இந்த தலைமுறைக்கு தெரியாத மனிதர்கள்...!

தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இப்போது இயக்குநர் மாரிமுத்துவின் முறை.
இந்த தலைமுறைக்கு தெரியாத மனிதர்கள்...!

தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இப்போது இயக்குநர் மாரிமுத்துவின் முறை. புதுமுக இயக்குநரான இவர் இயக்கிய "தொரட்டி' பஞ்சாப் திரைப்பட விழாவில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 3 நாடுகளின் திரைப்பட விழாக்களில் பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இவருக்குக் கிடைத்த கொண்டாட்டமான வரவேற்பு மாரிமுத்துவை மேலும் மலர்த்தியிருக்கிறது.
 "நிறையத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் விருது வாங்கி வந்திருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சவுண்ட் என நிறைய விருதுகள்.... பஞ்சாப் விழாவில் சிறந்தப் படத்துக்கான விருது வாங்கியிருப்பதில் கூடுதல் சந்தோஷம். இந்தப் படத்தை அடுத்து நம் தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டு வர இருக்கிறேன். நம் படம் இந்த விருதுகளுக்கெல்லாம் சரியானதா என்பதைத் தமிழ் ரசிகர்களுக்கு முன் வைத்து பார்க்கப் போகிறேன்.'' நம்பிக்கை கரம் கொடுத்து பேசத் தொடங்குகிறார் மாரிமுத்து. இயக்குநர் பாக்யராஜின் மாணவராக இருந்து வெள்ளித்திரைக்கு வருகிறார்.
 "இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்தேன். கிடை போட்டு வாழும் சமூகத்துக்கு ஆதாரமே தொரட்டிதான். பெரிய கம்பின் முனையில் சிறு அரிவாள் கட்டி வைத்திருப்பார்கள். ஆடுகளை மேய்க்கும் போது அதற்கான இலை, தழை, கருவக்காய் என குலைகளை இழுத்துப் போட்டு அதற்கு உணவளிப்பதுதான் தொரட்டியின் வேலை. அதே நேரத்தில் அந்த மனிதர்களின் பயணம், வாழ்க்கை, கௌரவம், தன்னியல்பு எல்லாமும் தனிச் சிறப்பு மிகுந்தது. அப்படி உருவானதுதான் இந்தப் படம்.''
 
 திரைக்கதை வடிவம் எப்படியிருக்கும்....?
 பழங்கால விவசாயத் தொழில்களில் முதன்மையான இடம் இந்தக் கிடைத் தொழிலுக்கு உண்டு. செயற்கை உரங்கள் கண்டுபிடிக்கப்படாத காலக் கட்டத்தில், கிடைப் போட்டுத்தான் நிலங்களுக்கு உரம் பிடிக்க வேண்டும். ஆடு மற்றும் மாட்டு மந்தைகளை நிலங்களில் அடைத்து வைத்து, அது போடும் கழிவுகளைக் கொண்டு விவசாயம் செய்து வந்தோம். இதுதான் நம் ஆதி விவசாயத்தின் ஆதாரம். இப்போது எல்லாம் மாறி விட்டது. நிலங்களைச் செயற்கை உரங்களுக்குத் தாரை வார்த்து விட்டோம். விளைவு பாம்பு, தவளை, நண்டு, மண்புழு என எந்த உயிரினங்களும் நிலத்தில் இல்லை. எல்லாவற்றையும் செயற்கை உரங்களுக்குப் பலியாக்கி விட்டோம். நண்டு, மண்புழு எல்லாமே விவசாயிகளின் தோழர்கள். இது இல்லாமல்தான் இப்போது விவசாயம் நடந்து வருகிறது. கிடைப் போடுபவர்கள் இங்கே டெல்டா மாவட்டங்களில் பெரிதும் தென்படுவார்கள். பெரும்பான்மையானவர்களுக்கு ராமநாதபுரமே சொந்த பூமியாக இருக்கும். அங்கிருந்து கிளம்பி வருபவர்கள், நாகை வரை கால்நடையாகவே ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வருவார்கள். கிராமங்களில் தங்கி அங்குள்ள நிலங்களில் கிடைப் போட்டு வருமானம் ஈட்டுவார்கள். இதுதான் இந்தக் கதையின் பின்னணி. இப்போது இவர்களை அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. விவசாயம் செய்யும் தலைமுறைகள் மாறி விட்டதால், கிடை போட்டு பிழைத்தவர்களின் தலைமுறைகளும் மாறி விட்டன. சிறு வயதில் நான் பார்த்துப் பழகிய கிடை மனிதர்களின் வாழ்க்கையும், இப்போது எஞ்சியிருக்கும் சில கிடை மனிதர்களின் பயணங்களையும் தீர விசாரித்து கதை பின்னியிருக்கிறேன். அதை 80}களின் காலக் கட்டத்துக்கே எடுத்துச் சென்றிருக்கிறேன்.
 கிடை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்க ..... பெரும் உழைப்பு வேண்டுமே....
 கிடை மனிதர்களின் நட்பு, துரோகம், ஏமாற்றம் என பலவற்றை இது பேசும். நம்மில் பலர் பழகாத ஒரு வாழ்க்கை. இப்படியாகவும் சில மனிதர்கள் இருந்திருப்பார்கள் என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த வாழ்க்கைக்குள் கடத்திச் செல்லும் முனைப்பில் உழைத்திருக்கிறோம். இப்போது செருப்பு இல்லாமல் பத்தடி கூட நம்மால் நடக்க முடியவில்லை. பழக்கப்பட்ட குடிநீர் மாறினால் காய்ச்சல் வந்து விடுகிறது. சுமார் 6 மாத காலம் நடிகர்களுக்குப் பயிற்சி அளித்து கதைக்கு உருவகம் கொடுத்திருக்கிறேன்.
 நடிகர்களின் பங்களிப்பு மிக அவசியம்....
 வெட்ட வெளியில்தான் முழுப் படமும். எந்தப் பிரத்யேக அரங்கும் கிடையாது. திடீரென்று மழை பெய்யும். திடீரென்று காற்று வீசும். எல்லாவற்றுக்கும் காத்திருக்க வேண்டும். அதற்கான நடிகர்கள் புதுமுகங்கள்தான். ஷமன்மித்ரு. இவர்தான் கதாநாயகன். கே.வி.ஆனந்தின் உதவியாளர். மாயன் என்ற வேடம் மிக முக்கியமான வேடம். அந்த வேடத்தில் இவர் நடித்திருக்கிறார். பொள்ளாச்சியைச் சேர்ந்த சத்யகலா ஹீரோயின். இந்த இரண்டு பேரிடமும் கேட்கும் தேதிகள் இருந்தன.
 குறிப்பாக 80}களைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காண்பிப்பது பெரும் சவால். கோகுல் சாண்டல் பவுடர், ரோஸ் கலர் ரிப்பன், மருதாணி காயும் விரல்கள், காற்றில் உருளும் கொத்து முடி, பித்த வெடிப்புப் பாதம், ஈரம் ததும்பும் ஸ்பரிசங்கள்... இப்படி நிறைய விஷயங்களை உன்னிப்பாக கொண்டு வந்தோம். இந்த இரண்டு பேருக்குமான காதல், படத்தின் முக்கியப் பங்கு வகிக்கும்.
 செல்போன் கோபுரம், கேபிள் வயர்கள், போக்குவரத்துச் சத்தங்கள் இல்லாத பகுதிகளில்தான் படப்பிடிப்பு. குடிக்கும் தண்ணீரை கூட சுமந்து செல்ல வேண்டும். போய்க் கொண்டே இருப்போம். திடீரென்று ஒரு இடம் வரும். அங்கே கேமிரா வைப்போம். அவர்கள் நடிப்பார்கள். இது தவிர மற்ற நடிகர்களின் உழைப்பும் அபாரம்.
 - ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com