ஸ்பெயின் நாட்டு நாடோடிக்கதை: மூன்று அமைச்சர்கள்!
By DIN | Published On : 23rd June 2019 09:00 AM | Last Updated : 23rd June 2019 09:00 AM | அ+அ அ- |

ஒரு முறை பிரெஞ்சு மன்னரும், ஸ்பெயின் நாட்டுத் தூதரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். "அரசர் பெருமானே! உங்கள் அமைச்சர்களைப் பற்றிச் சொல்லுங்கள். நான் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார் தூதர்.
"நாளை அரசவைக்கு வாருங்கள். என்னுடைய மூன்று அமைச்சர்களிடமும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதை வைத்து நீங்களே அவர்களைப் புரிந்து கொள்ளலாம்' என்றார் அரசர்.
மறுநாள் அரசவை கூடியது. முதலாம் அமைச்சரை அழைத்த அரசர், "அமைச்சரே என் தலைக்கு மேலே உள்ள பலகையைப் பாருங்கள். அந்தப் பழைய பலகை செல்லரித்து விட்டது போல உள்ளது. எப்பொழுது விழுமோ தெரியவில்லை' என்றார்.
"நீங்கள் நினைப்பது போல இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் தச்சரை வைத்து அதைச் சோதிக்க செய்வோம். தேவையானால் மாற்றி விடுவோம். இப்பொழுது அவசரம் வேண்டாம்' என்றார் அந்த அமைச்சர்.
அவர் போன பிறகு இரண்டாம் அமைச்சரை அழைத்தார் அரசர். அந்தப் பலகையைப் பற்றி அவரிடம் ஆலோசனையை அதே போல சொன்னார்.
ஆனால், அந்த அமைச்சர் பலகையை அண்ணாந்து கூடப் பார்க்கவில்லை.
"அரசே! நீங்கள் சொன்னது சரி தான். அந்தப் பலகையை மாற்றி விட வேண்டும்'' என்றார்
மூன்றாவது அமைச்சரிடம் அதே போலச் சொன்னார்.
அதற்கு அந்த அமைச்சர், " அரசே! அந்தப் பலகை நன்றாகத்தான் உள்ளது. ஏதும் குறை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை' என்றார்.
"அமைச்சரே! நன்றாகப் பாருங்கள். அந்தப் பலகையில் வெடிப்புகள் இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? எனக்கு மட்டும் தான் தெரிகிறதா?''
"அரசே! கவலை வேண்டாம். அந்தப் பலகை, உங்கள் பேரன் காலம் வரை இருக்கும். கீழே விழவே விழாது'' என்று சொல்லி விட்டுச் சென்றார் அவர். நடந்தது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் தூதர்.
அவரைப் பார்த்து அரசர், "என் மூன்று அமைச்சர்களைப் பற்றியும் புரிந்து கொண்டிருப்பீர்கள். முதலாமவர் எதிலும் மாட்டிக் கொள்ளாதவர். இரண்டாமவர், நான் என்ன சொன்னாலும் சரி என்று சொல்பவர். மூன்றாமவர் தான் என்ன நினைக்கிறாரோ அதை மறைக்காமல் கூறுபவர். மூன்றாமவரே சிறந்தவர்' என்றார்.
-தங்க.சங்கரபாண்டியன், ஆதம்பாக்கம்