Enable Javscript for better performance
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 74: புத்துயிர்  கொடுக்கும் அழகிய பூங்காக்கள்!- Dinamani

சுடச்சுட

  

  சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 74: புத்துயிர்  கொடுக்கும் அழகிய பூங்காக்கள்!

  By DIN  |   Published on : 30th June 2019 01:27 PM  |   அ+அ அ-   |    |  

  sk6

   

  என் கழுத்தின் மீது வைரங்கள் இருப்பதைவிட என் மேஜையின் மீது ரோஜாக்கள் இருக்கட்டும். 

  - கிருஸ்டியன் டயர்


  தோட்டங்களை உருவாக்குவதும், நிலங்களை அழகுற வடிவமைப்பதும் ஜப்பானியர்களின் பாரம்பரியமாகத் திகழ்கின்றது. ஜப்பானில்  ஹேயான் காலகட்டத்தில் (794-1192) சீனர்களின் உத்திகளைக் கையாண்டு பல அழகிய நந்தவனங்களை அரச குடும்பத்தினருக்காகவும், மத குருமார்களுக்காகவும் உருவாக்கினார்கள். அந்த மரபு இன்றைய ஜப்பானிலும் வேரூன்றி, பல நகரங்களிலும், மாநகரங்களிலும், கோயில்கள், அரண்மனைகளிலும் பல அழகான பூங்காக்கள் காண்போர் சிந்தையைக் கவர்கின்றன.

  இந்த இயந்திரமயமாகிப் போன வாழ்க்கையில், இலக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் மனித இயந்திரங்களின் நொந்துபோன மனங்களுக்கு இத்தகைய அழகிய பூங்காக்கள், புத்துயிர் கொடுக்கின்றன. அதுவும் ஜப்பானில், காலை 9 மணி தொடங்கி இரவு ஒன்பது மணிவரை வேலை பார்க்கும் ஜப்பானியர்களைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறேன்.

  1920-இல் பெரிய, பெரிய ஜப்பானிய கார்ப்பரேட் கம்பெனிகள், இன்டர்நேஷனல் கம்பெனிகளோடு போட்டி போட்டு, தன் நிலையை அதற்கு நிகராக ஆக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானியர்கள் அதிக நேரம் வேலை பார்த்தார்கள். இன்று ஒரு நிறுவனத்திற்கும், மற்றொரு நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் போட்டியில், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்குத் தன் விசுவாசத்தை வெளிக்காட்டவும், வேலையை இழக்காமல் இருப்பதற்கும், பலவிதமான நன்மைகள் உதாரணத்திற்கு வீட்டு மானியங்கள், நல்ல காப்பீடுகள், போனஸ், ஓய்வூதியம், பொழுதுபோக்கு வசதிகளைப் பெறுவதற்கும் ஜப்பானியர்கள் 12 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது.

  முதலாளி செல்லும்வரை மணி இரவு பத்து என்றாலும், வேலை பார்க்க வேண்டும் என்பது மரபு என்று ஆகிவிட்டது. சரி, ஐந்து மணி நேரம் அதிகமாக உழைக்கிறான் அதற்கு ஊதியம், உஸ்..... அதைப்பற்றிப் பேசக்கூடாது, இது தொழிலாளி, முதலாளிக்கு காட்டும் மரியாதை கணக்கில் சேர்ந்துவிடும்.

  இதுமட்டுமா ஜப்பானிய நாடு மிகவும் சிறியது. ஆனால் ஜனத்தொகையோ பெரியது. டோக்கியோவின் மையப் பகுதியில் மட்டும் 13 மில்லியன் மக்கள் குடியிருக்கிறார்கள். மிகக் குறுகிய இடத்தைத் தன்னகத்தே கொண்ட குடியிருப்புகளே இங்கே அதிகமாகக் காணப்படும். மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் என்றால் கூட ஒதுக்கப்பட்ட அறையைத் திறந்ததுமே கட்டில், பிறகு குளிக்கும் அறை, கழிவிடம், வாஷ்பேசின் என்று எல்லாமே மிகக்கூறுகிய இடத்தில் அடங்கிவிடும்.

  காப்சூல் ஹோட்டல்கள் டோக்கியோ நகரம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஏழு அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட குறுகிய அறைகள் வரிசையாக இருக்கும். இதில் மேல் தளமும், இரண்டாம் தளமும் கூட உண்டு. சாதாரணமாக ஒரு நபர் தங்கிச் செல்லும் இந்த இடங்களில், ஒரு தொலைக்காட்சி பெட்டி, இணையதள வசதி, புத்தகம் படிக்க உதவும் விளக்கு, சுத்தமான படுக்கை, வைபை வசதி என்று எல்லாமே இருக்கும். பொதுவான கழிவறைகளும், குளியல் அறைகளும் இங்கே உண்டு. சிறிய அட்டைப் பெட்டிகளைத் தாறுமாறாக அடுக்கி வைத்தாற் போன்று இருந்த அந்தக் கட்டிடத்தில் அமைப்பைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறேன்.

  இப்படி எலி வலை போன்ற இடங்களில் வாழ்ந்துகொண்டு, ஓடி ஓடி உழைக்கும் ஜப்பானியர்களுக்கு அதிலும் டோக்கியோ போன்ற நகரங்களில் வாழ்பவர்களுக்கு, சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்கும், நடைப்பயிற்சியை மேற்கொள்வதற்கும், சைக்கிளிங் செல்வதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும், அந்த நாட்டில் காலங்களுக்கு ஏற்ப பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு ரசிப்பதற்கும், இயற்கை அழகு மிளிரும் பூங்காவனங்களையும், தோட்டங்களையும் டோக்கியோவினுள்ளும், அதற்கு வெளியிலேயும் உருவாக்கி இருக்கிறார்கள்.

  இந்த வகையில் மக்களைக் கவர்ந்திழுக்கும் பூங்காக்களில் ஆஷிகாகா தலை சிறந்து விளங்குகிறது. 94 ஆயிரம் சதுர மீட்டர் விரிந்து கிடக்கும் இந்த பூங்கா வர்ணனைக்கு உட்படாத அழகுடன் மிளிர்கின்றது. இங்கே மொத்தம் 8 விதமான பூக்கும் காலங்கள் உள்ளன. விஸ்டேரியா மரங்கள் பூத்துக் குலுங்கும் காலம் முடிந்தபின்,  அல்லி மலர்கள், ரோஜாக்கள், களிமேடிஸ்  பூக்கள், என்று பூங்கா குளிர்காலத்தைத் தவிர்த்து எல்லாக் காலங்களிலும் மலர்களை ஏந்தி இருக்கும் தாவரங்களைத் தன்னகத்தே கொண்டு இருக்கிறது. இங்கே நடக்கும் திருவிழாக்களுக்கும் குறைவில்லை. வசந்தகால மலர்களின் திருவிழா, விஸ்டேரியாவின் கதை, வானவில் தோட்டம் என்ற பல தலைப்புகளைக் கொண்டு, கொண்டாடப்படும் திருவிழாக்கள் மக்களைப் பெரும் அளவில் கவர்ந்து இழுக்கின்றன.

  மூன்றாவது முறையாக நான் ஜப்பானுக்குச் சென்றது அக்டோபர் மாதமாக இருந்தது. அந்தச் சமயத்தில் ஆஷிகாகாவில்  பிளவர் பேன்டசி திருவிழா நடந்து கொண்டிருந்தது. மொத்தம் 4.5 மில்லியன் எல்.இ.டி பல்புகளைக் கொண்டு அந்தப் பூங்காவை அலங்கரித்து இருப்பதாக அறிந்தவுடன் அந்த இடத்துக்குச் சென்று அதைப் பார்க்க நானும் என் கணவரும் பேராவல் கொண்டோம்.

  அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இந்தத் திருவிழா நடக்க இருந்தது. ஜப்பான் நாட்டில், மூன்று மிகச்சிறந்த ஒளியூட்டப்பட்ட இடங்களில் இந்த ஆஷிகாகா பூங்காவின் ஒளியூட்டலும் ஒன்று என்ற கூடுதல் தகவல், என்னுடைய கணவரின் இருதய மாநாட்டு வேலைகள் முடிந்த உடனேயே, ஆஷிகாகாவை நோக்கி பயணிக்க வைத்தது.

  ஜப்பானில், வாடகை காரில், டோக்கியோவின் புறநகர் பகுதியில் உள்ள ஆஷிகாகாவுக்குச் செல்வது, பணத்தை விரயமாக்கும்படியாக இருந்ததினால், 70 நிமிடங்களில் அங்கே இட்டுச் செல்லும் அதிவேக ரயிலில் கிளம்பினோம். மொழி தெரியாது, பூங்கா இருக்கும் இடமும் தெரியாது. சென்று அடைந்துவிடலாம் என்று மதியம் இரண்டு மணிக்குக்  கிளம்பினோம்.  ஆனால்  நடந்தது வேறு.

  (தொடரும்)

  kattana sevai