நினைவலைகள்: பக்தி இல்லாமல்

கடந்த 65 ஆண்டுகளாகச் சங்கீதத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இசைத் தொண்டாற்றி வருபவர் கரூர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கர்நாடக சங்கீதத்தை ஆழ்ந்து அனுபவித்துப்பாடுவதில் வல்லவர்.
நினைவலைகள்: பக்தி இல்லாமல்

கடந்த 65 ஆண்டுகளாகச் சங்கீதத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இசைத் தொண்டாற்றி வருபவர் கரூர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கர்நாடக சங்கீதத்தை ஆழ்ந்து அனுபவித்துப்பாடுவதில் வல்லவர். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் பெற்றவர். 83 வயதில் புத்துணர்ச்சி குறையாமல் தனது மாணவர்களுக்கு இசை கற்றுக்கொடுப்பதில் தனி ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய இசைத்துறை அனுபவங்கள் பற்றிக் கேட்ட போது பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

""நான் மாயவரம் வைத்தியநாதய்யர், வித்யாசங்கரிடம் (வீணை, பாட்டு) மதுரை ஜி.எஸ் மணி அய்யர், குன்னக்குடி வெங்கட்ராமய்யர், சிதம்பரம் கோபாலகிருஷ்ணப்பிள்ளை, ஆர்.எம். சுந்தரம் ஆகியோர்களிடமிருந்தும், சங்கீத கலாநிதி ஜி.என். பாலசுப்ரமணியத்திடமும் இசைப் பயின்றவன்.

அப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். திருவொற்றியூரில் இருந்து பாட்டு கற்பதற்காக சைக்கிளில் மாம்பலம் வருவேன். இரவு என்னுடைய குருநாதர் வித்யாசங்கர் வீட்டில் சாப்பாடு தருவார்கள். அங்கே தங்கிவிட்டு, காலை 4.30 மணிக்கு எழுந்து 6 மணி வரை பாட்டுப்பயிற்சி எடுத்துவிட்டு வேலைக்குச் செல்வேன். அந்தளவு இசையின் மீது எனக்குப் பற்று அதிகமாக இருந்தது. அந்த பற்று இன்றளவும் குறையவில்லை. அதிகமாகத்தான் இருக்கிறது''.

அப்போதுள்ள குருகுல வாசம் பற்றி?

"வித்யா சங்கரிடம் வீணையும், வாய்ப்பாட்டும் கற்றுக்கொள்ளும் போது குருகுலவாசம் போல அவருடனேயே அவரது இல்லத்தில் தங்கி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. மேலும் அவரது இல்லத்திற்கு அவ்வப்போது  சங்கீதமேதைகளான விஸ்வநாத அய்யர், முசிறி சுப்ரமணிய அய்யர்  போன்ற வித்வான்கள் வருவார்கள். அவர்களின் உரையாடல்களைப் கேட்கும் பேறு அமைந்தது. 

எல்லாமே சங்கீதம் குறித்த சம்பாவனை. ஜி.என்.பியின் சங்கீத கவர்ச்சியால் மயங்கியவர்கள் அநேகர், அதே போல தோற்றக் கவர்ச்சியாலும் மயங்கியவர்களும் உண்டு. முசிறி சுப்ரமணியம் தமிழ்நாடு அரசின் இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட போது இவர் முதல் முதல்வராக இருந்தார். இசைக்கல்லூரி பாடத்திட்டங்கள் வகுத்த பெருமை அவருக்கு உண்டு. இன்று குருகுல வாசம் என்பதே காணாமல் போய்விட்டது.

பாடலைப் பதிவு செய்து மாணவர்கள் பாட்டு கற்றுக்கொள்கிறார்கள். அப்போதுள்ள சிந்தனைத்திறன் இப்போது அதிகம் இருப்பதில்லை என்று தோன்றுகிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. மருத்துவர், ஆடிட்டர் எனப் பல பணிகளில் உள்ளவர்கள் தான் இசை கற்க வருகிறார்கள். முன்பு இசை மட்டுமே பிரதான பணியாக இருந்தது. இப்போது அது மற்ற பணிகளுடன் சேர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

இசைத்துறையில் மறக்க முடியாத அனுபவம்?

12 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்குக் கச்சேரிக்காகச் சென்ற போது திடீரென நாமஸங்கீர்த்தனம் பாட சொல்லிக் கேட்டார்கள்.  நாமஸங்கீர்த்தனம் பாட குறைந்தது 5 பேர் தேவை. உடனே அங்கு கச்சேரி கேட்க வந்தவர்களை அழைத்து மேடையில் பாட வைத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கச்சேரி முடித்துவிட்டு எங்கள் இசைக்குழுவிலுள்ள அனைவரும் அங்குள்ள ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றோம். சாப்பிட்டு முடித்தவுடன்  ஹோட்டல் உரிமையாளர் வந்து உங்களுடைய கச்சேரி கேட்டேன். பிரமாதம் என்று பாராட்டியவர் கடைசி வரை சாப்பிட்டதற்காகப் பில் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். தெரியாத இடங்களிலும் நம்மைக் கொண்டு சேர்த்துவிடும் வலிமை இசைக்கு மட்டுமே உண்டு.

இசைத்துறையில் திறமையானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா?

திறமைக்கு முன்பு அங்கீகாரம் கிடையாது. இப்போது அங்கீகாரம் கிடைக்கிறது. என்னுடைய கச்சேரி நடக்கிறது என்றால் தெரிந்தவர்களை அழைப்பேன். நண்பர்கள் வருவார்கள்.  ஆனால் இப்போது அப்படியில்லை. அழைப்பிதழ் தயார் செய்து அனைவருக்கும் அனுப்பி விடுகிறார்கள். இணையதளம், செல்போன் வசதிகள் பெருகிவிட்டன. ஒரு நிகழ்ச்சிக்கு எளிதாக அனைவரையும் வரவழைக்க முடிவும். தங்களை தாங்களே விளம்பரம் செய்து கொள்வதும் அதிகமாக உள்ளது. இந்தக் காலத்திற்கு அது தேவையாக இருக்கிறது. 

மஹாபெரியவர் முன்பு பாடிய அனுபவம்?

காஞ்சிபுரத்திற்கு மஹாபெரியவாளை பார்க்க செல்லும் போது பாடச் சொல்வார். நானும் பாடுவேன். அவருக்காக இந்துஸ்தானி இசையில் பாடினேன். ரசித்து கேட்பார். நல்லாயிருக்கு என பாராட்டுவார். என்னுடைய கச்சேரிகள் பத்துக்கும் அதிகமானவை அங்கு நடந்துள்ளது. இசை என்றால் பக்தி. பக்தி இல்லாமல் சங்கீதமில்லை. தியானம் எப்படி மன அமைதி கொடுக்கிறதோ அது போன்று பாட்டு என்பது நமது உள் மனதை தொடும் சக்தி கொண்டது. என்னுடைய அனுபவத்தில் கலியுகத்தில் சங்கீதம் ஒன்று தான் மன நிறைவு தரக்கூடியது. இசை கலைஞர்களுக்குப் பணம் என்பது முக்கியமில்லை என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி "ஞான நய சிகாமணி'," இசைச் செம்மல்", "தாச கலாமணி'," பாகவத சூடாமணி' போன்ற விருதுகளைப் பெற்றவர். 

- ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com