Enable Javscript for better performance
என்றும் இருப்பவர்கள்! 26- Dinamani

சுடச்சுட

  
  kandasamy

  இந்தியாவில், ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் சினிமா படம் எடுக்கப்பட்டது. சினிமா என்பது காமிரா வழியாகக் காட்சிகளை எடுத்து ஒன்றாகத் தொகுத்துக் காட்டுவது. அறிவியலும், கலைகளும் சினிமாவாகிறது என்று சொல்லிவிடலாம்.
   இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் சினிமா படம் "ராஜா அரிச்சந்திரா'. மெய் மட்டுமே பேசும் "ராஜா அரிச்சந்திரா' கதை சமஸ்கிருதத்தில் முதன் முதலில் எழுதப்பட்டது. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான கதை. இந்தியர்கள் எல்லோருக்கும் தெரிந்த கதை. எல்லோருக்கும் பார்த்தவுடனே புரியும் என்பதைத் தெரிந்து கொண்ட தாதா சாகேப் பால்கே 1913-ஆம் ஆண்டில், சினிமா படமாக எடுத்தார். மெளனப்படம். அதாவது பேசாதப் படம்.
   "ராஜா அரிச்சந்திரா' படம் பேசாவிட்டாலும் மக்கள் பேசினார்கள். படத்தில் பேசப்படாதவற்றையும் சேர்த்துப் பேசினார்கள். படம் பெரும் வெற்றி பெற்றது. எனவே நவீன தொழில்நுட்பப் படமெடுக்க ஒவ்வொரு மொழியினரும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். புராண இதிகாச, நாடோடிக்கதைகளைப் படமாக எடுத்தார்கள்.

  1931-ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன் முதலாகச் சினிமா படங்கள் பேச ஆரம்பித்தன. இந்தி படமான "ஆலம் ஆரா'. தமிழ்ப்படமான "காளிதாஸ்', தெலுங்குப் படமான "பக்த பிரகலாதா' எல்லாம் பேசின. மக்கள் சினிமா பார்ப்பதற்கு அமைக்கப்பட்ட டென்ட் கொட்டகைகளில் உட்கார்ந்து பார்த்து பரவச முற்றார்கள். மூன்று பேசும் படங்களிலும் ஒரு கோயில் புரோகிதர் வந்து பேசினார். அவர் தான் எல்.வி.பிரசாத் என்று சுருக்கமாக அழைக்கப்படும், அக்கினிநேனி லட்சுமி வர பிரசாத் ராவ். 1908-ஆம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள ஏலூரில் பிறந்தவர். பேசும் சினிமா படத்தில் நடிக்கும் போது அவருக்கு இருபத்து மூன்று வயதாகி இருந்தது. தையல்காரராக மும்பையில் வாழ்க்கையைத் தொடங்கிய எல்.வி.பிரசாத் வாழ்க்கை சினிமா வாழ்க்கையாகிவிட்டது.
   நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல துறைகளில் பெரும் சாதனை புரிந்தவர். "சம்சாரம்', "மிஸ்ஸியம்மா', "மனோகரா' எல்லாம் அவர் சம்பந்தப்பட்டப் படங்கள் தான். 1982-ஆம் ஆண்டில் இந்தியாவில் சினிமாதுறையில் பெரும் பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும் "தாதா சாகேப் பால்கே' விருது அவருக்கு வழங்கப்பட்டது. சினிமா தணிக்கைக் குழுவின் உயர் மட்டக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் சாதாரணமாக மாநிலங்களில் செயல்படும் தணிக்கைக் குழுவினரோடு அமர்ந்து படம் பார்க்க வர மாட்டார்கள். பிரச்னைகளுக்கு உள்ளாகி மும்பை செல்லும் படங்களைப் பார்க்கவே செல்வார்கள்.
   "1983-ஆம் ஆண்டில் சென்னை சாஸ்திரி பவனில் செயல்பட்டு வந்த திரைப்பட தணிக்கை வாரியத்தில் ஓர் உறுப்பினராக இருந்தேன். படம் பார்த்து பொது மக்கள் பார்க்க உகந்ததா என்று சொல்வதுதான் உறுப்பினர்கள் வேலை. நான் உறுப்பினராக இருந்த போது கல்வியாளர்கள் வக்கீல்கள், ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், பெண்கள்- என்று பலரும் இடம் பெற்று இருந்தனர்.''
   ஒரு படத்தை நான்கு உறுப்பினர்கள், ஓர் அரசு அதிகாரி என்று ஐந்து பேர்கள் பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும். பொது இடத்தில் காட்டப்படும் எல்லா சினிமா படங்களும் சான்றிதழ் பெற வேண்டும். விளம்பரப்படம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட படம் உள்பட.
   வெளிநாட்டு தூதுவர்கள், தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட சினிமா படங்களை, சினிமா திருவிழாக்களில் காட்ட சான்றிதழ் பெற வேண்டியது இல்லை. அது சர்வதேச சட்டம்.

  இந்தியாவில் சினிமா மத்திய அரசின் பட்டியலில் இருக்கிறது. எந்த மொழி படமாக இருந்தாலும் மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரத்தில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தயாரிப்பாளர்கள் தங்கள் மொழி படம், அது பேசப்படும் மாநிலத்தில் உள்ள அலுவலகத்திலேயே சான்றிதழ் பெற விரும்புகிறார்கள். அதோடு மொழி தெரியாத மாநிலத்தில் சான்றிதழ் பெற சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்புவது இல்லை. அதன் காரணமாகவே இந்திப் படங்கள் மும்பையிலும், வங்க மொழி படங்கள் கொல்கத்தாவிலும், தமிழ்ப்படங்கள் சென்னையிலும் சான்றிதழ் பெறுகின்றன. மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களுக்கும் தணிக்கை உண்டு. அது பாடல், வசனம் சம்பந்தப்பட்டது. தணிக்கைச் சான்றிதழை படத்தின் ஒவ்வொரு பிரதியிலும் சேர்த்து இருக்க வேண்டும். இடையில் ஏதாவது துண்டுகள் சேர்த்தாலோ, குறைத்தாலோ குற்றம். எனவே சினிமாவிற்குச் சான்றிதழ் பெறும் போதே இயக்குநர், தயாரிப்பாளர் விழிப்புடன் இருப்பார்கள்.
   1984-ஆம் ஆண்டில் தான் எல்.வி.பிரசாத்தை முதன் முதலாகப் பார்த்தேன். வெள்ளை பேண்ட், வெள்ளை அரைக்கை சட்டை, கறுப்பு அரை கோட், வெள்ளை தலைமுடியுடன், அண்ணாசாலையில் இருந்த லிட்டில் ஆனந்த் திரையரங்கிற்குள் வந்தார். அவரை மானேஜர் கல்யாணம் அழைத்து வந்தார்.
   எல்.வி. பிரசாத் உள்ளே வந்ததும் கரம் கூவித்து வணங்கினார். எல்லோரும் எழுந்தோம். இளம் வயது பெண்கள் அவர் காலைத் தொட்டு வணங்கினார்கள். சிலரோடு கை குலுங்கினார். பிறகு தனியாக ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மணி பத்தாகியது. திரைப்படம் ஓட ஆரம்பித்தது. என்னிடம் ஸ்கிரிப்ட் நோட்டை கொடுத்தார்கள். படம் பார்த்துக் கொண்டும், ஸ்கிரிப்ட்டை நோட்டம் விட்டுக் கொண்டும் இருந்தேன். அவர் படம் முடியும் வரையில் இருந்தார். "கோயில்' என்ற படம். சான்றிதழ் கொடுத்துவிடலாம் என்று உறுப்பினர்கள் சொன்னதும், எழுந்து வணக்கம் தெரிவித்து விட்டு சென்றார்.
   சினிமா படம் பார்க்கும் உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மாற்றப்படுவார்கள். எனவே ஒவ்வொரு படமும் புதியவர்களால் பார்க்கப்படுவது போலேவே இருக்கும். எனவே தான் பிரச்னைகள் வருவதுண்டு. சில பிரச்னைகள் சினிமா தணிக்கை வாரிய உறுப்பினர்களால் வருவது; பல பிரச்னைகள் சினிமா தயாரிப்பாளர், இயக்குநரால் வருவது. இறுதியில் சமரசம் ஏற்படும். சில சமயங்களில் பிரச்னை உச்சநீதிமன்றம் வரையில் செல்வதும் உண்டு.
   எல்.வி பிரசாத்தோட நான் ஐந்தாறு முறைகள் சினிமா பார்த்து இருக்கிறேன். ஸ்கிரிப்ட் சரி பார்த்து கொடுத்திருக்கிறேன்.
   டேவிட் லாரன்ஸ் என்ற உறுப்பினர், தமிழ்ப்படங்களில் திருடர்கள், அயோக்கியர்கள் எல்லாம் பீட்டர், தாமஸ், ஜான்- என்ற பெயர்களிலேயே வருகிறார்கள். அதை அனுமதிக்கக்கூடாது என்றார். எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
   "கிறிஸ்துவ பெயர்களை எல்லாம் நீக்க வேண்டும்' என்று குரலை உயர்த்திக் கேட்டார்.
   "நம் எல்லோருக்கும் மதம் இருக்கிறது எந்த மதத்தின் கடவுள், சீடர்கள், தீர்க்கத்தரிசிகள் பெயரும் கெட்டப் பெயர்கள் இல்லை. நல்லவர்கள் பெயர் கொண்ட சிலர் ஏதோ கெட்டக் காரியங்கள் செய்து விடுகிறார்கள். படம் எடுத்தவர்கள் நோக்கம் கிறிஸ்துவ மதத்தைப் பழிக்கவோ- மற்ற விதத்தில் இகழவோ இருப்பது மாதிரி இல்லையே' என்றேன்.
   ""நீங்கள் இப்படி எல்லாம் சொல்லக்கூடாது'' என்றார்.
   "இந்தப் பிரச்னைப் பற்றித் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், இயக்குநர்கள் சங்கத்திற்கும் கடிதம் எழுதுகிறேன்'' என்றார் தணிக்கை குழு அதிகாரி.
   சினிமா படம் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டு விட்டு புறப்பட்டோம். தோள் மீது ஒரு கை அழுத்தியது. திரும்பிப் பார்த்தேன், எல்.வி.பிரசாத் புன்னகைப் பூத்தார். கரம் கூப்பி அவர் வெளியில் செல்ல வழிவிட்டு ஒதுங்கி நின்றேன். அவர் என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றார்.
   சினிமாவில் இயக்குநர் கண் என்றால்- அதை நிலை நாட்டுகிறவர் ஒளிப்பதிவாளர் எனும் காமிரா மேன். எனவே சினிமாவில் ஒளிப்பதிவாளர் மிக முக்கியமானவர். அவரை ஒளிப்பதிவு இயக்குநர் என்கிறார்கள். சத்யஜித்ரே, "பதேர் பாஞ்சாலி' தொடங்கி பல படங்களுக்கு ஒளிப்பதிவு இயக்குநராக இருந்தவர் சுப்ரதா மித்ரா.
   வங்காள ஒளிப்பதிவாளர்கள் இந்திய சினிமாவில் ஜொலித்தார்கள். அவர்கள் ஒருவர் கமால் கோஷ். அவர் பல தமிழ்ப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக இருந்தார். 1948-ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த ஜெமினி, எஸ்.எஸ். வாசன் தயாரித்த "சந்திரலேகா' ஒளிப்பதிவாளர் கமால் கோஷ். இன்னொருவர் கே.ராம்நாத். இவர்களின் உதவி இயக்குநர் ஏ.வின்சென்ட். இளம் வயதிலேயே பெரிய ஒளிப்பதிவாளர்களிடம் பயிற்சி பெற்ற அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி சினிமா படங்கள் பலவற்றுக்கு ஒளிப்பதிவு இயக்குநராக இருந்தார்.
   காட்சியைப் பதிவு செய்வது மட்டும் ஒளிப்பதிவாளர் வேலையில்லை. தன் கற்பனையால் காட்சிக்கு அழகூட்டுவதும் ஒளிப்பதிவாளர் தான். கருப்பு-வெள்ளையாக சினிமா இருந்த போது வின்சென்ட் சினிமாவில் நுழைந்தார். ஒளிப்பதிவில் மனத்திற்கு இனிய முறையில் காட்சிகளைப் பதிவு செய்தார். தென்னிந்திய சினிமாவில் ஒரு நட்சத்திரம் போல அவர் இருந்தார். அவர் ஒளிப்பதிவு இயக்குநராக வாழ்க்கையைத் தொடங்கி சினிமா இயக்குநராகவும் தடம் பதித்தார். 1964-ஆம் ஆண்டில் அவர் இயக்கிய "பாகீர்வதிநிலையம்' பெரும் புகழ் பெற்றது. அது முகமது பஷீர் கதை.
   அவர் இயக்கிய "துலாபாரம்' 1968-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அது தோப்பில் பாசியின் கதை. நான்கு மொழிகளில் வெளிவந்தது. பல பரிசுகள் பெற்றது. ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்", "காதலிக்க நேரமில்லை', "கல்யாண பரிசு' எல்லாம் வின்சென்ட் ஒளிப்பதிவில் உருவானவை.
   1996-ஆம் ஆண்டில் டில்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் தூர்தர்ஷனில் இருந்து "சாயாவனம்' நாவலை குறும்படமாக எடுக்க நிதி உதவி செய்தது. "சாயாவனம்' சுற்றுப்புற சூழல் பாதுகாப்பைப் பற்றி கலாபூர்வமாகச் சொல்கிறது; அது நாட்டிற்கு அவசியம் என்றே அனுமதி கொடுத்தார்கள்.
   சாயாவனத்தின் இயக்குநர் ஏ.வின்சென்ட். அவரிடம் நாவல், திரைக்கதை, வசனத்தைக் கொடுத்த ஒரு வாரத்தில் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்தார். இயக்குநராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்தார். சாயாவனத்தில் வரும் பல காட்சிகளை ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தார். அவற்றை மகிழ்ச்சியுடன் காட்டினார்.
   அது கலை மீதும், சமூகப் பிரச்னைகள் மீதும் அவருக்கு இருந்த அக்கறையைக் காட்டுவதாகவே இருந்தது. அரசாங்கத்தின் நிதி உதவி எப்போதும் போல "சாயாவனம்' குறும்படம் எடுப்பதற்கும் குறைவாகவே இருந்தது. எனவே அவரிடம் மிகுந்த தயக்கத்தோடு, "என்ன எதிர்பார்க்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
   "எனக்குச் சம்பளம் ஒரு பிரச்னையே இல்லை. எனக்கு என்ன கொடுக்க முடிகிறதோ அதைக் கொடுங்கள் அதுவும் அவசரமில்லை. அட்வான்ஸ் எல்லாம் ஒன்றும் வேண்டாம்' என்றார்.
   அது சரியாக இருக்காது. சிறுதொகைக்கு செக் கொண்டு வந்திருக்கிறேன். என்று காசோலையை அவரிடம் நீட்டினேன். அவர் தலையசைத்து வாங்க மறுத்துவிட்டார்.
   அவரோடு பதினைந்து நாட்களுக்கு மேல் பணியாற்றினேன். அவர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு காட்சியும் சரியாக வர வேண்டுமென்று படம் எடுத்தார். "சாயாவனம்' சினிமா படம் இல்லை. வீடியோ படம். அரசாங்கத்திற்கானது. அரசாங்கத்திடம் கூடுதல் பணம் கேட்க முடியாது.
   சென்னை தூர்தர்ஷன் நிலையத்தின் இயக்குநராக இருந்த ஏ.நடராஜன், அனுப்பியதாக சில அதிகாரிகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். டில்லிக்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டுமென்று போட்டோ பிடித்துக் கொண்டு சென்றார்கள்.
   சென்னை தூர்தர்ஷன் நிலைய இயக்குநர் நடராஜன், ஒரு முறை அழைத்து "சாயாவனம்' படப்பிடிப்பு செலவு பற்றி எல்லாம் விசாரித்தார். பிறகு அவரே சொன்னார்: " இயக்குநர் ஏ.வின்சென்ட் புகழ் பெற்றவர். திறமைசாலிதான். ஆனால் செலவைப் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் அதிகாரிகள் பட்ஜெட்டிற்குள் முடிக்க முடியாது போய்விடலாம் என்று சொல்கிறார்கள். அதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதைச் சொல்லத்தான் உங்களை வரச் சொன்னேன்' என்றார்.
   நானும் "சரி' என்று கேட்டுக் கொண்டேன்.
   ஏ.வின்சென்ட்டிற்கு ஒரு வாரத்திற்குள் நிலைமைத் தெரிந்து விட்டது. அதன் செயற்பாடுகளை சிறிது மாற்றிக்கொண்டார். பல காட்சிகள் வேகமாக எடுக்கப்பட்டன. வேகம் என்பதால் மனம் போன போக்கில் எடுக்கப்படவில்லை. துல்லியமான முறையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டது.
   அவரோடு பல நாட்கள், சினிமா, இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர்கள், மலையாள இலக்கியம், தமிழ் எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் உரையாடி இருக்கிறேன். அவருக்கு சினிமா, இயக்கம், ஒளிப்பதிவில் அதிகமான அக்கறை இருந்தது. "சந்திரலேகா' படத்தில் கமால் கோஷிடம் தான் பயிற்சி பெற்றதை அடிக்கடி நினைவு கூர்ந்து சொன்னார். கமால் கோஷ் அடிப்படையில் ஒரு வக்கீல். ஆனால், கலைஞர். சினிமாவை தன் ஒளிப்பதிவு மூலமாக முன்னெடுத்து சென்றார்.
   அவருக்குத் தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்தமான நடிகர் சிவாஜி கணேசன். ஒரு முறை சிவாஜி பற்றி குறிப்பிட்டார். "அவர் உயரம் கொஞ்சம் குறைவு. ஆனால், ஒப்பனை பூசிக் கொண்டு காமிராவிற்கு முன்னே வந்து நின்றதும், "ஆக்ஷன்' என்றால் விஸ்வரூபம் எடுத்து ஏழடிக்கு மேலே உயர்ந்துவிடுவார்' என்றார்.
   "காமிராவிற்குப் பின்னால் இருந்து சாகசம் புரியும் உங்களையெல்லாம் காமிராவிற்கு முன்னே கொண்டு வந்து நடிக்கவிட்டால் எப்படி இருக்கும்' என்று கேட்டேன்.
   நான்கே முக்கால், ஐந்தே கால் அடியிருக்கும் நாங்கள் மூன்றரையடி, நான்கு அடியாளாக குறுகிப் போய்விடுவோம் என்று சொல்லிவிட்டு சிரித்தார். 2015-ஆம் ஆண்டில் தனது 86 வயதில் உயிர்நீத்தார்.
   காமிராவிற்குப் பின்னால் இருக்கிறவர்கள் முன்னே நிற்கிறவர்களை என்றும் இருப்பவர்களாக்கி விடுகிறார்கள்.
   (அடுத்த இதழில் அகிலன், நா பார்த்தசாரதி)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai