Enable Javscript for better performance
சைக்கிள் உருவான கதை- Dinamani

சுடச்சுட

  
  cycle

  பைக், கார் வந்ததும் இன்று நம் வீட்டில் ஓரம் கட்டப்பட்டு காணாமல் போன ஒன்று சைக்கிள்! இந்த சைக்கிள் உருவான கதை சற்று சுவராசியமானது. முன்பு நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக விளங்கியது சைக்கிள். இந்த சைக்கிளை கண்டுபிடித்தவர்கள் சாதாரண கொல்லர்களே!
  1817

  17-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவர் காய்ந்த மரத்துண்டுகளை எடுத்து வந்து செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்கார பொருட்களை உருவாக்கினார். அப்படி அவர் மரத்துண்டுகளை வைத்து உருவாக்கியது தான் மிதிவண்டி. 
  1791-ஆம் ஆண்டு மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இதில் பெடல், பிரேக், ஸ்டீயரிங் என்று எதுவுமே கிடையாது. 1794-ஆம் ஆண்டில் தனது கண்டுபிடிப்பை பொதுமக்கள் மற்றும் அறிஞர்கள் முன்னிலையில் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வு தான் சைக்கிள் உருவாவதற்கு காரணமாக அமைந்தது. 
  ஷிவ்ராக்கின் தொழில்நுட்பத்தை முன் மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ராய்ஸ் (karl von Drais))1817-ஆம் ஆண்டு சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளில்தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் வடிவமைக்கப்பட்டிருந்தது. முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818-ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட சைக்கிள் இது தான்.
  மரத்துண்டுகளால் தயாரிக்கப்பட்ட சைக்கிளை முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்க முயற்சித்தார் லண்டனைச் சேர்ந்த டெனிஸ் ஜான்சன் (Denis Johnson). இவர் ஒரு கொல்லர். 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப் பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதுவும் காலால் தரையை உந்திதள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில் தான் இருந்தது. இது சைக்கிள் பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 
  இதற்கு அடுத்த கட்டமாக பெடல் மூலம் இயங்கும் சைக்கிளை க்ரிக்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) வடிவமைத்தார். ஆகையால்தான் சைக்கிளை கண்டறிந்தவராக க்ரிக்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளபடுத்தபடுகிறார். ஸ்காட்லாந்து நகரில் கொல்லராக வேலை பார்த்த அவர் ஸ்டீயரிங், பிரேக், பெடல் என அனைத்து பாகங்களும் கொண்ட சைக்கிளை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார். இதனைத் தொடர்ந்து பெடலின் வசதியை மேம்படுத்த முடிவு செய்தார் எர்னெஸ்ட் மிசாக்ஸ் ( Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர். அதில் அவர் தீவிரமாக இறங்கினார். இவரது கடின உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்க் (Crank) மற்றும் பால் பியரிங் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்ட பெடல் ஒன்றை தயாரிப்பதில் வெற்றி பெற்றார்.
  1870- ஆம் ஆண்டு வரை சைக்கிளின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சைக்கிளின் சக்கரம் மட்டும் மரத்தினால் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து இரும்பினாலான சைக்கிள் சக்கரத்தை தயாரிக்கும் பணியில் இறங்கினார். 1871-ஆம் ஆண்டு சக்கரத்தின் முக்கிய பாகங்களை தயாரிப்பதில் வெற்றிகண்டார். இவர் 1872-ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட சைக்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை பெண்களும் பயன்படுத்த தொடங்கினர். 
  சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் சங்கிலி (Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு வாகன தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது. இன்றைய நவீன சைச்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் 1885-ஆம் ஆண்டு புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டார். அவர் வடிவமைத்த சைக்கிள் தான் இன்று நாம் பயன்படுத்துவது. 
  1888-ஆம் ஆண்டு ஜான் பாய்ட் டன் லப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் மிதிவண்டிக்குத் தேவையான ரப்பர் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார். இதனை தொடர்ந்து சர் எட்முன்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் ஸ்டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன் லப் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் நகரில் "ஹெர்குலிஸ்' என்ற சைக்கிள் கம்பெனியை ஆரம்பித்தார். சைக்கிள் கம்பெனி உற்பத்தி தொடங்கிய பத்து ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் ஓட ஆரம்பித்தன. ஆனால், இன்றோ நாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சைக்கிள் பயணத்தை மறந்து விட்டோம்!
  - வனராஜன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai