அரசியலே வேண்டாம் என நினைத்தார் எம்ஜிஆர்! - கே.பி.ராமகிருஷ்ணன்
By DIN | Published On : 04th March 2019 10:00 AM | Last Updated : 04th March 2019 10:00 AM | அ+அ அ- |

சென்ற இதழ் தொடர்ச்சி..
நடிகர் எம்ஜிஆர், முதல்வர் எம்ஜிஆர் என்ன வித்தியாசம் கண்டீர்கள்?
நடிகராக அவர் எப்படியிருந்தாரோ முதல்வராக இருந்த போதும் அப்படியே இருந்தார். அதாவது நடிகராக இருந்த போது மக்களோடு மக்களாக எப்படி ஒன்றி வாழ்ந்தாரோ அவ்வாறே முதல்வர் ஆன பின்னரும் மக்களில் ஒருவராகவே வாழ்ந்தார். நடிகராக இருந்த போது மக்களுக்கு எவ்வித கட்டுபாடுகளுமின்றி, எந்தச் சமயத்திலும் அவரை அணுகலாம்; உதவிகள் பெறலாம் எனும் நிலையே அவர் முதல்வராக இருந்த காலங்களிலும் தொடர்ந்தது.
பின்னாளில் பதவிக்கு வரவேண்டும் என்று கருதி படங்களிலும், பாடல்களிலும் நல்ல கருத்துகளைப் புகுத்தினார் எம்ஜிஆர் என்ற கருத்து பற்றி என்ன சொல்கிறீர்கள் ?
நிச்சயமாக கிடையாது. எல்லாமே அவருக்கு இயற்கையாகவே அமைந்தது. அவர் சமூகத்தின் மீதும், மக்களின் மீதும் கொண்டிருந்த ஆத்மார்த்தமான அக்கறையை நன்கு அறிந்திருந்த பாடலாசிரியர்களும், வசனகர்த்தாக்களும் படத்தயாரிப்பாளர்களும் அவருக்கு இப்படித்தான் எழுத வேண்டும்; எடுக்க வேண்டும் எனும் இயற்கையான உந்துதலால் அனைத்தையும் அமைத்தனர். அப்படி நீங்கள்
கூறுவது போல் நினைத்து எம்ஜிஆர் செயல்பட்டிருந்தால், திமுகவிலிருந்து அவரை நீக்கிய மறுகணமே அவர் கட்சியைத் துவக்கியிருக்க வேண்டும். திமுகவிலிருந்து அவரை நீக்கிய போது இனி அரசியலே வேண்டாம் முழுமையாகத் திரைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விடலாம் என அவர் நினைத்தது வெளியுலகம் அறியாதது. ஆனால் நடந்தது வேறு. மக்கள் ஆங்காங்கே கொந்தளித்தனர். விரைவில் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தினர், தற்கொலைகள் நிகழ்ந்தது. எனவே சூழ்நிலை கருதி வேறு வழியின்றி தான் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார் என்பதே என் எண்ணம். பின் முதல்வராகவும் ஆனார்.
இப்போது அரசியலுக்கு வந்து முதல்வராக வேண்டும் என்று நினைக்கும் நடிகர்களுக்கும் எம்ஜிஆருக்கு உள்ள வித்தியாசம்?
எம்ஜிஆருடன் இப்போதுள்ள நடிகர்களை ஒப்பிடவே முடியாது. இவர்கள் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாதவர்களாக அவரைப் புரிந்து கொள்ளாதவர்களாகப் போகிற போக்கில் பேசும் அரசியல் அறிவு முதிர்ச்சியற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி வித்தியாசங்களைக் கூற வேண்டுமென்றால் ஒரு ஆயிரம் பக்கங்களாவது எழுத வேண்டும்.
ஜெயலலிதா அதிமுகவில் சேர காரணம் என்ன? எம்ஜிஆர் அழைப்பின் பேரில் வந்தாரா?
எம்ஜிஆர் அழைப்பின் பேரில் வரவில்லை.1980-ஆம் ஆண்டுகளுக்குப் பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பின் அதிக அளவில் சமூக சேவைகள் செய்ய வேண்டும் என நினைத்தார். தனி ஒருவராகச் செய்வதைக் காட்டிலும் அரசியலில் சேர்ந்தால் நிறைய செய்யலாமே என நினைத்ததன் விளைவாக அதிமுகவில் சேர முடிவு செய்து எம்ஜிஆரிடம் தனது விருப்பத்தைக் கூறினார். உடனே எம்ஜிஆர் "அண்ணாயிசம்' எனும் 29 பக்க புத்தகத்தைக் கொடுத்து, இதை நன்கு படித்துப் புரிந்து கொள் என்று கூறி அனுப்பினார். பின்னர் ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி அவரைக் கட்சியில் சேர்த்தார்.
ஜெயலலிதாவிற்கு மெய்காப்பாளராகப் பணியாற்றியபோது உங்களால் மறக்க முடியாத நிகழ்வு ஏதேனும்?
எம்ஜிஆர் மறைவிற்குப் பின் கட்சி ஜானகி அம்மையார் ஜெயலலிதா ஆகியோரது தலைமையில் இரண்டாகப் பிரிந்த சமயத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்புப்பணியில் தொடர்ந்து இருந்து வந்தோம். 1989-ஆம் ஆண்டு வேலூர் கோட்டை மைதானத்தில் ஒரு பொதுகூட்டம். மக்கள் குரல் டி.ஆர். ராமசாமி ஏற்பாடு செய்த அந்தக்கூட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். அப்போது சிலர் தொடர் ஓட்ட ஜோதி கொண்டு வந்து ஜெயலலிதாவிடம் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வரிசையில் வந்த ஒரு நபர் மேடைக்குக் கீழே கையில் வைத்திருந்த விளக்கு ஜோதியில் ஏதோ ஊற்றுவதாக எனக்கும் மற்றொரு பாதுகாவலர் தர்மலிங்கத்திற்கும் தெரிந்தது. உடனே நாங்கள் அந்த நபரிடம் என்ன செய்கிறாய் என்று கேட்ட போது, அம்மாவுக்குப் பன்னீர் தெளிக்க என்றார். சந்தேகித்த நாங்கள் அதனை வாங்கிப் பார்த்த போது அதில் திராவகம் ஊற்றப்பட்டிருந்தது. உடனே அந்த நபரை பிடித்தோம். அவர் விடச் சொல்லி அலறினார். அவர் சத்தத்தை கேட்ட ஜெயலலிதா விவரம் ஏதும் அறியாமல் " ஏன் அடிக்கிறீர்கள் விடுங்கள் அவரை'' என குரல் கொடுத்தார். அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அதன் பின் விவரம் கேள்விபட்ட ஜெயலலிதா எங்களைப் பாராட்டினார். ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் என்றும் எங்களால் மறக்க முடியாத நிகழ்வு இது.
(தொடரும்)