Enable Javscript for better performance
கிரிஷ் கர்னாட் - உலகமே நாடகம்!- Dinamani

சுடச்சுட

  
  girish

  1938 -ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி தற்போது மகாராஷ்ட்ராவில் உள்ள மாதேதான் என்ற ஊருக்கு விடுமுறைக்காக டாக்டர் ரகுநாத் கர்னாட் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணா பாய் ஆகியோர் சென்றிருந்த போது, பிரசவ வலி எடுத்து அங்குப் பிறந்தவர் தான் கிரிஷ் கர்னாட். இருப்பினும் கர்நாடகாவில் சிரிசி என்ற சிறிய நகரத்தில் தான் இவரது பள்ளி பருவம் தொடங்கியது. பதினான்கு வயது வரை மின்சாரத்தையே கண்டிராத இவர், சுற்றிலும் காடுகள் நிறைந்த இடத்தில் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் கிராமிய கதைகளைக் கேட்பாராம். சிறுவயது முதல் கற்பனை கதைகளை கேட்டதாலோ என்னவோ இவருக்குச் சிறுவயது முதலே நாடகம், கதை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
   1958-ஆம் ஆண்டு தார்வாட் கர்நாடகா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். பின்னர் மும்பை சென்ற போது கவிஞராக வேண்டுமென்று விரும்பினார். 1961-ஆம் ஆண்டு தனது 23-ஆவது வயதில் முதன்முதலாக "யயாதி' என்ற நாடகத்தை எழுதினார். கன்னடத்தில் எழுதபட்ட இந்த நாடகத்தை மும்பையில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற நாடக்குழுவை நடத்தி வந்த இப்ராகிம் அல்காஸி என்பவர் ஆங்கிலத்தில் எழுதி தரும்படி கேட்டுக் கொண்டார்.
   அதே நேரத்தில் கவுரமிக்க "ரோடேஸ் ஸ்காலாஷிப்' கிடைத்ததால் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரிஷ் குடும்பத்திலேயே முதன்முறையாக வெளிநாடு சென்றவரும் இவர்தான். 1963-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பிலாஸபி), பொலிடிகல் சயின்ஸ் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
   லண்டனில் தங்கியிருந்தால் கவிஞனாகவோ, நாடக ஆசிரியராகவோ முடியாது என்று கருதிய கிரிஷ், இந்தியா திரும்பி தனக்கென்று நிரந்தரமான வேலையில் சேர விரும்பினார். அதற்கேற்ப இந்தியா திரும்பிய அவருக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பிரஸ்ஸில் வேலை கிடைத்தது. "சென்னைக்கிளையிலும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.' நிரந்தரமான வேலை கிடைத்ததால் மாலை நேரங்களில் மீண்டும் நாடகங்கள் எழுதுவது, நடிப்பது என தனது நாடக ஆர்வத்தைத் தொடர்ந்தார். அப்போது இவர் 1964-ஆம் ஆண்டு எழுதிய "துக்ளக்' என்ற நாடகம் மேடையேறிய போது பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் பிரபலமாக இருந்த பாதல் சர்கார், மோகன் ராகேஷ், விஜய் டெண்டுல்கர் போன்ற நாடக ஆசிரியர்களிலேயே மிக இளையவரான கிரிஷ் கர்னாடின் நாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
   கிரிஷ் கர்னாடுக்கு சினிமாவை விட நாடகத்தின் மீது தான் ஆர்வம் அதிகமிருந்தது. அவர் சினிமாவில் நடிக்க வந்ததே எதிர்பாராத சம்பவமாகும். இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது,
   "எங்கள் நாடக குழுவினர் சம்ஸ்காரா நாடகத்தை சிறிய பட்ஜெட்டில் திரைப்படமாக தயாரிப்பதென்றும், அதை நானே இயக்குவதென்றும் தீர்மானித்தனர். எதிர்பாராத விதமாக அப்போது சினிமாவில் பிரபலமானவர்கள் யாரும் அதில் நடிக்க விரும்பவில்லை. அதனால் நாங்களே நடிப்பதென முடிவு செய்தோம். அந்த நேரத்தில் நான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பிரஸில் மானேஜராக பணியாற்றிக் கொண்டிருந்ததால் எனக்கென்று ஒரு கார் கொடுத்திருந்தார்கள்.
   அதையே படப்பிடிப்பு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். மொத்தம் 95 ஆயிரம் ரூபாய் செலவில் படத்தை முடித்தோம். இந்தப் படத்தை முடித்தவுடன் இனி சினிமாவே வேண்டாம். அவரவர் வேலைக்குத் திரும்பி விடலாமென முடிவு செய்தோம். ஆனால் நடந்ததோ வேறு. "சம்ஸ்காரா' தேசிய அளவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு என்னுடைய வாழ்க்கையை திசை மாற்றி விட்டது.'' என்றார்.
   "சம்ஸ்காரா' வை தொடர்ந்து இந்தியில் நடிக்க கிரிஷூக்கு வாய்ப்பு கிடைத்த போது அதிர்ஷ்டவசமாக முதல் படமே ஷியாம் பெனகல் படமாக அமைந்துவிட்டது. "நிஷாந்த்' என்ற அந்த படத்தில் ஷப்னா ஆஷ்மி, ஸ்மிதா பாட்டீல் ஆகியோருடன் நடித்த கிரிஷ், அடுத்து ஸ்மிதா பாட்டீலுடன் "மன்தன்' என்ற படத்தில் நடித்த போது இந்தி படவுலகில் வரவேற்பு அதிகரித்தது. "உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னுடைய வயதுக்கு தற்போது கிடைக்கும் படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழலாமென்று நினைக்கிறேன்''. என்று கூறிய கிரிஷ், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டாலும் மும்பை வாழ்க்கை பிடிக்காததால் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் குடியேற முடிவு செய்தார்.
   தன்னுடைய 23 வது வயதில் முதல் நாடகமான "யயாதியை' எழுதிய கிரிஷ் கர்னாட், தொடர்ந்து எட்டு நாடகங்களை எழுதி வெற்றிகரமாக நடத்தி வந்தார். 1974-ஆம் ஆண்டு 36 ஆவது வயதிலேயே "பத்மஸ்ரீ' விருது பெற்ற இவர், இரண்டு இந்திப் படங்களையும், எட்டு கன்னடப் படங்களையும் இயக்கியுள்ளார்.
   தமிழில் முதன் முதலாக ரஜினிகாந்த்-ஸ்ரீதேவி நடித்த "நான் அடிமை இல்லை' என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி "காதலன்', "குணா' உள்பட 9 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.கன்னடத்தில் "ஆனந்த பைரவி' என்ற படத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்த பிராமணர் நாராயண சர்மாவாக நடித்த கிரிஷ், கதைப்படி தன் மகனுக்கு குச்சிப்புடி நடனம் கற்றுக் கொடுக்க ஆசைப்படுகிறார். மகனுக்கோ நடனம் கற்பதில் விருப்பமில்லை. அதனால் தன் சமூகத்தினர் எதிர்ப்பையும் மீறி, தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அவளுக்கு குச்சிப்புடி நடனம் கற்று தருகிறார். இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டுமென்பதற்காக குச்சிப்புடி நடனத்தை கற்றுக்கொண்ட போது அவருக்கு வயது 55.
   1980-ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்ட சரஸ்வதி, கிரிஷின் நெடுநாள் சிநேகிதியாவார். அமெரிக்காவில் மருத்துவம் படித்து வந்த சரஸ்வதியை திருமணம் செய்து கொள்ள 15 ஆண்டு காத்திருந்தாராம். அவர் இந்தியா திரும்பியவுடன் தனது 40 வயதில் சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார் கிரிஷ். "என் குடும்பத்தின் இதயமே சரஸ்வதிதான். மருத்துவம் படித்திருந்தாலும் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காவும் வேலையை உதறியவர் அவர். தற்போது "வோர்ல்ட் ஹெல்த் ஆர்கனிசேஷன்' அமைப்பில் சமூக மருத்துவராக பணியாற்றி வருகிறார். என்னுடைய திருமணம் காலங்கடந்த திருமணம் என்றாலும், எங்கள் வாழ்க்கையின் தேவை என்னவோ அவைகளை அடைந்துவிட்டோம். மகள் ராதா, மகன் ரகு ஆகியோரின் தேவைகளை அறிந்து அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று 20 ஆண்டுகளுக்கு முன் பேட்டியொன்றில் கூறியிருந்தார் கிரிஷ்.
   பெங்களூர் வந்த பிறகு டெலிவிஷன் தொடர்களிலும், தமிழ் படங்களிலும் நடிக்கத் தொடங்கிய கிரிஷ், இந்தியா சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடிப்படையாக வைத்து 13 பகுதிகளாகத் தயாரிக்கப்பட்ட "ஸ்வராஜ் நாமா' என்ற தொடரிலும் நடித்தார்.
   1989-ஆம் ஆண்டு ஏ.கே.ராமானுஜன் இவரிடம் கூறிய கிராமிய கதையை அடிப்படையாக வைத்து "நாகமண்டலா' என்ற பெயரில் இவர் எழுதிய நாவலுக்கு கர்நாடகா சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. 1992-ஆம் ஆண்டு "ஞான பீட விருதும்' கிடைத்தது. "பிலிம் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா'வில் முதலில் இயக்குநராகவும், பின்னர் சேர்மேனாவும் இருமுறை பதவி வகித்துள்ளார்.
   அண்மை காலமாகக் கர்நாடகா, மகாராஷ்ட்ராவில் முற்போக்குச் சிந்தனையாளர்களை கொலை செய்வதைக் கடுமையாக எதிர்த்து வந்த இலக்கியவாதிகளில் ஒருவரான கிரிஷ், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷின் ஓராண்டு நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட போது, நாங்களும் "நகர நக்சல்கள்' என்ற பதாகையை ஏந்தி நின்றது பலத்த எதிர்ப்புகுள்ளானது. சமீபத்தில் பெங்களுரில் நடந்த இலக்கிய விழாவில், உடல் நலமின்றிக் கிரிஷ் கலந்து கொண்டது தான் இறுதி நிகழ்ச்சியாகும். இவரது இறுதி சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த கர்நாடக அரசு முன் வந்த போது, அதை ஏற்க இவரது குடும்பத்தினர்களும், நண்பர்களும் மறுத்துவிட்டனர்.
   -அ.குமார்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai