அடிமைப்பெண்: 50

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக அறிவித்தது.
அடிமைப்பெண்: 50

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக அறிவித்தது. இது தொடர்பாக, சற்றே பின்னோக்கி பார்த்தால் தமிழ்த் திரைப் படங்களில் ஜெய்ப்பூரை ஒரு சில காட்சிகளில் காண்பித்திருந்தாலும், எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த "அடிமைப்பெண்' படத்தில் பெரும்பாலான காட்சிகளை ஜெய்ப்பூரில் படம்பிடித்திருப்பார்கள்
1963-ஆம் ஆண்டு "மீனவ நண்பன்' என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்த போதே எம்.ஜி.ஆர் மனதில் "அடிமைப்பெண்' தயாரிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால், மீனவ நண்பன் கைவிடப்பட்டு மீண்டும் 1977-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிக்க ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்தது. 
எம்.ஜி.ஆர் நடித்த பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோவிலேயே எடுக்கப்பட்டுவிடும் , வெளிப்புற காட்சிகள் குறைவாக இருக்கும் அல்லது அடியோடு இருக்கவே இருக்காது என்ற எண்ணம் சில ரசிகர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் இருந்தது, அது உண்மையும் கூட, எனவே ரசிகர்களின் இந்த எண்ணத்தை மாற்ற "அடிமைப் பெண்' படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஓகேனக்கல் நீர் வீழ்ச்சி, ஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், ஊட்டி போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த வெளி இடங்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியான வெளிப்புறங்களில் படமாக்கினார். 
அதேபோல் எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் காதல் காட்சிகள்-பாடல்கள் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இப்படத்தில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா காதல் புரியும் காட்சிகள் நேரிடையாக இல்லை. 
பாசம் மற்றும் பழி உணர்வு கொண்ட இரட்டை வேடம்தான் "அடிமைப் பெண்' படத்தில் வரும் இரு கதாநாயகிகளின் வேடம். இரு வேடங்களையும் செல்வி ஜெயலலிதா செய்திருப்பார்.. அந்தளவிற்கு அவர் நடிப்பின் மீது எம்.ஜி.ஆர் நம்பிக்கை வைத்திருந்தார். நம்பிக்கையின் வெற்றிப் பரிசாக தன் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். 
இப்படத்தில் "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலையும் பாடியிருப்பார் ஜெயலலிதா. இப்பாடலை பாடுவதற்கு பின்னால் சுவையான சம்பவம் நடந்தது. 
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த வேறோரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இடைவேளையில் நடன ஆசிரியர் சின்னி சம்பத்தும் - ஜெயலலிதாவும் இசையைப் பற்றி மிகவும் ஆழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தெரியாமல் இதைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், பேச்சு முடிவுற்றதும் இருவரின் அருகில் வந்து, இருவரும் இசையைப் பற்றி மிகவும் ஆழமாக பேசிக்கொண்டிருந்தீர்கள், இசையைப்பற்றிய நுணுக்கங்கள் தெரியுமா என்று கேட்க, இருவரும் "ஓ நன்றாகத் தெரியுமே' என்று கோரஸ் குரலில் சொல்ல, சரி நாளை நீங்கள் எனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்று ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கேட்க, நிச்சயமாக பாடித் தருகிறேன் என்கிறார். 
மறுநாள் எம்.ஜி.ஆரே தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெயலலிதாவை அழைத்துக்கொண்டு பாடல் ஒலிப்பதிவு கூடத்திற்குச் செல்கிறார். அங்கே காத்திருந்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம், அந்தப் பாடலை இவரை வைத்து பாட வையுங்கள் என்கிறார். இப்படியாகத்தான் இப்பாடல் ஒலிப்பதிவானது. ஜெயலலிதா பல்வேறு பரிணாமத்தில் தன் முழு நடிப்பை வெளிப்படுத்திய படம். 
உடலுக்கு மருத்துவம் வேறு, உள்ளத்துக்கு மருத்துவம் வேறு. உள்ளத்தில் தூய்மை இருந்தால், காதலுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்பட முடியும். வாழ்க்கையில் அவர்கள் முழு வெற்றியை பெறுவார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் வைத்தியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சந்திரபாபு ஆகிய மூவரும் பனிப்புயலில் சிக்கி பிரியும் போது, "வேங்கையா நீ எங்கய்யா போன' என்று அடுக்கு மொழியில் பேசுவதும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா தப்பிப்பதற்கு "ஏமாற்றாதே ஏமாறாதே'' பாடலுக்கு முன்பாக பாலைவன மணலில் குழி தோண்டி தன்னைத்தானே புதைத்துக் கொண்டு புல்லாங்குழல் வழியாக மூச்சு விடும் காட்சியில் வருத்திக்கொண்டு நடித்திருப்பார். 1958-ஆண்டு வெளிவந்த "நாடோடி மன்னன்" திரைப்படத்திற்குப் பிறகு, பத்தாண்டுகள் கழித்து 1968-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன்' படத்தில் ரவுடி சந்திரனாக ஒரு காட்சியில் வந்து செல்வார். இதற்கடுத்து எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்த படம் "அடிமைப்பெண்' . இதுதான் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்த கடைசிப்படம். 
மந்திர சக்தி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிக்கூறி வாழ்க்கை நடத்துபவர்கள், பிறருக்கு உதவி செய்ய விரும்பினாலும் சில சமயங்களில் எப்படி தலைகீழான கதாபாத்திரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தைக் கொண்ட வேடத்தில் நடித்திருப்பார் சோ. 
இப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், தந்தை எம்.ஜி.ஆர் படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்படுவார். பிறகு மகன் - எம்.ஜி.ஆர்தான் படம் முழுவதும் வருவார். அதுவும் மிகவும் வித்தியாசமான ஐரோப்பிய கிராம மக்கள் அணியும் உடை. 
கம்ப்யூட்டர், கிராபிக்ஸ், அனிமேஷன், டிஜிட்டல் கேமரா போன்ற அதிநவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் படமாக்கப்பட்ட அடிமைப் பெண் படத்தில் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்ததால் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட படத்திற்கு 2019 - ஐம்பதாவது ஆண்டு (Golden Jubilee year). ரசிகர்களுக்குஅற்புதமான படத்தை கொடுத்த எம்.ஜி.ஆர் தமிழ்த் திரை உலகம் இருக்கும் வரை போற்றப்படுவார். 


அடிமைப்பெண் தகவல்கள்:
1. கண்ணதாசன் இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை
2. ஜே.பி. சந்திரபாபு பாடல் பாடாத 20 படங்களில் இதுவும் ஒன்றாகும்
3. சந்திரபாபு - எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசிப்படம். 
4. இப்படத்தில் நடித்ததற்காக 1969-ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதை பண்டரிபாய் பெற்றார்.
5. இப்படத்திற்கு பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி போடும் பழக்கம் ஏற்பட்டது.
6. நாயகனும்-நாயகியும் ஒரே படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் இரண்டு. ஒன்று "அடிமைப்பெண்' மற்றொன்று "கோகுலதாஸி'.
7. "காலத்தை வென்றவன் நீ'' பாடலின் இறுதியில் வரும் ஆலாபனையை பி.சுசிலாவும் - எஸ். ஜானகியும் ஒரு நிமிடம் 3 விநாடிகள் பாடியிருப்பார்கள்.
-ரா. சுந்தர்ராமன்
படங்கள் உதவி : "ஸ்டில்ஸ்' ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com