சுடச்சுட

  
  sk7

   

  தி.ஜ.ர பெரிய ஆள். அவருடைய தரத்தை யாரும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்து கொண்டவர்கள், தெரிந்து கொண்ட வரை பறை சாற்றவில்லை. அவரும் பறை சாற்றிக் கொள்ளவில்லை. செட்டியார் மிடுக்கா? சரக்கு மிடுக்கா? என்ற முறையில் தானே பண்டம் விலை போகிறது! தம்பட்டம் வாழ்க்கையின் உயிர்நாடி. 

  பாற்கடலில்..   லா.ச.ராமாமிர்தம்

  னிதர்களில் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது என்றால் அது பேசும் மொழியும், எழுதும் எழுத்தும்தான். மொழி என்பது சொல். அதாவது சொல்லப்படுவது. வாயொலி. ஒலியை எழுதுவது எழுத்து. அதாவது கோடு. இரண்டும் கண்டுபிடிப்புகள் என்பதால் மாறி வருகின்றன. ஆனால் இல்லாமல் போவதில்லை. அது தான் மொழி, எழுத்து என்பதின் சரித்திரமாக இருந்து வருகிறது.
  1578-ஆம் ஆண்டில் முதன் முதலாகத் தமிழ் எழுத்துகளில்" தம்பிரான் வணக்கம்' என்ற நூல் "தமபிரான வணககம'- என்ற அச்சிடப்பட்டது. ஏனெனில் அக்காலத்தில் தமிழ் எழுத்துகள் மீது மெய்யெழுத்தில் புள்ளி வைப்பது இல்லை. அந்த மரபையொட்டி அச்சு நூலிலும் புள்ளியிடப்படவில்லை. பின்னால் எழுத்து சீர்திருத்தம் ஏற்பட்டபோது மெய்யெழுத்துகள் புள்ளி பெற்றன.

  வல்லினம், மெல்லின எழுத்துகள் தன் தனித்தன்மை மிளிர அச்சிடப்பட்டன. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் தோன்றியதும் பலரும் தமிழ்ப் படிக்க ஆரம்பித்தார்கள். பழைய நூல்கள், புதிய நூல்கள் அச்சிடப்பட்டன. சமயம் சார்ந்தும், அரசியல் பிரசாரத்திற்கு என்று பத்திரிகைகள் தோன்றி பத்திரிகைகள் தன்னளவில் மக்களுக்கு அறிவு பரவுதலுக்கு முக்கியப் பங்காற்றி உள்ளன. அவற்றின் சேவை பல்கலைக்கழகங்கள் செய்துள்ள பணிகளை விட மேலானது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகம் செல்லாதவர்கள்; செல்ல முடியாதவர்கள்; செல்ல விரும்பாதவர்கள் எல்லாம் மேலான அறிவு பெறவும், தன் அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பத்திரிகைகள் நல்வாய்ப்பை நல்கின.

  அது ஒரு நாட்டில் நடந்ததோ; ஒரு மொழிக்கு உரியதோ இல்லை. எல்லா நாட்டு மக்களையும், எல்லா மொழி பேசுவோரையும், ஒரு மொழியில் எழுதுகிறவரையும் பத்திரிகைகள் கிளர்ச்சியுற வைத்தன எனவே தான் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் காகிதத்தில் புத்தகம் அச்சிடும் முறையைக் கண்டுபிடித்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கருமான் ஜானான் கூடன்பர்க், மகத்தான பேரறிவாளன் என்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறான்.

  அச்சுப் பத்திரிகைகள் கதை, கவிதைகளை வெளியிட்டு மக்களைப் படிக்க வைத்து மகிழ்ச்சியடைய வைத்தன. அரசு, அதிகாரிகள் லஞ்சம், ஊழல் பற்றி எழுதி அவர்களை நிலை குலைய வைத்தன. சிலரை சிறைக்கும் அனுப்பின. பலருக்குப் படிப்பின் மீது ருசியை ஏற்படுத்தின.

  மனிதர்களின் ருசி என்பது ஒன்றில்லை. அது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவது. எனவே அரசியல், சமயம், கலை, இசை, விஞ்ஞானம், ஆன்மிகம், தத்துவம், புதிய கண்டுபிடிப்புகள் என்று பலவற்றுக்கும் தனித்தனியாகப் பத்திரிகைகள் தோன்றின. ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு பத்திரிகை என்பதைத் தவிர்த்து பல அம்சங்களை ஒன்று சேர்த்து சிலர் பத்திரிகைகள் கொண்டுவர ஆரம்பித்தார்கள். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் "களஞ்சியம்' மாதிரியான பத்திரிகைகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் சமையல் குறிப்புகளோடு சிறுகதைகள், நாவல், பயண நூல்கள், சுய சரித்திர குறிப்புகள், சாகசப் புத்தகத்தின் சாரம் கொண்டிருந்ததால் வாசகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்றன. ஆற அமர படிக்கத்தக்கதாக இருந்தது. எனவே பரபரப்பு அவசரம் இன்றிப் படிக்க முடிந்தது. 

  தமிழில் கதைப் பத்திரிகையாக "கலைமகள்' வந்து கொண்டிருந்தது. அதன் உரிமையாளர்கள் பொது அம்சங்கள் கொண்ட ஒரு பத்திரிகைத் தமிழில் வேண்டுமென்று 1945-ஆம் ஆண்டில் "மஞ்சரி'  மாத இதழை ஆரம்பித்தார்கள். அதன் ஆசிரியர் தி.ஜ.ர என்று அறியப்பட்டார்.

  அவருக்கு அப்போது முப்பத்தொன்பது வயதாகி இருந்தது. அவரின்  முழுப்பெயர் திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன்.

  தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அருகில் 1901-ஆம் ஆண்டில் பிறந்தவர். பள்ளிபடிப்பு அதிகம் இல்லை. ஆனால் படிப்பில் பேரார்வம் கொண்டிருந்தார். சுயமாகத் தமிழில் எழுதவும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கவும் திறமை பெற்றிருந்தார். அதோடு வானொலி பழுது பார்த்துப் பாட வைக்கவும் கற்றுக்கொண்டார். சில தமிழ்ப் பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றி எழுதும் திறன் பெற்றிருந்தார்.

  அவர் வாழ்ந்த காலம் என்பது சுதந்திர போராட்டம் தீவிரமாக இருந்த காலம். சுயபுத்தியும், சுதந்திர உணர்வும் கொண்டவன் எவனும் அதிலிருந்து விலகிப் போய்விட முடியாதுதான். 1920-ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற அந்நிய துணி எதிர்ப்பில் கலந்து கொண்டு மறியல் செய்து பதினாறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

  தி.ஜ.ர-வின் முகமாக இருப்பது "மஞ்சரி' தான். தன்னுடைய அறிவாற்றிலின் வழியாகத் தமிழ் மொழி மூலம் அனைத்தையும் அறிந்து கொள்ளத்தக்க அறிவு பூர்வமான பத்திரிகையாகவே "மஞ்சரி' யை நடத்தி வந்தார்.

  1968-ஆம் ஆண்டில் இலக்கியச் சங்கத்தின் சார்பில் "கோணல்கள்' என்ற பன்னிரெண்டு சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பை வெளியிட்டோம். "கோணல்களில்' இடம் பெற்றக் கதைகள், தமிழ்ப் பத்திரிகைகளில் எதிலும் வெளிவராதவை. அதாவது தமிழ்ப் பத்திரிகைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் கதையின் கரு, கதைச் சொல்லும் பாணி, மொழியென்பதை முற்றாக நிராகரித்தவை. எனவே எதிர் கதைகள். 

  தி.ஜ.ர "கோணல்களில்' இடம் பெற்ற எனது உயிர்கள் என்ற சிறுகதையை எடுத்து "மஞ்சரி' யில் மறுபிரசுரம் செய்தார். அது அவரின் பரந்துபட்ட அனுபவம், இலக்கிய ரசனை சார்ந்தது தான். அதன் பின்னர் நான் அவரை கலைஞன் பதிப்பகத்தில் பல முறையில் சந்தித்து இருக்கிறேன். வெள்ளை வேட்டி, அரைக் கை வெள்ளைச் சட்டையோடு மேலே சிறுதுண்டு போட்டுக் கொண்டிருந்தார். அவர் படைப்பு இலக்கியம் என்பதைத் தாண்டி பலவற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். மெருகுகுலையாமல் மொழி பெயர்த்து வந்தார். 

  1954-ஆம் ஆண்டில் வெளி வந்த ஜெயகாந்தன் "ஒரு பிடி சோறு'-சிறுகதைத் தொகுப்பிற்கு தி.ஜ.ர தான் முன்னுரை எழுதியிருந்தார். அவரின் மொழிநடை நேரானது. படித்தால் புரியக்கூடியது. கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறார். அது தி.ஜ.ர விடம் இருந்து பெற்றது தான் என்று குறிப்பிட்டிருந்தார். அவரோடு நான் பலமுறை பாண்டிபஜார் கீதாபவன் ஓட்டலில் போண்டா சாப்பிட்டுவிட்டு காபி பருகிவிட்டு நடேசன் பூங்காவிற்கு நடந்து வந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன்.

  ஒரு நாள் பேச்சு வாக்கில் சொன்னார். ""கலைஞன் மாசிலாமணியிடம் "மஞ்சரி' யில் சுருக்கி வெளியிட தமிழ் நாவல்கள் சிலவற்றைச் சொல்லுங்கள்''என்று கேட்டேன். அவர் முதலில் உங்கள் "சாயாவனம்' நாவலைத்தான் சொன்னார். அதோடு கைவசம் இருந்த நாவலையும் எடுத்துக் கொடுத்தார்." படித்துப் பார்த்தேன். நல்ல நாவல். கருத்தும் மொழியும் புதுமையாக இருக்கின்றன. எனவே நாவலைச் சுருக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். அதில் உங்களுக்கு ஆட்சேபனை ஏதாவது இருக்கிறதா?' என்று கேட்டார்.

  "இல்லை. இல்லை. தாங்கள் எது செய்தாலும் சரியாகவே செய்கிறீர்கள். தங்களின் சுருக்கப்புத்தகங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்' என்றேன்.

  1971-ஆம் ஆண்டில் "மஞ்சரி'யில் "சாயாவனம்' சுருக்கமாக வெளிவந்தது. சுருக்கம் என்பதால் நாவல் எதையும் இழந்துவிடவில்லை. எவையும் சிதைக்கப்படவும் இல்லை. ஒரு மாதம் கழித்து இருபத்து நான்கு ரூபாய் மணியார்டர் வந்தது. 

  தி.ஜ.ர-வின் மொழி பெயர்ப்புகளில் பெரிதும், அதிகமாகக் கவனம் பெற்றதும், அமெரிக்க எழுத்தாளர் லூயிஸ் பிஷர் எழுதிய "காந்தி'. அவர் சபர்மதி ஆசிரமத்தில் சில மாதங்கள் காந்தியுடன் தங்கி கண்டதையும், உரையாடியதையும் முதன்மையாக வைத்துக்கொண்டு, காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு எழுதினார். அதனை மகாத்மா காந்தியை முழுமையாகச் சொல்லும் ஒரு வாழ்க்கை வரலாறு என்றே சொல்ல வேண்டும். 

  ஆட்டன் பரோவின் "காந்தி' திரைப்படம், லூயிஸ் பிஷர் எழுதியதன் அடியொற்றி-மரணத்தில் இருந்தே தொடங்குகிறது. புத்தகம் என்பது மொழியில் இல்லை. எழுதப்பட்ட மொழியில் தான் அதன் ஆத்மா இருக்கிறது என்று மிகைப்படச் சொல்வதை எல்லாம், தி.ஜ.ர மொழி பெயர்ப்பு தகர்த்து விடுகிறது. அது ஒரு மொழி. மொழி வழியாகவே எழுதப்பட்ட மொழியைக் கடந்து சென்றவிடுகிறது என்பதுதான்.

  ஒரு புத்தகம் அது எந்த மொழியில் எழுதப்பட்டாலும், அது சமூகத்திற்குத் தேவையென்று இன்னொருவர்-ஆசிரியரே கருதும் போது மொழி பெயர்க்கப்படுகிறது. இந்திய அரசியல் தலைவர்களுக்குத் தாய்மொழி ஆங்கிலம் கிடையாது. ஆனால், பலரும் ஆங்கில மொழியில் சுயசரித்திரம், வரலாறு, சித்தாந்தம் பற்றிய நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடுகிறார்கள். தனக்கு ஆங்கிலத்தில் எழுதுவது எளிதாக இருக்கிறது; சொல்லச் சொற்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். படிக்கப் பெரிய மனிதர்கள் உள்ளனர் என்று கருதுவதும் ஒரு காரணமாகிறது. ஆனால், சிறிது காலத்திற்குள்ளேயே தம் புத்தகங்கள் தாய்மொழியில் வர வேண்டும். பலரும் படித்துப் பாராட்ட வேண்டுமென விழைகிறார்கள்.

  1921-ஆம் ஆண்டுகளில் ராஜாஜி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரைப் பிடித்துச் சிறையில் போட்டுவிட்டார்கள். ராஜாஜி நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களோடு வேலூர் சிறையில் இருந்தார்.

  உலகம் முழுவதிலும் கம்யூனிஸம் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. பலரும் அதற்குப் பயந்து கொண்டிருந்தார்கள். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் கற்றிருந்த அறிஞராகத் தன் நாற்பத்து மூன்றாவது வயதிலேயே இருந்தார். அவர் சநாதனிகளாக இருந்த காங்கிரஸ் தொண்டர்களிடம், கம்யூனிஸம் என்றால் என்ன? அதனால் பயப்படக்கூடாது. அது பொது நன்மைக்கானது என்று பாடம் நடத்திக் கொண்டு வந்தார்.

  இட்ஹற்ள் க்ஷங்ட்ண்ய்க் க்ஷஹழ்ள் - என்ற பெயரில் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது.  தி.ஜ.ரவின் மொழிபெயர்ப்பு    சக்தி காரியாலய  வெளியீடாக 1941-ஆண்டில் வெளிவந்தது. பலரும் படித்துக்கொண்டு வந்தார்கள். அதனால் ராஜாஜி கம்யூனிஸ்டுக்கு எதிராகிவிட்டார். அவருக்குக் கம்யூனிஸம் அறவே பிடிக்காமல் போய்விட்டது. "அபேதவாதம்' என்று புத்தகம் பொதுவில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

  தி.ஜ.ர-வின் மொழி பெயர்ப்பான "அபேதவாதம்' படிக்கவே கிடைக்கவில்லை. பாரத ரத்னா ராஜாஜி மரணமடைந்துவிட்டார். மொழி பெயர்ப்பாளர் தி.ஜ.ர உயிரோடு இல்லை. ஆனால் புத்தகம் உயிரோடு இருக்கிறது. ஆசிரியர் நிராகரித்தாலும் புத்தகத்தை இல்லாமல் ஆக்கிவிட முடியாது.

  ராஜாஜியின் பொதுவுடமைக்கு ஆதரவான "அபேதவாதம்' ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பதிப்பகங்கள் வெளியிட்டு உள்ளன.

  நூல்கள் விவாதிக்கவும், அறிவு பரவுதலுக்கும் எப்போதும் காரணமாக உள்ளன என்று அதன் காரணமாகவே சொல்லப்படுகிறது.

  அடுத்த இதழில்

  ஆர். ஷண்முகசுந்தரம் / எம்.வி.வெங்கட்ராம்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai