Enable Javscript for better performance
என்றும் இருப்பவர்கள்! 25- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  என்றும் இருப்பவர்கள்! 25

  By  சா. கந்தசாமி  |   Published On : 21st July 2019 09:54 AM  |   Last Updated : 21st July 2019 09:54 AM  |  அ+அ அ-  |  

  கார்த்திகேசு சிவதம்பி

   நாவல் என்னும் இலக்கிய வகை, வாழ்க்கையை எவ்வாறு நோக்குகிறது அல்லது நாவல் என்னும் இலக்கிய வடிவத்தினுள் வாழ்க்கை எவ்வாறு விளக்கப்படுகிறது என்னும் பிரச்னையை ஆராய முனையும் நாம் அது தமிழின், தமிழ்ப் பண்பாட்டின் அக வியாப்தி காரணமாக இல்லாது பிற தாக்கங்களின் வழியாக அமைத்துக் கொள்ளப்பட்டது என்னும் உண்மையை மனத்திற் கொள்வது அத்தியாவசியமாகும்.
   நாவலும் வாழ்க்கையும்..
   கார்த்திகேசு சிவதம்பி
   ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டோடு உறவுகள் சீர்கெடும் போதெல்லாம் அதனை மேம்படுத்திக் கொள்ள மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பல காரியங்கள் செய்வதுண்டு. அவற்றில் முதலில் இருப்பது திரைப்படத் திருவிழாக்கள். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள், இசை, நடன நிகழ்ச்சிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புகள். தூதுக்குழுக்களை அனுப்புவதில் ஓர் அரசியல் இருப்பது போல, கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதிலும் ஓர் அரசியல் இருக்கிறது.
   இரண்டு நாடுகளுக்கும் அது தெரியும். ஆனால் தெரியாதது போல பாவனைச் செய்து கொண்டு இருப்பார்கள். பொதுமக்கள் தங்கள் நாட்டிற்கு வரும் நல்லெண்ணக் குழுக்கள் பற்றி அறிந்து கொள்ள பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் நிறையத் தகவல்கள் கொடுப்பார்கள். அது அரசியல் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பதட்டத்தைத் தணிக்கிறது. மக்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிடுகிறது. இதனை நாடுகளுக்கிடையில் வழக்கமாக நடைபெறும் அரசியல் தந்திரம் என்றே குறிப்பிட வேண்டும்.
   இலங்கையில் சிங்கள, பெளத்த பேரினவாத அரசுக்கும், தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியிருந்தது. இந்தியாவின் நிலைப்பாடு தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் கலாசார நிகழ்ச்சிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புகள் நடைபெற்று வந்தன. இலங்கைத் தமிழ் மொழி பேசப்படும் நாடாக இருந்ததால் தமிழ் எழுத்தாளர்கள் அதிகமாக அழைக்கப்பட்டார்கள்.
   1997-ஆம் ஆண்டில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்திய-இலங்கை எழுத்தாளர்கள் பங்கு கொள்ளும் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இலங்கை சார்பாக தமிழ் எழுத்தாளர்கள் என்ற முறையில் கார்த்திகேசு சிவதம்பி, சிவகுருநாதன், சிங்கள எழுத்தாளர்கள் என்று சிலரும், இலங்கை ஆங்கில எழுத்தாளர்கள் என்று ஜீன் அரசநாயகம், லட்சுமி ஜெயவர்த்தனே உட்பட சிலரும் அழைப்பட்டிருந்தார்கள்.
   இந்திய எழுத்தாளர்கள் என்று வங்காளத்தைச் சேர்ந்த பெண் கவிஞரும், பேராசிரியருமான லீலா பையா நாயர், தமிழில் எழுதும் அசோகமித்திரன் மற்றும் நானும் அழைக்கப்பட்டிருந்தோம். பத்து நாட்கள் விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இலங்கையில் கடுமையாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதனை உள்நாட்டுப் போர் என்பதை விட அரசின் தமிழின அழிப்பு என்றே குறிப்பிட வேண்டும். நாட்டின் முக்கியமான நகரங்களில் குண்டு வெடித்துக் கொண்டிருந்தது. சில அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டு வந்தார்கள். பொது அமைதி குலைந்தது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, கனடா, ஆஸ்திரேலியாவிற்குச் சென்று கொண்டு இருந்தார்கள்.
   தமிழர்கள் சொல்லொணாத சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்குத் தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் இலக்கியத் திருவிழாவில் அரசு பூர்வமான அழைப்பாளர் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டுமா என்ற ஐயம் ஏற்பட்டது.
   அசோகமித்திரனைக் கண்டு பேசினேன். அவர் 1979-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற தமிழ் நாவல் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர். அதோடு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ரயிலில் பயணித்தவர். அது நல்ல அனுபவமாக இருந்தது. "இலங்கை அமைதியாக இருந்த காலம். இப்போது நிலையே அடியோடு மாறிவிட்டது. ரத்தக்களமாக இருக்கிறது. அதனையும் பார்த்துவிட்டுக் கொழும்பில் இருக்கும் தமிழர்கள், சிங்களவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நேரடியாகப் பார்த்துவிட்டு வரலாம்'' என்றார் அசோகமித்திரன்.
   அது சரியாகவே பட்டது. இருவரும் சென்னையில் விமானம் ஏறி இலங்கையில் உள்ள பண்டார நாயக்கே சர்வதேச விமானத்தில் இறங்கினோம். ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு விமான நிலையத்தின் உள்ளேயே நின்று கொண்டு இருந்தார்கள். நாங்கள் சுங்கச் சோதனைக்காக வரிசையில் நின்றோம். வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. பாஸ் போர்ட்டை கையில் எடுத்துக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தோம்.
   சென்னையில் இருந்து இலங்கைக்குச் புறப்படும் போதே நண்பர்கள், கொழும்பு விமான நிலையத்தில் கெடுபிடிகள் அதிகம். அதுவும் தமிழர்கள் என்றால், பல மணி நேரம் சோதனை என்ற பெயரில் நிற்க வைத்து விடுவார்கள் என்று சொல்லியனுப்பி இருந்தார்கள்.
   இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமா என்று பேசிக் கொண்டே நின்று கொண்டிருந்தோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை அடையாளம் கண்டு கொண்டு முன்னே வந்தார்கள். பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு, எங்களை அழைத்துக் கொண்டு இலங்கை சுங்கத்துறை உயர் அதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். பாஸ்போர்ட் போட்டோவையும் எங்கள் முகத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு முத்திரைத்குத்தி பாஸ்போர்ட்டை கொடுத்தார்கள். ஐந்து நிமிடத்தில் சோதனை முடிந்துவிட்டது. எங்கள் உடமைகளும் வந்திருந்தன. அவற்றையும் எடுத்துக்கொண்டு இந்திய தூதுரக அதிகாரிகளோடு வெளியில் வந்தோம். காரில் ஏறி ஒரு மணி நேர பயணத்தில் கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றோம். வழி நெடுகிலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு நின்று கொண்டு இருந்தார்கள். நகரமே பதட்டத்தில் இருப்பது போல இருந்தது.
   மாலையில் நானும், அசோகமித்திரனும் வெளியில் புறப்பட்டோம். எங்கே போகிறோம் என்று விசாரித்தார்கள். நெடுந்தூரம் போக வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச வேண்டாம். விரைவில் திரும்பி வந்துவிடுங்கள் என்றார்கள். அது என்னவோ அறிவுரை சொல்வது போலவே இருந்தது.
   அடுத்த நாள் ஒட்டல் அரங்கிலேயே இந்திய, இலங்கை இலக்கியக் கருத்தரங்கம் தொடங்கியது. இலக்கியக் கருத்தரங்கில் இந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள், சிங்கள மொழியில் எழுதும் எழுத்தாளர்கள், ஆங்கிலத்தில் எழுதும் இலங்கை எழுத்தாளர்கள் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்றிருந்தார்கள்.
   கார்த்திகேசு சிவதம்பி, தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் பங்கு பெற்றிருந்தார். அவர் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரைச் சென்னையில் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் நூல்கள் சிலவற்றை வாசித்துமிருக்கிறேன்.
   அவர் எனக்கு மட்டுமல்ல அசோகமித்திரனுக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறோம். அவர் முன்னே வந்து அசோகமித்திரன் கையைப் பிடித்துக் கொண்டார். "வா, கந்தா' என்று என்னை வரவேற்றார். எப்பொழுதும் அவர் என்னை "கந்தா' என்று கூப்பிடுவது தான் வழக்கம். எங்களை முன்னே அழைத்துக் கொண்டு ஜீன் அரச நாயகம் உட்படப் பல இலங்கை எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
   கார்த்திகேசு சிவதம்பி 1932-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் பிறந்தவர். ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புப் படித்தார். 1978-ஆம் ஆண்டில் தன் நாற்பத்தாறாவது வயதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்ற தலைப்பில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். நடிப்பதிலும், எழுதுவதிலும் பெரும் விருப்பம் கொண்டவராக இருந்தார்.
   இலங்கை சுதந்திரம் பெற்றதும் இன, மொழி பிரச்னைகள் ஏற்பட்டன. சித்தாந்த ரீதியில் பொதுவுடைமை தத்துவம் பலரையும் கவர்ந்தது. முற்போக்கு எண்ணங்கள் கொண்ட சிவதம்பி தமிழ் இலக்கியத்தை பொதுவுடைமை தத்துவ அடிப்படையில் பார்த்தார்.
   அவர் வயதொத்த இன்னொரு தமிழறிஞர் கனக சபாபதி கைலாசபதி. அவர் 1933-ஆம் ஆண்டில் மலேசியாவில் பிறந்த ஈழத்தமிழர். மறுமலர்ச்சி என்பது அரசியல், இலக்கியம், சமூகம் சார்ந்தது என்ற பொதுவுடைமைவாதி. அவர் "வீரகேசரி' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். நவீன தமிழ் இலக்கியம் பற்றி நிறையவே எழுதினார். இருவருக்கும் தமிழ்நாட்டில் பெரும் மதிப்பு இருந்தது. ஏனெனில் தமிழ்ப் பேராசிரியர்கள், திராவிடச் சிந்தனையாளர்களாக, தனித்தமிழ் பற்றாளர்களாகவும், பழம் பெருமை பேசுகிறவர்களாகவும் இருந்த போது இவர்களிருவரும் சர்வதேச களத்திற்குத் தமிழைக் கொண்டு சென்றார்கள். தமிழ் நாவல், தமிழ்ச்சினிமா, நவீன நாடகங்கள் பற்றியெல்லாம் பேசினார்கள்.
   கைலாசபதி, தனது நாற்பத்தொன்பதாவது வயதில் காலமாகிவிட்டார். அதனால் அவர் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டிய நிலை சிவதம்பிக்கு ஏற்பட்டுவிட்டது.
   சிவதம்பி சர்வதேச அளவில் நடைபெற்ற இலக்கியக் கலாசார, மொழி பற்றிய மாநாடுகளில் கலந்து கொண்டார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்
   தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் என்று பல நிறுவனங்களில் வருகை தரும் பேராசிரியராக உரையாற்றி வந்தார்.
   1995-ஆம் ஆண்டில் தஞ்சாவூரில், எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளப் பல நாட்டுத் தமிழறிஞர்கள் வந்தார்கள். அவர்களில் சிலரை மத்திய அரசு, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதியது. அவர்களைச் சென்னை விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்து புறப்பட்டு வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்தது. அப்படி இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் சிவதம்பி. ஆனால், அவர் வெறுப்படைந்து தமிழகம் வருவதைக் தவிர்த்தவர் இல்லை. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவர் தமிழகம் வந்தார். மாணவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என்று பலரிமும் அறிவு பூர்வமாகப் பேசிக்கொண்டு இருந்தார்.
   சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் சிவதம்பி ஒரு முறை தங்கியிருந்தார். நான், தமிழ் செம்மொழி நிறுவனத்திற்காக "ஐந்திணை'- என்று ஓர் ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அதில், அவரின் நேர்காணல் அவசியம் இடம் பெற வேண்டுமென விரும்பினேன். அது பற்றிச் சொன்னதும்," கந்தா எப்ப வர்ற' என்றார்.
   "நாளை'' என்றேன்.
   "ஒன்பது மணிக்கு வந்துவிடு'' என்றார்.
   அவருக்கு உடல் ரீதியாக எவ்வளவோ சிரமங்கள் இருந்தன. நடக்க முடியவில்லை. காரில் ஏறி அமரவோ, இறங்கவோ அவருக்கு உதவிகள் தேவைப்பட்டன. ஆனால், அறிவு பூர்வமாகப் பேசவும் எழுதவும் அவருக்குச் சிரமம் இல்லை. தங்கு தடையின்றிப் பேசி வந்தார். பேசுவதில் அவருக்கு பேரார்வம் இருந்தது.
   இந்தியா, இலங்கை இலக்கியக் கருத்தரங்கில் அவர் தான் நிறையப் பேசினார். அவருக்குத் தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருந்தது. உள்நாட்டுப் போர் எல்லாவற்றையும் போல், இலக்கிய முயற்சிகளையும் முடக்கிப் போட்டுவிட்டது என்று அவர் குறிப்பிட்டதைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட எல்லா எழுத்தாளர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதில் முன்னே இருந்தவர் இலங்கை ஆங்கில மொழி கவிஞர் ஜீன் அரச நாயகம்.
   ஜீன் அரச நாயகம் பர்கீஸ் பெண்மணி. பர்கீஸ் என்றால் இலங்கையில் டச்சு தகப்பனார்க்கும், சிங்கள தமிழ்ப் பெண்மணிக்கும் பிறந்தவர் என்பது பொருள். பர்கீஸ் என்பது டச்சு மொழிச் சொல். அதற்குக் குடிமகன், குடிமகள் என்பது பொருள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலம் அவர்களின் தாய்மொழி மாதிரியாகிவிட்டது.
   1933-ஆம் ஆண்டில் கண்டியில் பிறந்த, ஜீன், சாலமன் என்ற தமிழரைத் திருமணம் செய்து கொண்டு ஜீன் அரச நாயகம் என்றாகிவிட்டார். அவர் ஆங்கில மொழியில் கவிதைகள், பயணக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார். சமூகச் செயற்பாட்டாளர்.
   கருத்தரங்கம் முடிந்ததும், கண்டி வழியாக எங்களை "சிக்கிரியா' என்ற புகழ் பெற்ற சரித்திரம் முக்கியதுவம் பெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். எல்லாம் இலங்கையின் இனப்பிரச்னை, சமூக நிலைகள் மாறி வருவது, இந்தியா-இலங்கை நல்லுறவு பற்றியெல்லாம் பேசிக் கொண்டு சென்றோம். எங்களுக்கு வழிகாட்டியாக இலங்கை தொல்லியல் துறை துணை இயக்குநர் வந்தார். அவர் எங்கள் உரையாடலில் குறுக்கிடவோ; தடுக்கவோ முற்படவில்லை.
   கண்டி வந்தது. ஜீன், காரில் இருந்து இறங்கி எங்களைக் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் கணவர் வாசலில் நின்று வரவேற்றார். மரங்களுக்கிடையில் ஜீன் வீடு இருந்தது. வீட்டை சுற்றி பூச் செடிகள்.
   "வீடு நன்றாக இருக்கிறது' என்றேன்.
   "அம்மா கொடுத்த சீதனம்' என்று ஜீன் பெருமையுடன் சொன்னார். உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்தோம். பெரிய நூலகம் வைத்திருந்தார். அதில் சரித்திரம், கவிதை, இலக்கிய விமர்சனம், இலங்கை, இந்திய சரித்திர புத்தகங்கள் இருந்தன. புத்தக அலமாரியைத் துழாவினேன். ஜீன் அரச நாயகம் கவிதைப் புத்தகம் கையில் கிடைத்தது. அவரிடம் கொடுத்து ஒரு கவிதைப் படிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர் நான்கைந்து பக்கங்களைப் புரட்டினார். அப்புறம் ஒரு கவிதையைப் படிக்க ஆரம்பித்தார். அந்தக் கவிதை வரிகள்..
   இது எல்லாம் முன்னே நடந்தது
   இப்போது மறுபடியும் நடக்கிறது
   நாங்கள் அப்போது வெறும் பார்வையாளர்ளாக
   இருந்தோம்
   ஆனால் நான் இப்போது அப்படி இல்லை
   இது எனக்காக நடக்கிறது
   இது கடைசி சரித்திரம். அர்த்தம் கொண்டது!
   என்று அவர் முடித்ததும், நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். ஜீன் அரச நாயகம் தன் கவிதைப் புத்தகத்தை மூடி மடியில் வைத்துக் கொண்டார்.
   அரச நாயகம் எங்களுக்குத் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். பருக ஆரம்பித்தோம்.
   வானம் கருத்து இருள ஆரம்பித்துக் கொண்டு வந்தது. எங்களை "சிக்கிரியா' அழைத்துக் போக உடன் வந்த தொல்லியல் துறை துணை இயக்குநர் எழுந்தார். நாங்கள் கவிஞர் ஜீன் அரச நாயகத்திற்கும், அவர் கணவர் அரசநாயகத்திற்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துவிட்டு படியிறங்கி வெளியில் வந்தோம். குளிர்ந்த காற்று வீசியது. ஈழ மின்னல் அடித்தது. நாங்கள் காரில் ஏறினோம்.
   (அடுத்த இதழில் எல்.வி.பிரசாத், ஏ.வின்சென்ட்)
   
   
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp