Enable Javscript for better performance
அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள்- Dinamani

சுடச்சுட

  
  sk1


  இந்தியாவிலேயே முதன்முறையாகச் சென்னையில் பிரத்யேகமான அரிய வகை ஆழ்கடல் மீன் காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கத்திலுள்ள வி.ஜி.பி தங்கக்கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் காட்சியகத்தைப் பார்வையிட பார்வையாளர்களில் ஒருவராக நாமும் சென்றோம். கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் ஏராளமான குட்டீஸ்களைப் பார்க்க முடிந்தது.

  மீன் காட்சியகத்தில் பள்ளத்தாக்கு, சதுப்புநிலம், மழைபொழியும்காடு, ஆழ்கடல், கடலோரம் என ஐந்து மண்டலங்களாக பூமிக்கு அடியில் பிரித்து உருவாக்கி இருக்கிறார்கள். செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட குடுவைகளில் பல அரிய வகைக் கடல் வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் நடுவே நின்று புகைப்படம் எடுப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி என்ன ஸ்பெஷலான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. மீன் காட்சியகத்தின் பொறுப்பாளரான கண்ணனிடம் பேசினோம்:

  ""வெளிநாடுகளில் உள்ள மீன்காட்சியகத்திற்கு நிகராகச் சர்வதேச அளவில் இந்த மீன் காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறோம். இதனை வடிவமைப்பதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது. இங்கு 90 அரிய வகை மீன்கள் காட்சிப்படுத்தியிருக்கிறோம். இவை இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, மாலத்தீவு, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் ஆழ்கடல் பகுதியிலிருந்து இருந்து வரவழைக்கப்பட்டவை. 

  கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை அப்படியே நாம் பார்வையாளர்களுக்குக் காட்சிபடுத்த முடியாது. அதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. முதலில் அவை பிடிக்கப்படும் போது காயம் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்கவேண்டும். அவை தனிமைப்படுத்தப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். முறையாக உணவு எடுத்துக்  கொள்கிறதா? மற்ற மீன்களுடன் சண்டை  போடுகிறதா? கடல்நீர்  அல்லாமல் அவற்றிற்கு எந்த வகை தண்ணீர் ஒத்துக்கொள்கிறது. தட்ப வெட்பநிலை போன்றவற்றைக் கண்காணித்து அதன் பிறகு தான் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். 

  குறிப்பாக மீன்களையே உணவாக உண்ணும்,  வேட்டையாடும் மீன்கள், ஊர்ந்து செல்லும் மீன்கள், தூங்கும் மீன்கள், நீர் மரப்பொந்தில் வாழும் மூரோ வகை பாம்பு மீன்கள், நட்சத்திர மீன்கள், சுராமீன்கள் "நீமோ' படத்தின் கதாபாத்திரமாக வரும் குட்டி வகை ஆரெஞ்சு மீன்கள், பாறைமீன்கள், லாப்ஸ்டர் மீன்களைப் பார்வையாளர்கள் அதிசயித்துப் பார்த்துச் செல்கிறார்கள். 

  மேலும் வெளிநாட்டில் உள்ள மீன் காட்சியகங்களில் இருப்பது போன்றே இங்கும் 70 மீட்டரில் ஆழ்கடல் கண்ணாடிக் கூண்டுப் பகுதி அமைத்துள்ளோம். இதற்குள் 50 இனங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் விடப்பட்டுள்ளன. இதில் 5 அடி நீளம் கொண்ட சுறா மீன்களே ஹைலைட். நாம் அந்தப் பாதையில் நடந்து செல்லும் போதே நம்முடைய தலையைக் கடிப்பது போல் மீன்கள் வந்து சென்று பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. 

  இதனைப் பராமரிப்பது கடினம் ஆயிற்றே?

  நாள்தோறும் இவற்றைக் கண்காணிப்பது அவசியம்.  உயர்  தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இருப்பதால் இந்தக் கண்ணாடி தொட்டியிலுள்ள தண்ணீரை மாற்ற வேண்டிய தேவை கிடையாது. அவை மறுசுழற்சி செய்யப்பட்டு உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகிறது. மீன்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  மேலும் இந்த மீன்களுக்கு உணவளிக்கத் தனி நபர்கள் உள்ளார்கள். அவர்கள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிப் பெற்றவர்கள். அவர்கள் குறிப்பிட்டப் பகுதிக்குள் நீந்திச் சென்று மீன்களுக்கு உணவு வழங்குகிறார்கள்.  இந்த அரிய வகைக் கடல் வாழ் உயிரினங்களை மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான நோக்கம். ஆனால் அதற்கு ஏற்ப மீன்களுக்கு வாழ்விடம் அமைப்பது மிகவும் முக்கியம். அதிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியிருக்கிறோம். செயற்கையிலும் இயற்கையைக் கொண்டு வந்து இருக்கிறோம்''  என்றார். 

  வி.ஜி.பி. நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரான வி.ஜி.பி.ரவிதாûஸ சந்தித்தபோது சொன்னார்:

  ""நாங்கள் தீம்பார்க், வாட்டர் பார்க், ஸ்நோ  பார்க் வைத்துள்ளோம். பார்வையாளர்களாக வருபவர்கள் அடுத்து இங்கு என்ன வித்தியாசமாக உள்ளது என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காக ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சில ஆண்டுகளாக உருவானது. மீன் காட்சியகம் உருவாக்கலாம் என்ற முடிவானதும் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மீன் காட்சியகத்தைப் பார்வையிட்டு வந்தோம். 

  வெளிநாட்டில் இருந்து வந்த கம்பெனிகள் இதனை வடிவமைக்க ஐடியா கொடுத்தார்கள். 40 கட்டட ஒப்பந்தக்காரகள் சேர்ந்து இதை உருவாக்கி கொடுத்தார்கள். நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் காட்சியகத்தை உருவாக்குவதற்கு 115 கோடி ரூபாய் செலவானது. தற்போது 70 சதவீதம் அரிய வகை மீன்கள் உள்ளன. இன்னும் சில மாதங்களில் இதனுடைய எண்ணிக்கை படிபடியாக உயர்த்தப்படும். வீட்டில் மீன் தொட்டி வைத்து பராமரிக்காத வீடுகளே இன்று கிடையாது என்று சொல்லலாம்.  மக்கள் அந்தளவு மீன் பிரியர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்தக் காட்சியகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

  வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் இது போன்ற மீன்காட்சியகத்தைப் பார்க்க முடியும். தற்போது சென்னையிலேயே காணலாம் என்பது பார்வையாளர்களுக்கு ஸ்பெஷல் வசதி தான். நாள்தோறும் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஐந்தாயிரம் பேர் பார்வையிட்டுச் செல்கிறார்கள். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் இந்த எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பு ஆகிவிடுகிறது. சில நேரங்களில் பார்வையாளர்களைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொல்கிறோம். அதன் பின்னரே உள்ளே அனுப்புகிறோம். 

  இது மீன்களை பார்வையிடுவதற்கான இடம் மட்டுமல்ல படிக்கும் மாணவர்கள் மீன்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு ஸ்பெஷல் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மீன்கள் பற்றி குறும்படங்கள் திரையிட இருக்கிறோம். சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் இன்னும் பல திட்டங்கள் இங்குச் செயல்படுத்தப்பட உள்ளன'' என்றார்.

  மீன் காட்சியகத்தைப் பார்வையிட வந்த கோவையைச் சேர்ந்த சீதாராமன் குடும்பத்தாரிடம் பேசினோம். 

  ""இது போன்ற அரிய வகை மீன் காட்சியகத்தை வெளிநாடுகளுக்குச் சென்றால் மட்டுமே பார்க்கலாம். அது தற்போது சென்னைக்கு வந்துவிட்டது என்பது கூடுதல் ஸ்பெஷல் தான். பெரியவர்களை விடக் குழந்தைகள் இந்த மீன்களைப் பார்வையிடவும் புகைப்படம் எடுக்கவும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

  ஆழ்கடல் கண்ணாடி கூண்டுப் பகுதி பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ளது. கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்பட்டுள்ள மீன்களின் விபரம் பற்றி ஒரு சில இடத்தில் மட்டுமே வைத்து இருக்கிறார்கள். இது போன்று அனைதுஇடங்களிலும் வைத்தால் மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றவர், நிச்சயம் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய இடம் இந்த மீன் காட்சியகம்'' என்றார். பேட்டி : வனராஜன்

  படங்கள் : அகிலா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai