சுடச்சுட

  
  NADODI_STORY

  பூபேந்திரா அந்த ஊரில் மிகப்பெரிய தனவந்தர். தனது ஒரே மகன் உபேந்திராவிற்கு மிகுந்த ஆடம்பரமாகக் கல்யாணம் செய்து வைத்தார். யானையின் மீது மணமகன் ஊர்வலம். வாணவேடிக்கை. 18 வகைக் கூட்டு, பொரியல், இனிப்பு,விலை உயர்ந்த பரிசுப்பொருள்கள் என திருமணத்திற்கு வந்தவர்களை அமர்க்களப்படுத்தினார். 
  திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்துத் தனது மருமகள் மங்களாவின் அறிவைச் சோதித்துப் பார்க்கும் எண்ணம் பூபேந்திராவுக்கு தோன்றியது. அதுவும் தனது மருமகளிடம் தான் நடத்திய ஆடம்பரத் திருமணம் பற்றிக் கேட்க நினைத்தார்.
  "இந்தத் திருமணத்திற்காக நான் எவ்வளவு செலவு செய்திருப்பேன்'' என்றார் மங்களாவிடம்.
  "என்ன ஒரு மூட்டை அரிசியின் மதிப்பு இருக்கும்'' என்றாள் மருமகள்.
  அதைக் கேட்டதும் மாமனார் அதிர்ச்சி அடைந்தார். "என்னது? ஒரு மூட்டை அரிசிக்குண்டான பணம் தான் செலவு செய்தேனா? முட்டாள் பெண்ணே!'' 
  "நான் சம்பாதித்ததில் பாதியை என் மகன் திருமணத்திற்காகச் செலவு செய்தேன்'' என்று ஆவேசப்பட்டர்.
  ஆனால் மருமகள் பதில் ஏதும் பேசவில்லை. "இவள் சரியான வெகுளியாக இருக்கிறாளே! என் மகனுக்கு இப்படியொரு பெண்ணையா திருமணம் செய்து வைத்தேன்?' மாமனார் மனதுக்குள் புலம்பினார்.
  சில வாரங்கள் கழித்து பூபேந்திரா மகன் உபேந்திரா, மருமகள் மங்களா மூவரும் ஒரு திருமணத்திற்காகப் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது வழியில் ஒரு சவ ஊர்வலம் வந்தது.
  ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் ""யார் இறந்தது?'' என்று விசாரித்தார் பூபேந்திரா.
  அவர் கேள்வி கேட்ட அதே ஆணிடம் அவரது மருமகள் "இறந்தது ஓர் ஆளா? அல்லது நாலு பேரா?'' என்றாள்.
  அதைக் கேட்டதும் பூபேந்திராவிற்கு மேலும் அதிர்ச்சி . மருமகளின் கேள்வி தன்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது கண்டு நெளிந்தார். அதற்குள் இறந்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
  அவர்கள் சென்ற வழியில் சிலர் வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் "நல்ல அறுவடைதான்'' என்றார் பூபேந்திரா.
  உடனே அருகில் இருந்த மருமகள் "சரி நீங்கள் போன ஆண்டு விளைச்சலை அறுவடை செய்கிறீர்களா? அல்லது இந்த ஆண்டு விளைச்சலை அறுவடை செய்கிறீர்களா?'' என்று கேட்டாள்.
  அதைக் கேட்டதும் அருகில் இருந்த அவளது கணவன் உபேந்திராவிற்குக் கோபம் தலை உச்சிக்கு ஏறியது." உனக்கென்ன பைத்தியமா? முட்டாள் தனமாகக் கேள்விகளையே கேட்கிறாயோ'' என்று மனைவியைக் கடிந்து கொண்டான். 
  மனைவியோ மறுத்தாள். "நான் ஒன்றும் முட்டாள்தனமாகக் கேட்கவில்லை. நீங்கள் தான் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்'' என்றாள்.
  "என்ன புரிந்து கொள்ளவில்லை சொல்? சவ ஊர்வலத்தில் சென்றவனிடம் இறந்தது ஒரு ஆளா, நாலு பேரா என்று கேட்டது பைத்தியக்காரத்தனம் இல்லையா?'' என்றார் மாமனார்.
  அதற்கு மருமகள் மங்களா அமைதியாகப் பதில் சொன்னாள்.
  "ஒரு குடும்பத்தில் திடீரென்று ஒருவர் இறக்கும் போது அவரது குடும்பத்தினர் மட்டும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். ஆனால் சில குடும்பங்களில் அவருக்கு நெருங்கிய சொந்தம் பந்தம் என நூற்றுக்கணக்கானவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். எனவே தான் இறந்தது ஒருவரா, நாலு பேரா?'' என்று கேட்டேன். 
  "ஆஹா நன்றாகச் சமாளிக்கிறாள். சரி இந்த ஆண்டு அறுவடையா, போன ஆண்டு அறுவடையா என்று வயலில் அறுவடை செய்து கொண்டு இருந்தவர்களிடம் கேட்டது முட்டாள்தனம் இல்லையா?'' மாமனார் தொடர்ந்து கேள்வியைக் கேட்டார்.
  "சிறுவிவசாயிகள் பெரும்பாலானவர்கள் எப்போதும் கடனில் தான் இருப்பார்கள். முதல் ஆண்டு வாங்கிய கடனைத் திரும்பக் கட்டியிருக்க மாட்டார்கள். சிலர் கடன் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு அறுவடையாக இருக்கும். அதனால் தான் இப்போதைய அறுவடை கடனை அடைப்பதற்கா? அல்லது லாபம் தரும் அறுவடையா என்பதை அறிந்து கொள்ளத்தான் அப்படிக் கேட்டேன்'' என்றாள் மங்களா.
  மருமகள் உண்மையிலேயே அறிவாளி என்பது இப்போது பூபேந்திராவிற்குப் புரிந்தது. ஆனால் அவரது சந்தேகம் தீரவில்லை. 
  "கடைசியாக ஒரு கேள்வி. சரி உனது கல்யாணத்தை எப்படி நடத்தினேன் என்று கேட்ட போது ஒரு மூட்டை அரிசி அளவிற்குத்தான் என்றாயே? அதற்கு என்ன அர்த்தமாம்?''
  "அதாவது ஒரு முட்டை அரிசிக்கு உண்டான பணமதிப்புதான் திருமணச்செலவு. மற்றதெல்லாம் உங்கள் கவுரவத்தை வெளி உலகிற்குக் காட்டுவதற்காக நீங்கள் நடத்திய ஆடம்பரச் செலவு. அதைத் திருமணச் செலவு என்று எப்படிச் சொல்ல முடியும்?''
  மருமகளின் பதிலில் வாயடைத்துப் போனார் பூபேந்திரா. உண்மையிலேயே தனக்குக் கிடைத்த மருமகள் புத்திசாலியான பெண் தான் என்று பூபேந்திரா சந்தோஷப்பட்டுக் கொண்டார்.
  -மயிலைமாதவன், வேளச்சேரி
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai