது இவரது நாடகத்தை பார்த்திருக்கிறார். இவரது நடிப்பை பார்த்தவுடன் இவரிடம் வந்து "சினிமாவில் நடிக்க விருப்பமா?' என்று கேட்டிருக்கிறார். "இயக்குநர் சிகரம் கேட்டும் என்னால் சினிமாவில் அன்று நடிக்க முடியவில்லை. அதற்கு காரணங்கள் பல. அப்படி நடிக்க வந்திருந்தால், நானும் இன்று ஒரு பெரிய நடிகை ஆகி இருப்பேன். ஆனால் அவரது பிறந்தநாளுக்கு சென்னையில் நாடகம் போடுவது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்று கூறினார்''சந்தோஷ் ராஜன். 
  மூன்றாவது விழாவை பாலசந்தரின் உதவியாளர் மோகன் நடத்தினார். சென்னை சாலிகிராமம் கோல்டன் மஹாலில் நடைபெற்ற விழாவில் நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
  - சலன் 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai